1

கமலா ஒஸ்லோவிற்கு வந்து ஐந்து வருடங்கள் அனலில் விழுந்த பனியாகப் போயிற்று. இருபத்தி மூன்று வயதில் கொழும்பில் திருமணம் செய்து இருபத்து நான்கில் ஒஸ்லோவில் வலது காலை எடுத்து வைத்தாள். அத்தால் கொழும்பில் தொடங்கிய வாழ்க்கை ஓஸ்லோவில் தொடரலாகிற்று. அவள் நோர்வேக்கு வந்த தொடக்கக் காலம் பாலும் தே

னும் சேர்ந்து பாய்வதாக மிகவும் இனிமையாகவே இருந்தது. அது தொடர் கதையாக இருக்கும் என்றே அவள் முழுமையாக எண்ணி இருந்தாள். ஆனால் மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது போலக் கமலாவின் வாழ்க்கையும் விதித்த விதிக்கு ஏற்ப மாறத் தொடங்கியது. இப்போது தலை தன் விருப்பில் தலை கீழாக மாறிப் போய்விட்டது. அது ஏன் என்பதை அவளால் இன்றும் முழுமையாக அறிய முடியவில்லை. அவளிடம் பல ஆரூடங்கள் குறைவில்லாது உள்ளன. ஆனால் எதையும் அவளால் முழுமையாக அறிய முடியவில்லை. சிலவேளை அவளுக்கு எதுவும் விளங்குவது இல்லை. என்ன செய்வது என்றும் விளங்குவது இல்லை. மது தொடக்கத்தில் நல்ல மனிதனாகத்தான் இருந்தார். அவளுக்கு அவன்மீது ஆளக்கடல் போல அளக்க முடியாத அன்பு, காதல் நிறைந்து கிடந்தன. ஆனால் மாற்றங்கள் மலை போன்ற கடல் அலையாக அவர்கள் வாழ்வைத் திரும்பிப் பார்க்க முதல் திசை தெரியாதவாறு அடித்துச் சென்றது.

இதை மாற்றி வாழ்வைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே அவள் இன்றைய குறிக்கோள். அதற்கு மது ஒத்துழைக்கிறான் இல்லை என்பதே அவள் பெரும் கவலையும், குறையுமாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று அவள் பாடுபட்டாலும் அது நடப்பதாகத் தெரியவில்லை. மது மாறிவிடுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்ப்புப் பலிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைச் சொல்லிச் சமாளிப்பது போலவே அவளுக்குத் தோன்றுகிறது. இன்று மறுபடியும் அவனிடம் கேட்க வேண்டும் என்று அவள் எண்ணி இருந்தாள். இன்றாவது அவன் உண்மையைச் சொல்வான் என்று அவள் நம்பி இருக்கிறாள். அந்த நம்பிக்கையில் அதை எப்பிடியாவது கேட்டு அறிய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

மது இன்னும் வரவில்லை. வழமையாகப் பூனை போல் வந்து அமைதியாகச் சாப்பிட்ட பின்பு, ஆறுதலாகச் சோபாவில் இருப்பான். பின்பு எப்படி அதைக் குடிக்கிறான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. இது ஒரு வித்தியாசமான பழக்கம். மற்றவர்கள் பொதுவாக இப்படிச் செய்வது இல்லை. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் செய்தால் பருவாய் இல்லை. இது நித்தமும் நடக்கிறது. அதுவும் இரகசியமாக நடக்கிறது. அதன் பின்பு தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று அவன் மீண்டும் மீண்டும் சத்தியம் செய்கிறான். அவன் செய்யும் சத்தியத்தை அவளால் நம்ப முடியவில்லை. அது வெறும் பசப்பு என்பதே அவள் எண்ணம். என்றாலும் என்ன மாயம் செய்கிறான் என்பதை மட்டும் அவளால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஏதோ செய்கிறான். எப்படியோ கமுக்கமாகச் சாதிக்கிறான். உண்மையை உரைக்கிறான் இல்லை. கண்டு பிடிக்க வேண்டும். அவன் மாயத்தை உடைத்தெறிய வேண்டும் என்று அவள் கடந்த மூன்று மாதங்களாக முயன்று பார்த்துவிட்டாள். இன்னும் எந்தத் துப்பும் துலங்கவில்லை. என்றோ ஒரு நாள் அது துலங்கும். உண்மைக் காரணம் நிச்சயம் வெளியே வரும் என்கின்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதை அவள் முழுமையாக நம்பினாள்.

மது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் சத்தம் கமலாவின் காதில் விழுந்தது. முன்பெல்லாம் அவனை ஓடிச் சென்று பார்ப்பாள். அவளால் அப்படிப் பார்க்காது இருக்க முடியாது. இப்போதும் அந்த ஆசை அவளிடம் இருக்கிறது. இருந்தாலும் உண்மையைச் சொல்கிறான் இல்லை என்கின்ற கோபம் அவளைப் பல நேரங்களில் தடுத்து விடுகிறது. அவள் அப்படி இருந்தாலும் அவன் எதையும் கண்டு கொள்ளாது வழமை போலவே நடந்து கொள்வான். அப்படி அவன் நடந்து கொள்வதைக் கமலா பார்க்கும் போது இவன் உண்மையில் அப்பாவியோ என்றே அவளுக்கு எண்ணத் தோன்றும். ஆனாலும் அவளால் அதை முழுமையாக நம்பிவிட முடியவில்லை. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போலக் கண்ணைக் கட்டிக் குடித்துவிட்டு வந்து விடுவான். அதை எப்படிச் செய்கிறான்? எங்கே அதை ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை எண்ண எண்ணக் கமலாவிற்குத் தலை வெடிக்கும். அவள் நீண்ட காலமாகத் தேடிப் பார்த்துவிட்டாள். பயணம் செய்யும் போது வாங்கி வந்த இரண்டு போத்தல்கள் முத்திரை உடைக்காது அறைக்குள் இருக்கின்றன. அதைப் பருகி இருந்தாலும் அது சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக அவனுக்கு இருந்து இருக்கும். இது எங்கிருந்து கொண்டு வந்து எப்படி ஒவ்வொரு நாளும் பருகுகிறான் என்பது அவளுக்குத் தெரியாது. பசுமதி அரிசிச் சோற்றை இறைச்சிக் கறியுடன், அல்லது மீன்குழம்புடன் நன்றாகச் சாப்பிடுவான். அப்போது அவனில் எந்த மாற்றமும் இருக்காது. சாப்பிட்ட பின்பு அனேகமாகச் சோபாவில் இருப்பான். கமலா சுகனின் வீட்டுப் பாடங்களைக் கவனிக்கத் தொடங்குவாள். அந்த நேரத்தில் எப்படியோ எடுத்து அதை அவன் பருகுவதாய் இருக்க வேண்டும். சாப்பிட்ட பின்பு பருகுவது என்றால் நிறையப் பருகவேண்டும் என்பதை அவனே சொல்வது உண்டு. அப்படி அவன் நிறையவே பருகுவதாய் இருக்க வேண்டும். அது எப்படிச் சாத்தியம் என்பதே விளங்கவில்லை. அதன் பின்பு அவன் இரண்டு காலில் நடக்கமாட்டான். அதன் பின்பு அவனது நகைப்பும், அட்டகாசமும் கமலாவுக்குக் கோபத்தை உண்டு பண்ணும். அதுவும் பிள்ளையைக்கூடக் கவனிக்காது களவு களவாக மது செய்யும் இந்தக் காரியம் அவளுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணும். இருந்தும் எதுவும் செய்ய முடியாது. ஆத்திரம் இருந்தாலும் அவனை வெறுக்க முடியாது.

காலையில் அவனோடு கோபமாகக் கதைத்தாலும் அவன் கோவப்படாது எதுவும் நடவாதது போல வெள்ளந்தியாக விழிப்பான். அதைப் பார்க்க அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரிவதில்லை. அவன் அப்படி விழிப்பதைப் பார்த்தால் அவனை மன்னிக்க வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றும். அவளும் தனது மன்னிப்பை ஒரு புன்னகையில் கொடுத்து விடுவாள். அதன் பின்பு அவனும் எதையும் ஞாபகத்தில் வைத்திருக்காதவனாய் வேலைக்குச் சென்று விடுவான்.
கமலா வேலையால் வந்து சமைப்பாள். அவன் வரும் போது கமலா சமைத்து முடித்துவிட்டுக் குளிக்கப் போய்விடுவாள். அந்த ஊட்டிக்குள் ஏதும் செய்கிறானா என்கின்ற சந்தேகம் அவளிடம் இருந்தது. ஆனால் பல நாள் சாப்பாடு கொடுக்கும் சாட்டில் அவன் வாய் அருகே தனது மூக்கை நீட்டியது உண்டு. அவளுக்கு அப்போதெல்லாம் ஏமாற்றமே ஏற்பட்டது உண்டு. பின்பு எப்படி என்பதே அவிழ்க்க முடியாத மர்மமாக இருக்கும். அது மலைப்பை உண்டு பண்ணும்.

இருந்தும் அவளுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. உண்மை ஒரு நாள் வெளிவரும் என்பதில் உறுதியாக இருந்தாள். காலம் ஓடுகிறது. அவன் செய்யும் மாயம் பிடிபடாது தொடர்கிறது. வேலைக்குக் காரிலேயே செல்கிறான். இதுவரை நாளும் அவனைக் காவல் நிறுத்தியதோ அல்லது பிடித்ததோ இல்லை. அதனால் அவன் வீட்டிற்கு வரும்வரைக்கும் அதைத் தொடுவதில்லை என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அதையும் செய்தான் என்றால் ஒரு ஆபத்திற்குக்கூடக் காரை எடுக்க முடியாது போய்விடும். கார் யாருக்குத் தேவைப்படாவிட்டாலும் சுகனிற்குத் தேவைப்படும். இப்போது அவனைக் கமலா மட்டுமே மது சாப்பிட்ட பின்பு எங்காவது அழைத்துச் செல்வது என்றால் அழைத்துச் செல்வாள். சனி ஞாயிறு போன்ற நாட்களிலும் மது சாப்பிட்ட பின்பு அவனைக் கார் எடுப்பதற்கு அவள் அனுமதிப்பதில்லை. அப்படி ஏதாவது விபரீதம் நடந்துவிடுமோ என்கின்ற பயம் அவள் மனதில். அதை யாரிடமும் சொல்ல முடியாது. அவளே அந்தப் பொறுப்பைத் தானாக எடுத்துக் கொண்டாள். அவனும் தள்ளாடினாலும் அவளது சொல்லை மீறுவதில்லை. அதனால் அவளுக்கு அதிலாவது சிறிய நிம்மதி ஏற்படுவது உண்டு.