2

 

லதாவுக்குத் தன்னைத் தனித்து விட்டதான ஒரு உணர்வு. திவைத்தாவில் இருக்கும் அந்த இரண்டு படுக்கையறை கொண்ட வீடு இப்போது எல்லை இல்லாது நீளும் வீடு போல அவளுக்குக் காட்சி தந்தது. இது லதாவிற்கான பயம் இல்லை. லாவண்ணியாவால் உண்டான பயம். லாவண்ணியாவை எண்ண எண்ண எதற்கும் பயப்படாத லதாவிற்கு இப்போது எதற்கு எடுத்தாலும் பயமாக இருக்கிறது. இருந்தாலும் அதை எல்லாம் அவள் வெளியே காட்டிக் கொள்ளாதே லாவண்ணியாவோடு கதைப்பாள். அவளை அதனால் ஒரு மாதிரிச் சமாளிப்பாள். இப்போதும் லாவண்ணியா வெளியே வந்து இருக்கலாம். அவளுக்கு இந்த எண்ணம் தோன்றி இருக்காது. அதனால் அவள் வெளியே வரவில்லை. அதுவே அவளைக் குழப்பியது. சிறிது சிறிதாகத் தொடங்கிய பிரச்சனை இது. இப்போது அதுவே பயத்தைத் தருகிறது. லாவண்ணியாவின் பிரச்சினை லாவண்ணியாவின் பிரச்சினை மட்டும் இல்லை. அது முழுமையான குடும்பத்தின் பிரச்சினையும் ஆகும். அதுவும் அன்பு மகள் அவஸ்தைப்படுவதை நினைக்க நினைக்க மனம் புழுங்கியது.
லாவண்ணியாவின் மனநிலை சோர்வின் உச்சக்கட்டத்தை நேற்று மாலை அடைந்திருந்ததை லதா ஏற்கனவே கவனித்தாள். அப்போது சாந்தன் வேலைக்குப் போயிருந்தான். லதாவிற்குப் பயமாக இருந்தது. அந்தப் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளுக்குப் புத்திமதி கூறினாள். அவள் அதைக் கேட்டாலும் கேட்கமாட்டாள் என்பது லதாவுக்குத் தெரியும். இருந்தும் அவள் மேல் கொண்ட காதல் இயன்றதனைத்தையும்  செய்யச் சொல்லும். அவளும் அதைச் செய்வதிலிருந்து தவறுவதில்லை. நேற்று மாலை அவள் ஒழுங்காகவும் சாப்பிடவில்லை. தெண்டித்ததிற்காய் அரைகுறையாகச் சாப்பிட்டாள். பின்பு ஒருவித கோபத்தோடும் வெறுப்போடும் எழுந்து சென்றாள்.  அதன் பின்பு அவள் தனது கதவை அடைத்துக் கொண்டாள்.
இப்போது மணி ஒன்பதாகிறது. இன்னும் அவள் வெளியே வராதது லதாவைக் கலக்கியது. போய் கதவைத் தட்டவும் தயக்கமாக இருந்தது. சிலவேளை அவள் மிகவும் கோபமாகக் கத்துவாள். அதைச் சமாளிப்பது பெரிய பாடாகப் போய்விடும்.
லதா யோசித்தாள். என்ன செய்வது என்று அவளுக்கு விளங்கவில்லை. அவளை அப்படியே தனிமையில் இருக்கவிடக் கூடாது என்கின்ற உண்மை அவளுக்கு உறைத்தது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்கின்ற துணிவை வரவழைத்துக் கொண்டு லதா லாவண்ணியாவின் அறையை நோக்கிச் சென்றாள். மனதில் துணிவு இல்லை என்பது தெரிந்தாலும் கடமையைச் செய்ய வேண்டும் என்பது அவள் குறிக்கோளாகியது. அறைக் கதவின் முன்பு வந்து நின்ற லதாவின் கைகள் கதவைத் தட்டத் தயங்கின. அது அவள் வசப்படாது நடுங்கின. அவளுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் மனதை மீண்டும் தன்பிடியில் கொண்டு வந்து கதவை அமைதியாகத் தட்டினாள். உள்ளேயும் அந்த அமைதியை லாவண்ணியா கடைப்பிடித்தாள். அவள் கதவைத் திறக்காது அப்படி இருப்பது லதாவைக் கலங்க வைத்தது. சிறிது காத்திருந்த லதா மீண்டும் கதவைத் தட்டினாள். அதன் பின்பு அவள் எழுந்து வரும் சத்தம் கேட்டது. லதா காத்திருந்தாள். கதவைத் திறந்த லாவண்ணியா இடக்கையில் ஒரு துணி சுற்றி இருந்தாள். அதைப் பார்த்ததுமே லதாவிற்குப் பதட்டமாகிவிட்டது. அதைவிட லாவண்ணியா கோபமாக இருந்தாள்.
‘என்ன வேணும் உனக்கு? சும்மா என்னை இருக்க விட மாட்டியா? என்னைத் தயவு செய்து தொந்தரவு பண்ணாத எண்டு எத்தினைதரம் சொல்லுகிறது? எப்பவும் சும்மா நொய் நொய் எண்டு கொண்டு… இப்ப என்ன வேணும் உனக்கு? வந்த அலுவலைச் சொல்லிப் போட்டுக் கெதியா வெளிய போ.’
‘நீ ஒழுங்காய் இருந்தால் நான் ஏன் உன்ரை அறைக்கு வரப் போகிறன்? உது என்ன கையைப் பொத்திக் பொத்திக் கொண்டு இருக்கிறாய்? இப்பிடி மறைக்கிறதுக்கு கையில என்னடி செய்து வைச்சிருக்கிறாய்? கையைக் காட்டு.’
‘அதெல்லாம் காட்ட முடியாது. நீங்க வந்த அலுவலைப் பார்த்துக் கொண்டு வெளியால போங்க பார்ப்பம்.’
‘வர வர உனக்கு வாய் மட்டும் நீளுது. அதுவும் வீட்டுக்க மாத்திரம் நீளுது. வாய் மட்டும் நீண்டாப் பருவாய் இல்லை. ஆனா நீ செய்கிற வேலைதான் குலை நடுங்க வைக்குது. உது என்னடி கையில. அதைக் காட்டு?’
‘அது எல்லாம் காட்ட முடியாது. தயவு செய்து நீ வெளிய போ.’
‘நீ முதல்ல கையைக் காட்டு. இரண்டாவதா சாப்பிட வா. அதுவரைக்கும் நான் றுமை விட்டு வெளிய போக மாட்டன்.’
‘ஓ அப்பிடியா?’
என்றவள் வெளியே போவதற்குத் தயாராகுவது போலத் தயாராகினாள். ஆனால் கையைச் சுற்றி இருந்த துணியை மாத்திரம் அவதானமாகப் பார்த்துக் கொண்டாள். லதாவிற்கு அவளோடு எப்படிக் கதைப்பது என்றுகூட விளங்கவில்லை. எதற்குக் கோபப்படுவாள் எதற்குச் சந்தோசப்படுவாள் என்பதை இலகுவாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் அதற்காக எல்லாம் விட்டுக் கொடுத்துப் பேசாது இருக்க முடியாது என்பது அவளுக்கு விளங்கியது. அவள் கையை இன்னும் லதாவிற்குக் காட்டவில்லை. அதில் என்ன செய்திருக்கிறாள் என்பது தெரியாது தலை வெடித்துவிடும் போல் இருந்தது. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படாது பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பது இங்கு உள்ள ஏற்கப்பட்ட எண்ணப்பாடு. அப்படி வளர்த்தாலும் பிள்ளைகள் சிலவேளை மனதால் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள். லாவண்ணியாவைப் பார்த்துப் பார்த்தே அவள் வளர்த்தாள். எங்கே பிழைத்தது என்பதை அவளால் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. எந்தவித அடக்குமுறையும் வீட்டில் பாவிக்காவிட்டாலும் அவள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது கண்முன் கனலும் உண்மை. அது எப்படி என்பது முழுமையாகப் புலனுக்கு எட்டாவிட்டாலும் வாழ்க்கை என்பது வீட்டோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அதன் பரப்பு விஸ்தீரணமானது. அதன் பாதிப்புகளும் அதற்கு ஏற்ப சிக்கலானவை. இவள் எங்கே பாதிக்கப்பட்டாள் என்பது லதாவிற்கு விளங்கவில்லை. அதிலிருந்து எப்படி அவளை வெளியே கொண்டு வருவது என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. எப்படி என்றாலும் இந்தத் துன்பகரமான வட்டத்தை உடைக்க வேண்டும் என்பதே அவளுடைய பெரும் அவா.
‘தயவு செய்து உந்தக் கையை எனக்குக் காட்டு லாவண்ணியா. அது என்ன எண்டு பார்த்து அதுக்கு மருந்து போட வேணும்.’
‘உனக்கு என்னுடைய தமிழ் விளங்காதா அம்மா?’
‘எனக்கு உன்னுடைய தமிழ் விளங்காது எண்டே நினைச்சுக்கொள். உன்ரை கையைப் பார்க்க வேணும். அதுதான் இப்ப எனக்கு வேணும். அதைக் காட்டுகிறதில உனக்கு என்ன பிரச்சினை. அதைச் சொல்லு பார்ப்பம்?’
‘ஐயோ… இந்தா பார்… நல்லாய் பார்.’
என்ற வண்ணம் அவள் தனது கையை மூடியிருந்த துணியை உருவி எறிந்தாள். அதைப் பார்த்த லதாவிற்குத் தலை சுற்றியது. அவள் இப்படி ஏதாவது செய்திருப்பாள் என்கின்ற ஒரு சந்தேகம் லதாவிற்கு இருந்தது. இருந்தும் அதைப் பார்க்கும் போது அவளுக்குத் தலை சுற்றியது. மயக்கம் வருவது போல இருந்தது. இருந்தும் அதைச் சமாளித்துக் கொண்டு,
‘என்னத்துக்கு இப்பிடிக் கையை வெட்டி வைச்சிருக்கிறாய்? உனக்கு என்ன பயித்தியமாடி? உனக்கு எத்தினை தரம் சொல்லியாச்சுது? அப்பிடி ஏதாவது எண்ணம் வந்திருந்தா எனக்காவது சொல்லி இருக்கலாம் தானே?’
‘எனக்கு என்னைக் காயப்படுத்துகிறது பிடிச்சிருக்குது. ஆதால நான் அதைச் செய்கிறன். உனக்கு இதை எல்லாம் சொல்லி என்ன பிரயோசனம்? எனக்காக நீங்க உங்கடை கையைக் கீறிக்கப் போறியளா?’
‘ஏனடி இப்பிடி விதண்டாவாதமாய் கதைக்கிறாய்? நான் உன்னை டொக்ரரிட்டைக் கூட்டிக் கொண்டு போயிருப்பன்தானே? இப்பிடிக் கீறிக் கீறி என்ன நடக்கப் போகுது? அதில் இருந்து வெளிய வரவேணும் எண்டுதானே நான் இதைச் சொல்லுகிறன். அதுதானே எல்லாருடைய விருப்பமும்.’
‘அம்மா எனக்கு நீங்க புத்திமதி சொல்லுகிறதை நிப்பாட்டுங்க. அந்த டொக்ரரால இல்லைக் கடவுளாலும் என்னுடைய பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியாது. தயவு செய்து உன்னுடைய வேலையைப் பார். என்ர அலுவலைப் பார்க்க எனக்குத் தெரியும்.’
‘ஏனடி தொடர்ந்தும் விளங்காமல் கதைச்சுக் கொண்டு இருக்கிறாய்?’
‘இதில நான் விளங்கிறதுக்கு ஒண்டும் இல்லை. எனக்கு எது சுகமாய் இருக்குதோ அதை நான் செய்கிறன். அதை நான் தொடர்ந்தும் செய்வன்.’
‘என்னுடைய பொறுமையைச் சோதிக்காத லாவண்ணியா?’
‘நான் அப்பிடி ஒண்டும் செய்ய இல்லை. நீங்கள்தான் என்னுடைய விசயத்தில தேவை இல்லாமல் தலையிடுகிறியள்?’
‘உன்னோடை நான் என்நத்தைக் கதைக்கிறது?’

லதா கோபமாக வெளியே சென்றாள். சென்ற வேகத்தில் தங்கள் அறைக்குள் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள். லாவண்ணியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவளது காயத்தைத் துப்பரவு செய்து அதற்குக் கட்டுப்போட்டாள். லாவண்ணியா அதற்கும் தனக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்பது போல இருந்தாள். லதாவிற்குக் கோபம் இமயமலையைக்கூடத் தூக்கி எறியும் அளவிற்குப் பொங்கியது. அதை எல்லாம் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்தினால் லாவண்ணியாவே பாதிக்கப்படுவாள் என்பது அவளுக்கு விளங்கியது.
லாவண்ணியாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் தனியே அழைத்துச் செல்ல முடியாது. அவள் இலகுவில் லதாவின் சொற் கேட்டு வரமாட்டாள். அதனால் சாந்தன் வந்தாலே அது நடக்கும் என்பது அவளுக்குத் தெரியும். அது இன்று நடவாத கரியம். வேலையால் வந்ததும் விசயத்தைச் சொன்னால் நாளைக்கு அழைத்துச் செல்லலாம். இம்முறை தானும் செல்ல வேண்டும் என்று லதா முடிவு செய்திருந்தாள். விபரமாக அந்த மருத்துவரோடு கதைத்து இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்கின்ற முடிவோடு லதா எழுந்து சென்றாள்.