3

சாந்தன் வீட்டிற்குத் தற்போது போவதாக எந்த எண்ணமும் மதுவிடம் இருந்ததில்லை. இருந்தாலும் சாந்தன் தொலைபேசி செய்து வருமாறு கூறியதால் அதை அவனால் மறுக்க முடியவில்லை. மதுவுக்கும் அவனோடு கதைத்துக் கொண்டு இருப்பது மிகவும் சந்தோசமாய் இருக்கும். இருந்தாலும் இங்கே ஒவ்வொருநாளும் இல்லை ஒவ்வொரு மாதமே சென்று கதைப்பதற்கே முடியாத மாதிரி நேரம் பிரபஞ்சத்தில் பறக்கும் கோள்களின் வேகத்தில் பறக்கிறது. அப்படி நேரம் கிடைத்தாலும் ஏதோ மனது ஏகுவதில்லை. இப்படி அழைத்தால் அந்தத் தடைகளை எல்லாம் மீறிச் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. இது கட்டாயம் என்றாலும் மதுவுக்கு மிகவும் விருப்பமானதும், சுகமானதுமான கட்டாயம். அந்தக் கட்டளையை மகிழ்வோடு ஏற்று மது புறப்படுவதாய் உத்தேசித்துக் கமலாவிடம் அதைக் கூறினான். கமலாவிற்கு மது போவதில் முழுமையான சம்மதம் இல்லை. மது போவது என்றால் அவனை பின்னேரம் போகவிட முடியாது. அப்படி அவன் போனால் அது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியதாக முடியலாம் என்கின்ற பயம் அவளிடம் இருந்தது. அதனால் அவனின் அந்தப் பயணம் அவளுக்கு மகிழ்வைத் தரவில்லை. என்றாலும் அதை மறுப்பதற்கு அவளால் முடியவில்லை. அப்படி என்றால் அவன் பாதுகாப்பாய் போய் வருவதற்கு எப்படி ஏற்பாடு செய்வது என்கின்ற எண்ணமே அவள் தலையை ஆக்கிரமித்தது.
மதுவைத் தனித்து வடுவது என்பதைக் கமலாவால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. சாப்பிட்ட பின்பு அவன் எப்படிக் குடிக்கிறான் எதனால் வெறிக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாது. அப்படியான நிலையில் மது காரை எடுத்துக் கொண்டு சென்றால் என்ன நடக்கும் என்பது திகிலான நினைவுகள். அப்படியான எந்தத் திகிலான அனுபவத்தையும் சந்திப்பதற்கு அவள் தயாராக இல்லை. அதனால் எப்படி அவனைப் பாதுகாப்பாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள வைப்பது என்பதே அவளது பெரும் கேள்வியாக இருந்தது. காரில் செல்லாது பேருந்தில் அல்லது சுரங்க ரதத்தில் செல்லுமாறு சொல்லலாம். அப்படிச் சென்றாலும் அவன் எங்காவது தள்ளாடி விழுந்து எதாவது பிரச்சினை வந்தால் அவனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்கின்ற கவலை உண்டாகியது. அதனால் அவனைத் தனித்து அனுப்புவதற்கு மனம் வரவே இல்லை.
கமலாவிற்கு வேறு வழிகள் இருப்பதாய் தோன்றவில்லை. தனே அழைத்துக் கொண்டு செல்வதே பாதுகாப்பாய் இருக்கும் என்பதை அவள் நம்பினாள். அதையே செயற்படுத்தவும் சித்தமானாள். ஆனால் இதை மது ஒத்துக் கொள்ள வேண்டுமே என்கின்ற தயக்கம் அவளிடம் இருந்தது. அவனை எப்படியாவது அதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதாக முடிவு செய்து கொண்டாள்.
அன்று பிற்பகல் மது வேலையால் வந்த உடனேயே கமாலா அவனை அணுகினாள்.
‘வாங்க. என்ன ஐடியா இண்டைக்கு?’ என்றாள் அவனைப் பார்த்து.
‘என்ன வந்ததும் வராததுமாய் இந்த ஆர்வம் உனக்கு?’
‘ஏன் சாந்தன் வரச் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?’
‘அதுக்கு என்ன? நான் போயிட்டு வருவன்தானே? என்ன இது அதீத அக்கறை எல்லாம்?’
‘அது ஒண்டும் இல்லை. அது எப்பிடி போயிட்டு வருவியள்? அதை விபரமாய் சொல்லுங்க பார்ப்பம்?’
‘அது என்ன அதிசயமான விசயம்?  காரிலதான் போயிட்டு வரப்போகிறன்.’
‘ஓ காரில? சாப்பிட்ட பிறகு? நல்லாய் இருக்கும் அது…’
‘அது ஒண்டும் நடக்காது கமலா. நீ சும்மாய் கவலைப்படாத.’
‘சும்மா பகிடி விடாதையுங்க. பிறகு நான் பத்திரகாளி ஆகிடுவன். அது உங்களுக்குத் தெரியும்தானே?’
‘சும்மா வெருட்டாத நீ. பிறகு நான் என்ன செய்கிறது சொல்லு பார்ப்பம்? சரி அப்ப நான் வஸ்சில போயிட்டு வாறன்.’
‘நீங்கள் தனியாகப் போக வேண்டாம்.’
‘ஓ… நீயும் வாறியா? சரி வா… வா தம்பதிசமேதராய் போயிட்டு வரலாம்.’
‘ம்… உங்களைத் தனியவிட நான் என்ன லூசா?’
‘நீயும் வந்தால் எனக்குச் சந்தோசம்தான். எனக்கு இப்பிடி ஒரு பிரத்தியேகமான வொடிக்காட் இருக்கிறது நல்லதுதானே?’
‘ஓ அப்பிடி வேறை ஒரு நினைப்பு இருக்குதே உங்களுக்கு? சரி வாங்க முதல்ல சாப்பிடலாம்.’

*

சாப்பிட்ட உடனேயே மதுவை அழைத்துச் செல்வதா அல்லது சிறிது தாமதித்து அவனை அழைத்துச் செல்வதா என்கின்ற ஒரு தடுமாற்றம் அவளிடம் ஏற்பட்டது. சாப்பிட்ட கையோடு சற்றும் அவனுக்கு நேரம் கொடுக்காது அழைத்துச் சென்றுவிட்டால் எப்படி அவனால் எதையாவது குடிக்க முடியும் என்கின்ற எண்ணம் அவளிடம் உண்டாகியது. அவள் அதைச் செயற்படுத்து முனைந்தாள்.
‘சாப்பிட உடன போயிட்டு வருவம். என்ன சரியா?’
‘ஏன்? ஏன் இந்த அவசரம்?’
‘ஓ… உங்களுக்கு அது தெரியாதா?’
‘உண்மையா எனக்கு விளங்க இல்லை.’
‘சரி விளங்காமலே இருக்கட்டும்.’
‘ச்… சொல்லு கமலா.’
‘அது ஒண்டும் இல்லை… பிந்திப் போனா அவை சமைக்கிறம் எண்டு வெளிக்கிடுவினம். திரும்பிவர நேரமாகிடும்.’
‘அப்பிடி எண்டுறியா?’
‘ம்…’
‘சரி. அப்ப வா சாப்பிடுவம்.’

இருவரும் சென்று சாப்பிட்ட பின்பு கமலா புறப்பட்டு வரும்வரைக்கும் மது சோபாவில் படுத்து இருந்தான். அவன் படுத்து இருப்பதைப் பார்த்த கமலா அவசர அவசரமாகப் புறப்பட்டாள். என்றாலும் மது குட்டித் தூக்கம் போடத் தொடங்கிவிட்டான். அவன் அப்படிக் குட்டித் தூக்கம் போடுவது கமலாவிற்குக் கலக்கத்தை உண்டு பண்ணியது. அவள் மேலும் அவசர அவசரமாகப் புறப்பட்டாள். புறப்பட்டு வந்தவள் அவசரமாக அவனை எழுப்பினாள். அவள் நினைத்தது போல அவன் கண்கள் எதனாலோ சிவந்திருந்தன. எதனால் என்பது மட்டும் அவளுக்கு விளங்கவில்லை. அது எப்படிச் சாத்தியம் ஆகும் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. அவன் கண்முன் படுத்திருந்தான். அப்படிப் படுத்து இருந்தவனால் எந்தத் தப்பும் செய்திருக்க முடியாது. தப்பு செய்யவில்லை என்றால் எப்படி இது நடக்கிறது? எதனால் அவன் கண்கள் சிவந்தன? கமலாவிற்குக் கோபம் வந்தது. அவனது சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் அதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. ஆதாரம் இல்லாது அவனைக் கோவிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என்பது அவளுக்கு விளங்கியது. அதனால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

‘என்ன கண் சிவந்து இருக்குது?’ என்றாள் மதுவைப் பார்த்து.
‘கண் சிவந்திருக்குதா? அது சிவக்கிறதுக்கு நான் என்ன செய்கிறது?’
‘சும்மா கேட்டன்.’
‘நீ சும்மாய் கேட்க இல்லையடி. அது எனக்கு நல்லாய் தெரியும். ஆனா நானும் எதுவும் உன்நிட்டை மறைக்க இல்லை எண்டதை ஞாபகம் வைச்சிரு.’
‘அதில எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்குது. ஆனாலும் ஏதோ எனக்கு ஒண்டு விளங்குது இல்லை. உந்தக் கண்… உங்கடை பேச்சு… உங்கடை தளும்பல்…?’
‘கடவுள்தான் என்னைக் காக்க வேணும்.’
‘சரி… சரி… வாங்க… போயிட்டு வருவம்.’
‘சரி. கார் கீயத் தா.’
‘ம்… அதெல்லாம் தேவையில்லை. நீங்க சும்மா வாங்க. காரை நான் எடுத்துக் கொண்டு வாறன்.’
‘ஓ நான் இண்டைக்கு சும்மா? ம்… நீ எனக்குறைவர்?’
‘அப்பிடியே வைச்சுக் கொள்ளுங்க.’
‘சரி… சரி … போய் எடுத்துக் கொண்டு வா.’
‘நீங்கள் வாசல்ல வந்து நில்லுங்க. சரியே?’
‘நிக்கிறன்… நிக்கிறன்… எனக்கு என்ன வெறியே?’
‘அது எனக்குத் தெரியும். நீங்க வந்து நில்லுங்க.’
‘நீ என்ன சொல்லுகிறாய்?’
‘ஒண்டும் இல்லை. நீங்க வந்து நில்லுங்க.’
‘சரி… கெதியாய் எடுத்துக்கொண்டு வா.’
‘சரி.’
என்று கூறிய கமலா அதற்குமேல் அங்கு நின்று தாமதியாது வாகனத்தை எடுப்பதற்கு சென்றாள்.
சிறிது நேரத்தில் கமலா வாகனத்தோடு வந்தாள். அவள் திரும்பி வந்த பொழுது மதுவால் தான் போதையில் மிதப்பதை உணர முடிந்தது. அது எப்படி என்பது அவனுக்கு விளங்கவில்லை. தான் இப்படி மிதப்பதைப் பார்க்கும் கமலாவால் சந்தேகப்படாமல் இருக்க முடியாது என்பதும் அவனுக்கு விளங்கியது. ஆனால் குற்றம் செய்யாது குற்றவாளியாகப் பார்க்கப்படுவதை அவனால் தங்கிக் கொள்ள முடியவில்லை. இன்றும் அவள் தனது சந்தேகம் உண்மை என்றே நம்பப் போகிறாள். அவள் மட்டும் இல்லை. போகின்ற இடம் எல்லாம் அப்படியே எண்ணப் போகிறார்கள். குற்றம் செய்யாது தண்டிக்கப்படுவது மகாகொடுமை. அந்தக் கொடுமையை எப்போதும் தான் அனுபவிக்க வேண்டி இருப்பதில் அவனுக்கு அடக்க முடியாத கொதிப்பு உண்டாகியது.
அதை எண்ண எண்ண மதுவிற்கு வெறுப்பாக இருந்தது. அவன் அந்த வெறுப்போடு வந்து வாகனத்தில் அமர்ந்தான். அவன் வந்து அமரும் விதத்தைப் பார்த்த கமலா தன்னைக் கட்டுப்படுத்த முடியாது முகத்தைச் சுழித்தாள்.
‘என்ன முகம் கோணுது?’ என்றான் மது.
‘உங்களில இருந்து வாற மணமும், உங்கடை ஆட்டமும் எனக்குத் தெரியாமல் இருந்தால் பருவாய் இல்லை. அதுதானே எப்பவும் அப்பட்டமாய் தெரியுது. பிறகு எப்பிடி நான் நோர்மலா இருக்க முடியும்? நானும் முகத்தைச் சுழிக்கக் கூடாது எண்டுதான் நினைக்கிறன். ஆனா சிலவேளை மிஸ் ஆகிடுது. அதுக்குச் சொறி.’
‘நீயும் உன்ரை சொறியும். தண்டனை தந்த பிறகு என்ன பாவ மன்னிப்பு?’
‘நீங்கள் அப்ப குற்றமே செய்ய இல்லையா?’ என்று கேட்டு அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
‘இல்லை… நான் குற்றம் செய்ய இல்லை.’
‘அதை நான் இல்லை யாரும் நம்பமாட்டினம்.’
‘யாரும் நம்பாட்டி என்ன? உண்மை உண்மைதானே?’
‘ஓ… நான் நம்ப வேணும்?’
‘சீ எடு காரை.’
‘வேறை என்ன சொல்லப் போறியள்?’
‘சே… செவிடன் காதில ஊதின சங்கு மாதிரிக் கொஞ்சம்கூட விளங்கிக்கொள்ளுகிறாய் இல்லை.’
‘சரி இதைப் பற்றி நாங்கள் பிறகு கதைப்பம். இல்லாட்டி வெளிக்கிட்ட அலுவல் நடக்காது.’
‘சரி காரை எடு.’
வாகனம் புறப்பட்டது. மது கோபமாகப் பேசாது இருந்தான். அவன் கோபத்தைப் பற்றிக் கமலா கருத்தில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. தான் கோபப்படுவதற்கு தனக்கு முறையான காரணம் உண்டு என்பதை அவள் முழுமையாக நம்பினாள். இருந்தாலும் அது எப்படி நடக்கிறது? உண்மையில் அவன் குற்றம் அற்றவனோ என்கின்ற சந்தேகமும் இடைக்கிடையே எட்டிப் பார்ப்பது உண்டு. அது இயற்கையாகவே பெரும் கிலேசத்தை உண்டாக்கிவிடும். இப்போதும் அது எட்டிப் பார்த்தது. அதன் பின்பு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. என்ன கதைப்பது என்பதில் அவளுக்கு அதிக குழப்பம் ஏற்பட்டது. அவள் மனது இயல்பாகவே இளகியது. அவனைச் சமாதானம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் அத்தோடு எழுந்தது.
‘உண்மையைச் சொன்னாக் கோபம் பொத்துக் கொண்டு வருகுது போல இருக்குது?’
‘நீ உண்மையைச் சொன்னா எனக்கு ஏன் கோபம் வருகுது? நீ பொய்யை உண்மை மாதிரிச் சொல்லுகிறதுதான் கோபத்தை உண்டாக்குது. அதையே நித்தமும் கேட்க அருவருப்பாய் இருக்குது.’
‘எனக்கும் நீங்கள் நித்தமும் வெறியில தள்ளாடக் கோபமாய் இருக்குது. அது உங்களுக்கு விளங்குதா?’
‘விளங்குது. ஆனா உனக்கு நான் இது வேணும் எண்டு செய்கிறது இல்லை எண்டது விளங்க இல்லை. அதை உனக்கு விளங்கப்படுத்த நான் படாதபாடு பட்டாச்சுது. அதுக்கு இதுவரையும் ஒரு பிரயோசனமும் இல்லை. இதுதான் என்னுடைய நிலைமை எண்டதை நீ முதல்ல விளங்கிக்கொள்ள வேணும். அது ஒண்டுதான் எனக்கு இப்ப வேணும்.’
‘சரி எனக்கு விளங்குதெண்டே வைச்சுக்கொள்ளுங்க. ஆனா அது எப்பிடி நடக்குது? அதுவும் எப்பிடி உங்களுக்குத் தெரியாமல் நடக்குது? அதுதான் எனக்கு விளங்க இல்லை.’
‘அது எனக்கு விளங்கி இருந்தால் உனக்குச் சொல்லாமலா இருப்பன். அதை முதல்ல கண்டு பிடிக்க வேணும். அதுக்குத்தான் நான் முயற்சி செய்கிறன். கண்டுபிடிச்சாச் சொல்லுகிறன்.’
‘நீங்கள் சத்தியமாகத்தானே சொல்லுகிறியள்?’
‘நான் ஏன் உன்னிட்டைப் பொய் சொல்லப் போகிறன்?’
‘அப்ப ஒண்டு செய்வம்?’

‘என்ன?’
‘சொன்ன கோவிக்கக் கூடாது.’
‘இல்ல சொல்லு.’
‘பொய்யைக் கண்டுபிடிக்கிற மெசினில நீங்கள் சொல்லுகிறது உண்மை எண்டு நிரூபிக்க வேணும்.’
‘அட கடவுளே…? நீ இன்னும் நம்ப இல்லையா?’
‘தயவு செய்து… பிளீஸ்…’
‘ம்… இவ்வளவுதானே நீயும்?’
‘பிளீஸ் எனக்கு வேற வழி இல்லை. தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்க…’
‘சரி… சரி…’
மதுவுக்கு மனம் வெம்பி வெடித்தது. கமலா தன்னை இப்பொழுதும் நம்பவில்லை என்பது அவனது நெஞ்சை அறுத்தது. தனக்கு மிகவும் அண்மையானவளே தன்னை நம்பவில்லை என்கின்ற நினைவு பெரும் வலியைத் தந்தது. தனது வேதனையை அவன் வெளியே காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் அவளை மேலும் வேதனைப்படுத்துவதாகவே இருக்கும் என்பது அவனுக்கு விளங்கியது. அதனால் அவன் மௌனம் காத்தான்.
‘என்ன பேசாமல் இருக்கிறியள்? நான் கேட்டது பிடிக்க இல்லையா?’
‘நீயே என்னை அப்பிடிக் கேட்கிறாய்… நீயே என்னைச் சந்தேகப்படுகிறாய்… இதெல்லாம் எனக்குப் பிடிக்கும் எண்டு நீ நினைக்கிறியா?’
‘நான் வேணும் எண்டா கேட்கிறன். எனக்கு வேற வழி இல்லை.’
‘ம்…’
‘தயவு செய்து என்னில கோவப்படாதையுங்க.’
‘ம்…’
‘கோபம் இல்லைத்தானே?’
‘ச்… விடு.’
‘பிறகு சாந்தனுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறது இல்லை. எங்கடை பிரச்சினை எங்களோடை.’
‘அதைச் சொன்னா மற்றவை சிரிப்பினம். நான் ஏன் சொல்லுகிறன்?’
‘சரி… தாங்ஸ்.’

*

அழைப்பு மணியை அழுத்தியதும் சாந்தனே வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு இவர்களைக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கித் தளும்பியதை அவன் முகத்தில் பார்க்க முடிந்தது. இருந்தாலும் அவன் கோலம் மதுவிற்கு மனதில் கவலையைப் பொங்க வைத்தது. வீட்டிற்கு வீடு வாசல்படி என்பது அவனுக்கு விளங்கியது. தனக்கு எப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதோ அப்படியே அவனுக்கும் பெரியதொரு பிரச்சினை இருக்கிறது என்பதை அவன் கோலம் காட்டுவதாய் மது எண்ணிக் கொண்டான். எப்படியாவது இந்தப் பிரச்சினைகளிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்கு என்ன செய்வது என்பது முழுமையாக அவனுக்கு விளங்கவில்லை. என்றாலும் கமலாவின் கவலையைத் தீர்த்து வைப்பதால் தனக்கு இருக்கும் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பது அவனுக்கு விளங்கியது. அதற்கு முதலில் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினான்.
‘என்ன யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய் மது? முதல்ல உள்ள வா. எல்லாருக்கும் இப்படித்தான் யோசினை இருக்கும்.’
‘அதெண்டா உண்மைச் சாந்தன். பிரச்சினை இல்லாத மனிசர் எண்டு உலகத்தில யார் இருக்கினம்?’
‘ம்… நீ என்ன மெலிஞ்ச மாதிரி இருக்குது?’
‘நீயும்தான் மெலிஞ்ச மாதிரி இருக்கிறாய்.’
இவர்கள் கதைப்பதைக் கேட்ட லதா கோலிற்கு வந்தாள். அவள் முகத்திலும் முன்பு இருந்த சந்தோசத்தை இன்று காணமுடியவில்லை. இருந்தாலும் அவள் இவர்களைப் பார்த்து,
‘வாங்க… வாங்க… எப்பிடி இருக்கிறியள்?’ என்று கேட்டுத் தனது நிலைமையைச் சமாளிக்க முயன்றாள்.
‘இருக்கிறம். வாழ்க்கை எப்பிடியோ போகுது?’ என்றான் மது.
‘வேலை, வீடு, அவையவையின்ரை பிரச்சினை எண்டு வாழ்க்கை வேகமாகப் போகுது எண்டுகிறியள். அதேதான் எங்கடை பாடு எண்டு முழுமையாகச் சொல்ல முடியாது.’
‘என்ன சொல்லுறியள்?’ என்று மது தன்னைக் கட்டுப்படுத்த முடியாது கேட்டான்.
‘அவர் உங்களுக்கு அதைப் பற்றி விபரமாய் சொல்லுவார். நான் உங்களுக்கு ரீ வைச்சாரன். நீங்கள் சாப்பிட்டிட்டுத்தான் போகவேணும்.’
‘இல்லை நாங்கள் கெதியாப் போகவேணும்.’
‘அந்தக் கதையே கதைக்கக்கூடாது. இருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும். நான் சமைக்கிறன். அதில எந்த மாற்றமும் இல்லை.’
‘சரி… சரி… நீங்கள் இல்லை எண்டாலும் விடமாட்டியள். உங்கடை விருப்பம்.’
அதன் பின்பு லதா அங்கு நிற்கவில்லை. அவள் சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.
‘நீங்க வந்து இருங்க.’
‘சொல்லு சாந்தன்.’
‘எந்நத்தை சொல்லுகிறது மது? எல்லாம் பிரச்சினையாக இருக்குது. எதை எப்பிடிச் சமாளிக்கிறது எண்டே தெரிய இல்லை.’
‘எதைச் சொல்லுகிறாய் சாந்தன்?’
‘எல்லாம் லாவண்ணியாப் பற்றின கவலைதான்.’
‘அதுக்கு என்ன செய்கிறது? நாங்கள் நினைக்கிற மாதிரியா வாழ்க்கையில எல்லாம் நடக்கும்? வாழ்க்கை எண்டுகிறதே திசை தெரியாத ஒரு கடல் பயணம் மாதிரித்தான். ஒவ்வெருத்தற்ற பயணமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனா அதுதான் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது எண்டு நினைக்கிறது சிறுபிள்ளைத்தனம் எண்டு நான் நினைக்கிறன். நோர்வேக்கு அகதியளா வந்த சனங்களே அதுக்கு உதாரணம். யார் யார் எப்பிடி எல்லாம் வந்து இருக்கினம்… யார் யார் எப்பிடி எல்லாம் திசை மாறிப் போயிருக்கினம்… யாராலும் இதை எல்லாம் கணிக்க முடிஞ்சுதா? நாளுக்கு நாள் சமாளிச்சு வாழ்க்கையை ஓட்ட வேணும். அதைவிட நாங்கள் என்ன செய்யமுடியும். ஆத்தில விழுந்த துரும்பு மாதிரி எங்கடை வாழ்க்கை. ஆற்றோடை ஒத்து ஓட வேண்டியது துரும்பின் விதி.’
‘நீ சொல்லுகிறதைக் கேட்க நல்லாகத்தான் இருக்குது. புத்திமதி சொல்கிறது வேறை. அதை வாழ்க்கையில அனுபவிக்கிறது வேறை. நான் இதைச் சொல்லுகிறன் எண்டு தயவு செய்து என்னோடை கோவிக்காத.’
‘எனக்கு அது தெரியும் சாந்தன். நீங்கள் சொல்கிறதும் எனக்கு விளங்காமல் இல்லை. நாங்களும் பிரச்சினை இல்லாமல் வாழ்கிறம் எண்டு இல்லை. நித்தம் நித்தம் எங்களுக்கும் பிரச்சினைதான். அதுக்கு என்ன செய்கிறது? எங்கடை பிரச்சினையை யாரிட்டைப் போய் சொல்லி அழுகிறது? உங்கடை பிரச்சினையை நீங்கள் வெளிய சொல்லுகிறியள். எங்கடை பிரச்சினையை நாங்கள் வெளியகூடச் சொல்ல முடியாது.’
‘அப்பிடி என்ன பிரச்சினை?’
‘அதுதானே சொன்னன். அதைவிடு. உனக்கு இருக்கிற பிரச்சினையோடை ஒப்பிடுகையில அது ஒரு பிரச்சினையே இல்லை. குழந்தைகள் முக்கியம். எங்களுக்கு இருக்கிற பிரச்சினைகளை எல்லாம் ஒரு பிரச்சினையாகக் கதைக்கத் தேவையில்லை.’
‘விளங்குது. நீங்களாச் சொல்லுகிற சந்தர்ப்பம் வரேக்க சொல்லுங்க. அப்ப அதைப் பற்றிக் கதைக்கலாம். லாவண்ணியவின்ரை பிரச்சினை உங்களுக்கு ஆரம்பத்தில இருந்து தெரியும் தானே? அவள் வர வர இப்ப மோசமாகச் செய்கிறாள்.’
‘டொக்ரர் என்ன சொல்லுகிறார்?’
‘அவர் என்ன வீட்டையா வந்து இருந்து பார்க்க முடியும்?’
‘நீங்கள் கதைக்கிறது இல்லையே?’

‘கதைக்காமலா இருப்பம்? நாங்கள் கொஞ்சம் நெருக்கினாலும் வீட்டை விட்டு வெளிக்கிடுகிறன் எண்டு நிக்கிறாள். அப்பிடி வெளிக்கிட்டா இங்க நாங்கள் என்ன செய்யமுடியும் சொல்லுங்க பார்ப்பம்? இது மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத பிரச்சினை. நாங்கள் நித்தமும் அவளோடை அல்லாட வேண்டி இருக்குது.’
‘உண்மை அண்ணை. வயது வந்தவைக்கே பிரச்சினைகள் விளங்குதில்லை. அதுகள் இப்படி நடக்கிறதில அதிசயப்பட என்ன இருக்குது? நாங்கள்தான் இயலுமானதைச் செய்ய வேணும்.’
‘என்னவோ கமலா நிம்மதியே இல்லை. எங்கேயாவது போன பருவாய் இல்லை எண்டு நினைப்பன். எண்டாலும் இவளை இந்த நிலைமையில விட்டிட்டு நான் எப்பிடிப் போக முடியும்? மன நிம்மதிக்கு ஒரு வழியும் இல்லை போல இருக்குது. யோசிச்சு… யோசிச்சுக்கொண்டு காலத்தைப் போக்க வேண்டி இருக்குது.’
‘என்ன செய்கிறது? சமாளி சாந்தன்.’
‘அது தெரியும். வேறை வழி இல்லைச் சமாளிக்கத்தான் வேணும். ஆனா எங்கடை பிரச்சினையை வாய்விட்டுக் கதைக்கவும் சந்தர்ப்பம் இல்லாட்டி பயித்தியம் பிடிச்சிடும் இல்லையா?’
‘அதுதான் வந்திருக்கிறம்தானே… கதைப்பம்.’
‘ஓ அதுக்குத்தான் உங்களை வரச் சொன்னான். அதுவும் நல்லாய் மனம் விட்டுக் கதைக்க வேணும். அதுக்கு கொஞ்சம் எடுத்தம் எண்டால் நல்லாய் இருக்கும்.’
‘அதுக்கு என்ன…? எடுத்தால் போச்சுது.’
‘என்ன…? எடுத்தால் போச்சுதோ?’
‘விடு கமலா… இண்டைக்கு மட்டும்தான். நான் நிறைய மனம் விட்டுக் கதைக்க வேணும். தயவு செய்து இண்டைக்குத் தடுக்காதை கமலா.’
‘இல்லை அண்ணை…’
‘பிளீஸ் இண்டைக்கு மட்டும்.’ என்றான் சாந்தன்.
‘சரி உங்கடை நிலைமையை யோசிக்க மறுக்கவும் முடிய இல்லை. ஆனா அவருக்குக் கொஞ்சமா குடுங்க. தயவு செய்து நான் சொல்லுகிறதை மனசில வைச்சிருங்க.’
‘நான்தானே வார்க்கப் போகிறன். நான் அதைப் பார்த்துக் கொள்கிறன். நீங்க அதைப்பற்றிக் கவலைப்படாதையுங்க.’
‘சரி நான் உங்களை நம்புகிறன்.’
‘கமலாவுக்கு தேவையில்லாத பயம்.’ என்றான் மது.
‘இது தேவையான பயமா இல்லையா எண்டு எனக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் சாந்தன் அண்ணா சொல்லுகிறதைக் கேட்டு அளவாய் எடுங்க. சரியா?’
‘சரி… சரி… உன்ரை அற்வைஸ் காணும். போய் லதாவுக்கு ஏதும் உதவி வேணும் எண்டாச் செய்.’
‘எனக்கு ஒரு உதவியும் தேவை இல்லை. நான் சமாளிப்பன். கமலாவும் உங்களோடை இருந்து பம்பலாகக் கதைக்கட்டும். இப்ப நீங்கள் ரீயைக் குடியுங்க.’
‘கமலாவுக்கு ரீயைக் குடு. எனக்கும் மதுவுக்குமான ரீயைப் பிளஸ்க்கில ஊத்திவை. நாங்கள் பிறகு குடிக்கிறம்.’ என்றான் சாந்தன்.
‘உங்களுக்கு என்ன பிளான்? ஏன் ரீ இப்ப வேண்டாம்.’ என்றாள் லதா.
‘கொஞ்சம் மனம் விட்டுக் கதைக்க வேணும்.’
‘மனம் விட்டுக் கதைக்கிறதுக்கும் ரீ குடிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம். ரீயைக் குடிச்சுக்கொண்டு கதைக்கலாம் தானே?’
‘ஐயோ இவ ஒராள்… நாங்கள் பெரிசு எடுக்கப் போகிறம். எங்களுக்கு இப்ப ரீ வேண்டாம். இப்ப எண்டாலும் விளங்குதா?’
‘சரி… சரி… விளங்குது. என்ன எண்டாலும் அளவா எடுங்க.’
‘அது பிரச்சினை இல்லை. நீ கொஞ்ச முட்டை அவிச்சுக் கொண்டுவா.’
‘சரி. கமலா அவை தண்ணி அடிக்கப் போகினமாம். நீங்க வாங்க.’
‘ம்… நானும் அதைத்தான் நினைச்சன்.’

*

அதைத் தொடர்ந்து மதுவைத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்குமாறு கூறிவிட்டுச் சாந்தன் உள்ளே சென்றான். சிறிது நேரத்தின் பின்பு சாந்தன் Jack Daniel’s மற்றும் குவளைகள் அத்துடன் கலந்து பருகத் தேவையான அனைத்துப் பொருட்களோடும் அங்கே வந்தான். அங்கே வந்தவன் தாமதியாது அதைப் பரிமாறத் தொடங்கினான். அதைப் பார்த்த மது,
‘ஓ  Jack Daniel’s குடிச்சு நிறைய நாளாகீட்டுது. எங்க இப்ப ஒண்டையும் வாயில வைக்க விடுகிறாள் இல்லை.’
‘ஆனா… நான் வேறை மாதிரிக் கேள்விப்பட்டன்.’
‘என்ன? என்ன கேள்விப்பட்டாய்?’
‘இல்லைச் சனங்கள் நீ எப்பவும் தண்ணியில மிதக்கிறாய் எண்டு சாதுவாய் கதைக்கினம். உண்மையா அது? நான் அதை முழுமையாய் நம்ப இல்லை. எண்டாலும் நாலு சனம் கதைக்கிற அளவுக்கு நீ குடிக்கிறாயா எண்டு அதிசயமா இருக்குது.’
‘அப்பிடியா என்னைப் பார்க்கத் தெரியுது?’
‘முழுசாச் சொல்ல முடிய இல்லை. எண்டாலும் உன்னில ஏதோ ஒரு மாற்றம் இருக்குது. இங்க வரமுதல்ல நீ ஒண்டும் அடிக்க இல்லையே?’
‘சத்தியமா இல்லை. அடிச்சா எப்பிடி இங்க வெளிக்கிட்டு வந்து இருப்பன்?’
‘ஏதோ கொஞ்சம் தடுமாறின மாதிரி இருந்திச்சுது. அதுதான் நான் கேட்டன்.’
‘எனக்கும் அது தெரியும். ஆனால் அந்தத் தடுமாற்றம் எப்பிடி வருகுது எண்டு எனக்குத் தெரியாது. அது நான் குடிக்கிறதால வருகிறது இல்லை. அதைப் பற்றி எங்களுக்கே தெரியாமல் இருக்க உனக்கு எதுவும் இப்ப சொல்ல முடியாது. நிச்சயம் காரணம் தெரிஞ்சால் சொல்லுவன்.’
‘ஏதாவது வருத்தமா இக்கப் போகுது? டொக்ரரோடை இதைப் பற்றிக் கதைச்சியா?’
‘இன்னும் இல்லை. கமலாவும் நச்சரிக்கிறாள். அவளுக்காக எண்டாலும் டொக்ரரைக் கெதியாப் பார்க்க வேணும்.’
‘அது நல்லதுதான். நீ கெதியாய் டொக்ரரைப் பார்.’
‘போகிறதுக்கு முடிவு செய்தாச்சுது… கட்டாயம் போவம். ம்… நீ ஊத்து.’
‘அது சரிதான். வாழ்க்கை எண்டாச் சிக்கல் இல்லாமலா இருக்கும்.’
‘என்ன சொல்ல வாறாய்?’
‘இல்லை வீட்டிலையும் அப்பிடித்தான். உலகத்திலையும் அப்பிடித்தான்.’
‘லாவண்ணியாவின்ரை பிரச்சினை உனக்குச் சங்கடம்தான். அதையே நீ சமாளிக்க முடியாமல் தவிக்கிறாய். அதைவிட வெளிப்பிரச்சினை என்ன? அதையேன் தேவையில்லாமல் மனதில போட்டுக்கொண்டு கஸ்ரப்படுகிறாய்?’ என்றான் மது.
‘அப்பிடி நான் அதை மனதில போட்டுக் கொண்டு கஸ்ரப்பட இல்லை. லாவண்ணியாதான் என்னுடைய மனமெல்லாம். இடையில உந்தச் சாவைப் பற்றிக் கேள்விப்பட்டதைச் சொன்னன்.’ என்றான் சாந்தன்.
‘ஓ அது எதிர்பார்க்காததுதான். என்ன செய்கிறது? இழப்பு எண்டுகிறது எப்பிடி யாரைப் பாதிக்கும் எண்டு தெரியாது. அதுவும் தனக்கே உரிமையானது தன்னிடமே இல்லை எண்டுகிற நிலைமை வந்தா யார் எப்பிடி நடப்பினம் எண்டு யாருக்கும் தெரியாது இல்லையா?’
‘இழப்புக்கள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதுக்காக வாழ்க்கையை முடிச்சுக் கொள்கிற நிலைமைக்கு வாறது பெரிய துன்பமான நிலை.’ என்றான் சாந்தன்.

‘சில இழப்புகள் எதையும் செய்யத் தோன்றும். காதல் இழப்பு… குழந்தைகளுடைய இழப்பு… தனிமை… எண்டு அதுக்கு நிறையக் காரணம் இருக்குது.’
‘அந்த இழப்புக்களை ஏற்படுத்துகிறவையும் அதன் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேணும்.’ என்றான் சாந்தன்.
‘மனிசன் தனக்கு எண்டு சிந்திக்கையில மிருகம். அப்பிடிச் சிந்திக்கையில பொதுவான நல்ல மனிதப் பண்புகளும் முன்னுக்கு வராது. தனக்கு எது நல்லதோ, நன்மையானதோ அதையே செய்வான்.’
‘உண்மை. எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாத உணர்வு. எதற்கு உதாரணமாய் இருக்கக்கூடாதோ அதற்கே உதாரணமான நிலைமை.’ என்றான் மீண்டும் சாந்தன்.
‘நடந்தவை நடந்தவையே. அதை இனி யாரும் மாத்த முடியாது.’ என்றான் மது. குவளைகள் நிரப்பப்படவும் லதா அவித்துக் கோது நீக்கிய முட்டைக்கு மிளகும் உப்பும் இட்டுக் கொண்டு வந்து வைத்தாள். பின்பு இருவரையும் பார்த்து,
‘கொஞ்சம் அளவா எடுங்க. மதுவுக்கு இப்ப பெரிசா ஒத்துக் கொள்ளுது இல்லை எண்டு கமலா கவலைப்படுகிறா. உங்கள் இரண்டு பேருக்கும் அது விளங்கும் எண்டு நினைக்கிறன்.’
‘சரி… சரி… அது எனக்கு விளங்குது. நீ சமயலைப்பார்.’
‘சரி… ஏதோ பார்த்துச் செய்யுங்க.’
என்று கூறியவள் சமையல் அறையை நோக்கிச் சென்றாள். மது அருந்த அருந்த அதை அருந்தும் வேகமும் அவர்களை அறியாது விரைவாகியது. அதன் ஏற்றத்தில் இருவரும் மனம் விட்டுக் கதைத்தார்கள்.
‘என்ன கதைக்க வேணும் எண்டாய். இப்ப அதைச் சொல்லு?’ என்றான் மது.
‘எந்நத்த நான் கதைப்பன். எல்லாம் லாவண்ணியாவைப் பற்றின கவலை. அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் கையைக் கையைக் கீறுகிறாள். செய்யாத எண்டா அது தன்ரை ஸ்ரம் எண்டுகிறாள். என்னோடை அது ஒரு பிரச்சினையும் இல்லை எண்டிட்டுப் போயிடுவாள். ஆனாத் தாயோடைதான் எல்லாப் பிரச்சினையும். ஆரோடை பிரச்சினைப்படுகிறாள் எண்டதைவிட என்ன செய்கிறாள் எண்டதுதான் முக்கியம். அவள் செய்கிறதைப் பார்க்க எனக்குப் பயமாகவும் நிம்மதி இல்லாமலும் இருக்குது.’
‘பிள்ளைகளோடை நேரம் செலவழிக்க வேணும் எண்டுகிறாங்கள். அதைவிட எங்கடை அறிவுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?’
‘அதுதான் என்ன செய்கிறது…? என்ன செய்கிறது எண்டு  யோசிச்சு ஒரே தலையிடி. இப்பிடி ஒரு கஸ்ரம் எங்களுக்கு வந்து இருக்கக் கூடாது. இதில இருந்து எப்பிடியாவது வெளிய வந்திட வேணும் எண்டுதான் முயற்சிக்கிறன். ஆனா அதுக்கு வழியே பிறக்குது இல்லை. அவங்கள் ஏதோ தரப்பி… தரப்பி… எண்டுகிறாங்கள். ஆனா எதுவும் பெரிசா உதவுகிற மாதிரி இல்லை.’
‘அதுகள் உடனடியாகப் பலன் தராது. தொடர்ந்து முயற்சிக்க வேணும். அதைவிட வேறை வழி இல்லை. பொறுமையா அவங்கள் சொல்லுகிறதைக் கேட்டுச் செய்கிறது புத்தி எண்டு நான் நினைக்கிறன்.’
‘ம்… நீ சொல்லுகிறதும் உண்மை. ஆனாச் சொந்தப் பிள்ளை எண்டு வருகிறபோது அந்தப் பொறுமை எல்லாம் இருக்காது. நித்தம் மனது கிடந்து துடிக்கும். ஏதாவது ஒரு வழி வருமோ எண்டு ஏக்கமா இருக்கும். அதுதான் இப்ப என்னுடைய நிலைமை.’
‘எனக்கு உன்னுடைய நிலைமை விளங்குது. ஆனா உனக்கு அதைவிட வேற வழி ஒண்டும் இல்லை. ஏன் இப்பிடி வருகுது எண்டு தெரியாது. வந்த பிறகு என்ன செய்ய முடியும்? சமாளிச்சுப் போக வேண்டியதுதான்.’
‘ம்… நீ சொல்லுகிறது சரி. இயலுமானதைச் செய்வம். ஆனாலும் அவளை நினைக்க நினைக்கக் கவலையா இருக்குது.’
‘ம் கவலைப்படாத. தயிரியமா இரு.’
‘ம்…’

*
சிறிது நேரம் கதைத்துக் கொண்டு இருந்த மது சிறிது சிறிதாகக் கதைப்பதைக் குறைக்கத் தொடங்கினான். அப்படியே சோபாவில் சாய்ந்து நித்திரை கொள்ளத் தொடங்கினான். அவனுக்கு இவ்வளவு விரைவாக ஏறும் என்று சாந்தன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே கமலாவும் லதாவும் எச்சரித்து இருந்தார்கள். இப்போது அவர்களிடம் கூறினால் அவர்கள் என்ன சொல்வார்களோ என்கின்ற பயம் சாந்தனுக்கு உண்டாகியது. மது அப்படியே அசையாது படுத்து இருப்பது சாந்தனுக்குப் பயத்தையும் கோபத்தையும் உண்டுபண்ணியது. அவன் எழுந்து வந்து மது அருகிலிருந்து அவனை உலுப்பினான். அவன் தொடர்ந்தும் நித்திரை கொள்வது போல இருந்தது. எழுந்திருக்கும் எண்ணமே அவனிடம் இருப்பதாய் தோன்றவில்லை. பின்பு அது நித்திரையா அல்லது மயக்கமா என்கின்ற கேள்வியும் சந்தேகமும் அவனிடம் எழுந்தது. அந்தச் சந்தேகம் அவனுக்குப் பயத்தை உண்டு பண்ணியது. சாந்தன் மேலும் மேலும் மதுவை உலுப்பி எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. அதற்கு மேல் சாந்தனால் அதை மறைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏதாவது நடந்துவிட்டால் என்கின்ற பயம் அவனுக்குத் தோன்றியது. ஒடிச் சென்று லதாவிடமும் கமலாவிடமும் விசயத்தைக் கூறினான். அவர்கள் அதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்த வினாடியே மதுவை நோக்கி ஓடினார்கள்.

ஆறுதலாக அரை மணித்தியாலத்தின் பின்பு அம்புலன்ஸ் வந்தது. கமலாவும் அதில் பாய்ந்து ஏறிக் கொண்டாள். அவள் மதுவின் நிலையைப் பார்த்தது தொடக்கம் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். அப்படி அவள் அன்புலன்ஸ்சில ஏறுவதற்கு முன்பு சாந்தனுக்கு அவளை நிமிர்ந்து பார்க்க முடியாத கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. தானே தேவையில்லாத பிரச்சினையை உண்டுபண்ணி விட்டதான குற்ற உணர்வ அவனை வாட்டி எடுத்தது. அம்புலன்ஸ் புறப்படவும் அவன் மிகவும் சோர்ந்து போய் உள்ளே வந்தான்.
அப்படி வந்தவனை லதா கோபமாகப் பார்த்தாள். அவன் எதுவும் சொல்லாது அமைதியாகச் சோபாவில் அமர்ந்தான். லதா போத்தலை எடுதுச் சென்று உள்ளே வைத்தாள்.
‘இது காணும் நான் சாப்பாடு எடுத்தாறன்.’ என்றாள் தொடர்ந்து.
அதைப் பார்த்த சாந்தன்,
‘நான் கொஞ்சம்கூடக் குடிக்க இல்லை. அவன் ஏன் மயங்கினான் எண்டு எனக்குத் தெரியாது.’
‘உங்களுக்குத் தேவையில்லாத வேலை. பிரச்சினையைக் கதைக்க வேணும் எண்டாச் சும்மா கதைக்கிறது தானே? அதை விட்டிட்டு உங்களுக்குப் போத்தல் ஏன்? இப்ப வினையை பாத்தீங்கள்தானே?’
‘நான் இப்பிடி நடக்கும் எண்டு எதிர்பார்க்க இல்லை.’
‘சரி வாங்க சாப்பிட.’
‘ம்…’
மதுவுக்கு ஏதும் பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று அவன் மனதில் பிரார்த்தித்துக் கொண்டான்.