4

கமலா மிகவும் கோபமாக இருந்தாள். மது சோபாவில் தூக்குத் தண்டனைக் கைதி போல தலையைக் குனிந்த வண்ணம் இருந்தான். மருத்துவமனையில் முதலில் தாதிகள் கூறியதிற்கு மதுவிடம் எந்த விளக்கமும் இருக்கவில்லை. அதனால் கமலாவின் கேள்விகளுக்கு அவன் பதிலளிக்கவில்லை. அவனின் அந்த மௌனம் அவளை மேலும் கோபம் கொள்ள வைத்தது.
‘என்ன பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல பேசாமல் இருக்கிறியள்?’
‘எதை நான் சொல்லுகிறது? அப்பிடி நான் எதையாவதும் சொன்னாலும் நீ நம்பப் போகிறாயே?’
‘இவ்வளவு குடிச்சு இருக்கிறியள்? எனக்குச் சும்மா சும்மா சத்தியம் பண்ணித் தாறியள் எண்டது விளங்காதே?’
‘குடிக்கப் போகிறம் எண்டு சொல்லிப் போட்டுத்தானே குடிக்கத் தொடங்கினம். பிறகு என்ன கேள்வி இது?’
‘அது சாந்தன்ரை வீட்டில…’
‘அப்பிடி எண்டா?’
‘அதுக்கு முதல் எங்கை குடிச்சியள் எண்டதுதான் என்னுடைய கேள்வி? எவ்வளவு குடிச்சியள் எண்டது என்னுடைய அடுத்த கேள்வி. அதுக்கு முதல்ல விளக்கம் சொல்லுங்க. அதை விட்டிட்டு என்னைத் தொடர்ந்து பயித்தியக்காரி ஆக்காதேங்க.’
‘ஐயோ நான் எங்க போகிறது?’
‘சமாளிக்காதையுங்க… தயவு செய்து உண்மையைச் சொல்லுங்க. அதைச் செய்தா நீங்க எங்கையும் போகத் தேவை இல்லை.’
‘உனக்கு எது உண்மை எது பொய் எண்டு தெரியுமா?’
‘நீங்கள் தத்துவம் கதைக்கிறதாய் என்னையும் ஏமாத்தி உங்களையும் ஏமாத்தாதீங்க. எனக்குத் தெரியும் உங்கடை சுத்துமாத்து. அங்க போக முதலே நீங்கள் இங்க குடிச்சு இருக்கிறியள். அதைத்தானே கொஸ்பிற்றலையும் சொன்னவை. உண்மைதானே?’
‘உனக்குக் கொஸ்பிற்றல்ல நடந்ததில கொஞ்சம் மட்டும் தெரியும். ஆனா நிறையத் தெரியாது. நேரம் வரேக்க உனக்குத் தெரியவரும்.’
‘எனக்கு என்ன தெரியாது?’
‘உனக்கு எதுவும் தெரியாது. அதாலதான் இந்தக் கதை கதைக்கிறாய்.’
‘நீங்கள் சொல்லுகிற எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி உண்மையைக் கண்டுபிடிக்க வேணும். பிறகு பாப்பம் உங்கடை வித்தையைப் பற்றி.’
‘நான் வருவன். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பொய் சொன்னால்தானே பயப்பிட வேணும். நான்தானே பொய் சொல்ல இல்லை எண்டு சொல்லுகிறன். உனக்கு எந்நிலை நம்பிக்கை இல்லை. அதால நம்புகிறாய் இல்லை. நீ எப்பதான் என்னை நம்பினாய்?’
‘நீங்கள் சமாளிக்காதையுங்க. நான் உதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் வியாழக்கிழமை றெடியா இருங்க. அண்டைக்குத் தெரிஞ்சிடும் உங்கடை வள்ளல்.’
‘இருந்துபார். அதுக்குப் பிறகு இருக்குது உனக்கு.’
‘உந்த வெருட்டலுக்கு எல்லாம் நான் பயப்பிடமாட்டன்.’
‘சரி… சரி… பார்ப்பம்.’
‘போகிற இடங்களிலையாவது இனிமேலைக்கு அமைதியாக இருங்க. உங்களோடை நான் கொஸ்பிற்றலுக்கு அலைய ஏலாது. உங்கடை திருக்கூத்தால பிள்ளையைக் குழப்பாதையுங்க.’
‘ஐயோ தாயே… உதைப்பற்றிக் கதைக்கிறதை நிப்பாட்டுகிறியா?’
‘சரி… சரி… உதுக்கு மாத்திரம் குறைவில்லை.’
அதன் பின்பு அவள் எழுந்து சமையல் அறையை நோக்கிச் சென்றாள். மதுவுக்கு வெறுப்பாக இருந்தது. தான் சொல்வதை அவள் நம்பவில்லை என்பது அவனுக்கு மனவருத்தத்தைத் தந்தது. இதற்கு ஒரு முடிவு விரைவாக வரவேண்டும் என்பதே அவன் விருப்பமாக இருந்தது. அதற்கு அந்த உண்மையைக் கண்டுபிடிக்கும் இயந்திரம் உதவி செய்யும் என்றால் அதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. வியாழக்கிழமை அதற்கான நாள். அன்று ஒரு உண்மை கமலாவிற்குத் தெரியவரும். இப்போதே மருத்துவர் என்ன கூறினார் என்பதைக் கூறலாம். அதைக்கூடச் சிலவேளை அவள் நம்பமாட்டாள். நம்பிக்கை இல்லாதவளிடம் நான் ஏன் கையேந்த வேண்டும் என்கின்ற கோபம் அவனுக்கு வந்தது. அவன் தனது கோபத்தை எதில் காட்டுவது என்பது தெரியாது கையைப் பிசைந்தான். மதுவின் யோசனையை குழப்புவது போல,
‘சாப்பிட வாங்க.’ என்ற வண்ணம் தட்டில் பச்சை அரிசிச் சோற்றையும் கறியையும் எடுத்து வந்திருந்தாள். மதுவுக்குக் கோழி இறைச்சிக்கறி மிகவும் பிடிக்கும். அதனால் கறி அவனுக்குப் பிரச்சினையாக இல்லை. ஆனால் பச்சை அரிசிச் சோற்றைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. அதைப் பல முறை கமலாவிற்குக் கூறி இருக்கிறான். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் அவளிடம் எடுபடுவதே இல்லை.’

*

பத்தரை மணிக்கு அந்த இயந்திரத்தை இயக்குபவர் வருமாறு கூறியிருந்தார். இருந்தும் பிந்திவிடுவோமோ என்கின்ற பயத்தில் கமலாவும் மதுவும் பத்து மணிக்கே அங்கே ஆயராகிவிட்டார்கள். அது ஒரு சிறிய அலுவலகம். அலுவலகத்தின் முன்பு நான்கு நாற்காலிகளும் சில சஞ்சிகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. அலுவலகத்தின் கதவுகள் சாத்தி இருந்ததால் யாருக்கோ உள்ளே பரிசோதனை நடக்கிறது என்பதை மது ஊகித்துக் கொண்டான். என்றாலும் கமலாவின் நச்சரிப்பால் அரைமணித்தியாலத்திற்கு முன்பே வந்திருந்ததில் வெறுப்பாக இருந்தது.
‘இவ்வளவு வெள்ளன வரத் தேவையில்லை எண்டு நான் அப்பவே சொன்னன்.’
‘வாந்தாச்சுது… இனி என்ன செய்கிறது? பேசாமல் இருங்க. நான் நேரம் எடுக்கும் எண்டு நினைச்சன்.’
‘நீ எல்லாத்தையும் பிழை பிழையாகத்தான் நினைப்பாயாக்கும்?’
‘ஏன் அப்பிடிக் கேட்கிறியள்?’
‘கொஞ்சம் பொறு… ஏன் அப்பிடி எண்டு அப்ப தெரியும்.’
‘இப்ப என்ன சொல்ல வாறியள்?’
‘உனக்கு நான் சொல்லி எது விளங்கி இருக்குது. கொஞ்சம் பொறு தானா விளங்கும்.’
‘சரி… சரி… அதில உங்கடை வண்டவாளம்தான் தெரியப் போகுது.’
இவர்கள் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே வியட்நாம் நாட்டைச் சார்ந்த ஒரு தம்பதி வந்து அமர்ந்தார்கள். அவர்களைப் பார்க்கத் தனது நிலையை மறந்து மதுவுக்குச் சிரிப்பு வந்தது. அதன் பின்பு பரிதாபமாக இருந்தது. அவன் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்களை மீண்டும் பரிதாபமாகப் பார்த்தான். அவர்களுக்குள் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அவர்கள் ஒருவருடன் ஒருவர் கதைத்துக் கொள்ளவில்லை. அதை நினைக்கும் போது தாங்கள் பருவாய் இல்லை என்று ஒரு கணம் அவனுக்கு எண்ணத் தோன்றியது. என்ன பிரச்சினை இருந்தாலும் கதைப்பதை நிறுத்துவதில்லை. கடித்துக் கடித்துக் கதை தொடரும். அது ஒருவகையில் நன்மை என்று மது எண்ணிக் கொண்டான். அவன் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அந்த வியட்நாம் பெண்,
‘மன்னிக்க வேண்டும்… நீங்கள் வந்து அதிக நேரமாகிவிட்டதா?’ என்று கேட்டாள்.
‘இல்லை. சற்று முன்பே வந்தோம்.’
‘நாங்கள் அதிக நேரத்திற்கு முன்பே வந்துவிட்டோம் என்று நினைக்கிறன்.’
‘நாங்களும் நேரம் முந்தியே வந்து இருக்கிறோம். உள்ளேயும் யாரோ இருக்கிறார்கள் போல இருக்கின்றது?’
‘இதையும் இப்போது பலரும் பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள்… அதனால் இங்கே இப்படி இருக்கிறது.’
‘இனி வரும் காலத்தில அலைபேசியில்கூட இந்த வசதிகள் வந்தாலும் வரலாம்.’
‘நீங்கள் சொல்வது நூறுவீத உண்மை.’
கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே கதவு திடீரெனத் திறந்தது. ஒரு வயதுபோன தம்பதி வெளியே வந்தனர். அதைப் பார்த்த மதுவுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும் வியப்பாக இருந்தது. அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கமலா கண்ணைக் காட்டினாள். மதுவுக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும் கமாலா தன்னையும் இழுத்துக் கொண்டு இங்கே வந்தது பிடிக்கவில்லை. அவன் அதனால் உதட்டைப் பிதுக்கினான். அவளுக்கு அது விளங்கியது. அதன் பின்பு அவள் அவனைச் சொறியவில்லை. அந்த வியட்நாம் குடும்பமும் தங்கள் மொழியில் ஏதோ கதைத்தார்கள். அவர்கள் அந்த வயது போன தம்பதிகள் பற்றியே கதைத்து இருப்பார்கள் என்பது விளங்கியது. என்ன கதைத்து இருப்பார்கள் என்பது மட்டும் சுத்தமாக விளங்கவில்லை.
அந்தத் தம்பதிகளுக்குக் கதவைத் திறந்துவிட்ட நபர் மதுவின் பெயரை அழைத்தார். மது முன்னே சென்றதும் கையைக் கொடுத்து,
‘மார்ட்டின்.’ என்றார்.
மதுவும் கையைக் கொடுத்து தன்னை அறிமுகம் செய்தான். அத்தோடு கமலாவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
உள்ளே சென்றதும் மதுவை ஒரு நாற்காலியில் இருக்க வைத்துப் பின்பு அவன் மார்பிலும் இடுப்பிலுமாக இரண்டு பட்டிகள் பொருத்தப்பட்டன. அதன் பல இணைப்புகள் ஒன்றிணைத்து கணணியில் பொருத்தப்பட்டு இருந்தது. கணணியில் இருக்கும் மென்பொருள் மிச்சத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தது. அதற்கு மார்ட்டின் கேள்வி கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு மது பதில் அழிக்க வேண்டும். பதில் சரியா அல்லது பிழையா என்பதை உடல் தரும் சமிக்கையை வைத்து அந்த மென்பொருள் கண்டுபிடித்துவிடும்.

மார்ட்டின் முதற் கேள்வியாக மதுவின் பெயரைக் கேட்டார். மது தனது பெயரை அமைதியாகக் கூறினான். இயந்திரம் அதை உண்மை என்றே காட்டியது. பின்பு மாட்டின் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் தொடங்கினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு மது உண்மையாகப் பதில் கூறினான். கடைசியாகப் பிரமாஸ்திரம் போல அந்தக் கேள்வியை மார்ட்டின் மதுவிடம் கேட்டார். மது பதில் சொன்னான். அத்தோடு பரிசோதனை முடிவுக்கு வந்தது. மது நாற்காலியை விட்டு எழுந்தான். மார்ட்டின் கமலாவைப் பார்த்து,
‘அவர் உண்மைதான் கூறுகிறார்.’ என்று உறுதியாகக் கூறினார்.
‘அப்ப எப்பிடி அவர் போதையாகிறார்?’
‘அதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். அது எனக்குச் சரியாகத் தெரியாது. அது என்னுடைய அறிவுக்கு எட்டாதது. நீங்கள் உங்கள் மருத்துவருடன் கதைத்துப் பாருங்கள். அவர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள். இதற்கான பதிலை அவரால்தான் கூறமுடியும்.’
‘சரி. நாங்கள் கதைத்துப் பார்க்கின்றோம். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.’
பின்பு அவர் பணம் கட்டுவதற்குக் கொடுத்த கட்டண ரசீதை வாங்கிக் கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
மதுவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவன் சிரித்த வண்ணம் இருந்தான். அவனுக்கு இந்த முடிவு ஏற்கனவே தெரியும். தெரிந்தாலும் அது பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டமை மிகவும் மன மகிழ்வைத் தந்தது. மேற்கொண்டு கமலா கேள்வி கேட்கமாட்டாள் என்பது தெரியும். இருந்தாலும் அவள் தலை தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருக்கும் என்பது அவனுக்கு விளங்கியது. விளங்கினாலும் அவன் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. இவ்வளவு காலமும் தன்னைக் குடைந்ததிற்குச் சிறிது நேரம் தவிக்கட்டும் என்று பேசாது இருந்தான். ஆனால் கமலாவால் அப்படி இருக்க முடியவில்லை.
‘என்ன பேசாமல் சிரிச்சுக் கொண்டு இருக்கிறியள்?’
‘ஏன் நான் இப்ப சிரிக்கவும் கூடாதே?’
‘சும்மா சிரிச்சா வேறை மாதிரி நினைப்பினம்.’
‘அது நினைக்கிறவை நினைக்கட்டும். உன்ன மாதிரிச் சந்தேகப்படாமல் இருந்தால் சரிதான்.’
‘அப்ப நீங்கள் உண்மை சொல்லுகிறியள் எண்டா அது எப்பிடிக் குடிக்காமல் வெறிக்கும்? காத்துக் குடிச்சு வெறிக்குமா? நானும் ஒவ்வொரு நாளும் நிறையக் காத்துக் குடிக்கிறனே? என்ன நடக்குது? எப்பிடி இந்த வித்தையை நீங்கள் மட்டும் செய்கிறியள்? மற்றவைக்கும் சொன்னா அது எங்களுக்கும் உதவியா இருக்கும்தானே?’
‘இன்னும் உனக்குச் சந்தேகம் போக இல்லையா?’
‘விடை கிடைக்காமல் சந்தேகம் எப்பிடிப் போகும்?’
‘உனக்கு விடை கிடைக்கிறதுக்கு இடையில ஆயுள் முடிஞ்சிடும் போல இருக்குது.’
‘பகிடியை விட்டிட்டு உண்மையைச் சொல்லுங்க.’
‘எனக்கும் அதுக்குச் சரியான விளக்கம் தெரியாது. டொக்ரரிட்டைக் கேட்க வேணும். அவர் அதுக்கு முறையான விளக்கம் தரவேணும். அப்பதான் எனக்கும் முழுமையாக விளங்கும்.’
‘அப்ப உங்களுக்குக் கொஞ்சம் எண்டாலும் விளங்கி இருக்கும்தானே? அதை மட்டும் சொல்லுங்க. இல்லாட்டி என்ரை தலை இப்பவே வெடிச்சிடும் போல இருக்குது.’
‘எனக்குத் தெரியாத அரைகுறை விசயத்தை நான் உனக்குச் சொல்ல முடியாது. நாங்கள் டொக்ரரிட்டைப் போகேக்கை அதைப் பற்றிக் கதைப்பம். அப்ப அவர் விளக்கமாகச் சொல்லுவார். இப்ப என்னை விடு. போய் உன்னுடைய வேலையைப் பார்.’
‘பெரிய நடப்புத்தான்.’
‘சரி. இவ்வளவு நாளும் என்னைக் குற்றம் சொன்னதுக்கு என்ன செய்யப் போகிறாய்?’
‘நான் என்ன செய்ய வேணும்? முதல்ல டொக்ரற்றை விளக்கமும் கேட்க வேணும். அப்பதான் இறுதி முடிவு தெரியும். அதுக்குப் பிறகு உதைப் பற்றிக் கதைப்பம்.’
‘சரி இறுதி முடிவு தெரிஞ்ச பிறகு என்ன செய்யப் போகிறாய்?’

‘அது வாற முடிவைப் பொறுத்துத் தெரியும். எனக்கு நீங்கள் உண்மை பேசுகிறியள் எண்டதை இன்னும் நம்ப முடியாமல் இருக்குது.’
‘சரி… சரி…’