5

சாந்தன் மீண்டும் மதுவோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மதுவின் வீட்டிற்கு வருவதாகக் கூறி இருந்தான். மதுவின் வீட்டில் சந்திப்பு நடப்பதால் கமலாவிற்குச் சற்று ஆறுதலாக இருந்தது. இங்கே குடிப்பதற்கு மது இல்லை. மதுவை மது பரிமாறும் சந்தர்ப்பமும் வராது. அதனால் அவள் சிறிது நிம்மதியாக இருந்தாள். சாந்தனின் மகள் லாவண்ணியாவால் எப்போதும் அவனுக்குப் பிரச்சினையே. அது ஒரு தொடர் கதை. அதனால் அவன் ஆறுதலாகக் கதைக்க மதுவிடம் வருகிறான். அத்தோடு மதுவையும் நலம் விசாரிப்பதாக இருக்கலாம் என்று கமலா நினைத்தாள். அன்று சாந்தன் மதுவுக்கு மது வார்த்துக் கொடுத்த கோபம் அவளிடம் இருந்தாலும் அது அவன் தப்பு இல்லை என்பது கமலாவுக்கு விளங்கியது. தப்பே செய்யாதவன் மீது கோபம் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை என்று அவள் எண்ணிக் கொண்டாள். அவள் அப்படி யோசித்துக் கொண்டு நிற்கும் பொழுது அங்கே மது வந்தான். அவனுக்கு இவள் என்ன இப்பிடி யோசிக்கிறாள் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது.
‘என்ன…? எந்தக் கப்பல் தாண்டு போச்சுது?’ என்றான்.
‘யார் அப்பிடி உங்களுக்குச் சொன்னது?’
‘ஆஞ… உன்னைப் பார்த்தா அப்பிடித்தான் இருக்குது. யார் இதை வந்து சொல்ல வேணும்.’
‘இவர் பெரிய வித்தைக்காரர்… பார்த்தே எல்லாம் கண்டு பிடிச்சிடுவார்?’
‘கதையை மாத்தாமல் விசயத்தைச் சொல்லு.’
‘இல்லை… விசயம் தெரியாமல் அண்டைக்கு அவர் மேல கோவப்பட்டன். உண்மையில அவரில பிழை இல்லை. உங்கடை பிரச்சினைக்கு நான் அண்டைக்கு அவர் மேல கோவப்பட்டது சரி இல்லை எண்டது பிறகுதான் எனக்கு விளங்கி இருக்குது.’
‘அது என்னுடைய பிரச்சினை இல்லை.’
‘அப்ப ஆற்றை பிரச்சினை?’
‘ம்… உன்னுடைய பிரச்சினை. இப்ப ஏதாவது சாப்பிட ஏற்பாடு செய்.’
‘ம்…’
அவள் யோசித்துக் கொண்டு போவதை மது இரசித்துப் பார்த்தான்.

*

சாந்தனை அந்தக் கோலத்தில் பார்த்த மது அதிர்ந்து போய்விட்டான். அவன் அப்படி மாறியதற்கான காரணம் என்ன என்பது அவனுக்கு விளங்கியது. அதற்காக இவன் தன்னை வருத்துவதால் எந்தப் பிரயோசனமும் வந்துவிடாது என்பதும் மதுவுக்கு விளங்கியது. எனினும் தனக்குத் தனக்கு என்று வரும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியே நடந்து கொள்வார்கள். சாந்தன் தனது பிரச்சினையை இப்படி வெளிக்காட்டுகிறான் என்று எண்ணினான். பின்பு சாந்தனை வரவளைத்துச் சோபாவில் இருக்க வைத்தான். பின்பு அவனைப் பார்த்து,
‘என்ன சாந்தன்… இது என்ன கோலம்? உனக்குப் பிரச்சினை இருக்குது எண்டு தெரியும். அதுக்காக இப்பிடித் திரிகிறதாலா எதுவும் மாறாது எண்டு நான் நினைக்கிறன்.’
‘நீ சொல்லுகிறது சரி மது. ஆனா என்னால தாங்க முடிய இல்லை. இருக்கிறது ஒரு பிள்ளை. அதுவும் இப்பிடி எண்டா யாரால தாங்க முடியும் சொல்லு? என்னால முடிய இல்லை. செத்தே போயிடலாம் எண்டுகூடச் சில வேளை நினைப்பன்.’
‘இப்பிடி எல்லாம் கதைக்காதை சாந்தன். நீ இப்பிடிக் கதைக்கிறதைக் கேட்க கவலையா இருக்குது. தயவு செய்து அப்பிடி எல்லாம் நினைக்காதை. நீ தனியாள் இல்லை. நீ ஏதாவது செய்தி எண்டா லாவண்ணியா என்ன ஆவாள் எண்டு முதல்ல யோசி. இல்லை லாதாவின்ரை பாடுதான் என்ன ஆகும் எண்டு யோசி. இனிமேலைக்கு நீ இப்பிடி எதுவும் நினைக்காதை சாந்தன்.’
‘நானும் அப்பிடித்தான் சில வேளை நினைப்பன் மது. பிறகு மறுபடியும் வாழ்க்கை வெறுக்கத் தொடங்கீடும். லவண்ணியா வரவர மோசமாகிப் போகிறது போல இருக்குது. அதைப் பார்க்கப் பார்க்கத்தான் திரும்பத் திரும்ப வேதனையா இருக்குது. எங்கையாவது போக வேணும் எண்டு நினைப்பன். அப்பிடிப் போனால் தனிய லாவண்ணியா ஏதாவது ஏடாபூடமாகச் செய்து போடுவாளோ எண்டு பயம் இருக்குது. அந்தப் பயத்தில நான் எங்யையும் அசைய முடியாமல இருக்குது.’
‘விளங்குது சாந்தன். நீதான் நிலைமையை உணர்ந்து சமாளிச்சு நடக்க வேணும். நீ இதில சோர்ந்து போக்கக் கூடாது. உனக்கு மட்டும் பிரச்சினை இல்லை. எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினை இருக்குது. என்ன செய்கிறது சமாளிச்சு நடக்க வேண்டியதுதான். நீ தான் உன்ரை குடும்பத்தின்ரை தூண். நீயே இப்படி ஈடாடக்கூடாது. அது எல்லாரையும் விழுத்திப்போடும்.’
‘ம்…’
கமலா சாந்தன் வந்திருப்பதை அறிந்து பால்த்தேநீரோடு வந்தாள். வந்தவள் சாந்தனைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும் அதைச் சமாளித்துக் கொண்டு,
‘என்ன அண்ண இந்தக் கோலம்?’ என்றாள்.
‘எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விசயம்தான். லாவண்ணியாவின்ரை பிரச்சினை ஓயிற மாதிரி இல்லை. அவள் ஏதும் செய்து போடுவாளோ எண்டு பயமா இருக்குது. அந்த யோசினை இரவு பகல் எண்டு நிம்மதியாய் இருக்க விடுகிதில்லை.’
‘என்ன அண்ணை சொல்லுகிறியள்?’
‘இல்லை… முதல்ல கையை மட்டும் கீறிக் கொண்டு திரிஞ்சாள். இப்ப என்ன எண்டாத் தான் தற்கொலை செய்யப் போகிறன் எண்டு வெருட்டுகிறாள். ஆனா அவள் ஒரு நாள் அப்பிடிச் செய்து போடுவாளோ எண்டு எனக்குப் பயமா இருக்குது.’
‘என்னண்ண இப்பிடிச் சொல்லுகிறியள்? டொக்ரரோடை கதைச்சியளா?’
‘அவங்கள் திரும்பவும் தரப்பி தரப்பி எண்டுகிறாங்கள். அது ஒரு மணித்தியாலம் அவங்கள் குடுக்கிற தரப்பிக்கும் நாங்கள் நாள் முழுவதும் அவளோடை இருக்கிறதுக்கும் சரியா இருக்குமா?’
‘ம்… நீங்கள் சொல்லுகிறதும் உண்மை. ஆனா அவளுக்கும் தன்னை நீங்கள் கவனிக்கிறியள் இல்லை என்டுகிற ஏக்கமாக இருக்கலாம். அல்லது அது மாதிரியான ஏதாவது ஏக்கமாக இருக்கலாம். நீங்கள் கதையுங்க அண்ணை. அவளோடை நேரம் செலவழியுங்க. டொக்ரற்றை தரப்பியவிட அது நல்லா உதவி செய்யும் எண்டு நான் நினைக்கிறன்.’
‘அவளும் தாயும் நெடுகப் புடுங்குப்படுவினம். தன்னுடைய உடம்பு தான் காயமாக்கிறன் நீ யார் அதைக் கேட்க எண்டு எதிர்த்துக் கதைப்பாள். இப்ப என்னன்டா தனக்குச் சாகிறதே சுகம் எண்டுகிறாள். என்னிட்டை அவள் அப்பிடிச் சொல்ல இல்லை. தயோடை மட்டும் இந்தக் கதையெல்லாம். யாரோடை கதைச்சாலும் அவள் மனதில இருக்கிறதைத்தானே சொல்லுகிறாள். இதைக் கேட்ட பிறகு நான் எப்பிடி நிம்மதியாய் இருக்க முடியும் சொல்லுங்க?’
‘சிலவேளை அவளுக்கு அம்மாவோடை பிரச்சினையோ என்னவோ? நீங்கள் கதைச்சுப் பாருங்க அண்ணை.’
‘நான்  கதைச்சா அவள் பெரிசாக் கதைக்க மாட்டாள். அது ஒண்டும் இல்லை அப்பா எண்டிட்டுப் போயிடுவாள். அதுக்கு மேல என்ன செய்கிறது எண்டே எனக்குத் தெரியாது. இப்பிடித்தான் காலம் போகுது. தரப்பி தரப்பி எண்டு அவங்கள் லேசாச் சொல்லுகிறாங்கள். அது பெரிசா வேலை செய்கிற மாதிரியும் தெரிய இல்லை. அப்ப நாங்கள் எங்க போக முடியும்?’
‘சண்டை பிடிச்சாலும் பெம்பிளைப் பிள்ளைகள் தாயோடைதான் கதைக்குங்கள் இல்லையே அண்ணை?’
‘அது உண்மையோ எண்டு எனக்குத் தெரியாது. எங்கடை வீட்டில தொடங்கினா அது பெரிய சண்டையாகப் போயிடும். அவள் தாயோடை கதைக்கேக்க அவ்வளவு கோவப்பட்டுக் கதைப்பாள். நான் கதைச்சாக் சொஞ்சம் அமைதியாகக் கதைப்பாள். ஆனா அவளுக்கு என்னோடை கதைக்க நிறைய விசயம் இருக்காது. நானும் அவளை இழுத்துப் பிடிச்சு வைச்சுக் கதைக்க முடியாது.’
‘கவனமாய் இருக்க வேணும் சாந்தன்.’ என்றான் மது.

‘அதுதான் மனசில நிம்மதி இல்லை. என்ன செய்கிறது எண்டே தெரிய இல்லை. பெத்து வைச்சிருக்கிற ஒண்டும் இப்பிடி எண்டா நாங்கள் என்ன செய்கிறது? எங்க போகிறது? லதாவுக்கும் இதே தலையிடி.’
‘இது லாவண்ணியாவுக்கு மட்டும் இல்லை. இங்க சில பிள்ளைகளுக்கும் இருக்குது. கவனமாய் பார்க்கிறது, அக்கறையாப் பேசுகிறது எண்டு நாங்கள் எங்களால இயலுமானதைச் செய்ய வேணும்.’ என்றான் மது.
‘வேறை ஏதாவது நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு போய் வைத்தியம் செய்ய முடியாதா?’ என்றாள் கமலா.
‘தெரிய இல்லை. அப்பிடிப் போகிறது எண்டா நிறையச் செலவாகும். அதை  நாங்களே சொந்தமாகச் செலவழிக்க வேணும். வேலை வீடு எல்லாத்தையும் விட்டிட்டு வேற நாட்டில போய் இருந்து வயித்தியம் செய்ய முடியுமா?’
‘நீங்கள் சொல்லுகிறதும் உண்மை. இங்க வசதி இருக்க நீங்கள் வெளிநாட்டுக்குப் போகிறதெண்டாச் செலவையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கோ எண்டு அரசாங்கம் விட்டிடும்.’
‘அதாலதான் நாங்கள் அதைப் பற்றிப் பெரிசா யோசிக்க இல்லை.’ என்றான் சாந்தன்.
‘இங்கையும் முழுமையா பார்க்கிறாங்களா எண்டா அது கேள்விதான்.’ என்றாள் கமலா.
‘உண்மை… வேற வழி இல்லை. அது சரி உங்கடை பாடுகள் எப்பிடிப் போகுது?’
‘என்ன ஒண்டும் விசேசமாய் இல்லை.’ என்றாள் கமலா.
‘கமலா ஒரு சின்னப் பிரச்சினை எண்டாலும் பதறி அடிப்பா? அதை விட்டா இங்கை என்ன பிரச்சினை?’
‘நீங்கள் சுத்தமானவர்தான். உங்களுக்கு என்னைக் குறை சொல்லாமல் இருக்க முடியாதே? இப்ப எதுக்கு அதை எல்லாம் அவருக்குச் சொல்லிக் கொண்டு… அவருக்கு ஏற்கனவே இருக்கிற பிரச்சினை காணாதே?’
‘ம்… அதுவும் அப்பிடியே?’