6

பத்து மணிக்கு மதுவுக்கு மருத்துவர் நேரம் கொடுத்து இருந்தார். கமலாவும் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு நின்றாள். மருத்துவர் என்ன சொல்லப் போகிறார் என்பதில் அவளுக்கு அடக்க முடியாத ஆர்வம். எல்லாம் நல்ல செய்தியாக இருக்க வேண்டும் என்பது அவளது உருக்கமான பிரார்த்தனை. இன்னும் அந்த மர்மம் அவிழவில்லை. மது பொய் சொல்லவில்லை என்பது மட்டுமே தற்போது உண்மை. ஆனாலும் அவன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான் என்பதற்கு எந்த விளக்கமும் இதுவரையும் கிடைக்கவில்லை. மதுவுக்குச் சில வேளை தெரிந்து இருக்கும் என்பது அவள் ஊகம். அப்படித் தெரிந்து இருந்தாலும் அவன் அதை ஏன் சொல்ல விரும்பவில்லை என்பது அவளுக்கு விளங்கவில்லை. மது புறப்பட்டான். அவனில் எந்தப் பதட்டமோ தடுமாற்றமோ இருக்கவில்லை. ஏதாவது தப்பு செய்வதென்றால் எப்படி இவனால் இவ்வளவு பதட்டம் இல்லாமல் சகசமாக இருக்க முடிகிறது என்பது அவளுக்குச் சற்றும் விளங்கவில்லை. மருத்துவர் உண்மையைக் கூறிவிடுவார் என்கின்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது. அதற்குப் பின்பு நிம்மதியாய் இருக்கலாம் என்கின்ற நம்பிக்கை உடன் மதுவைப் பார்த்தாள். அவன் எந்தக் கவலையும் இல்லாது தனது அலைபேசியைத் தற்போது கிண்டிக் கொண்டு இருந்தான். கமலாவுக்கு அதைப் பார்க்க முதலில் கோபம் வந்தது. பின்பு பொறாமையாக இருந்தது. தலையில் குட்ட வேண்டும் என்கின்ற வெறி வந்தது. என்றாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பின்பு பொறுமையாக,
‘என்ன நான் இங்க இருக்கிறது தெரிய இல்லையே?’
‘ஓ…’
‘என்ன ஓ?’
‘என்ன இது புதிசா இருக்குது?’
‘எது?’
‘நீ இப்பிடிக் கவலைப்படுகிறது…’
‘ஏன் எனக்குக் கவலை இருக்கக் கூடாதோ? இல்லாட்டி விருப்பம் இருக்கக் கூடாதோ?’
‘இருக்கலாம். எண்டாலும் அது கொஞ்சம் வியப்பாக இருக்குது.’
‘என்ன கதைக்கிறியள்? எனக்கு அப்ப உங்கமேல அக்கறையே இல்லை எண்டு நினைக்கிறியளா?’
‘அப்பிடி முழுமையாச் சொல்ல முடியாது.’
‘ஓ… அப்ப எப்பிடிச் சொல்லுகிறியள்?’
‘அதைவிடு கமலா… இப்ப நேரமாகுது… போவமே?’
‘ஓ… அது அப்ப ஞாபகம் இருக்குது?’
‘இல்லாமலா… எனக்கு என்ன பிச்சினையா… அல்லது பயமா அதுக்கு?’
‘அதிசயம்.’
‘அதிசயம் இல்லை. நான் அப்பிராணி.’
‘ம்… பார்ப்பம். உண்மைக்குச் சாவில்லை.’

*

மருத்துவரிடம் சென்ற பொழுது அங்கே பலர் காத்து இருந்தார்கள். அவர் கொடுத்த நேரத்திற்கு இவர்களை உள்ளே அழைக்கவில்லை. அவர்களுக்கு முன்பு இருவர் மருத்துவரோடு கதைப்பதற்குக் காத்து இருந்தார்கள். இவர்கள் இருவரையும் முடித்து மருத்துவர் தங்களைப் பார்ப்பதற்குக் குறைந்தது நாற்பது நிமிடங்கள் ஆவது எடுக்கும் என்பது கமலாவுக்கு விளங்கியது. மது எந்தவித பரபரப்பும் இல்லாது தொடர்ந்தும் அமைதியாக இருந்தான். கமலாவுக்கு அவன் அப்படி இருப்பதின் சூட்சுமம் விளங்கவில்லை. அதைவிட மருத்துவர் என்ன சொல்லப் போகிறார் என்பது கமலாவுக்கு விளங்கவில்லை. அதற்கான விடை கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் வந்தால் இங்கு வரிசை முடிவதாக இல்லை. இவள் இப்படிச் சிந்தனையில் இருப்பதைப் பார்த்த மது அவளை வழமை போல வெறுப்பேத்த நினைத்தான்.
‘என்ன கமலா… எந்தக் கப்பல் தாண்டு போச்சுது?’
‘சும்மா இருங்க. உங்களுக்கு எப்பவும் பகிடிதான்.’
‘நான் சீரியஸ்சாக கேட்கிறன். நீ அப்படி கடுமையா யோசிச்சுக் கொண்டு இருந்தாய்?’
‘ஓ பெரிய அக்கறை… அப்படி அக்கறை இருந்தா நாங்கள் ஏன் இங்க வரவேணும்? அப்பிடி ஒரு நிலையே வந்திருக்க முடியாதே. எல்லாம் என்னுடைய முன்வினைப் பயன்.’
‘முன்வினைப் பயன்தான். யாற்றை முன்வினைப் பயன் அது யாருக்கு வேலை செய்து எண்டு மட்டும் தெரிய இல்லை.’
‘ஓ… அப்பிடி வேற ஒரு நினைப்பா?’
‘நான் உண்மையைச் சொல்லுகிறன்.’
‘ஓ நல்ல உண்மை.’
இடையில் மருத்துவர் வந்து காத்திருந்த மற்றைய நபர் ஒருவரை உள்ளே அழைத்துச் சென்றார். அடுத்தது தாங்களே என்பதில் மதுவுக்குச் சிறிது நிம்மதியாக இருந்தது. இல்லாவிட்டால் கமலா ஏதாவது இடக்காகக் கதைத்துக் கொண்டு இருப்பாள். அப்படிக் கதைத்தால் இடைவிடாது அதற்குப் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். நம்பாத அவளிற்குப் பதில் சொல்லிச் சொல்லிச் மதுவிற்குச் சலித்துவிட்டது. அதைத் தொடர்ந்தும் செய்வதற்கு அவனுக்கு இப்போது மனமோ, பொறுமையோ இருக்கவில்லை. கமலாவும் தாங்களே அடுத்தது என்பதை விளங்கிக் கொண்டாள். அவளுக்கு அதை அவனோடு கதைக்காமல் இருக்க முடியவில்லை.
‘அடுத்தது நாங்கள்… இல்லையே?’
‘அதில வேறை உனக்குச் சந்தேகமே?’
‘எனக்குச் சந்தேகம் இல்லை. அதை உங்களுக்கு ஞாபகப்படுத்தினான். விளங்குதா?’
‘சரி… சரி… மெத்தப் பெரிய உபகாரம்.’
இவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது மருத்துவர் அங்கே வந்தார். கமலாவும் மதுவும் கதைப்பதை நிறுத்தி மருத்துவரைப் பார்த்தார்கள். மருத்துவருக்கு ஏற்கனவே மதுவைத் தெரியும். அதனால் அவர் அவனைப் பார்த்துத் தலையை உள்ளே வரும்படி ஆட்டினார். அதை விளங்கிக் கொண்ட மது எழுந்தான். அவளோடு கமலாவும் எழுந்தாள். மருத்துவருக்கு அது விளங்கவில்லை.
‘மது நீங்கள் மாத்திரம் வாருங்கள்.’ என்றார் மருத்துவர். அவரின் கூற்று இங்குள்ள நடைமுறைக்குச் சரியே. ஆனால் இவர்கள் வந்த விடயம் வேறு. அதை இருவரும் இருந்தே கதைக்க வேண்டும். அது மருத்துவருக்கு விளங்கவில்லை. மதுவுக்கு அது பெரும் சங்கடமாய் இருந்தது. இருந்தும் அதை மருத்துவருக்கு விளங்கப்படுத்துவது கட்டாயமாகியது.
‘கமலாவும் என்னுடன் வருகிறாள்.’ என்றான் மது மருத்துவரைப் பார்த்து.
‘உங்களுக்குப் பிரச்சினை இல்லை எண்டால் எனக்கும் அதில் பிரச்சினை இல்லை. வாங்க… வாங்க…’
மருத்துவர் சென்று தனது ஆசனத்திலிருந்தார். கமலாவும் மதுவும் தங்களுக்கான ஆசனத்தில் அமர்ந்தார்கள். அவர்கள் அமர்ந்ததும்,
‘சொல்லுங்கள் மது. உங்களுக்கு என்ன பிரச்சினை?’ என்றார் மருத்துவர் வழமை போல.
‘அது ஒரு பெரிய பிரச்சனை. எப்பிடி முழுமையா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறது என்று எனக்கு விளங்கவில்லை.
‘பருவாய் இல்லைச் சொல்லுங்கள்.’
‘நான் எப்பொழுதும் குடித்துவிட்டு அலைகிறேன் என்று கமலா சொல்கிறாள். என்னாலும் அப்படி அடிக்கடி உணர முடிகிறது. ஆனால் அது எப்படி என்று எனக்கு விளங்கவில்லை. உதாரணமாக நான் வேலைக்குச் சென்றுவிட்டு வரும்போது எந்தவித தடுமாற்றமும் இருப்பதில்லை. ஆனால் வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பின்பு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலத்தில் குடித்தது போன்ற மயக்கம் எனக்கே இருப்பதை என்னால் உணர முடிகிறது. கமலா நான் களவாகக் குடிப்பதாகக் குற்றம் சாட்டுகிறாள். எனக்குத் தெரியும் நான் களவாக எதுவும் குடிப்பதில்லை என்பது. இருந்தும் அந்தச் சமாதானம் அவனிடம் எடுபடுவதில்லை. அதுதான் இன்று என்னுடன் வந்து இருக்கிறாள். அவளுக்கு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம். நான் உண்மையைத் தவிர வெறு ஒன்றும் சொல்லவில்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும். இந்தப் பிரச்சினை எதனால் வருகிறது? எப்படி இதிலிருந்து மீள்வது என்பதைத் தாங்கள் எனக்கு விளக்க வேண்டும்.’
‘எனக்கே உங்கள் பிரச்சினை முழுமையாக விளங்கவில்லை. நீங்கள் சொல்வது குழப்பமாக இருக்கிறது. நீங்கள் நிச்சயமாக உண்மைச் சொல்கிறீர்களா? கௌரவத்திற்காய் உண்மையை மறைக்கவில்லையா? அப்படி என்றால் இது எப்படி நடக்கிறது?’
‘நிச்சயமாக நான் துளியளவும் பொய் சொல்லவில்லை. நீங்கள் விளக்கம் சொல்லிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள் என்று நம்பி வந்திருக்கிறேன். நான் பொய் சொல்கிறேன் என்பதே கமலாவின் முதல் குற்றச்சாட்டு. அதை நீருபித்துக்காட்ட வேண்டும் என்பதற்காய் உண்மை அறியும் இயந்திரத்தில் பரிசோதித்துப் பார்த்துவிட்டாள். அதில் அவளிற்குத் தோல்வியே கிடைத்தது. இருந்தும் அவளால் என்னை நம்பமுடியவில்லை. உங்களுக்கே குழப்பமாக இருக்கும் போது அவளுக்குக் குழப்பமாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எனக்கு இது எப்படி நடக்கிறது என்று விளங்கவில்லை. ஆனால் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.’ என்றான் மது.
‘ஓகே… நீங்கள் செயற்கையாக மது அருந்தவில்லை என்பதை நான் நம்புகிறேன். என்றாலும் இது ஒரு விசித்திரமான பிரச்சினை. இப்படியான பிரச்சினை என்னிடம் வருவது இதுவே முதன்முறை. நான் இதைப்பற்றி மேலும் அறிய வேண்டும். பரிசோதனைகள் நடத்த வேண்டும்.’

‘நன்றி. நீங்கள் நம்புவது எனக்கு ஆறுதலைத் தருகிறது.’
‘சரி… நான் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.’
‘நீங்கள் கலையில் என்ன சாப்பிடுவீர்கள்?’
‘நான் கலையில் எதுவும் சாப்பிடுவதில்லை. காப்பி மாத்திரம் அருந்துவேன் டொக்ரர். அதோடை காலைச் சாப்பாடு சரி. காலைமை சாப்பிடாமல் விட்டுக் கனகாலம் ஆகுது டொக்ரர். அது ஏதும் பிரச்சினையா?’
‘இல்லை. இல்லை. நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்க.’
‘கேளுங்க டொக்ரர்.’
‘சரி… மத்தியானம் என்ன சாப்பிடுவீங்கள்?’
‘மத்தியானம் சாலாத் சாப்பிடுவன் டொக்ரர்.’
‘காலையில இருந்து வீட்டிற்குத் திரும்பி வரும் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. அப்பிடித்தானே?’
‘ம்… நீங்கள் சொல்லுகிறது சரி டொக்ரர்.’
‘வேலையால வந்து என்ன சாப்பிடுவியள்?’
‘சோறுதான் டொக்ரர். அதைச் சாப்பிட்டால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.’
‘ம்… எவ்வளவு சாப்பிடுவீங்கள்?’
‘என்ன டொக்ரர் கேட்கிறியள்? நெடுநேரம் பசி இருந்திட்டு ஒரு நேரம் சாப்பிடுகிறது. கொஞ்சம் வியிறாறச் சாப்பிடுவன். அப்பிடிச் சப்பிட்டால் மட்டுமே பசி அடங்கும். பிறகு நிம்மதியாய் இருக்கும்.’
‘சோற்றோடை என்ன சேர்த்துச் சாப்பிடுவியள்?’
‘கறி டொக்ரர்.’
‘கறி எண்டா… என்ன கறி. என்ன சேர்ப்பியள்?’
‘மீன்… இறைச்சி… மரக்கறி… எண்டு பல வகையாய் இருக்கும் டொக்ரர். கொஞ்சம் உறைப்பாய் இருக்கும்.’
‘அது பருவாய் இல்லை. அது பிரச்சினையாய் இருக்காது.’
‘அப்ப எது டொக்ரர் பிரச்சினை? சாப்பாட்டில ஏதும் பிரச்சினையா டொக்ரர்? அப்பிடி எண்டா அதை மாற்றலாம் டொக்ரர்?’
‘மாற்றலாம். அதை நாங்கள் முதல்ல செய்து பார்க்க வேணும். அதுக்கு முதல் சில பரிசோதனையும் செய்ய வேணும்.’
‘என்ன செய்ய வேணும் டொக்ரர்?’
‘முதல்ல மலம் பரிசோதிக்க வேணும். நீங்கள் அதற்கான தகவலை வரவேற்பறையில் உள்ள தாதிகளிடம் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்பு மேற்கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று யோசிக்கலாம். இது ஒருவகை வருத்தமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உட்கொள்ளும் மாப்பொருள் உங்கள் வயிற்றில் இருக்கும் மதுவங்களால் மதுவாக்கப்படுவதாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன். பரிசோதனைகள் முடிந்தால் மட்டுமே அதைப்பற்றி விபரமாகச் சொல்ல முடியும். முதலில் மலத்தைப் பரிசோதிப்போம். பின்பு உங்களுக்கு குளுக்கோஸ் தந்து பரிசோதிக்க வேண்டும். அவை எல்லாம் ஒவ்வொன்றாகச் செய்யலாம். நீங்கள் மாப்பொருளை இயலுமானவரைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதால் உங்களுக்கு ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று அவதானியுங்கள்.’
‘அப்ப இவர் குடிக்காமலே வெறிக்குதா? இது ஒரு வருத்தமா?’ என்றாள் கமலா நம்பமுடியாதவளாய்.
‘அதில உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம் கமலா. இது ஒரு வியாதியாகவே இருக்க வேண்டும். உங்கள் கணவரை முதலில் நம்புங்கள். பிரச்சினையை நாங்கள் பரிசோதனையால் கண்டு பிடிக்க முடியும். நீங்கள் பயப்பட வேண்டாம். அவரைப் பழைய நபராக விரைவில் பார்க்க முடியும். அவர் மாப்பொருள் எடுக்காது விட்டாலே பழைய நிலைமைக்குத் திரும்பி விடுவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் என் ஊகம் முடிவல்ல. எதற்கும் முயற்சியுங்கள். விரைவில் நாங்கள் பிரச்சினையைக் கண்டு பிடித்துவிடலாம்.’
‘எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நான் தேவை இல்லாது அவரைச் சந்தேகப்பட்டுவிட்டேன். அதை எண்ண எண்ண இப்போது மிகவும் கவலையாக இருக்கிறது.’
‘கவலைப்படாதீர்கள் கமலா. குடும்பம் என்றால் இப்படியே இருக்கும்.  இப்பொழுதாவது நீங்கள் உண்மையை உள்வாங்கிக் கொள்வது மகிழ்ச்சியே. நீங்கள் அவரின் உணவில் தற்காலிகமாக எவ்வளவு மாப்பொருளைக் குறைத்துக் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொடுங்கள். புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை அவர் அதிகம் சாப்பிடலாம். அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.’
‘நிச்சயமாக நான் பார்த்துக் கொள்கிறேன் டொக்ரர். எனக்கு இப்போது மதுவை எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது. நான் அவரை நம்பாது மிகவும் கஸ்ரப்படுத்தி இருக்கிறேன் என்பது எனக்குச் சிறுமையாகத் தோன்றுகிறது. எப்படி நான் இந்தத் தவற்றிற்கு மன்னிப்புக் கேட்பேன் என்று எனக்குத் தெரியவில்லை.’
‘வாழ்க்கை என்றால் அப்படியே. நீங்கள் இருவரும் மிகவும் அழகான ஒரு குடும்பம். மது மிகவும் கனிவானவர் போன்று தோன்றுகிறார். அவரை நீங்கள் முழுமையாக நம்பலாம். இது ஒரு விசித்திரமான வருத்தம். ஆரம்பத்தில் பலரையும் குழப்பமடைய வைக்கும். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு முழுமையாக என்னால் சொல்ல முடியாது. பரிசோதனையில் நான் நினைப்பது சரியாக இருந்தால் நீங்கள் அதைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. அதை நாங்கள் சமாளிக்கலாம்.’
‘இதைக் கேட்க எனக்கு மிகவும் நிம்மதியாய் இருக்கிறது டொக்ரர்.’ என்றாள் கமலா.
‘நீங்கள் கீழே செல்லுங்கள். பரிசோதனைக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டிவிட்டுச் செல்லுங்கள். பரிசோதனை முடிவு வந்ததும் நான் உங்களுடன் தொடர்புகொண்டு கதைக்கிறேன்.’
‘நன்றி டொக்ரர்.’
பின்பு இருவரும் புறப்பட்டுப் பரிசோதனை நிலையத்திற்குச் சென்றனர். அங்கே பணம் கட்டிய பின்பு அவர்கள் கொடுத்த உபகரணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர். அதுவரையும் மௌனமாக இருந்த கமலாவால் அதற்கு மேல் மௌனமாக இருக்க முடியவில்லை. அவளுக்கு அவனைத் தான் அதிகமாகத் துன்புறுத்திவிட்டதான உணர்வு. அதை எப்படிச் சரிக்கட்டுவது என்பது அவளுக்கு விளங்கவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கின்ற நம்பிக்கையுடன் அவள் அவனைக் கரைக்கத் தொடங்கினாள். மதுவுக்கும் கமலா இப்படி ஏதாவது தொடங்குவாள் என்பது தெரியும். எதற்கும் அவளாகக் கதைக்கட்டும் என்று காத்திருந்தான்.
‘சொறி.’
‘ஆஞ…?’
‘சொறி.’
‘என்னத்துக்கு இப்ப இந்தச் சொறி?’
‘உங்களைப் பிழையா விளங்கிக் கொண்டதுக்கு.’
‘ஓ… அதுக்கா. அதுக்கு என்னைப் பொறுத்தவரையில உனக்கு மன்னிப்பே கிடையாது.’
‘நான் செய்தது தப்பு. உங்களை நம்பாதது அதைவிடப் பெரிய தப்பு எண்டு தெரியும். அதுக்கு எல்லாம் முக்கிய காரணம் உங்களில இருந்த அளவிட முடியாத அன்பு. அதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேணும். உங்களில உள்ள வெறுப்பையோ அல்லது வீம்பிற்குச் சண்டை பிடிக்க வேணும் எண்டோ நான் அப்பிடிச் செய்ய இல்லை. அது உங்களுக்கு நல்லா விளங்கும். விளங்கிக் கொள்ளுவியள் எண்டு நான் நினைக்கிறன்.’
‘நீ என்ன சமாதானம் வேணும் எண்டாலும் செய்து பார்க்கலாம். ஆனா நான் உன்னை இந்த ஜன்மத்தில மன்னிக்கமாட்டன். அதை நீ ஒருநாளும் எந்நிட்டை இருந்து எதிர்பார்க்க முடியாது.’
‘ஏன் என்னை மன்னிக்கமாட்டியள்? நான் என்ன அப்பிடி மன்னிக்க முடியாத குற்றமா செய்திருக்கிறன்?’
‘ஓ… மன்னிக்கிற குற்றமா இது? இவ்வளவு காலம் என்னோடை ஒண்டா வாழ்ந்துபோட்டு நீ என்னிலை நம்பிக்கை இல்லாமல்… சீ… நீ இப்பிடிக் கேவலமாய் இருப்பாய் எண்டு நான் ஒரு நாளும் நினைக்க இல்லை. அதை என்னால எண்டைக்கும் ஜீரணிக்க முடியாது. ச்… உன்னை நினைக்கவே இப்ப வெறுப்பாய் இருக்குது.’

‘சொறி… சொறி… சொறி… நான் உங்களைக் காயப்படுத்த வேணும் எண்டு நினைச்சு எதையும் சொல்ல இல்லை. எல்லாம் உங்களில இருந்த அன்பில மட்டுமே அதைச் செய்தன். அதை நீங்கள் முழுமையா விளங்கிக் கொள்ள வேணும். என்ரை நிலைமையில இருந்து யோசிச்சுப் பாருங்க. நான் செய்தது சரியா அல்லது பிழையா எண்டது அப்ப உங்களுக்கு விளங்கும். உங்களிட்டை இருந்து நான் அந்தப் புரிந்துணர்வை எதிர்பார்க்கிறன்.’
‘உந்தச் சமாளிப்பு எல்லாம் என்னிட்டை எடுபடாது. நீ உந்த முயற்சியைக் கைவிடுகிறது நல்லது. எதுக்குப் பயனளிக்காத முயற்சி எல்லாம். நீ செய்தது என்னை அப்பிடிப் பாதிச்சு இருக்குது.’
‘நான் இந்த முயற்சியைக் கைவிட முடியாது. இது என்னுடைய வாழ்க்கை. நான் விக்கிரமாதித்தனாட்டம் இந்த முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருப்பன். அது முருங்கை மரமாய் இருந்தால் என்ன பனி மலையாய் இருந்தால் என்ன?’
‘நீ நல்லாய் முயற்சிசெய். நான் அந்த விக்கிரமாதித்தனுக்கு ஒரு நாளும் மயங்கமாட்டன்.’
‘பார்ப்பம்… கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் எண்டுவினம். உங்களைக் கரைக்க முடியாதா என்ன?’
‘கல்லுக் கரையலாம். என்னை ஒரு நாளும் கரைக்க முடியாது.’
‘உங்களுக்கு எந்நில இருக்கிற அன்பு அவ்வளவு தானா?’
‘எனக்கு உன்மேல நிறைய அன்பு ஒரு காலத்தில இருந்திச்சுது. இப்பவும் நீ அதை எதிர்பார்க்க முடியாது. அதுக்குக் காரணம் நீதான். இவ்வளவிற்குப் பிறகும் நான் மாறாமல் இருப்பன் எண்டு நீ எப்பிடி எதிர்பார்க்க முடியும்? நான் ஒண்டும் புத்தன் இல்லை. அதை நீ விளங்கிக்கொள்.’
‘நான் அதை இல்லை எண்டு சொல்ல இல்லையே? நான் உங்களை நம்பாதது பெரிய தப்பு. அதுக்காக நான் இப்ப நிறையக் கவலைப்படுகிறன். ஆனா உலகத்தில தப்புப் பண்ணாத மனிசரே இருக்க முடியாது. நானும் சாதாரணமாக அதில ஒருத்தி. உங்களுக்கு தப்பை மன்னிக்கிற பெரிய மனசு இருக்குது எண்டு நான் எதிர்பார்க்கிறன். அது நீங்கள் எனக்குத் தருகிற மன்னிப்பாகவும் இருக்கும்… தண்டனையாகவும் இருக்கும்… நீங்கள் எப்பிடிப் புத்தர் இல்லையோ நானும் அப்பிடியே. மனிசர் எண்டா பிழைவிடுகிறது வழமை. அதை மன்னிக்கிறதும் வழமை. இது உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்.’
‘இங்க பாரடா இவவை…’
‘என்ன இங்க பாரடா?’
‘நீ இப்ப நல்லாய் கதைக்கிறாய்.’
‘நான் நல்லாய் கதைக்கேல்லை. நல்லதை மட்டும் கதைக்கிறன். உண்மையை மட்டும் சொல்லுகிறன். நீங்கள் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேணும். அதை ஏற்றுக் கொள்ள வேணும்.’
‘ஓ…’
‘பகிடி விடாதையுங்க… நான் சீரியஸ்சாக் கதைக்கிறன். நீங்கள் விளங்கிக் கொள்ளுவியள் எண்டு நினைக்கிறன்.’
‘அது எனக்குத் தெரியும். அதைப் பற்றி ஆறுதலா யோசிக்கலாம். இப்ப ஒரு அவசரமும் இல்லை.’
‘மிஞ்சினாக் கெஞ்சுவார். கெஞ்சினா மிஞ்சுவார் எண்டுவினம். அதைப் போல இருக்குது உங்கடை நடப்பபு இப்ப. அடக்கி வாசியுங்க… பிறகு திரும்பவும் கஸ்ரப்படுவியள்.’
‘வெருட்டுறியா?’
‘அப்ப ஒழுங்காப் பதில் சொல்லுங்க.’
‘என்னால இப்பிடித்தான் பதில் சொல்ல முடியும். விருப்பம் எண்டாக் கேள். இல்லாட்டிப் போய் உன்ரை அலுவலைப் பார்.’
‘சரி சரி கேவிக்காதையுங்க. இப்ப கோவிக்காமல் சந்தோசமாய் இருக்க வேண்டிய நேரம். இதுவரையும் சண்டைபிடிச்சது கணும். தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்க.’
‘சரி… சரி… என்ன செய்கிறது?’
‘பாவத்திற்காகக் கதைக்கக் கூடாது. முதல்ல முழுமையா மன்னிக்க வேணும்… பிறகு எங்கடை பிரச்சினையைக் கதைக்க வேணும். அது அழகு எண்டு நான் நினைக்கிறன்.’
‘அதுக்கு எல்லாம் நாள் எடுக்கும். இப்போதைக்கு வேணும் எண்டால் யுத்த நிறுத்தம் செய்யலாம். அது மட்டுமே என்னால இண்டைக்குச் செய்யக் கூடியது. உனக்கு நல்லா விளங்கிச்சா?’
‘என்னால அதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. தயவு செய்து உங்கடை எண்ணத்தை மாத்துங்க.’
‘நீ ஒத்துக் கொண்டால் என்ன ஒத்துக் கொள்ளாட்டி என்ன? நான் என்ன முடிவு செய்திருக்கிறனோ அப்படித்தான் நடக்க முடியும். உனக்காகக் கொஞ்சம் விட்டுத் தரலாம். ஆனா முழுமையா விட்டுத்தர முடியாது.’
‘உங்களோடை கதைச்சுப் பிரயோசனம் இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்குது.’
‘ம்… நல்லது போய் அதைப் பார்.’