7

அன்று சாந்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். வழமை போல ஆறுதலாகக் கதைப்பதற்கே அழைக்கிறான் என்று எண்ணிய மது தொலைபேசியை எடுத்தான். தொலைபேசியை எடுத்த மதுவிற்குக் கவலையாக இருந்தது. மறுவேளைகளில் தொலைபேசி எடுத்தால் உற்சாகமாகக் கதைப்பவன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டு எதுவும் பேசாது மௌனம் சாதித்தது மதுவுக்கு என்னவோ போன்று இருந்தது. அவன் அதற்குமேல் பொறுமைகாக்க விரும்பவில்லை. ஏதோ நடந்து இருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது. ஆனால் என்ன நடந்தது என்று மாத்திரம் விளங்கவில்லை. அதைக் கேட்டே அறிந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்தவனாய்,
‘என்ன போனை எடுத்திட்டுப் பேசாமல் இருக்கிறாய் சாந்தன்?’ என்றான்.
‘என்னால பேசமுடிய இல்லை மது. எனக்கு ஏன் இப்பிடி நடக்குது மது? ஏன் கடவுள் என்னை மாத்திரம் இப்பிடிச் சோதிக்கிறான் மது? நான் என்ன செய்கிறது மது? செத்துப் போயிடலாம் போல இருக்குது.’
என்று கூறியவனின் குரல் உடைந்து அழுகையா மறுமுனையில் தெறிப்பது மதுவிற்கு அபஸ்சுரமாகக் கேட்டது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவனால் அதைத் தாங்க முடியவில்லை. இதயம் பறப்பதற்காய் அடிப்பது போல அடித்தது. அவனுக்குக் கட்டுப்படுத்த முடியாத பதட்டமாக இருந்தது. தனது பதட்டத்தால் அவனை மேலும் பதட்டப்படுத்தக்கூடாது என்பதால் அதை மறைத்துக் கொண்டு சமாதானமாக அவன் பேசத் தொடங்கினான்.
‘என்ன நடந்தது சாந்தன்? நீ ஏன் அழுகிறாய்? லாவண்ணியா எப்பிடி இருக்கிறாள்? அவள் ஏதும் செய்தாளா?’
‘ஓமடா மது. அவள்தான்… நான் என்ன செய்கிறது?’
‘என்ன சாந்தன் செய்தவள்? இப்ப என்ன செய்கிறாள்? இப்ப எப்பிடி இருக்கிறாளடா?’
‘அவளைக் கொஸ்பிற்றல்ல அடமிட் பண்ணி இருக்குது? எனக்கு என்ன செய்கிறதே எண்டு தெரிய இல்லை.’
‘என்ன? என்ன செய்யதவள்? திடீரெண்டு அவளுக்கு என்ன நடந்தது? இப்ப எப்பிடி இருக்கிறாள்?’
‘அவள் தற்கொலை செய்யக் கையை அறுத்துக் கொண்டு அறையிக்க கிடந்து இருக்கிறாள். லதா ஒரு மாதிரி அதைக் கண்டு பிடிச்சிட்டாள். கதவை உடைச்சுத்தான் ஆளை வெளிய கொண்டு வந்தன். ஏதோ நல்ல காலம் அரும்பொட்டில தப்பீட்டாள். நேரத்திற்குக்கொண்டு போனதால இரத்தமும் குளுக்கோசும் ஏத்தி ஒருமாதிரி ஆளைக் காப்பாத்திப் போட்டாங்கள்.’
‘அப்ப நாங்கள் இப்ப கொஸ்பிற்றலுக்கு வாறம் சாந்தன். அவளை நாங்கள் பார்க்க வேணும். அவளோடை நாங்கள் கதைக்க வேணும்.’
‘அது முடியாது மது.’
‘ஏன்?’
‘அவளோடை இப்போதைக்கு தாங்கள் கதைக்கிறம் எண்டு சொல்லுகிறாங்கள். அவங்கடை தரப்பி போல. அதாலா எந்த அளவுக்குப் பிரயோசனம் இருக்கோ தெரியாது. ஆனா இப்போதைக்கு அவளைப் பார்க்க ஏலாது. இது ஒரு வகையில நல்லது எண்டும் சொல்லலாம். ஏன் எண்டால் இப்ப அவங்களுக்கு உண்மையான பிரச்சினை விளங்கி இருக்குது எண்டு நினைக்கிறன்.’
‘ம்… அதுவும் ஒருவகையில நல்லதுதான். இவங்கள் சிலவேளை உண்மையானதுக்கே முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டிடுவாங்கள். பிறகு பிரச்சினை பெரிசாக அதைப் பற்றி அக்கறைப்படுவாங்கள். அப்பிடித்தான் இதுவும் இருக்குது. அது எனக்கே வரும் எண்டு நான் நினைக்க இல்லை. ஆனால் எனக்கே அது வந்து இருக்குது. நான் என்ன செய்கிறது?’
‘கவலைப்படாதை சாந்தன். எல்லாம் மாறும். லாவண்ணியாவும் குணமாவள். நாங்கள் எல்லாரும் சந்தோசமாய் இருப்பம். நீ தேவை இல்லாமல் கவலைப்படாத. எல்லாம் கெதியாகச் சரியாகீடும்.’
‘நீ ஏதோ ஆறுதலுக்குச் சொல்லுகிறாய். நானும் அப்பிடி எண்டுதான் இவ்வளவு காலமும் இருந்தன். ஆனா என்ன மாறி இருக்குது? ஒண்டும் மாற இல்லை. அவள் வர வர மோசமாகிப் போய்க்கொண்டு இருக்கிறாள்.’
‘அப்பிடி எல்லாம் நீயே மனதை விட்டிடாத சாந்தன். அவள் கெதியாகச் சரியாகீடுவாள். நீ நம்பிக்கையோடை இருந்தால் அவளும் முழுமையாக் குணமடைய முடியும். அதாலா நீ இப்பிடி எதிர்மறையா சிந்திக்கிறதை விட்டிடு.’
‘நான் எதிர்மறையாச் சிந்திக்க வேணும் எண்டு இல்லை. அப்பிடித்தானே நிலைமை இருக்குது. எதை வைச்சு என்ன நம்பிக்கையோடை இருக்கச் சொல்லுகிறாய்?’
‘நம்பிக்கைதான் வாழ்க்கை எண்டுகினம். இது உன்னுடைய மகளின்ரை வாழ்க்கை. உனக்கு இதைவிட எந்த தெரிவும் இல்லை. நீ உன்னுடைய மகளுக்காக எப்பிடி எண்டாலும்  அதைச் செய்ய வேணும்.’
‘என்னவோ சொல்லுகிறாய். என்னுடைய நிலைமையில இருந்து இதைப்பற்றி நீ சிந்திக்க வேணும். எனக்கு எவ்வளவு வேதனையாகவும், கவலையாகவும் இருக்குது தெரியுமா?’
‘கொஞ்சம் பொறு. அமைதியா இரு. எல்லாம் ஆறுதலாய் யோச்சிச்சுச் செய். அப்ப எல்லாம் சரியாகும். நீ தேவை இல்லாமல் பயப்பிடாதை. அவள் நல்லாய் வருவாள்.’
‘நானும் அந்த நம்பிக்கையோடையே இருக்கிறன். இல்லாட்டி என்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?’
‘சரி சாந்தன் அமைதியா இரு. எப்ப அவங்கள் பார்க்கலாம் எண்டு சொலலுகிறாங்களோ அப்ப எங்களுக்கு உடனடியாகப் போன் பண்ணிச் சொல்லு. நாங்கள் அவளை வந்து பார்க்க வேணும். லதாவைக் கவலைப்படாமல் இருக்கச் சொல்லு. ஏலும் எண்டா நாங்கள் உங்களைக் கெதியா வந்து பார்க்கிறம்.’
‘சரி நான் போன் பண்ணுகிறன். எப்ப எண்டாலும் பிரச்சினை இல்லை… நீங்கள் எப்பவும் வீட்டை வரலாம். நாங்களும் தனியத்தானே இருக்கிறம்.’
‘ம்… விளங்குது. எல்லாரும் இங்க தனியாகத்தான் இருக்கிறம். அதுதான் இங்கத்தை யதார்த்தம். நாங்கள் கெதியா வாறம்.’
‘சரி மது உங்களையும் நான் தேவையில்லாமல் கவலைப்படுத்திக் கொண்டு இருக்கிறன். நீ பிறண்ட்தான். எண்டாலும் நான் நிறையத் தொந்தரவு கொடுக்கிறன். இனிமேலைக்கு நான் இப்பிடித் தொந்தரவு கொடுக்கக் கூடாது எண்டு நினைக்கிறன்.’
‘ஏனடா இப்பிடிக் கதைக்கிறாய்? பிறண்டெண்டா பிறண்ட்தானடா. அதுக்கு எல்லாம் வரையறை விதிக்கக் கூடாது. நீ எப்ப எப்பிடித் தொடர்பு கொண்டாலும் எனக்கு மனமார்ந்த சந்தோசம். அதில எப்பவும் எந்த மாற்றமும் இருக்காது. உனக்கு எப்பவும் அதில எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.’
‘உண்மையில நான் இந்த வகையில புண்ணியம் செய்தவன். சந்தோசமடா. எனக்கு எப்பவும் உன்னை நினைக்கப் பெருமைதானடா.’
‘அதுதான் எனக்கும். நீ என்னுடைய நண்பன். நண்பன் எண்டா அதுக்கு முன்னுக்கு எதுவும் வரமுடியாது.’
‘விளங்குது. எனக்கு லாவண்ணியா சரியாக இருந்து இருந்தால் வாழ்க்கையில என்ன குறை? ஆனா அதுதான் பிழைச்சுப் போச்சுது.’
‘அதுதான்ரா வாழ்க்கை. அதுவே கடவுளின்ரை விளையாட்டு. எல்லாம் கிடைச்சு நாங்கள் எப்பவும் சந்தோசமய் இருந்தால் கடவுள் எண்டே நினைப்பே இல்லாமல் போயிடுவமோ எண்டு அவருக்கே பயம் போல இருக்குது. அதுதான் இப்பிடியான சோதனை போல. எங்களால என்ன செய்யமுடியும்? நாங்கள் சாதாரண மனிசர்கள்தானே?’
‘அது ஏதோ கேட்கச் சரியாக இருக்கும். ஆனால் அனுபவிக்கச் சரியாக இக்காது எண்டதை அனுபவிக்கேக்கைதானே தெரியுது. அதுதான் இப்ப என்னுடைய நிலைமை.’
‘அது உண்மைதான். அதை யாரும் மறுக்க முடியாது. எண்டாலும் நம்பிக்கையோடை வாழவேணும். எல்லாம் எங்கடை விருப்பப்படியா நடக்கும்? நாங்கள் கட்டாயம் எல்லாத்தையும் சமாளிக்க வேணும்.’
‘ம்… நீ சொல்லுகிறது சரி. எது எண்டாலும் போராட வேணும். அது எனக்கு இப்ப விளங்குது. நான் இனி என்னை மாத்திக் கொள்ள வேணும் எண்டு நினைக்கிறன்.’
‘ம்… நீ இப்ப சொல்லுகிறது பொன்னான வார்த்தை.’
‘அனுபவம் வாழ்க்கையில கிடைக்கிற முக்கியமான ஞானம் இல்லையே? மரண வேதனையன அனுபவங்கள் தொடராக வாழ்க்கை ஞானத்தைத் தருகுது. அந்த அக்கினியை மிதிக்கிறது பெரும் சோதனை.’
‘சரி கவலைப்படாமல் இரு… நான் நேரம் கிடைக்கேக்க உனக்குப் போன் பண்ணுகிறன்.’
‘ஓகே வாய்.’
‘வாய்’