8

மருத்துவரிடம் பரிசோதனைக்கான பொருளைக் கொடுத்து ஒரு கிழமை இருக்கும். மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு மதுவைக் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து கமலாவுக்கும் மதுவுக்கும் பரபரப்பாய் இருந்தது. கமலாவிற்குத் தான் சந்தேகப்பட்டது எல்லாம் பிழையானதில் தொடர்ந்தும் வருத்தமாக இருந்தது. மதுவைத் தான் ஒருபோதும் அப்படி எண்ணி இருக்கக்கூடாது என்பது விளங்கியது. பிழை விட்டாகிவிட்டது. அதை இனி மாற்ற முடியாது. அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். மதுவிற்குக் கோபம் இருக்கிறது. இருந்தாலும் அவன் மாறிவிடுவான் என்பதை அவள் முழுமையாக நம்பினாள். அதற்குக் காலம் எடுக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். இன்றும் மருத்துவர் மதுவை வரவளைத்ததைத் தொடர்ந்து கமலாவும் அவனோடு போவதாய் முடிவு செய்திருந்தாள். முடிவு செய்தாலும் மது ஒத்துக் கொள்வானா என்பது அவளுக்கு விளங்கவில்லை. என்றாலும் அவள் ஒரு நம்பிக்கையில் புறப்பட்டுவிட்டாள். இப்போதாவது அவனிடம் அனுமதி கேட்க வேண்டும். மதுவிற்குக் கோபம் குறையும் வரையும் அவதானமாக இருக்க வேண்டும் என்பது அவளுக்கு விளங்கியது. சிலவேளை இதுவே தப்பு என்று அவன் கூறினாலும் கூறலாம் என்கின்ற பயமும் அவளிடம் இருந்தது. அதை எல்லாம் நினைத்து நேரத்தை வீணாக்காது தனது மனக்கிடக்கையை அவள் தெரிவிக்கத் தயாரானாள்.
‘அப்பா… நானும் உங்களோடே வாறன்.’
‘அங… நான் உனக்கு முதல்ல அப்பா இல்லை. எனக்கு உந்த அப்பா எண்டு கூப்பிடுகிறது எல்லாம் பிடிக்காது. அது உனக்குத் தெரியாதே? அடுத்ததா நான் என்னுடைய சொந்தப் பிரச்சினையா டொக்ரரிட்டை கதைக்கப் போகிறன். நீ அங்க எதுக்கு வாறாய்? எனக்குத் தனியப் போய் வரத் தெரியும். இப்ப எனக்கு என்ன பிரச்சினை எண்டு உனக்குத் தெரியும். அதை எப்பிடிச் சமாளிக்கிறது எண்டும் எனக்குத் தெரியும். நீ தேவை இல்லாமல் உன்ரை நேரத்தை வீணாக்க வேண்டாம்.’
‘உங்கடை கோபத்தை இப்ப எந்நிலை காட்டாதையுங்க. அப்பா எண்டு உங்களைக் கூப்பிடாமல் வேறை எப்பிடிக் கூப்பிடுகிறது? ஏன் உங்களைப் பழைய காலத்தில கூப்பிட்டது போலக் கூப்பிட வேணுமே? அதைவிட டொக்ரர் சொல்லாமல் நீங்களே ஒரு முடிவுக்கு வராதேங்க. எதுக்கும் கொஞ்சம் தயவு செய்து அடக்கி வாசியுங்க. அதுதான் நல்லது.’
‘என்ன எண்டாலும் நான் குடிகாரன் எண்டு டொக்ரர் சொல்ல இல்லை. அது மாறாது எண்டுகிறதும் எனக்கு நல்லாய் தெரியும். ஏன் எண்டா எனக்கு நான் யார் எண்டுகிறது நல்லாத் தெரியும்.’
‘தப்பு. நான் சந்தேகப்பட்டது தப்பு. அதுக்காக அதையே பிடிச்சுக் கொண்டு அலைவியளா? கொஞ்சம் மன்னிச்சு நல்ல மனிசரா நீங்க இருங்க. நான் பிழை விட்டிட்டன் எண்டதுக்காக நீங்களும் குழந்தைப் பிள்ளையாட்டம் அடம் பிடிக்கிறது நல்லாய் இல்லை.’
‘ஓ இப்பதான் இந்த ஞானம் எல்லாம் வருகுது போல இருக்குது. நீ என்ன என்டாலும் சொல். ஆனா நான் இப்ப போக வேணும்.’
‘நான் என்ன போக வேண்டாம் எண்டா சொல்லுகிறன். நானும் உங்களோடை வாறன் எண்டு சொல்லுகிறன்.’
‘நீ அங்க வந்து என்ன செய்யப் போகிறாய் எண்டுதான் நான் கேட்கிறன். உனக்கு இன்னும் எந்நில நம்பிக்கை வரயில்லையா? தொடர்ந்து சந்தேகம் போல இருக்குது.’
‘ஐயோ… அப்பிடி எல்லாம் இல்லை. தயவு செய்து அது என்ன வருத்தம்… அதை எப்பிடி மாத்தாலம் எண்டதை அறிய வேணும் எண்ட ஆர்வத்தில வாறன் எண்டிறன். சரி… நீங்கள் இவ்வளவு வேண்டாம் எண்டால் நான் வர இல்லை. எனக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்.’
‘நீ அரைகுறை விருப்பத்தோடை இங்க நிக்க வேண்டாம். சரி என்னோடை வா. வந்து இதையும் பார். அப்பதான் உன்னுடைய சந்தேகம் முழுமையாகப் போகும். அதுக்குப் பிறகு உனக்கு நிம்மதியா இருக்கும்.’
‘நான் அதுக்காக வரவேணும் எண்டு சொல்ல இல்லை. நீங்கள் அப்பிடி எண்டாத் தனியப் போயிட்டு வாங்க.’
‘இல்லை… பருவாய் இல்லை… வா.’
‘உங்களுக்கு முழுமையான விருப்பம் இல்லாமல் நான் வர இல்லை. நீங்கள் தனியப் போயிட்டு வாங்க.’
‘எனக்கு முழுமையான விருப்பம். நீ இப்ப என்னோடை வா. போகிறதுக்கு நேரம் ஆகுது. பிந்திப் போனா பிறகு திரும்ப வேற நேரம் எடுக்க வேணும். மிஸ் பண்ணின நேரத்திற்கும் காசு கட்ட வேணும். ஏன் தேவை இல்லாத சிக்கல்கள் எல்லாம். இதெல்லாம் உனக்கும் தெரியும்தானே?’
‘ம்… அதுவும் உண்மைதான்… சரி வாங்க கெதியாப் போவம். என்மேல கோபம் இல்லையே?’
‘இல்லை… வா.’
‘தாங்ஸ் அப்பா…’
‘அது மனதில இருக்கட்டும்.’
‘நிச்சயமா இருக்கும். நான் உங்களை நம்பாததிற்குச் சொறி அப்பா. நான் உங்களை முழுமையா நம்பி இருக்க வேணும் எண்டது இப்ப விளங்குது. ஏண்டாலும் தப்பு தப்புதான்.’
‘சரி… வா…’
அதன் பின்பு இருவரும் புறப்பட்டு மருத்துவரிடம் சென்றார்கள். மது இப்பொழுது உணவில் கவனமாக இருந்தாலும் கமலாவே வாகனத்தைச் செலுத்தினாள். மருத்துவரிடம் இருந்து முடிவு வரும்வரைக்கும் தானாக எந்த இறுதி முடிவுக்கும் வரவேண்டாம் என்று அவன் எண்ணி இருந்தான். இருந்தும் மதுவுக்குத் தன்னால் இப்பொழுது வாகனத்தைச் செலுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் கமலா வாகனம் ஓட்டுவதை அவன் தடுக்கவில்லை. எதற்கும் நாங்கள் பாதுகாப்பாய் இருப்பதே நல்லதென அவன் மனதில் முடிவு செய்துகொண்டான். ஆனால் கமலா வாகனத்தைச் செலுத்தும் பொழுது தானும் அப்படி விரைவாக வாகனத்தைச் செலுத்த வேண்டும் என்கின்ற எண்ணம் அவனிடம் வந்தது. எப்படி இருந்தாலும் தான் அதற்குப் பொறுத்திருக்க வேண்டும் என்பதை விளங்கியவனாய் மௌனமாக இருந்தான். கமலாவுக்கு அவன் மௌனம் பிடிக்கவில்லை. அதனால் அவள்,
‘என்ன பேசாமல் இருக்கிறியள்?’ என்றாள் அவனைப் பார்த்து.
‘நான் பேசினால் நீ நம்பீடுவாயாக்கும்? பிரயோசனம் இல்லாமல் நான் கதைச்சால் என்னை விசரன் எண்டு நினைக்க மாட்டினமா?’
‘ச்… திரும்பவும் தொடங்காதையுங்க. நடந்தன நடந்தனவாக இருக்கட்டும். இனி நடக்கிறதை மட்டும் நாங்கள் பார்ப்பம்.’
‘ஓ இப்பதான் இந்தத் தத்துவங்கள் எல்லாம் வெளிய வருகுது போல? இது கொஞ்சம் முதல் வந்து இருந்தால் நல்லாய் இருந்திருக்கும். சரி பருவாய் இல்லை.’
‘பிளீஸ்… தயவு செய்து…’
‘சரி… சரி… நானும் உன்னை மாதிரி இருக்க முடியாது.’
‘அப்பாடி… இப்பவாவது மனது வந்திச்சே?’
‘என்ன செய்கிறது? நானும் விழுந்து கடிக்கவா முடியும்?’
‘சரி நான் அப்பிடியே இருந்திட்டுப் போகிறன்.’
‘விளங்கினால் சரி…’
‘நால்லாய் படிச்சாச்சுது. இப்ப எனக்கு நல்லாய் உண்மை விளங்கீட்டுது. இனி ஒரு நாளும் இப்பிடி நடக்காதப்பா. தயவு செய்து என்னை விட்டிடுங்க. மன்னிச்சிடுங்க. திரும்பவும் சொறி… சொறி… விளங்கிச்சா?’
‘அது நல்லது. இப்பிடியே இருந்துகொள். அது எங்கள் இருவருக்கும் நல்லது.’
வழமை போல மருத்துவருக்காய் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. காத்திருப்பு முடியவும் மருத்துவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது அவர் சிரித்தவண்ணம் சென்றார். அதனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை மதுவால் சற்றும் மதிக்க முடியவில்லை. கமலாவுக்கும் எதுவும் விளங்கவில்லை. மதுவின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளே வந்தாள். மருத்துவர் உள்ளே சென்றதும் ஆசனத்தில் அமருமாறு கேட்டுக் கொண்டார். பின்பு இருவரும் ஆசனத்தில் அமரவும் அவர் பேசத் தொடங்கினார்.
‘நீங்கள் பயப்படத் தேவை இல்லை. நான் நினைத்தது போலவே இது மதுவங்களால் உண்டாகிற பிரச்சினையே. இதற்கான மருந்தைக் கொடுத்து அதைக் குணப்படுத்த முடியும். ஆனால் சிலவேளை இந்த மருந்துகளால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படலாம். அதை நாங்கள் மருந்து கொடுக்க முதலே முடிவு செய்ய முடியாது. இதற்கு மருந்து கொடுக்காமலும் இருக்க முடியாது. அது உங்களுக்குத் தொடர்ந்தும் பிரச்சினையாக இருக்கும்.’
‘டொக்ரர்… நான் நிச்சயம் அந்த மருந்தைப் பாவிக்க வேண்டும். நான் இதனால் பட்ட கஸ்ரம் போதும்… போதும்… என்று ஆகிவிட்டது.’
‘எனக்கு அது நன்கு விளங்குகிறது. நான் உங்களுக்கு மருந்து எழுதித் தருகிறேன். நீங்கள் தொடர்ந்தும் உணவில் கட்டுப்பாடாக இருங்கள். மருந்து பாவித்து முடிந்ததும் நீங்கள் வழமையான உணவை உட்கொள்ளலாம். அதன் பின்பு ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். அனேகமாக அதற்குத் தேவை இருக்காது என்று நம்புகிறேன். நான் தரும் இந்த மருந்து பிரச்சினையை முற்றுமாக மாற்றிவிடும்.’

‘மிக்க நன்றி டொக்ரர். இந்தப் பிரச்சினையில இருந்து விடுபட்டாலே பெரிய விசயமா இருக்கும். அது எனக்கு மிகவும் முக்கியம். சந்தோசத்திற்கு வெறிக்கலாம். ஆனா வெறியா நாள் முழுவதும் இருக்கிறது சந்தோசம் இல்லை. அது பெரும் தலையிடியா இருக்கும். உண்மையில நரகவேதனை. அதில இருந்து எனக்கு முதல்ல விடுதலை வேணும். அது எனக்கு மிகவும் முக்கியம்.’
‘அப்பிடியா… அது நிச்சயம் கிடைக்கும். நீங்கள் மருந்தை ஒழுங்காகப் பாவியுங்க. அது நிச்சயம் நல்ல பயனைத் தரும்.’
‘டொக்ரர் பக்கவிளைவுகள் ஒண்டும் பெரிசா இருக்காதே?’ என்றாள் கமலா சற்றுக் கலக்கத்தோடு.
‘பெரிசா வராது எண்டு நம்புகிறன். அப்பிடி ஏதாவது உங்களுக்குச் சந்தேகம் வந்தால் நீங்கள் மருந்து பாவிக்கிறதை நிறுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொள்ளலாம்.’
‘சரி டொக்ரர். நாங்கள் அப்பிடியே செய்கிறம்.’
அதை அடுத்து மருத்துவர் மருந்து வாங்குவதற்கான ரசீதை எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி கூறிவிட்டு இருவரும் புறப்பட்டார்கள்.