9

லாவண்ணியா தனது சிகிச்சை முடித்துக் கொண்டு அந்த மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று சாந்தன் தொலைபேசியில் அழைத்துச் சொல்லி இருந்தான். அதனால் வெள்ளி பின்னேரம் மதுவும், கமலாவும் அங்கே செல்லப் புறப்பட்டார்கள். மது இப்போது நல்ல குணமாகிவிட்டதால் தானே வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டான். கமலாவும் அதைப் பார்த்தாள். அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. மது முதலில் பொய்யே சொல்லவில்லை என்பது அவன் மேல் இருந்த மதிப்பை மாலையாக்கி வைத்திருந்தது. அதைவிட அவனது வருத்தம் மாறியது அளவுகடந்த மகிழ்வை அவளுக்குத் தந்தது. அவளுக்கு இப்போது அடிக்கடி அவனைக் காதலோடு பார்க்கத் தோன்றும். அதை எல்லாம் அவனிடம் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதை வைத்தே பகிடி பண்ணுவான் என்கின்ற பயத்தில் அவள் அதை அவனிடம் வெளிப்படையாகக் கூறியதே இல்லை. இருந்தாலும் அவனை இரசிப்பதை அவள் விட்டுவிடுவதில்லை. இப்போதும் அவனை அவள் கடைக்கண்ணால் இரசித்த வண்ணம் இருந்தாள். அதை மது கண்டு கொண்டான். அவனுக்கு அவள் ஏன் அப்பிடிப் பார்க்கிறாள், நகைக்கிறாள் என்பதை அறிய வேண்டும் என்கின்ற ஆர்வம் எழுந்தது. அவன் அவளைப் பார்த்து,
‘என்ன பார்வை இது? என்னத்துக்கு அப்பிடிப் பார்க்கிறாய்? எல்லாம் ஒரு மாதிரி இல்லைப் புதுமாதிரி இருக்குது?’
‘நான் உங்களைப் பார்க்கவும் கூடாதே?’
‘பார்க்கலாம். நல்லாய் பார்க்கலாம். ஆனா உந்தப் பார்வை ஒரு மாதிரி இருக்குது.’
‘என்ன மாதிரி இருக்குது?’
‘அதைச் சரியா இப்ப சொல்ல முடியாவிட்டாலும் பழமை மாதிரி இல்லை எண்டு மாத்திரம் சொல்ல முடியும்.’
‘வழமையா எப்பிடி இருக்கிறது?’
‘வழமையா ஏதோ வேண்டா வெறுப்பாய் பார்ப்பாய்…’
‘இப்ப?’
‘இப்ப என்ன மாதிரிப் பார்க்கிறாய் எண்டு உனக்கே தெரியும்? பிறகு எதுக்கு எந்நிட்டை கேட்கிறாய்?’
‘எனக்கு விளங்க இல்லை. அதுதான் கேட்கிறன்.’
‘ஓ… அப்பிடியே?’
‘நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.’
‘எனக்கு உன்னோடை சரசம் பண்ணுகிறதுக்கு எல்லாம் இப்ப நேரம் இலை. என்னை விடு.’
‘நான் உங்களை ஒண்டும் சரசம் செய்யச் செல்ல இல்லை. சும்மா கதைக்கச் சொன்னான். அதை நீங்கள் இப்பிடி வன்மமாத் திசை திருப்பக்கூடாது.’
‘ஓ… என்னவோ எனக்கு இப்ப கதைக்கிற மனநிலை இல்லை. ஏதோ ஒரே யோசினையாக இருக்குது. நீ விடுகிறாய் இல்லை. தயவு செய்து என்னை இப்ப விட்டிடு.’
‘நீங்கள் அப்பிடி என்ன யோசிக்கிறியள்? உங்கடை யோசினை எனக்கும் யோசினையைத் தரும்தானே?’
‘ஓ அதுவும் அப்பிடியே?’
‘சும்மா பகிடியை விட்டிட்டு உண்மையைச் சொல்லுங்க…’
‘ம்… எல்லாம் சாந்தனைப் பற்றினதும் லாவண்ணியாவைப் பற்றினதும்தான்.’
‘ஓ… அதுவா. உண்மைதான். ஆனா அதுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அப்பிடி யாருக்கும் வரக்கூடாது. ஆனா வந்தால் என்ன செய்கிறது? சாந்தனுக்கு லாவண்ணியாவை நினைச்சு நினைச்சுக் கவலை. ம்… அதுக்கும் ஒரு விடிவு கெதியா வரும் எண்டு நான் நினைக்கிறன்.’
‘அப்படி ஏதாவது வரவேணும் எண்டுதான் நானும் நினைக்கிறன். அவனுக்கு இப்பிடி ஒரு பிரச்சினை மாறாமல் இருக்கிறது மனதுக்கு வேதனையாக இருக்குது.’
‘அதுக்கு என்ன செய்கிறது அப்பா? அதுக்கு அதுக்கான நேரம் வரவேணும் எண்டதை விளங்க வேணும். அப்பதான் எல்லாம் தீரும். எங்கடை பிரச்சினையைப் பார்க்க இல்லையா? அதை மாதிரி இதுவும் நேரம் வரேக்க எல்லாம் சரியாகிடும். நீங்கள் தேவையில்லாமல் அதுக்குக்  கவலைப்படாதையுங்க.’
‘நானும் கவலைப்படாமல் இருக்க வேணும் எண்டுதான் நினைக்கிறன். மனம் கேட்குது இல்லை. அது எனக்குக் கட்டுப்படாமல் தன்பாட்டிற்குக் கண்டதையும் சிந்திக்குது.’
‘இது எல்லாருக்கும் இருக்கிற பிரச்சினை. நாங்கள் கவலைப்பட்டால் எல்லாத்துக்கும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அதால எதுக்கும் கவலைப்படாமல் வருகிறது வரட்டும் அந்த நேரத்தில பார்க்கலாம் எண்டு இருக்க வேணும்.’
‘நீ சொல்லுகிறது உண்மை. ஆனா இந்தப் பிரச்சினை ஏற்கனவே அவனுக்கு வந்திட்டுதே. அதை எப்பிடிக் கண்டும் காணாமலும் இருக்க முடியும்?’
‘நாங்கள் என்ன கவலைப்பட்டும் எதுவும் மாறப் போகிறது இல்லை. அது எப்ப மாற வேணும் எண்டு இருக்குதோ அப்ப மாறும். நாங்கள் தேவையில்லாமல் கவலைப்படுகிறதில எந்தப் பிரயோசனமும் இல்லை.’

*

சாந்தன் வீட்டிற்குச் சென்ற போது மதுவும் கமலாவும் எதிர்பார்த்ததைவிடச் சந்தோசமாய் இருப்பது போலத் தோன்றியது. அவர்கள் சந்தோசம் இருவருக்கும் மிகவும் சந்தோசத்தைத் தந்தாலும் அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்பதில் அவாவாக இருந்தது. அதைத் தீர்த்து வைப்பதாக,
‘எப்பிடி இருக்கிறியள்? லாவண்ணியா என்ன சொல்லுகிறா?’ என்று தொடங்கினாள் கமலா.
‘எல்லாம் நல்லாப் போகுது கமலா. நாங்கள் கனகாலத்துக்குப் பிறகு நிம்மதியாகச் சந்தோசமாய் இருக்கிறம். இனி லாவண்ணியாவுக்குத் திரும்பவும் அப்படியான எந்த நினைவுகளும் வாறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை எண்டு சொல்லி இருக்கினம். அதை நாங்களும் நம்புகிறம். அவள் நல்லாய் இருந்தால் எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க? இப்ப அதால நிம்மதியா இருக்குது. அதைக் கொண்டாடினா நல்லா இருக்கும் மது. நீ என்ன சொல்லுகிறாய்?’ என்றான் சாந்தன் மதுவைப் பார்த்து.
‘லாவண்ணியாவைப் பற்றி எண்ண இப்ப சந்தோசமாய் இருக்குது சாந்தன் அண்ணா. ஆனா அதுக்கு இவருக்கு ஊத்திக் குடுக்காதையுங்க. கொஞ்ச நாளைக்கு அவர் நிம்மதியா இருக்கட்டும் அண்ண. நான் சொல்லுகிறன் எண்டு கோவிக்காதையுங்க.’ என்றாள் கமலா. அதற்குச் சாந்தன் பதில் சொல்வதற்கு முன்பே மது பதில் கூறினான்.
‘ஒருநாள் சந்தோசத்திற்காய் குடிக்கிறதில எந்தப் பாதிப்பும் வராது. நீ சும்மா அமைதியாய் இரு.’ என்றான் மது.
இவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் போதே லாவண்ணியா அங்கே வந்து சோபாவில் இருந்தாள். அவள் எல்லோரையும் பார்த்துச் சிரித்த பின்பு அவர்களோடு அளவளாவத் தொடங்கினாள்.

-முற்றும்-