சென்னை கோடம்பாக்கத்தில் மேலும் கீழுமாக வழி பிரிக்கும் அந்தப் பாலம். அதன் கீழ் இரண்டு சிறிய சந்துகள் பாலத்திற்குத் தோழர்கள் போல நீளும். அவை பல வரலாற்றைத் தம்மில் அடக்கிய வண்ணம் பல சகாப்தங்களாக அவ்விடத்தில். அங்கே பல பதிப்பகங்கள், உணவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றின் நெருக்கம். ஈ இருக்கும் இடம்கூட இனி எவருக்கும் இல்லை என்பதாகச் சென்னையில் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இதுவும் ஒன்று. பாலத்திற்குக் கீழ் அது ஒரு சந்து என்றாலும் புழுத்துப் போய்விட்ட சன நெரிசல் எப்போதும் இருக்கும். வறுமையும் வாழ்வும் ஒவ்வொரு மனித அசைவிலும் அங்கு, இங்கு என எங்கும் இயங்கும் காட்சிகள். அவ்விடத்தில் ஒரு கடையைப் பதிப்பகமாக்கிப் பிதாமகர் காலையும் மாலையும் தவறாது தனது யாகத்தைச் செய்து வந்தார். சிலவேளைகளில் மட்டும் சந்திப்புகள் கரணமாக யாகத்திற்குத் தற்காலிக சாந்தியும் சித்திப்பது உண்டு. பிதாமகர் யாருடனும் நேருக்கு நேரே அதிகம் மிண்டிப் பழகத் தெரியாதவர். பிதாமகருடன் பழகுபவர்கள் அவருடன் எதற்காகவும் மிண்ட மனமேகார். ஆனால் அதுவும் நடந்தேறியது. எழுத்தில் அவர் மிண்டாத மலைகள் கிடையாது. அதனால் தனக்கென ஒரு போக்கையே தனியாக அமைத்துக் கொண்டவர். அவருடன் இருந்து அந்த மிண்டல்கள் பற்றிய கதைகள் கேட்பதே சுதனுக்கு ஒரு அலாதியான அனுபவமாகும். அதைச் சுதன் பலமுறை அனுபவித்து இருக்கிறான். பிதாமகர் ஈழத்தின் தமிழ் இலக்கியத்திற்கு ஈடுயிணை இல்லாத பிதாமகரே என்பதை யாரும் ஆரவாரத்தால் அல்லது அவர் ஈட்டிய செல்வத்தால் மறைக்க முடியாது. அவர் புகழுக்கு சில இசங்கள் குறுக்கே நின்றது வரலாற்று உண்மை. இலக்கியத்தால் சில சமுகப் போராட்டங்களை உருவாக்கலாம். சமுகப் போராட்டத்திற்கான ஆக்கங்கள் அனைத்தும் இலக்கியம் ஆகிவிடுமா? அப்படியான படைப்புகளால் பிதாமகரை அம்புப் படுக்கையில் வீழ்த்திவிட முடியுமா? வரலாறு இல்லை என்கிறது. அந்த அலசலைச் சுதன் அதிகம் மேற்கொள்வதில்லை. அவன் தன்னை எதிலும் சாராதவனாய் நினைத்திருந்தான். குருச்சேத்திரத்தின் பிதாமகருக்குப் பாண்டவர் மேல் இருந்த அன்பு போல நமது பிதாமகருக்கும் அவர் நம்பும் பாண்டவர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதற்குப் பாண்டவர்கள் அல்லக் காரணம் பதிலாக ஈழத்தின் கௌரவர்கள் காரணமாய் இருந்தனர். துரியோதனன்கூடத் திருந்தி நல்ல மனிதனாகலாம் ஆனால் ஈழத்துக் கௌரவர்கள் அப்படி எல்லாம் தப்பு செய்துவிடமாட்டார்கள் என்பதற்கு எதிராக அவருடன் யாரும் வாதிடுவதில்லை. அதற்கான பிரதிவாதம் தாராளமாக அவரிடம் இருக்கும். அது ஆத்ம விசுவாசம். அந்தக் குருச்சேத்திரக் கதைகளில் இருப்பது போல அல்ல இது. இது நம் கண்முன்னே ஆடி அழிந்தவை. அநியாயத்தை அநியாயத்தால் வெல்ல முடியாது என்கின்ற புது யுகம். ஈழத்திற்காய் மரித்தவர்கள் சிலருக்குக் கௌரவர்கள். அவர்களே சிலருக்குப் பாண்டவர்கள். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. துரியோதனனும் தான் செய்வது தனக்கான நியாயம் என்றே இறப்புவரை கருதினான். பிதாமகர் ஈழத்தின் பொக்கிசங்களை தன்னுடன் காவிக்கொண்டு கோடம்பாக்கத்திற்குத் தனது சொகுசு வாழ்வைத் துறந்து ஆத்ம இன்பம் தேடி வந்தார். அவரது கவனம் தொடக்கத்தில் ஆத்ம இன்பத்தைப் பெருக்கும் யாகத்தில் மட்டுமே இருந்தது. அதற்காக அவர் செய்த அர்ப்பணிப்பு அனைவரையும் மலைக்க வைத்தது. அவர் அப்படி யாகம் செய்யும் பொழுது பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும் பொழுது அமிர்தம் திரண்டு எழுந்தது போலப் பிதாமகரின் யாகத்திலும் ஒரு அமிர்தம் திரண்டு எழுந்தது. என்னதான் பிதாமகராய் இருந்தாலும் அவரும் உலக பாசங்களுக்குக் கட்டுப்பட்ட சாதாரண மனிதரே. தேவேந்திரன் உண்டதும் கொடுத்ததும் போல ஆசை அவருக்கும் உண்டாகியது. அதை இவ்விலகில் யாரும் தவறாகக் கருத முடியாது. அவர் செய்த கடும் யாகத்திற்கு இந்த அமிர்தம் பெரிய பலன் இல்லை என்றே சொல்லலாம். என்றாலும் அதில் ஒரு பலன் இருப்பதை அவர் கண்டு கொண்டார். ஈழத்தைப் பற்றி அறியாமலே அல்லது எந்தத் தொடர்பும் ஏற்படாமலே வியாபார நோக்கிற்காக ஈழ, புலம்பெயர் இலக்கியங்களை வெளியிட்ட பலரோடு அவரை எக்காரணம் கொண்டும் ஒப்பிட முடியாது. இந்த யாகம் பலனை எதிர்பார்த்து அவரால் தொடங்கப்பட்டது அன்று. பலனைக் கண்டபொழுது அவரையும் மனித பலவீனம் ஆட்கொண்டதை அவரால் வெல்ல முடியவில்லை.பலன்மீது பற்று வைக்காது காரியம் செய்ய வேண்டும் என்றார் பரமாத்மா. அதற்கான காரணம் உண்டு. பலனை எதிர்பார்த்துச் செயற்படத் தொடங்கினால் நாம் செய்யும் யாகமே கெட்டுப் போய்விடும். பலனினில் உண்டாகும் பற்றால் செய்கின்ற காரியத்தின் அல்லது யாகத்தின் குறிக்கோள் அல்லது முனைப்பு தொலைந்துவிடும். பிதாமகர் அப்படி எல்லாம் தன்வழி விட்டுப் பெரிதாக மாறாவிட்டாலும் மாற்றம் இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. அத்தால் பிதாமகருக்குச் சிலவேளைகளில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. அவர் புகழக்கூடாத மனிதர்களைப் புகழ வேண்டி வந்தது. இகழக்கூடாத சிலரை இகழ வேண்டி வந்தது. பரிசிற்காகக் கவி பாடிது போன்ற நிலைமை அவருக்கும் உண்டாகியது. வியாபாரத்திற்கு என்று ஒரு தருமம் இருக்கிறது. நேர்மை மீறப்படுவது அதில் கண்டும் காணாமலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

பிதாமகருக்குப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒன்றும் புதிதல்ல. மற்றைய மனிதர்கள்மேல் அவர் காட்டும் நம்பிக்கைக்கும் அவரிடம் பஞ்சம் இல்லை. ஈழத்திலேயே அவர் அப்படியான யுத்தங்களைப் பலமுறை கண்டவர். அப்பொழுது அவருக்கு எழுத்து மட்டுமே தளமாகும். வியாபாரம் அவருக்குக் கன்னி கழியாத பெண் போல.சுதன் அன்று காலையே பிதாமகரிடம் சென்றுவிட்டான். காலை வந்து சந்திக்குமாறு அவர் கேட்டு இருந்தார். காலை அங்கே சென்ற பொழுது வயிற்றை இயற்கை கிள்ளியது. அதனால் அருகே இருந்த உணவு விடுதிக்கு இருவருமாகச் சென்றார்கள். அப்பொழுது பிதாமகர், ‘உனக்குச் சபேசனைத் தெரியுமோ?’ என்று அவனைப் பார்த்துக் கேட்டார். சபேசன் ஸ்கண்டிநேவியன் நாடு ஒன்றில் இருப்பது அவனுக்குத் தெரியும். மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டதும் ஞாபகம் இருந்தது. நேரடியாக அவனைச் சந்தித்தது இல்லை. அதற்கான சந்தர்ப்பம் கிட்டியதில்லை. சுதனுக்கு சபேசனும் எழுத்து ஆர்வத்தால் பிதாமகரைத் தேடிவந்த ஒருவன் என்கின்ற பிம்பம் ஒன்று உண்டாகியது. நல்லது. பல நபர்கள் எழுதினால் தமிழ் கொழிக்கும் என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். வெளியே வெயில் விட்டுக் கொடுப்பில்லாது வாட்டத் தொடங்கி இருந்தது. உணவு விடுதி என்றும் போல் இன்றும் அமளிப்பட்டது. உணவின் வாசங்கள் மேலும் வயிற்றைக் கொதியேற்றின. பிதாமகரோடு ஒருவாறு இடத்தைப் பிடித்து அமர்ந்த சில நிமிடங்களில் ‘உங்களுக்கு என்ன வேண்டும்? ‘ என்கின்றபடி ஒரு பணியாள் வந்து நின்றான். அவனிடம் தேவையானதைக் கூறினார்கள். பிதாமகரின் சாப்பாடு சுதனோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருந்தது. வயது ஏற ஏற உணவு இறங்க வேண்டியது விதியாகிறது எனச் சுதன் எண்ணிக் கொண்டான். பிதாமகர் தனக்கு ஒரு பொங்கலும் குடிப்பதற்குக் கோப்பியும் தருமாறு கூறினார். சுதனுக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்கின்ற அவா. நோர்வேயில் இப்படிச் சாப்பிட முடியாது. இங்கு வந்து நிற்கும் போது அந்தச் சந்தர்ப்பத்தை அவன் கோட்டைவிட விரும்பவில்லை.  அவன் தனக்கு முதலில் பொங்கலும் பின்பு மாசாலாத் தோசையும் அத்தோடு கோப்பியும் கொண்டு வருமாறு கூறினான். உணவிற்காக அவர்கள் காத்து இருக்கும் பொழுது மீண்டும் பிதாமகர் தொடங்கினார். ‘சபேசன் நல்லா எழுதுறான். அவனுக்கு நிச்சயம் நல்ல வரவேற்புக் கிடைக்கும். தமிழிலையும் நல்ல ஆர்வம் இருக்குது. ”நல்ல விசயம். யார் எண்டாலும் ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தால் அது எங்களுக்கும் சந்தோசம் தான்.’ என்றான் சுதன். அவன் மனதும் அர்ச்சுனன் மனது போல ஏங்கியது. இருந்தும் அதை அவன் பிதாமகரிடம் காட்டிக் கொள்ளவில்லை. அந்த எண்ணம் தவறு என்றே அவன் எண்ணினான். ‘சபேசன் இப்ப சென்னையிலதான் நிக்கிறான். பத்து மணிபோல இங்க வருவன் எண்டு சொல்லி இருக்கிறான். நீ கொஞ்சம் வெயிற்பண்ணினா அவனைப் பார்த்திட்டுப் போகலாம். நிச்சயம் ஈழத்தமிழர் தமிழ் இலக்கியத்தை வாழ வைப்பினம் எண்டு நான் சொல்லுகிறதுக்கு இவனைப் போன்றவர்கள் பலமான என்னுடைய நம்பிக்கைகள். நீங்கள்தான் வருங்காலம். உனக்கும் நிச்சயம் அவனுடைய உதவி எதிர்காலத்தில தேவைப்படலாம்.’ எதற்கு அவனது உதவி தனக்குத் தேவைப்படும் என்பது சுதனுக்கு முழுமையாக விளங்கவில்லை. என்றாலும் பிதாமகர் எதாவது சொன்னால் அதில் விசயம் பொதிந்து இருக்கும் என்று அவன் நம்பினான். அத்தால்…’கேட்கவே சந்தோசமாய் இருக்குது. எனக்கும் இப்ப ஒண்டும் அவசர அலுவல் இல்லை. இருந்து பார்த்திட்டுப் போகலாம்.’ என்றான் சுதன்.சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் யாகசாலைக்குச் சுதனும் பிதாமகரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் வரும்பொழுது சபேசன் வந்துவிட்டான். அவனைக் கண்ட பொழுது பிதாமகரின் வதனம் ஆதவன் கண்ட தாமரையாக அங்கே சட்டென அகல விரிந்தது. சபேசனுக்கு அவர் சுதனை அறிமுகம் செய்து வைத்தார். சபேசன் வாட்டசாட்டமான உருவம் கொண்டவன். அவனது வெளித் தோற்றம் போல அகமும் இருக்க வேண்டும். அதனாலேயே பிதாமகரின் நற்பெயரை விரைவில் சம்பாதித்து இருக்கிறான் என்று சுதன் எண்ணினான். சுதனுக்குப் பிதாமகரை நீண்டகாலம் தெரியும் என்றாலும் அவன் யாருடனும் அதிகம் பழகுவது இல்லை. அதைப் போன்று யாரிடம் இருந்தும் அதிகமாக எதிர்பார்ப்பதும் இல்லை. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று போலியாகப் பழகுவதும் கிடையாது. இருந்தும் தன்னைப் போல அல்லாது மிகவும் ஆக்கப்பூர்வமாய் சபேசன் இருப்பதால் அவன் பிதாமகரைக் கவர்ந்திருப்பது சுதனுக்கு தற்போது வியப்பைத் தரவில்லை. 

சிறிது நேரம் நின்று சபேசனுடன் கதைத்தான். சபேசன் தேனொழுகக் கதைத்ததில் அவன் மலைத்தான். என்றாலும் அது எங்கோ சுதனுக்கு நெருடியது. சிலர் அப்படித்தான் என்று எண்ணிக் கொண்டான். சபேசனிடம் இடைக்கிடையே ஒருவித மமதை மேலோங்குவதையும் அவனால் அவதானிக்க முடிந்தது. பிதாமகர் எப்படி இவனை என்கின்ற கேள்வி திடீரென ஒரு கணம் தோன்றி மறைந்தது. அது எப்படி என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்போது பிதாமகருக்கும் அவனுக்கும் நடக்க இருக்கும் சம்பாசனைக்குத் தான் தடையாக இருக்கக்கூடாது என்கின்ற எண்ணத்தோடு சுதன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தான். அவன் ஏதோ ஒரு கடமையைச் செய்யாது தப்பி ஓடுவது போன்ற உறுத்தல். இது தேவையற்ற உணர்வு எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

*


ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. உலகம் ஒரு விண்மீன் பேரடையில் இருந்து இன்னோர் பேரடைக்குச் சென்ற மாற்றம். ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. சுதன் இன்று பிதாமகரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அவரது யாகசாலையை இப்போது சில காரணங்களால் இடம்மாறி இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த புதிய யாகசாலையில் வந்து தன்னைச் சந்திக்குமாறும் அவர் பணித்திருந்தார்.
பிதாமகரின் புதிய யாகசாலை முதல் இருந்ததிற்குப் பின் ஒழுங்கை ஒன்றிற்கு மாறி இருந்தது. தொலைப்பேசியில் கதைக்கும் பொழுது எதனால் என்று கூறினார். என்றாலும் சுதன் அதை யாரிடமும் கூறுவதில்லை. அதற்காக அவன் அனைத்தையும் இரகசியமாய் அடைகாத்து வைத்திருப்பான் என்றும் இல்லை. இரண்டு பக்கம் இருக்கும் பொருளிற்கு ஒரு பக்கத்தைப் பார்த்து மதிப்புக்கூற முடியாது. அது தார்மீகமும் ஆகாது. பிதாமகர் சுதனைக் கண்டதும் என்றும் போல் இன்றும் இன்முகத்தோடு வரவேற்றார்.
‘நீ உன்ரை கைக்காசைப் போட்டு எண்டாலும் தமிழை வளர்க்க வேணும் எண்டு ஆசைப்படுகிறாய். உன்னை மாதிரி எல்லாரும் இருக்கமாட்டினம் சுதன். முதல்ல நல்ல பிள்ளையளாட்டம் பௌவியமாக வாறான்கள். தந்திரமாத் தேனும் பாலும் ஒழுகக் கதைக்கிறாங்கள். கொஞ்ச நாளில குருவுக்கு மிஞ்சிய சீடனாகப் பார்க்கிறாங்கள். ஈழத்தமிழை அவைதானாம் இப்ப தூக்கிப்பிடிக்கப் போகினம். அதுகூடப் பாருவாய் இல்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையாட்டம் என்னிட்ட இருக்கிறதையும் பறிச்சுக் கொண்டு போகப் பார்க்கிறாங்கள்.’ என்று தனது மனக் கொதிப்பைச் சுதனைப் பார்த்ததும் கொட்டித் தீர்த்தார்.
சுதன் ஏதோ தமிழில் எழுதினாலும் அவனுக்குக் கொஞ்சம் மந்த மூளை. பிதாமகர் என்ன சொல்கிறார் என்பதின் வாலோ தலையோ எதுவும் அவன் மூளைக்கு அகப்படவில்லை. அவன் விளங்காது அவரது முகத்தைப் பேந்தப் பேந்தப் பார்த்தான். அவனுக்கும் தனது கைக்காசைப் போட்டே தனது புத்தக அலுவல்கள் செய்யும் விடயம் நன்கு தெரியும். தமிழில் எழுதும் பலருக்கும் அதுவே விதி. சுதனைப் பொறுத்தவரையில் அவனால் ஈழத்தமிழ் இலக்கத்திற்குப் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பதும் தெரியும். அதைவிட அவன் எந்தப் பதவிக்கோ அல்லது பெயருக்கோ பேராசைப்படுபவனும் அல்ல.
பிதாமகர் சுதனைப் பார்த்தார். பிதாமகருக்கும் அவனைப் பற்றி விளங்கும். அதனால் அவர் நேரடியாக விசத்தை அவனுக்கு விளக்கமாகக் கூறினார்.
‘இவன் சபேசனைப் பற்றித்தான் கதைக்கிறன். கொஞ்சம் கெட்டித்தனமாய் எழுதுகிறான் எண்டு நினைச்சன். அதை வேறை அவரிட்டைச் சொல்லியும் போட்டன். அப்பிடியே எனக்கும் உதவியா இருக்கும் எண்டு ஒரு ஒப்பந்தம் அவனோடை. இப்ப அது முதலுக்கே நட்டமாய் வந்து நிக்குது. ஒட்டு மொத்தமா தந்திட்டு வெளி போ எண்டுகிறான். தன்னால என்ரை இடத்தைப் பிடிக்க முடியும் எண்டுகிறான். இப்ப வழக்கு கோடு எண்டு ஒரே பிரச்சினையா இருக்கு சுதன். அதால மனசிலும் நிம்மதி இல்லை. உன்னுடைய இந்தப் புத்தக வேலைகள் எனக்கு இப்ப சரியான உதவியா இருக்கும்.’
சுதனுக்கு இப்போது விசயம் முழுமையாகப் பிடிபடத் தொடங்கியது. இதற்குச் சபேசனை மட்டும் குறை கூறிவிட முடியாது. சொந்தத் தகப்பன், மகன், சகோதரங்களே வியாபாரத்தில் தகராகப்படுகிறார்கள். அப்படி உலகு கலியுகத்தைக் கடைப்பிடிக்க இவரால் எப்படி இவனை நம்ப முடிந்தது? மனிதச் சொற்களே மனிதனை மாய மானாக மயக்க வைக்கும். கண்ணைக் காட்சி மாற்றிக் கட்டிப் போடும். தன் சொல்லால் தமிழைக் கட்டிப் போடும் பிதாமகரே சபேசன் சொல்லில் ஏமாந்து இருக்கிறார் என்றால் அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான் என்பதை எண்ணச் சுதனுக்கு மலைப்பு ஏற்பட்டது.
‘என்ன பேசாமல் இருக்கிறாய்? ‘ என்றார் பிதாமகர்.
‘உங்களுக்கே ஆப்பு எண்டா நான் என்ன சொல்ல இருக்குது. நீங்கள் நாலும் தெரிஞ்ச அடிபட்ட மனிசர். நீங்களே ஏமாந்ததாய் இப்ப சொல்லுகிறியள். அப்பிடி எண்டாச் சபேசன் எப்படிப்பட்டவனாய் இருப்பான் எண்டு யோசிக்கிறன்.’
‘காலம் சரியில்லையடா தம்பி. நானும் அவன்ரை கதையிலதான் ஏமாந்து போயிட்டன். மனச் சுத்தியோடை தமிழுக்காக எழுதுகிறது வேறை. அது உன்னை மாதிரி. எதைச் செய்தாலும் பேசாமல் இருக்கிற மனசு யாருக்கும் வராது. சிலருக்கு முட்டை போட்ட கோழியாட்டம் எழுத முதல் ஆரம்பிச்சுடுவாங்கள். அப்பிடி இருந்தாலும் பருவாய் இல்லை. மனதில இருந்து மனிதத்திற்காகச் சொல்லு வராமல் மற்றவனை ஏமாத்தோணும் எண்டு எழுதுகிறவங்களை என்ன செய்ய முடியும்? அவங்கள் எதை எழுதினாலும் ஒரு பெறுமானமும் எதிர்காலத்தில இருக்கப் போகிறது இல்லை. காசக் கொடுத்தே பட்டங்களும், கௌரவங்களும் பெறலாம் எண்டு நினைக்கிறவங்களை நான் என்ன செய்ய முடியும்? இந்த நாடும் அப்பிடி. இதெல்லாம் எனக்குப் பிறகுதான் தெரிய வந்திச்சுது. அதுக்கு முதலே நாங்கள் அவசரப்பட்டிட்டம். தலையைக் கொண்டே தூக்குக் கயித்தில கொடுத்தமாதிரி இப்ப எங்கடை நிலைமை.’
‘நீங்கள் எழுத்தைத் தவமா நினைக்கிற மனிசர். இந்தச் சின்னச் சின்ன சில்லறைத்தனமான பிரச்சினைகளுக்க அகப்பட்டு நேரத்தை வீணடிக்கிறது தமிழுக்கே நட்டம் இல்லையா? ‘
‘உண்மை சுதன். முள்ளில சிலையைப் போட்டாச்சுது. அதை எப்பிடியாவது குறைஞ்ச சேதாரத்தோடை எடுத்துக் கொண்டு நான் என்ரை வேலையைப் பார்க்க வேணும்.’
‘அதுதான் நல்லது.’
அதன் பின்பு பலகாலம் சுதனால் பிதாமகரைச் சந்திக்க முடியவில்லை. இயற்கை தனது கடமையை யாரது பலனையும் எதிர்பார்க்காது ஆற்றும். அதற்கு அற்ப மனிதர்கள் போன்று அடங்காத அகங்காரமோ, புகழோ, இகழோ, ஆசையோ கிடையாது.


*


அன்று முகநூலில் சபேசனின் பக்கத்தைச் சுதன் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. பிதாமகர் ஏன் ஏமாந்தார் என்பது சட்டென அவனுக்கு விளங்கியது. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று கூறிய ஓளவையார் கூடத் தோற்றுப் போகும் சில அறிவுரை அமுதம் அதில். அழுக்காறு அற்றுக் காவி தரித்த ஓளவையோடு ஒப்பிடுவது மடமையே. இருந்தும் இதிலே அவனது உண்மை உள்ளம் எங்கே என்று சுதன் தேடினான். பிதாமகருக்கு ஏற்பட்ட அனுபவம் அவனுக்கும் உண்டாகியது. எழுத்து என்பது மனதிலிருந்து மனிதம் காக்க வரவேண்டும் என்றார் பிதாமகர். உண்மை. அது மனித இச்சைகளுக்காக அல்ல. ஞானம் கைகூடுவது ஒரு தவத்தை மேற்கொள்ளவே அன்றித் தராசைத் துக்கிக் கொண்டு கூவுவதற்கு அல்ல. சுதன் சட்டென வெறுப்போடு கணினியை மடித்து வைத்தான்.