மனிதர்களின் சுயநலமே இவ்வருத்தத்திற்கான விளைநிலமாகியது.

இக்கதை நோர்வேயில் நடந்தாலும் அனைவரும் இலகுவாக விளங்கிக் கொள்வதற்காய் பெரும்பான்மையான உரையாடல்கள் இயல்பை மீறி இயலுமானவரைத் தமிழிலேயே தரப்படுகிறது.


உயிர்ப்பு அற்ற கிரகத்தில் மனிதன் கால் வைத்தது போன்று ஒஸ்லோ திடீரெனக் களையிழந்து, தெரு வெறித்து, உயிரடங்கி அமைதி தழுவிக் கிடந்தது. இருந்தும் அகிலனுக்குத் தவிர்க்க முடியாது கட்டாய வேலைக்குப் போக வேண்டிய தர்மசங்கடம். சில வேலைகள் மனித சமூகத்தின் உயிர்நாடியாகும். அப்படியான வேலைகளுக்கு அவசரகாலத்தில் விடுப்பு இருப்பதில்லை. விடுப்புக் கொடுத்தால் அது சமுதாயத்தைப் பாதித்துவிடும் என்பது அரசின் எண்ணம். வீட்டிலிருந்து செய்யும் அலுவலில் நோயாளிகளைக் கவனிப்பது அடங்காது. அதில் முக்கியமானவர்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள். அதற்கு இப்போது மேலும் அதிகமான தேவையாக இருந்தது. அகிலனுக்கு வழமையாக வேலைக்குப் போவது மிகவும் பிடிக்கும். வேலை இல்லாது வீட்டில் இருப்பது சில நாட்கள் சர்க்கரைப் பொங்கலாய் இனித்தாலும் நீண்ட காலத்தில் வேம்பாய் கசந்துவிடும். காலையில் நேரத்தோடு எழுந்து இருக்காவிட்டால் அந்த நாளே அரை மதி போல ஆகிவிடும் என்பது அவன் எண்ணம். அதனால் அவன் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதை மனமார விரும்பினான். இன்றும் அதே ஆர்வத்தோடு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்பொழுது மத்திய சுரங்கரத நிலையத்தில் வண்டி நின்று மூச்சுவிட்டு மீண்டும் கதவை மூடத் தயாரானது. அந்த நேரத்தில் அந்த மனிதன் ஒரு பயணப் பொதியுடன் அவசரமாகக் காண்டீபத்தின் நாணாக வந்து அவனது பெட்டியின் முன்பகுதியில் ஏறினான். முதற் பெட்டியில் சாரதியின் அறைக்குப் பின்புறமாக இருந்த இருந்த மூலையில் அகிலன் நின்றிருந்தான். கொரோனா பரவுகிறது என்று அறிந்தது தொடக்கம் அவன் அந்த இடத்தில் மட்டுமே உறுமீனிற்காய் காத்திருக்கும் கொக்காய் பயணத்தின் போது இரட்டைக் கால்களில் நிற்பான். கொரோனாவிற்கான எச்சரிக்கை அவனிடம் அதிகம். கதவில் இருக்கும் ஆழியைக்கூட அவன் மறந்தும் வெறும் கையால் தொடுவதில்லை. அதை மீறித் தொடவேண்டி வந்தால் கைதுடைக்கும் காகிதத்தைப் பாவித்தே தொடுவான். அதைத் தவிர்த்து வீட்டிலிருந்து அல்லது வேலையிலிருந்து புறப்பட்டால் அடுத்த இடத்தைச் சென்றடையும்வரை அவன் தனது கையை முகத்திற்கு அருகே வராது கவனித்துக் கொள்வான். அது எவ்வளவு வேதனையான அரிப்பாக இருந்தாலும் அவன் கை முகத்தைத் தீண்டாது. இப்படியாக இன்னும் பல தற்காப்பு முறைகளை அவன் அன்றாட வாழ்வில் பயின்றான். மூச்சை அடக்கும் யோகாசனம்கூட அதில் அடங்கும்.
இன்று அந்த மனிதனைப் பார்த்ததும் அகிலனுக்கு அங்கிருந்து நகரவேண்டும் என்கின்ற எண்ணமே முதலில் வலுவாக ஏற்பட்டது. அதற்கான ஒரே காரணம் அவன் விமான நிலையத்திலிருந்து வருகிறான் என்பதே. அதை அவனின் பயணப் பெட்டியை வைத்து அகிலன் அறிந்து கொண்டான். அவனிடம் இருந்து விலகியோட மனம் மீண்டும் மீண்டும் ஏனோ ஏங்கியது. இருந்தும் அப்படி விலகி ஓடுவது அவனைத் தேவையில்லாது சங்கடப்படுத்தும் என்று எண்ணிய அகிலன் எதுவும் செய்யாது அப்படியே சிலையாகி நின்றான். சிறிது நேரம் அந்த மனிதனும் மிகவும் சாதாரணமாகவே நின்றான். வண்டி வேகமெடுத்து பனியில் வழுக்குவது போலத் தண்டவாளத்தில் நழுவி ஓடத் தொடங்கியது. திடீரென அவன் மூன்று முறை பலமாகத் தும்மினான். அவன் தும்மிய தும்மல் துகள் அவன் கையில் பட்டதை அகிலனால் உணர முடிந்தது. அவன் உடல் கூசியது. மயிர் குற்றிட்டு நின்றது. அகிலனுக்கு என்ன செய்வது என்று சில கணங்கள் தெரியவில்லை. மயக்கம் வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. சுரங்க ரதம் குரன்லாண்டில் நிற்க அதிலிருந்து அவசரமாக இறங்கி அகிலன் வெளியே ஓடினான். தனது மேலங்கியைக் கழற்றி கையை நன்கு மீண்டும் மீண்டும் துடைத்தான். என்றாலும் அவனுக்குத் திருப்தி இல்லை. ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பது அவனுக்கு விளங்கியது. மனதுக்குள் தொடர்ந்தும் ஒருமாதிரியாக இருந்தது. மரக்கறி வாங்க வேண்டும் என்கின்ற திட்டத்திற்கு அமைய அவன் அங்கே இறங்கினான்? அங்கேயும் எள்ளுப் போட்டால் அது நிலத்தில் வீழாத சனநெரிசலாக இருந்தது. மலிவு பார்த்துத் தேவையில்லாத ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாய் இது அமைந்துவிடும் என்பதும் அவனுக்கு உடனடியாக விளங்கியது. இன்று இங்கு வந்தாகிவிட்டது. இம்முறை மரக்கறியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்லலாம். ஆனால் இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி விலை அதிகம் என்றாலும் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் நேரம் பார்த்து அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு செய்து கொண்டான். அதன் பின்பு அவசரமாகப் பொருட்களை எடுக்கத் தொடங்கினான். சன நெரிசலைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.
வீட்டிற்கு வந்தவன் வாயிற் கதவு மணியை அழுத்திவிட்டுச் சார்மினிக்காகக் காத்திருந்தான். வழமையாகக் கையில் எதுவும் இருக்காது. தானே திறந்து உள்ளே சென்றுவிடுவான். இன்று கையில் சுமையோடு கதவு திறப்பதற்கு அவனுக்கு மனது ஏகவில்லை. சார்மினிக்கு இரவு வேலை. அவள் ஒரு முதியோர் இல்லத்தில் தாதியாக வேலை செய்தாள். அதனால் பகலில் பொதுவாக வீட்டில் நிற்பாள். இன்று அவள் வீட்டில் நிற்பாள் என்பது தெரிந்ததால் கதவு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். அவள் கருத்தும் முக்கியம் என்பது அவன் எண்ணம் ஆகியது.
கதவு திறந்தது. அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவள் அவனை உற்றுப் பார்த்தாள். பின்பு சந்தேகத்தோடு,
‘என்ன பேயறைஞ்ச மாதிரி வந்திருக்கிறியள்? தேவணில எதையும் வாங்கிக் கொண்டு வந்திட்டியளே? உங்களைப் பார்க்க எனக்கு அப்பிடித்தான் இருக்குது.’ என்றாள்.
‘நீ சொல்லுகிறது ஒருவகையில சரிதான்.’
‘என்ன சொல்லுகிறியள்?’
‘தேவாணில ஒருத்தன் தும்மிப் போட்டான்.’
‘என்ன? என்ன கோதாரியச் சொல்லுகிறியள்? தயவு செய்து அப்படியே நில்லுங்க. வீட்டிற்குள்ள தவறியும் வராதேங்க. நாங்கள் எப்பிடி எண்டாலும் இருந்திட்டுப் போகலாம். ஆனா பிரசனுக்கு ஏதும் வருத்தம் வந்தால் என்னால தாங்க முடியாது. அதால தெரிஞ்சு கொண்டு நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைத் தரக்கூடாது. தயவு செய்து அதை வீட்டிற்குள்ள கொண்டு வராதேங்க.’
‘எனக்கு மாத்திரம் வீட்டிற்குள்ள வருத்தத்தைக் கொண்டு வரவேணும் எண்டு ஆசையா? திடீரென அவன் தேவாணில தும்மினான். அதுக்காக எல்லாத்தையும் நாங்களா முடிவு பண்ணக்கூடாது. பிரசன் ஸ்கூலுக்குத் தொடர்ந்தும் போகிறான்தானே? அங்க என்ன நடக்குது எண்டு எங்களுக்குத் தெரியுமே? அதே நேரம் நாங்கள் றிஸ்க் எடுக்க முடியாது எண்டும் விளங்கிது. நான் உங்களுக்காத்தானே வேலைக்குப் போனன். மரக்கறியும் வாங்கப் போனன். இப்பவும் அங்கை நிறையச் சனமா இருக்குது. ஆனா… அதைப் பற்றி நான் கவலைப்பட இல்லை. நீ இப்ப என்னை வீட்டுக்க வராதை எண்டுகிறாய்? நான் எங்க தெருவிலையா நிற்கிறது? இது எனக்கு வேணுமே? ம்… இதுக்கு விளக்கம் சொல்லு பார்ப்பம்.’
‘எனக்கு உங்களைத் தெருவில நிறுத்த வேணும் எண்டு வேண்டுதலோ ஆசையோ இல்லை. என்ரை கவலை உங்களுக்கு வந்த வருத்தம் தற்செயலா எங்களுக்கும் வரக்கூடாது எண்டுகிறதே. எனக்கு எண்டாலும் பருவாய் இல்லை. பிரசனுக்குத் தொற்றினால்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க? நாங்கள் இவ்வளவு காலமும் சேர்ந்து வாழ்ந்ததுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும். அதுகின்ரை ஒரு அடையாளமும் இல்லாமல் போயிடும். தயவு செய்து அதை விளங்கிக் கொள்ளுங்க அப்பா.’
‘எனக்கும் விளங்காமல் இல்லை. அதுக்கு இப்ப நான் என்ன செய்ய முடியும் சொல்லு பார்ப்பம்?’
‘என்னிட்டை ஒரு நல்ல ஐடியா இருக்குது.’
‘ஓ நீயும் இப்ப ஒரு பெரிய மதியூகீ ஆகீட்டாய் போல? ம்… என்ன பிளான் சொல்லு பார்ப்பம்? என்னுடைய சொந்த மதியூகீயின்ரை திறமையையும் பார்ப்பம்.’
‘அது சிம்பிள் அப்பா.’
‘என்ன எண்டு முதல்ல சொல்லு?’ ‘நீங்கள் போய் கீழ பேஸ்மண்டில இருங்க. சாப்பாடு மேல்க்கதவைத் திறந்து படியில வைக்கிறன். அதைவிட ஏதும் தேவை எண்டா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க. நான் கொண்டு வந்து கதவைத் திறந்து வைப்பன். நீங்கள் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து எடுங்க. இப்படி நாங்கள் இரண்டு கிழமைக்கு இருக்க வேணும். அதுக்கிடையில உங்களுகுத் தொற்றி இருக்குதா இல்லையா எண்டு முடிவாகீடும்.’
‘ம்… நீ சொல்லுகிறதும் சரிதான். எதுக்குத் தேவை இல்லாமல் றிஸ் எடுப்பான்? ஆனா நான்  நாளைக்கு வேலைக்குப் போக வேணும். அவங்கள் என்ன சொல்லுவாங்களோ தெரியாது. றிங்பண்ணிக் கேட்க வேணும்.’
‘நோய்க்கான அறிகுறி இல்லாதவரைக்கும் நீங்கள் என்ன காரணம் சொல்லுவியள்?’
‘அப்ப நீ ஏன் இவ்வளவு பதறுகிறாய்?’
‘அது வேலையிடம் அப்பா… அங்க பொருளாதாரம் பற்றி மட்டும் சிந்திப்பினம். இது வீடு… இங்க நாங்கள் முதலில பிள்ளையைப் பறித்தான் சிந்திக்க வேணும். அதால எங்களுக்கு வேற வழி இல்லை. எந்தவித ஆதாரம் இல்லாட்டியும் பாதுகாப்பாய் இருக்கிறது மட்டுமே நல்லது.’
‘சரி நீ பேஸ்மன்ற் திறப்பைக் கொண்டு வந்து தா. என்னோடை தேவை இல்லாமல் நிண்டு நீ கதைக்காதை.’ என்று கண்ணைச் சிமிட்டினான்.
‘நீங்க சாப்பாட்டுச் சாமான்களை வைச்சிட்டு வெளியில நில்லுங்க… நான் போய் கெதியாய்த் திறப்பை எடுத்தாறன்.’

என்று கூறிய சார்மினி வேகமாக உள்ளே சென்றாள். அகிலன் பாதாள அறைக் கதவைப் பார்த்தான். நல்ல வேளையாக தாங்கள் தற்போது தொடர் மாடி வீடொன்றில் இருப்பது இதற்கு வசதியாக அமைந்ததாக அவனுக்குத் தோன்றியது. இந்த வீட்டின் பாதாளத்தில் பெரியதொரு அறையும், குழியல் அறையும் இருந்தன. பெரிய அறையில் சோபாவும் தொலைக்காட்சியும் உண்டு. அது நீல நிறச் சோபா ஒன்று. வேண்டும் என்றால் அதை விரித்துப் படுக்கை போல மாற்றிக் கொள்ளலாம். இதில் இருக்கப் போகும் பெரிய அசௌகரியம் என்ன வென்றால் பிரசனையும் சார்மினியையும் பிரிந்து தனிமையாகப் பாதாள அறையில் இருக்க வேண்டும். அதை எண்ண எண்ண அகிலனுக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தும் இதைவிட வேறு வழி இருப்பதாக அவனுக்கு இப்போது தோன்றவில்லை. அகிலனின் நண்பன் ஒருவன் இந்த வருத்தம் இருப்பதான அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து மனைவியால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டான். அவனுக்கு இப்படிப் பாதாள அறை கொண்ட வீட்டு வசதி எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவனிடம் கார் ஒன்று இருந்தது. வேறு வழி இன்றி அதை அவன் தனது தங்குமிடமாக மாற்றி வாழ்வதாய் அகிலனோடு தொலைப் பேசியில் கதைக்கும் பொழுது கூறி இருந்தான். அந்த வகையில் தான் அதிஸ்ரம் செய்ததாய் அவனுக்குத் தோன்றியது.

பாதாள அறைக்குள் செல்வதற்குத் தனியாகக் கதவு இருந்ததால் தேவையில்லாது பிரதான வீட்டிற்குள் செல்லத் தேவையில்லை. இந்த நோய் காற்றில் பரவுவது இல்லை என்கிறார்கள். சிலர் காற்றில் இருக்கும் திரவத் துளிகளில் வைரஸ் சொகுசாக வாழலாம் என்கிறார்கள். எது எப்படி என்பது தெளிவாக யாருக்கும் தெரியாது. சீனாவில் இப்படி நடந்ததாம் அப்படி நடந்ததாம் என்கிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்றினால் அனைவருக்கும் தொற்றுவதாய் கூறுகிறார்கள். கூடவாழ்ந்த பூனைகள்கூட இறந்ததாகத் தகவல்கள் வருகின்றன. பெண்களைவிட ஆண்களுக்கே அதிக ஆபத்து என்கிறார்கள். நோர்வேயில் வெளிநாட்டிற்குப் போய் வந்தவர்களுக்கே இந்த வருத்தம் முதலில் வந்ததாக நம்பப்படுகிறது. உள்ளூரில் தொற்றத் தொடங்கி இருக்கலாம். அது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. இருந்தாலும் ஸ்திரமின்மை தொடர்கிறது. அகிலனின் சிந்தனையைக் கலைத்த வண்ணம் சர்மினி மீண்டும் திரும்பி வந்தாள்.

‘இந்தாங்க திறப்பு.’ அவள் அதை தூரத்தே நின்று அகிலனை நோக்கி வீசி எறிந்தாள். அகிலனுக்குச் சிரிப்பு வந்தது. கவலையாகவும் இருந்தது. அவன் கவலையோடு சிரித்தவண்ணம் குனிந்து திறப்பை எடுத்தான். சர்மினி மீண்டும் உள்ளே சென்று சோப்புக் கரைத்து வாளியில் எடுத்து வந்தாள். பின்பு அவன் கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொன்றாகத் துப்பரவு செய்யத் தொடங்கினாள். சுடு நீருக்கும் சோப்பிற்கும் இந்த வைரஸ் சொற் கேட்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.  நோர்வேயில் இது ஆரம்ப நிலையில் இப்போது உள்ளது. இருந்தும் இது ஒரு ஆரூடமே. ஆனால் சீனாவில் ஒரு வாட்டு வாட்டிய பின்பு இப்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்து இருக்கிறது. இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. சீனாவில் நடந்ததைக் கேள்விப்பட்டது மட்டுமே. அங்கே நடந்ததாகக் கேள்விப்பட்டதையும் சிலர் நம்பினர். சிலர் நம்ப மறுத்தனர். சில நாடுகள் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். சில நாடுகள் உள்ளே விட்டுப் பிறகு அடிப்பதற்காய் காத்திருக்கிறார்கள்.

அகிலனோடு வேலை செய்பவளுக்கு மாறன் என்று பெயர். மாறன் என்று தமிழ்ப் பெயராக அர்த்தம் கண்டுவிட முடியாது. அவள் ஒரு அழகான பெண். அவளுக்கு இந்தச் செய்திகளில் நம்பிக்கை இல்லை. இவை அனைத்தும் பூதக்கண்ணாடியால் நோக்கிச் சொல்லப்படுவதாய் கோபமாகக் கூறுவாள். அகிலனுக்கு அவளைப் பாக்க வியப்பாக இருக்கும். அதே நேரம் இப்படி நம்பாதவர்களால் இந்த வருத்தம் மேலும் பரவ வாய்ப்பு இருக்கிறது என்கின்ற உண்மையும் கசக்கும்.

பாதாள அறைக்குள் வந்த அகிலனுக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. இப்போது சார்மினியைக் கூப்பிட முடியாது. அவள் பம்பரமாய் சுழலும் நேரம் இது. அந்த அறையிலிருந்த ஒரு குவளையைக் கையில் எடுத்தான். குளியல் அறைக்குச் சென்று நீரைத் திறந்துவிட்டு அது குளிரான நீராக வரும் வரைக்கும் பொறுமையாகக் காத்திருந்தான். நீர் நன்றாக ஓடத் தொடங்கியதும் குளிரான நீர் வந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு மீண்டும் கோலுக்குள் வந்தான். அவனுக்குத் தாகமாக இருந்தது. அதைப் பருகத் தொடங்கினான். எதுவும் தொற்றி இருக்கக்கூடாது என்று மனம் கிடந்து அடித்தது. இந்த நோய் பெண்களைவிட ஆண்களை அதிகமாகப் பாதிக்கிறது என்று அவன் கேள்விப்பட்டு இருந்தான். அதுவும் நாற்பது வயதிற்கு மேல் என்றால் மேலும் பயப்பட வேண்டும் என்று அவன் வாசித்த ஞாபகம். அதன் உண்மை பொய் விளங்காவிட்டாலும் அவனுக்குப் பயமாக இருந்தது. ஒஸ்லோவின் மேற்குப் புகுதியைச் சார்ந்த பல சுதேசிகளுக்கு இந்த வருத்தம் முதலில் வந்திருக்கிறது. அது இத்தாலியில் அல்லது ஆஸ்திரியாவில் குளிர்கால விடுமுறையைக் கழிக்கச் சென்றதால் தொற்றியது என்கிறார்கள். நாட்டிற்குள் வந்துவிட்டால் இதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதைப் பலர் அறிவார்கள். இருந்தும் இன்று போல விமான நிலையத்திலிருந்து எந்த ஒழுங்குமுறையும் இன்றிப் பயணிகள் நாட்டிற்குள் வருகிறார்கள். அவர்களில் எவர் நோயைக் காவி வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. தும்மியவனுக்கு நோய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அறிகுறி தெரிவதற்கு முன்பு யாருக்கும் இப்போது பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அதனால் உடம்பிற்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. ஏதாவது அறிகுறிகள் தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு அவர்களுடன் கதைத்துப் பரிசோதிக்கச் செல்லலாம். நோர்வே அரசாங்கம் முதலில் இங்கு எதுவும் இல்லை என்பது போலக் கண்களை மூடிக் கொண்டு இருந்தது. இப்பொழுது அப்படி இருக்க முடியாது என்பது நன்கு உறைக்கத் தொடங்கி இருக்கிறது. அகிலனுக்கு நோர்வே மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதாது என்றே எண்ணத் தோன்றியது.

நாளை என்ன செய்வது என்கின்ற குழப்பமாக இருந்தது. இதற்கு யோசித்துப் பிரயோசனம் இல்லை. அகிலனின் முக்கிய வேலை மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து இரத்தம் பரிசோதனைக்காக எடுப்பது. அதைப் பரிசோதிக்கும் ஆய்வுகூடப் பகுதியில் வேலை செய்வது. இது மருத்துவமனையில் உள்ள மிகவும் பிரதானமான பகுதிகளில் ஒன்று. அங்கே யாருக்கும் தொற்று இருந்தால் அது பலருக்கும் பரவ வாய்ப்பு உண்டு. வேலைக்குப் பொறுப்பில்லாது போய் அங்கே நோயைப் பரப்புவது மிகவும் தவறான விடயம். ஆகவே திறன்பேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தைக் கேட்டு பின்பு அவர்கள் சொல்வது போல நடந்தால் எந்தத் தவறும் செய்ததாக அவர்கள் பின்பு குற்றம் சுமத்தமாட்டார்கள் என்பது அகிலனின் எண்ணம். அவனுக்குத் திடீரென அவன் கேள்விப்பட்ட அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்தது. மருத்துவர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து விடுமுறை கழித்து மீண்டும் நோர்வேக்கு வந்த பின்பு தன்னைப் பரிசோதிக்கக் கேட்டிருக்கிறார். ஆனால் அது அவரது மேல் அதிகாரிகளால் மறுக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு வேலையைத் தொடருமாறு பணிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் சிலருக்கு வருத்தம் பரவி உள்ளது. அப்போது அந்த மருத்துவர் தான் பரிசோதிக்க மேலதிகாரியைக் கேட்டேன் என்பதிலிருந்து அவர் மீது வீண் குற்றம் சுமத்த முடியாது தப்பித்துக் கொண்டார். அப்படியே தானும் புத்தியாக அவர்களைக் கேட்டு நடப்பது நல்லது என அகிலன் முடிவு செய்து கொண்டான். அகிலன் திறன்பேசியைப் பார்த்தான். விரைவு மின்னூட்டலை எடுத்து வருமாறு முதலில் சார்மினிக்குக் குறுஞ் செய்தி அனுப்பிவிட்டு தனது தலைமை அதிகாரிக்கு அதனால் தொடர்பை உண்டுபண்ணினான்.

‘வணக்கம்! நான் அகிலன்.’
‘சொல்லுங்கள்… என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?’
‘எனக்கு ஒரு ஆலோசனை வேண்டும்.’
‘எதைப் பற்றி?’
‘நான் இன்று சுரங்க இரதத்தில் வீட்டிற்குப் போகும் போது விமான நிலையத்திலிருந்து வந்த பயணி ஒருவரும் எங்களுடன் அதில் பயணித்தார். எதிர்பாராத விதமாக அவர் சுரங்கரத்திற்குள் பலமுறை தும்மிவிட்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. அதனால் உங்களின் அறிவுரை எனக்கு வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நான் செய்வேன்.’
‘ஓ… மிகவும் சிக்கலான விடயம். எது எப்படி என்றாலும் சிறிது ஐயம் ஏற்பட்டாலும் நாம் அதைப் பார்த்தும் பாராமலும் விடமுடியாது. இங்கு வருத்தம் பரவத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் நீங்கள் வீட்டிற்குள் முடங்கி இருப்பதே நல்லது என்று நான் எண்ணுகிறேன். ஏதாவது அறிகுறி தென்பட்டால் அல்லது காய்ச்சல் வந்தால் கொரோனா எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். இரண்டு கிழமைக்கு நீங்கள் வீட்டிற்குள் இருப்பதே நல்லது. வருத்தம் ஏதும் இல்லை என்றால் அதன் பின்பு நீங்கள் வேலைக்கு வரலாம். எனக்கு இப்படியே அறிவிப்பு வந்து இருக்கிறது. நான் அதில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.’
‘நீங்கள் சொல்வது மிகவும் சரியே. எங்கள் வேலையிடம் அப்படியானது என்பது எனக்கு நன்கு விளங்கும். அதில் எந்தத் தவறும் ஏற்பட நாம் ஏதுவாக இருக்கக்கூடாது.’
‘அதுவே என் கவலையும் அகிலன். அதையே நானும் விரும்புகிறேன். உங்களுக்கு விரைவில் குணமாக எனது வாழ்த்துக்கள். நிச்சயம் இது கொரோனாவாக இருக்காது என்று நம்புகிறேன்.’
‘அப்படியே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையும். உங்கள் அறிவுரைக்கு நன்றி. விரைவாக மீண்டும் சந்திப்போம்.’

அவர் அத்துடன் தொலைப்பேசியைத் துண்டித்துக் கொண்டார். இப்போது பலர் தன்னைப் போல வேலைக்குப் போகமுடியாமல் இருப்பதால் அங்கே தற்போது வேலைக்கு வருபவர்களுக்கு அதிகமான வேலைப் பழுவாய் இருக்கும் என்பது அகிலனுக்கு விளங்கியது. தலைமை அதிகாரிக்கும் அதிக வேலைப் பழுவாய் இருக்கும். என்றாலும் இதை எல்லோரும் சிரம தானம் போல எண்ணி உதவுவார்கள் என்பது அகிலனுக்கு நன்கு தெரியும். நோர்வே மக்களின் உயரிய பண்புகளில் சிரம தானமும் ஒன்றாகும். இந்தப் பண்பு அகிலனை மலைக்க வைத்திருக்கிறது. அகிலனை மட்டும் அல்ல நோர்வேக்கு வரும் அனைவரையும் அது திகைக்க வைப்பது உண்டு. பொதுவாக நோர்வே மக்கள் மிகவும் கனிவானவர்கள். அதற்குப் புறநடையானவர்களும் உண்டு. அதேபோன்ற புறநடையான அரசியற் கட்சிகளும் உண்டு. அவர்களது கைகள்கூட இக்காலத்தில் வலுத்துக் கொண்டு வருகிறது. அது இங்கு மட்டும் நடப்பதல்ல. உலகம் முழுவதும் நடக்கும் ஒரு புதிய மார்க்கமாக இருக்கிறது. அந்தப் புறநடைகளை விட்டுப் பொதுவாகப் பார்த்தால் நோர்வே மக்கள் மிகவும் கனிவானவர்கள். பொதுவாகச் சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் இங்கு இந்த வருத்தத்தைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரும் நடைமுறைகளையும் அவர்கள் நிச்சயம் கடைப்பிடிப்பார்கள். அது இந்த வருத்தத்தைக் கட்டுப்படுத்த பெரும் உதவியாக இருக்கும். அதற்குப் புறநடையாகவும் பல காரியங்கள் நடந்து ஏறலாம். அதுவும் எங்கும் நடக்கும் மனித யதார்த்தமாகும். எந்த நாட்டிலும் பெரும்பான்மையின் செயற்பாடே அந்த நாட்டின் செயற்பாடாகப் பார்க்கப்படும். அப்படிப் பார்த்தால் நோர்வே மிகவும் ஒரு உன்னதமான நிலையைப் பெறும் என்பதில் அகிலனுக்கு எந்த ஐயமும் இல்லை. கொரோனா என்கின்ற வருத்தம் தாக்குகின்ற போது நோர்வே என்னும் நாட்டில் இருப்பது மிகவும் பாதுகாப்பைத் தந்தாலும் இந்த வருத்தம் இத்தினை பாதுகாப்பையும் தாண்டி மனிதர்களை வதைத்துவிடுமோ என்கின்ற ஐயம் அவன் மனதை அலைக்கழித்தது. தனது வீட்டில் இன்று தொடங்கிய இந்தப் பிரச்சனை எப்போது முடியும் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை.

அகிலனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. சார்மினி வேலைக்குச் சென்றால் பிரசனை யார் பார்த்துக் கொள்வது என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவனைத் தனித்து இருக்க விடமுடியாது. அதே நேரம் அவன் தன்னுடன் இருக்கவும் முடியாது. அப்படி என்றால் என்ன செய்வது என்கின்ற கேள்வி புழுபோல அவன் மண்டையைக் குடைந்தது. எதற்கும் சார்மினியோடு கதைக்க வேண்டும். யாரையாவது உதவிக்குக் கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை. கொரோனாவை முன்னிட்டு யாரும் இலகுவில் உதவி செய்யமாட்டார்கள். அதுவும் குழந்தைப் பிள்ளையைத் தங்களோடு வைத்திருப்பது என்றால் சம்மதிக்கமாட்டார்கள். அப்படி என்றால் சார்மினி இல்லாத நேரத்தில் எப்படிச் சமாளிப்பது? அவனைப் பார்த்துக்கொள்ள ஒரு நபர் தொடர்ந்து வேண்டுமே? அகிலனுக்கு எந்தப் பதிலும் கிட்டுவதாகத் தெரியவில்லை. இதைப்பற்றி சார்மினியோடு கதைக்க வேண்டும். அவளுடனும் நேரடியாகக் கதைக்க முடியாது. ஆகவே அவன் திறன்பேசியை எடுத்து அவளது எண்களை அழுத்தினான்.
‘என்னப்பா அதுக்குள்ள என்னுடைய ஞாபகம் வந்திட்டுதே? அவசரமாய் அடிக்கிறியள்? எனக்கு இங்க நிறைய அலுவல்கள் இருக்குது. முதல்ல பிரசனுக்குச் சாப்பாடு கொடுக்க வேணும். அதைவிடத் துப்பரவு… புதிய விதிமுறை… இயலும் எண்டா ஸ்பிரீற் வாங்க முடியுமா எண்டு பார்க்க வேணும். அப்படி  நிறைய வேலை இருக்குது. சிலவேளை வெளிய போக வேணும்.’
‘எனக்கும் பிரச்சினைப் பற்றின யோசனையா இருக்குது. அதுதான் உன்னோடை கதைக்க வேணும் எண்டு எடுத்தன். அவனை என்ன செய்கிறது? நீ வேலைக்குப் போனா அவனை யார் பார்க்கிறது? இதைப்பற்றி நீ யோசிச்சியா?’
‘நீங்கள் யோசிக்கிற அளவுக்கு நான் யோசிக்காமல் இருப்பனா? தகப்பன் சந்ததியை தாறதோடை சரி. தாய்தான் அதைப் பேணிப் பாதுகாக்கிறவள் எண்டு தெரியாதே? அப்படி எண்டா நானும் அவனை எப்பிடிப் பாதுகாக்கிறது எண்டு யோசிக்காமலா இருப்பன்?’
‘சரி… சரி… நீ நிச்சயம் யோசிப்பாய். அப்படி என்ன யோசிச்சு என்ன முடிவு எடுத்தாய் எண்டு எனக்குச் சொல்லு பார்ப்பம்? அதுக்குப்பிறகு எனக்குத் தேவையானது எல்லாத்தையும் படியில வை. நான் வந்து எடுத்துக் கொண்டு வாறன். கதவுக்குத் திறப்பு போட்டுப் பூட்டி விடு. இல்லாட்டிப் பிரசன் இங்க ஓடி வந்திடுவான். சரி சொல்லு… என்ன எண்டு இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கிறது? குறிப்பா பிரசன்ரை பிரச்சினையை எப்பிடிச் சமாளிக்கிறது.’
‘அது சிம்பிள் அப்பா. நான் வேலைக்குப் போன் பண்ணி நடந்ததைச் சொன்னனான். அவைக்கும் நிலைமை விளங்கி இருக்குது. அவையும் வீண் றிஸ்க் எடுக்க விரும்ப இல்லையாம். அதால பதின்நாலு நாளுக்கு காரன்தேனில இருக்கட்டாம். நானும் கரன்தேனில இருந்தால் பிரசனைப் பார்க்கிறது ஒரு பிரச்சினை இல்லை. உங்களையும் வீட்டையும் பார்த்துக் கொள்கிறதும் ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏலும் எண்டா உங்கடை மெபீல்ல இருந்து ஸ்பிரீற், மாஸ்க் ஓடர் பண்ணி எடுக்க முடியுமோ எண்டு பாருங்க. இரண்டும் கொஞ்சம் கொஞ்சம் மட்டுமே எங்களிட்டை இருக்குது. சாப்பாட்டுச் சாமான்களும் நெத்தில ஓடர் பண்ண வேணும். அதை நான் செய்கிறன். இதை உங்களால ஓடர் பண்ணி எடுக்க முடியுமா எண்டு பாருங்க. நாங்கள் கடைக்குப் போக முடியாது. ஆனால் அவசரம் என்டா மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு போயிட்டு வரவேண்டி இருக்கும். வேற வழி இல்லை. எல்லாரும் இப்ப விசியா இருப்பினம். அதோடை அவைக்கும் பயமாகவும் இருக்கும்.’

‘ஓ நீ கெட்டிக்காரி. அப்ப நான் பெரிய பிரச்சினை எண்டு நினைச்சது இப்ப பெரிய பிரச்சினை இல்லை. ஓ மற்றதை நாங்கள் சமாளிக்கலாம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்குது. நான் அதுக்கு றை பண்ணுகிறன். ஸ்பிரீற்றும், மாஸ்க்கும் எடுக்கிறது சுலபமாக இருக்காது. முயற்சி செய்வம். இல்லாட்டி நீ போய் அப்போத்தெக்கில (மருந்துக்கடை) பார்த்திட்டு வா. அதுவும் இல்லை எண்டால் இருக்கிறதை வைச்சுச் சமாளிக்க வேணும்.’
‘ம் நீங்கள் சொல்லுகிறதும் சரி. நான் வெளிய போகிறது எண்டா இவனையும் இழுத்துக் கொண்டு போக வேணும். அதைவிட வேற வழி இல்லை. யாரையும் கேட்டால் உதவி செய்வினமோ தெரியாது. அதேநேரம் எதுக்கு இப்ப தேவையில்லாமல் அவை இவையக் கடமைப்படுத்திக் கொண்டு… இப்போதைக்கு இதை எங்களால சமாளிக்க முடியும். அதுக்கான நம்பிக்கையும் தைரியமும் என்னிட்ட இருக்குது.’
‘அப்பிடிதான் நானும் நினைக்கிறன் சார்மினி. ஆனா என்ன நான் மட்டும் இரண்டுபேரையும் பார்க்காமல் தனிய இருக்க வேணும். அதை நினைக்க நினைக்க வெறுப்பா இருக்குது. அதோட இது எப்பிடி முடியுமோ எண்டும் பயமா இருக்குது.’
‘முதல்ல நீங்கள் எதுக்கும் பயப்படாதையுங்க. நீங்கள் தனிய இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. உங்க இருந்தாலும் நீங்கள் எங்களோடை இருக்கிறமாதிரி உணரலாம். அதுக்கான வழியும் உங்களுக்குத் தெரியும்தானே?’
‘என்ன சொல்லுகிறா?’

‘பிறகு என்ன…? ஸ்கைப் என்னத்திற்கு இருக்குது? அது இருக்க உங்களுக்கு ஏன் பயம்? அதைவிட நாங்கள் மேலதானே இருக்கிறம். உங்களுக்கு ஏதும் கடுமையா இருந்தாச் சொல்லுங்க. மிச்சத்தை நான் பார்க்கிறன். நான் கதைச்சா நிச்சயம் அது எடுபடும். அதால நீங்கள் தேவை இல்லாமல் பயப்பிட வேண்டாம்.’
‘அது உண்மை. சாதாரண ஆட்கள் சொல்லுகிறதைவிட நீ சொன்னா நிச்சயம் கேட்பாங்கள். எனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் பை ஒண்டில போட்டுக் கதவுக்கு வெளிய வை. குறிப்பா மொபீல் சார்ச்சர் எனக்கு வேணும். அது இல்லாட்டி ஒரு தொடர்பும் இருக்காது. அதோடை அந்த எக்ஸ்றா கேத்தில், ரீ பக்கேற், ரின்பால், எண்டு தேவையானதை எல்லாம் எடுத்து வை. படுக்கைக்குத் தேவையான பொருட்களையும் மறந்திடாதை.’
‘இதெல்லாம் எனக்குத் தெரியாதே? நீங்கள் இதையெல்லாம் சொல்ல வேணுமே? எல்லாம் சரியாய் வரும். நான் வைச்ச பிறகு போன் பண்ணுகிறன். அப்ப போய் பையை எடுங்க. சாப்பாடும் அப்பிடியே வரும். வேறை என்ன வேணும் எண்டாலும் போன் பண்ணுங்க. காய்ச்சல் காயத் தொடங்கினா அதையும் உடனடியா எனக்குப் போன் பண்ணிச் சொல்லுங்க.’
‘கட்டாயம் சொல்லுறன். நீ தேவை இல்லாமல் பயப்பிடாதை. நீங்கள் இரண்டுபேரும் தனியச் சமாளிப்பீங்கள் தானே? பயம் ஒண்டும் இல்லையே?’
‘நீங்கள் கீழ இருக்கிறியள். நாங்கள் மேல இருக்கப் போகிறம். இதில பயப்பிட என்ன இருக்குது? நீங்கள் ஒண்டும் இதைப்பற்றிக் கவலைப்படாதையுங்க.’
‘இல்லை… இந்த வருத்தம் தொற்றத் தொற்ற இங்கையும் என்ன மாற்றங்கள் வருமெண்டு யாருக்குத் தெரியும்? அதை நினைக்கவும் பயமாக இருக்குது.’
‘உது தேவை இல்லாத கவலை அப்பா. இங்க அப்படி எதுவும் நடக்கிறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை. சாப்பாட்டுச் சாமன்களைக் கொண்டு வந்து தந்தாங்கள் எண்டா நாங்கள் சமாளிப்பம். என்ன… உங்களுக்கும் தொற்றி இருக்கக் கூடாது. அப்பிடித் தொற்றினாலும் கடுமை ஆக்கக் கூடாது. அதில ஏதும் சிக்கல் வரயில்லை எண்டா நாங்கள் எதுக்கும் பயப்பிடத் தேவை இல்லை. இங்க வேற நாடுகளில நடக்கிற மாதிரி வீட்டுக்கை எல்லாம் யாரும் லேசில வரமாட்டாங்கள். நீங்கள் ஆறுதலா றிலக்ஸ் எடுங்க அப்பா.’
‘சரி நான் உன்னை மினக்கெடுத்த இல்லை. நீ போய் உன்ரை அலுவலைப் பார். நானும் இதுக்க இருக்கக்கூடிய மாதிரி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்துகிறன். இங்க ஒரே தூசா இருக்குது. வைக்கும் மெசின் பிடிக்க வேணும். அது கீழ இருக்குதா?’
‘ஓ… அங்கதான் இருக்குது. அதை எடுத்து ஒருக்காக் கீழ்க்கோலை நல்லாத் துப்பரவு செய்யுங்க. பிறகு அங்கேயே வைச்சிடுங்க. இனி என்ன பொருள் உங்களிட்ட இருந்து வாறது எண்டாலும் ஸ்பிரீற் போட்டுத் துடைச்ச பிறகு மட்டுமே இங்க வரவேணும்.’
‘நான் இங்க நெத்தில செக் பண்ணினனான். ஸ்பிரீற் நெத்தில கிடையாது. சில அப்போத்தெக்கில மட்டும் இருக்குது. நீ ஒருக்கா நேர போய் அதை வாங்கி வா. சோப்புத் தாராளமாய் இருக்குது தானே?’
‘இருக்குது. சரி நான் அப்ப அதை முதல்ல பார்க்கிறன். பிறகு ஏதும் எண்டாத் துப்பரவா வெளியில போகமுடியாமல் போயிடும். நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்க… அப்ப நான் கெதியாப் போயிட்டு வாறன். கடைக்கு ஐஞ்சு நிமிசத்தில காரில போயிட்டு வந்திடலாம். பக்கத்தில இல்லாட்டியும் வேறை இடத்திலை எண்டாலும் போய் வாங்கிக் கொண்டு வாறன்.’
‘சரி கெதியாய் போயிட்டு வா. வந்த பிறகு மிச்சத்தைப் பார்க்கலாம். காருக்கையும் ஒரு ஸ்பிரீற் போத்தல் வை. நான் காரைப் பாவிச்சா அதைத் துடைக்க வேணும்.’
‘சரி நான் வைக்கிறன்.’
‘சரி. வாய்.’
‘வாய்.’

அகிலன் திறன்பேசியை வைத்த பின்பு சவர்க்காரத்தை வாளியில் கரைத்துத் தூசு படிந்திருக்கும் மேற்பரப்புகளை முதலில் நன்றாகத் துடைத்தான். பின்பு நிலத்தையும் வைக்கும் கிளினரால் துப்பரவு செய்துவிட்டுச் சவர்க்காரத்தில் நனைத்த துணியால் துடைத்து எடுத்தான். அதைச் செய்து முடித்த பொழுது அவனுக்குப் பசித்தது. சார்மினி அவசரமாகப் புறப்பட்டு மருந்துக் கடைக்குச் சென்றுவிட்டாள். இனி அவள் மீண்டும் திரும்பி வந்தாலே சாப்பாடு கிடைக்கும். ஆனால் மற்றைய பொருட்களை உள்ளே வைத்துவிட்டேன் என்று மருந்துக் கடைக்குச் செல்வதற்கு முன்பு திறன்பேசியில் தொடர்பு கொண்டு கூறிவிட்டச் சென்றிருந்தாள். துப்பரவு செய்து முடிந்துவிட்டதால் அவள் என்ன என்ன பொருட்களை வைத்திருக்கிறாள் என்று பார்த்து அதை எடுத்து வரலாம் என்று அவன் எண்ணினான். அதில் அவன் கேட்டுக் கொண்டது போலக் கேற்றிலும், தேநீருக்குத் தேவையான பொருட்களும் இருந்தன. அதனால் தற்போது சுவையான தேநீர் தயாரித்துப் பருகலாம் என்று எண்ணினான்.

சார்மினி அவனது மனதை நள்ளிரவுச் சூரியன் போல எப்போதும் அறிந்தவள் என்றே சொல்ல வேண்டும். எதிர்பார்த்தபடியே தேநீருக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. சிற்றுண்டிகளும் அதற்குத் துணையாக இருந்தன. அத்தோடு படுக்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் அகிலனுக்குச் சந்தோசமாய் இருந்தது. இப்போது இருக்கும் பசிக்குத் தேநீர் குடித்ததால் நன்றாய் இருக்கும் என்கின்ற நினைப்பை அவன் செயலாக்கினான். தேநீரைக் குடித்துவிட்டு மற்றைய வேலைகளைச் செய்யலாம் என்பது அவன் எண்ணம். அப்போது சார்மினி திரும்பிவரும் நேரத்திற்கு அது கணக்காக இருக்கும் என்பது அவன் எண்ணம்.

கோலுக்குள் பொருட்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டுத் தேநீர் தயாரிக்கும் வேலையில் அகிலன் ஈடுபட்டான். தேநீரைத் தயாரித்து ஒரு இழுவை இழுத்த பொழுது சொர்க்கம் கோலுக்குள் வந்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆறுதலாக அதை இரசித்துப் பருகலாம் என்று சோபாவில் அமரும் போது மீண்டும் திறன்பேசி அவனை அன்போடு அழைத்தது. யாராக இருக்கும் என்கின்ற கேள்வியே அவன் மனதில் முதலில் எழுந்தது. யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் அது முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்பது விளங்கியவனாய் அவசரமாகச் சென்று அதை எடுத்தான். அப்படி எடுக்கும்போது அது யாரிடம் இருந்து வருகிறது என்பதைப் பார்த்தான். அது அவன் வேலை செய்யுமிடத்தின் தலைமை அதிகாரியிடம் இருந்து வந்தது. என்னவாக இருக்கும்? சிறிது நேரத்திற்கு முன்புதானே கதைத்தது…? என்கின்ற யோசனையுடன் அவன் அதைப் பாய்ந்து எடுத்தான்.
‘கலோ… நான் கெலேனா.’
‘சொல்லுங்க என்ன விசயம்?’
‘நீங்கள் உல்லவோலிற்குப் போய்க் கொரோனா உங்களுக்கு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அழைக்க வேண்டிய எண்ணைத் தருகிறேன். மறந்துவிடாமல் பரிசோதனை செய்யுங்கள். முடிவு வந்து உடன் அதை அறிவியுங்கள். நான் தரும் எண்ணிற்குத் தொடர்பு கொண்டால் அவர்கள் மேற்கொண்டு விபரம் கூறுவார்கள்.’
‘ஓ… அப்படியா? நீங்கள் எண்ணைச் சொல்லுங்கள். நான் நிச்சயம் தொடர்பு கொண்டு அந்தப் பரிசோதனையை மிக விரைவாகச் செய்கிறேன். அது எங்களுக்கும் மன அமைதியைத் தரும்.’
‘உண்மை அகிலன். எல்லோரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது. அதனால் இந்தப் பரிசோதனை மிகவும் முக்கியமானது.’
‘எனக்கு அது நன்கு விளங்குகிறது. எனது குடும்பமும் இதற்கான விடையை அறியக் காத்திருக்கிறது.’
‘சரி அகிலன் தொலைப்பேசி எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.’

அவள் தொலைப்பேசி எண்ணைக் கூறினாள். அகிலன் அவதானமாக எண்ணை எழுதிக் கொண்டான். அதன் பின்பு கெலேனா தொலைப்பேசியைத் துண்டித்துக் கொண்டார். அகிலன் அவர் தந்த எண்ணைப் பார்த்தான். அது ஆறு இலக்கம் கொண்ட பிரத்தியேக எண்ணாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொறுமை அவனிடம் இருக்கவில்லை. அவன் அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டான். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டும் என்று பதில் வந்தது. மனிதர்களுக்கு இயந்திரம் பதில் சொல்லும் காலம் இது. அகிலனுக்கு அது புதுமை இல்லை. அவன் மனிதக் குரலுக்காய் காத்திருந்தான்.

நோர்வேயில் இந்த வருத்தத்தின் தொடக்கக் காலம் இது. பலரும் சந்தேகத்தில் அந்த எண்ணுடன் தொடர்பு கொள்வார்கள். தொடர்பு கொள்பவர்களில் பலர் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள அதிக கேள்வி கேட்பார்கள். அதனால் அதிக நேரம் கதைப்பார்கள். பொறுமையைத் தவிர அகிலனுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவன் அந்தக் காத்திருப்பிற்கான இசையைக் கேட்ட வண்ணம் காத்திருந்தான். அந்தக் காத்திருப்பு மிகவும் அலுப்பைத் தந்தது. இருந்தாலும் இணைப்பைத் துண்டித்துக் கொள்ள முடியாது என்பது அவனுக்கு நன்கு விளங்கியது.

இதற்கு இடையில் சர்மினி வந்துவிட்டதற்கான சத்தம் மேலே கேட்டது. இருந்தும் அவளுடன் தொடர்பு கொள்ள முடியாத அவஸ்தை அவனுக்கு. அவன் தொடர்ந்தும் தொடர்பில் காத்திருந்தான். இறுதியாக ஒருவாறு அவர்கள் அழைப்பிற்கு உயிர் கொடுத்தார்கள்.
‘இது தொற்று நோய்த் தடுப்பு மையம். நான் நீனா கன்சன் பேசுகிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?’ என்று ஒரு பெண்குரல் அவனைக் களத்திற்கு இழுத்து வந்தது.
‘நான் அகிலன் பேசுகிறேன். எனது வேலையிடம் றிக்ஸ்கொஸ்பிற்றல். அங்கே இரத்தப் பரிசோதனை எடுக்கும் இடத்திலும் அதைப் பரிசோதிக்கும் இடத்திலும் வேலை செய்கிறேன். இன்று சுரங்க ரதத்தில் வரும்போது அதில் விமான நிலையத்திலிருந்து வந்த பயணி ஒருவர் மிகவும் பலமாகத் தும்மிவிட்டார். நானும் அவ்விடத்தில் சுவாசித்துவிட்டேன். அதனால் அவருக்குக் கொரோனா இருந்தால் அது தொற்றி இருக்குமோ என்று பயப்படுகிறேன். எனது தலைமை அதிகாரி கொரோனாவிற்கான பரிசோதனை செய்து எனக்குக் கொரோனா தொற்றவில்லை என்று உறுதி செய்த பின்பே வேலைக்கு வருமாறு கூறுகிறார். அதனால் எனக்கு விரைவாக அந்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.’
‘ஓ… உங்களுக்குத் தொண்டை நோ, இருமல், காய்ச்சல் இப்படி ஏதாவது தொடங்கி இருக்கிறதா? அனேகமாக அவை இருப்பதற்கு இப்போது வாய்ப்புக்கள் இருக்காது என்று நினைக்கிறேன். அதனால் உங்களுக்குப் புதன்கிழமை பன்னிரண்டு மணிக்கு நேரம் ஒதுக்குகிறேன். அதுவரையும் நீங்கள் எங்கும் வெளியே செல்ல வேண்டாம். தனித்து வீட்டில் இருக்க வேண்டும். அத்தோடு இங்கே பரிசோதனைக்கு வரும்போது பொதுப் போக்குவரத்தைப் பாவிக்கக்கூடாது. உங்களின் சொந்த வாகனத்தைப் பாவியுங்கள். அல்லது யாராவது நண்பர்களிடம் இருந்து உதவியைப் பெறுங்கள்.’
‘பருவாய் இல்லை. என்னிடம் சொந்த வாகனம் இருக்கிறது. அதில் நான் வரலாம்.’
‘மிகவும் நன்று. அதற்கு இடையில் உங்களுக்கு ஏதாவது கடுமையான வருத்தமாக இருந்தால் நீங்கள் அம்புலன்சிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு எச்சரிக்கைக்கு இதைப் பற்றிச் சொல்லி வைக்கிறேன்.’
‘பரிசோதனைக்கு நான் ஏதாவது முன்னேற்பாடு செய்ய வேண்டுமா?’
‘இல்லை. இதற்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் தனித்து இருங்கள். மற்றவர்களுக்கு அருகே செல்ல வேண்டாம். மற்றும்படி நீங்கள் சாதாரணமாக உங்கள் நாளைக் கழியுங்கள். ஏதாவது அவசரம்  என்றால் ஏற்கனவே கூறியபடி தொடர்பு கொள்ளுங்கள்.’
‘பரிசோதனைக்கு வரும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டி வருமா?’
‘அது வருபவர்களின் தொகையைப் பொறுத்தது. எப்படி என்றாலும் அரை மணித்தியாலம் தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டி வரும் என்று நான் நினைக்கிறேன். அதற்குத் தயாராக வாருங்கள்.’
‘தயவு செய்து நான் எங்கே வரவேண்டும் என்பதையும் நீங்கள் எனக்கு விரிவாகக் கூற வேண்டும். இடம் தெரியாது தேடிக்கொண்டு நின்றால் நேரத்திற்குப் பரிசோதனைக்கு வரமுடியாது போய்விடும்.’
‘ஒ… அப்படியா…? நீங்கள் இதற்கு முன்பு உல்லவோல் மருத்துவமனைக்கு வந்து இருக்கிறீர்களா? உங்களுக்கு மருத்துவமனையின் அமைப்பு பற்றிய பரிட்சியம் இருக்கிறதா?’
‘ஆம்… நான் சில வேளை அங்கே வந்து இருக்கிறேன். நீங்கள் விளங்கப்படுத்துங்கள். அது எனக்கு இலகுவாகக் கண்டுபிடித்து வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.’
‘உங்களுக்கு உல்லவோல் மருத்துவமனைக்குள் இருக்கும் ‘கிவி’ கடை தெரியுமா?’
‘தெரியும்.’
‘நீங்கள் அந்தப் பாதையால் தொடர்ந்து நேராகப் பின்னோக்கி வரவேண்டும். பரிசோதனை செய்யும் இடத்திற்கு முன்பாக தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.’
‘ஓ… அப்படியா? அப்படி என்றால் கண்டுபிடித்து வருவது சிரமமாக இருக்காது. தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் இன்னும் நேரத்தைச் சொல்லவில்லை.’
‘ஓ… மறந்துவிட்டீர்களா? நீங்கள் புதன்கிழமை பன்னிரண்டு மணிக்கு இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அங்கே பலரும் வரிசையில் நிற்பார்கள். நீங்களும் அதில் இணைந்து கொள்ளுங்கள். ‘
‘நான் நேரத்தை மறந்ததிற்கு என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றிகள்.’
‘நல்லது நீங்கள் மிகவிரைவாக உண்மையை அறிந்து கொள்ள எனது வாழ்த்துக்கள். பயப்படாதீர்கள். அனேகமாக உங்களுக்கு இந்த நோய் தோற்றி இருக்க வாய்ப்பு இருக்காது என்று எண்ணுகிறேன். இது ஒரு உறுதி செய்யும் முயற்சியே.’
‘மிக்க நன்றி.’
‘காத.’
‘காத’

என்று விடை கூறிய அகிலன் திறன்பேசியைத் துண்டிக்க அது தனக்கு ஓய்வு வேண்டாம் என்பது போல மீண்டும் சிணுங்கியது. அதை எடுத்துப் பார்த்த பொழுது அந்த அழைப்புச் சார்மினியிடம் இருந்து வருவது தெரிந்தது. அகிலன் ஆர்வத்தோடு அதை ஏற்றான்.
‘என்னப்பா செய்கிறியள்? எவ்வளவு நேரமா உங்களுக்கு அடிக்கிறன் எடுக்கிறியள் இல்லை. என்ன சரியான விசியா இருந்தீங்கள் போல…? நானும் ஓயாமல் கால் மணித்தியாலமாய் உங்களுக்கு அடிச்சுக் கொண்டு இருக்கிறன்.’
‘தெரியும் சார்மினி. ஆனா நான் உல்லவோல் கொஸ்பிற்றலோடை கதைச்சுக் கொண்டு இருந்தன். அதைக் கட்பண்ணி உன்னோடை கதைக்க முடியாது. அப்பிடிக் கட்பண்ணினால் திரும்ப அவங்களோடை கதைக்க ஒருமணித்தியாலம் வெயிற் பண்ண வேணும். அதால நீ அடிக்கிறாய் எண்டு தெரிஞ்சும் அதை எடுக்கிற சந்தர்ப்பம் எனக்கு இருக்க இல்லை. இப்ப விளங்கிச்சா உனக்கு? போனை எடுக்காததுக்குச் சொறி செல்லம்.’
‘பருவாய் இல்லை அப்பா. நல்லதாய் போச்சுது. எப்ப வரட்டாம்?’
‘புதன்கிழமை வரட்டாம். எங்க வரவேணும் எண்டும் விளங்கப்படுத்திச்சினம்.’
‘அப்ப நல்லதாப் போச்சுது. எப்பிடிப் போகப் போகிறியள்?’
‘என்னைக் கூட்டிப் போகக் கெலியா வரும்? கார்ரிலதான் போக வேணும். வேறை எப்பிடிப் போகலாம்? பப்பிள்க் ரான்ஸ்போட் பாவிக்க வேண்டாமாம். வேற வழி இல்லை.’
‘அதுக்குப் பிறகு நான் எங்கையும் போகிறது எண்டா என்ன செய்கிறது?’
‘நடந்து போகலாம்தானே? என்ன நீ இப்படிப் பயப்பிடுகிறாய். நான் கார் யன்னலைத் திறந்து காத்துப் போகவிட்டுப் பிறகு ஸ்பிரீற்றால காரின்ரை உட்பகுதியை துடைச்சுத் துப்பரவு செய்து போட்டு வாறன். நீயும் வேணுமெண்டால் ஸ்பிரீற்றால துப்பரவு செய்துபோட்டுக் காரைப் பாவிக்கலாம்.’
‘றிஸ்க் இல்லையே அப்பா?’
‘நீதான் சொல்ல வேணும். அந்த அளவுக்கு இருக்காது எண்டு நான் நினைக்கிறன். தேவையில்லாமல் பயப்பிடாதை. வேணும் எண்டா மாஸ்க் கொண்டே வை. நான் மாஸ்க் பாவிக்கிறன். நீ ஸ்பிரீற் வாங்கி வந்திட்டியா?’
‘ நீங்கள் இன்னும் இந்த வருத்தத்தின்ரை சீதியஸ் பற்றி விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறியள் எண்டு நான் நினைக்கிறன். இந்த வைரஸ் சுவாசத்தில இருந்து வருகிற நீர்த்துளிகளுக்கு உள்ளேயும் வாழுமாம். அதுவும் காற்றில மூன்று மணித்தியாலத்திற்கு மேல உயிர் வாழுமாம். அப்பிடி நீங்கள் தும்மி அது காருக்க இருந்தா நான் என்ன செய்யலாம் சொல்லுங்க பார்ப்பம்?’
‘உன்னுடைய பயத்திற்கும் சில காரணங்கள் இருக்குது. இருந்தாலும் அதுக்குத்தானே கார் கண்ணாடியைத் திறந்துவிடப் போகிறன். அது காத்தோடை போயிடும். மீதியை நீ ஸ்பிரீற் போட்டுத் துடைச்சுவிடு. வேணும் எண்டா நான் கார் பாவிச்சு மூண்டு மணித்தியாலத்திற்குப் பிறகு நீ காரைப் பாவி. இப்ப ஓகேயா? அல்லது இன்னும் பயமா இருக்குதா?’
‘இல்லை நீங்கள் சொல்லுகிறது சரிதான். அப்படிச் செய்வம். எதுக்கும் நாங்கள் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லதுதானே?’

‘ம்… உண்மை. அது சரி ஸ்பிரீற் வாங்கி வந்திட்டியா?’
‘அதுக்கு நிறைய இடம் அலைய வேண்டி இருந்திச்சுது. ஒரு மாதிரி நெத்தில பார்த்து கடையைத் தேடிப் பிடிச்சுப் போய் வாங்கிக் கொண்டு வந்திட்டன். சாப்பாட்டுச் சாமான்களும் நெத்தில ஓடர் பண்ணப் போகிறன். அதுவும் கடைகளில என்ன இருக்கும் என்ன இல்லை எண்டு தெரிய இல்லை. அதோடை நெத்தில ஓடர் பண்ணினால் கொஞ்சம் விலையாகவும் இருக்கும்.’
‘இப்ப விலையைப் பற்றி யோசிக்காத. வருத்தம் வரமல் இல்லாட்டிப் பரவாமல் இருக்கிறது முதல் முக்கியம். மற்றதைப் பற்றி ஒண்டும் நாங்கள் இப்ப யோசிக்கத் தேவையில்லை. கசைப் பார்த்து வருத்தத்தை வாங்க இயலாது.’
‘நான் உங்களுக்குச் சாப்பாடு சூடாக்கிக் கொண்டு வாறன். நீங்க முதல்ல சாப்பிடுங்க. நானும் இவனுக்குச் சாப்பாடு குடுக்க வேணும். எண்டாலும் இன்னும் ஒரு குழப்பம் எனக்கு இருக்குது அப்பா.’
‘என்ன அது?’
‘அது என்ன எண்டா கரந்தேன முடிய வேலைக்குப் போக வேணும். அப்பிடி எண்டால் எங்களுக்குப் பிரச்சினையா இருக்கும். அதுக்கு என்ன செய்கிறது? நாளைக்கும் அவனை எப்பிடிப் பள்ளிக்கூடம் அனுப்புகிறது எண்டும் தெரிய இல்லை. அங்க ஏதாவது தொற்றிக் கொண்டு வந்தால் என்ன செய்கிறது எண்டும் தெரியாது? இல்லாட்டி அவனுக்கும் கரந்தேனவா?’
‘அவன் பள்ளிக்கூடம் கட்டாயம் போக வேணும் எண்டு இல்லை. அதுக்கும் ஏதாவது ஒரு முடிவு வரும். மற்றதை ஆறுதலாக யோசிப்பம். இப்ப நீ சாப்பாட்டைச் சூடாக்கிக் கொண்டு வா.’
‘சரி.’

அகிலன் திறன்பேசியை வைத்துவிட்டுக் குளிக்க நினைத்தான். அதற்கிடையில் சார்மினி உணவைச் சூடாக்கிக் கொண்டு வந்தால் சிக்கலாகிவிடும் என்பது அவனுக்கு விளங்கியது. அவளுடன் மீண்டும் திறன்பேசியில் தொடர்பு கொண்டு தான் குளித்துவிட்டு வந்த பின்பு உணவைச் சூடாக்குமாறு கூறிவிட்டுக் குளிக்கச் சென்றான்.

அவன் விரைவாகவே குளித்துவிட்டு வந்து சாப்பாட்டைச் சூடாக்கி வைக்குமாறு திறன்பேசியில் கூறிவிட்டுத் தொலைக்காட்சியை இயக்கினான். அதில் செய்தி போய்க்கொண்டு இருந்தது. செய்தியில் அரசாங்கம் பாடசாலைகளைத் திங்கள் கிழமையிலிருந்து மூடுவதாக அறிவித்தது. அதைப் பார்த்த பொழுது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இன்று தான் தேவையில்லாது சுரங்க ரதத்தில் ஏறி இருக்காவிட்டால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்கின்ற எண்ணம் எழுந்தது. சார்மினி காரைக் கொண்டு செல்வதால் அவன் அதில் போகவேண்டியது கட்டாயமாகியது. சார்மினி ஏற்கனவே ஒரு முறை மிதிவண்டியில் வேலைக்குச் சென்று வருமாறு கூறினாள். ஆனால் அலுப்பில் அகிலன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைக் கேட்டிருந்தால் இன்று சிலவேளை இப்படிச் சிந்திக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. செய்தியில் இனி நோர்வேயில் எப்பிடியான நடைமுறைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன என்று விவரித்து கொண்டு சென்றார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் போதுமா அல்லது இதைவிட கட்டுப்பாடுகள் வேண்டுமா என்பது அகிலனுக்கு விளங்கவில்லை. அவனது சிந்தனையைக் குழப்புவது போல மீண்டும் சார்மினி திறன்பேசியில் தொடர்பு கொண்டாள்.
‘திரும்ப என்ன சார்மினி?’
‘சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறன். சூடாறமுதல் வந்து எடுத்துக் கொண்டேச் சாப்பிடுங்க. சரியே? பிறகு மறந்துபோய் ரீவியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது இல்லை.’
‘இல்லை… நான் இப்ப வாறன். நீயும் ரீவியைப் பார். திங்கள் கிழமையில இருந்து ஸ்கூல் இல்லையாம். ஆனா நாங்கள் கரந்தேனவுக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டி வரும் எண்டு நினைக்கிறன்.’
‘முதல்ல இது முடியட்டும் அப்பா.’
‘நீ சொல்கிறதும் உண்மை. எதுக்கும் நாங்கள் நிலைமையைச் சமாளிக்கிறதுக்கு றெடியா இருக்க வேணும்.’
‘ம்… இருப்பம் அப்பா. நாங்களே நிலைமையைச் சமாளிக்க முடியாட்டி யார் நிலைமையைச் சமாளிப்பினம்?’
‘அதைத்தானே நான் சொதப்பீப் போட்டான்.’
‘நடந்தது அல்லது முடிஞ்சதை இனி யாராலும் மாற்ற முடியாது. அப்பிடி மாத்த முடிஞ்சிருந்தா சீனாவே மாத்தி இருக்கும். அப்பிடி மாத்தி இருந்தால் அது எப்பிடியான உலகமாய் இருந்து இருக்கும்? அப்பிடி எண்டா எத்தினை விசயத்தை மனிசன் றிவேர்ஸ் பண்ணி இருப்பான். அதைப் பற்றி இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்? இனிக் கவனமா இருப்பம். அப்பிடி இருந்தால் அதுவே போதும். எதுவும் உண்மையில் எம்கையில் இல்லாத உலகு இது. இல்லையா அப்பா?’
‘தத்துவம்… ஆனா நீ சொல்லுகிறது உண்மை. அதை எல்லாம் தெரிஞ்சு கொண்டும் நாளை நிரந்தரம் எண்டுகிற கற்பனையில வாழ்கிறதே இந்த மனித வாழ்க்கை. அதை யாரும் இலகுவில மீறிவிட முடியாது. சரி…. நீ போய் முதல்ல செய்தியைப் பார்.’
‘ஓ நான் பார்க்கிறன். அதோடை பிரசன் உங்களோடை கதைக்க வேணுமாம்.’
‘ஓ ஸ்கைப்பில கதைப்பம்.’
‘அவன் உங்களிட்டை வரவேணும் எண்டு அடம்பிடிக்கிறான். அவனுக்கு இந்த வருத்தத்தைப் பற்றி முழுமையா விளங்குதில்லை. அப்பாவிட்டப் போக வேணும் எண்டு கேட்கிறவனிட்டை இல்லை எண்டால் உடன முகம் சிவந்து கண்ணீர் பெரும் ஊற்றாய் பொங்குது. ‘ஏய் காத்த டை’ (நான் உன்னை வெறுக்கிறேன்) எண்டுகிறான். எதுக்கும் நீங்கள் இப்ப சாப்பிடுங்க. அவனுக்குச் சாப்பாடு குடுக்கேக்கை நான் உங்களை ஸ்கைப்பில கூப்பிடுகிறன்.’
‘சரி. அவன் குழந்தைப் பிள்ளை தானே? அவனுக்கு எப்பிடி இது எல்லாம் விளங்கும்? குழந்தைப் பிள்ளைகளுக்கு இது பெரிசாத் தொத்தாது எண்டுகிறாங்கள். அதால நாங்கள் தேவை இல்லாமல் பயப்பிடத் தேவை இல்லை எண்டு நினைக்கிறன்.’
‘அப்பிடி எல்லாம் நாங்கள் அசண்டையீனமாய் இருக்க முடியாது. இந்த வைரஸ்சால எப்பிடியான பிரச்சினை வரும் எண்டு யாருக்கும் சரியாகத் தெரியாது. உடலில இருக்கிற இயற்கையான எதிர்ப்புச் சக்தியையே கடத்தி தன்ரை விருப்பத்திற்குப் பாவிக்குமாம். இந்த வைரஸ் எண்பது வீதத்திற்கு மனிதப் புரதத்தைக் கொண்டிருக்காம். அப்படியான வைரஸ் யாருக்கும் தொத்தாமல் இருக்கிறதுதான் நல்லது. தொத்தினா உடன வாற வருத்தம் ஒண்டு. ஆனா நீண்டகாலத்தில எப்பிடியான பாதிப்புகளை உண்டு பண்ணும் எண்டது சரியாக யாருக்கும் தெரியாது. அதால எந்தவொரு விசயத்திலும் நாங்கள் அசண்டையீனமாய் இருக்கக்கூடாது அப்பா. இது சிலருக்கு சாதரண காய்ச்சல் மாதிரிக் கழியலாம். ஆனால் சிலரது வாழ்க்கையைத் தலைகீழாக்கிப் போடும் போல இருக்குது. எதுக்கும் போகப் போகத்தான் தெரியும். நாங்கள் இயலுமானவரை கவனமாய் இருக்க வேணும்.’
‘நீ சொல்லுகிறுது உண்மை. நாங்கள் கவனமாக இருக்க வேணும். அதே நேரம் அவனுக்கும் அதில பெரிய அதிர்ச்சி ஏற்படக்கூடாது. எப்பிடியாவது அவனைச் சமாளிக்க வேணும்.’
‘அதுக்கு நாங்கள் இதைவிட என்ன செய்ய முடியும்? இந்த வைரஸ் எப்பிடி ஒரு ஆளைவிட்டு மற்ற ஆளுக்குப் பாயுது எண்டு முழுமையாத் தெரியாது. அப்படி இருக்கேக்க நாங்கள் இதைவிட வேற என்ன செய்யமுடியும்? பிறகு ஏதும் தப்பாகீட்டா பிறகு இருந்து கவலைப்பட முடியாது.’
‘சரி… நீ போய் அலுவலைப் பார்.’
‘சரி.’

குளித்துவிட்டு வந்ததிலிருந்து அகிலனுக்கு உடம்பு குளிர்வது போல இருந்தது. அவன் எழுந்து சென்று வெப்மூட்டியை முறுக்கிவிட்டான். இது நிலத்திற்குக் கீழே இருக்கும் பாதாள அறை. பொதுவாக கோடைக்காலத்திலும் சீதளம் சிதையாது இருக்கும். குளிர்காலம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை. இப்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் தருவாய். சிறிது நேரம் வந்துவிட்டப் போனால் குளிர் தெரியாது. இப்போது அதிக நேரம் இங்கு இருப்பதால் அதை உணர முடிகிறது என்பது அகிலனின் எண்ணமாகியது.

சார்மினி குத்தரிசிச் சோறும் முருங்கைக்காய் குழம்பும், நண்டு வறையும் சமைத்து இருந்தாள். அகிலன் ஆர்வத்தோடு எடுத்து அதைச் சாப்பிடத் தொடங்கினான். இரண்டு வாய் வைத்திருப்பான்… அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பொதுவாகச் சாப்பாட்டில் அவன் யாரும் குறை சொல்ல வைப்பது இல்லை. இன்று என்ன நடந்தது என்பது அவனுக்கு விளங்கியும் விளங்காது போல இருந்தது. அவன் இது தனது வீண் கற்பனை எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் சாப்பிட்டான். அவனால் வழமை போல் முழுவதையும் சாப்பிட முடியாவிட்டாலும் பெரும்பகுதியைச் சாப்பிட்ட திருப்தியோடு மீதம் இருந்த உணவைக் குப்பை வாளிக்குள் கொட்டிவிட்டு தட்டைச் சவர்க்காரம் இட்டுச் சுடுநீரில் நன்கு அலசிக் கழுவினான். அவனுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அவன் அந்தத் தட்டை மீண்டும் சவர்க்காரம் இட்டு கவனமாகக் கழுவினான். கழுவிய உடனே சென்று அதைக் கதவடியில் வைத்தான். சார்மினி அதை எடுத்துப் பாத்திரங்கள் கழுவும் இயந்திரத்தில் கழுவப் போடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். அதன் பின்பு அதில் லைரஸ் வாழ்வதற்கான சந்தர்ப்பம் இருக்காது. இந்த வைரசிற்கு வெப்பம் அதிகம் பிடிப்பதில்லை என்று கதைக்கிறார்கள். பொதுவாகக் குளிர்மையான நோர்வேக் காலநிலை மிகவும் அதற்குப் பிடிக்குமென நம்பப் படுகிறது. அது வைரசிற்குச் சாதகமாய் அமைந்தாலும் இங்கு மனிதர்களின் செறிவு குறைவாக இருப்பது அதற்குப் பாதகமாக அமையும் என்பதும் உண்மை. சனநெருக்கம் குறைவு என்றால் ஒரு மனிதனை விட்டு மற்றைய மனிதனுக்குப் பாய்வது கடினமாக இருக்கும். அப்படி நோர்வேயின் மற்றப் பகுதிகளிலிருந்தாலும் ஒஸ்லோ அப்படி அல்ல என்பதும் உண்மை. அதில் வெளிநாட்டவர்கள் அதிகம் செறிவாக வாழும் பகுதி முக்கியமானது. அத்தோடு பலநபர்களை அங்தவர்களாகக் கொண்ட பெரிய குடும்பங்கள் வாழும் ஒஸ்லோவின் கிழக்குப் பகுதியும் அடங்கும். இந்தப் பகுதிகள் நோர்வேயில் வைரசிற்கு பெரும் வாய்ப்பான இடமாகும். லண்டன் போன்று இங்கு நகரத்தினுள் அதிக சனநெருக்கம் இல்லாவிட்டாலும் ஒஸ்லோவின் மத்திய பகுதி எப்போதும் சனநெருக்கமாகவே இருக்கும். அதுவும் குரன்லாண்ட் போன்ற பகுதிகளில் மக்கள் மிகவும் நெருக்கமாகச் செறிந்து நடமாடுவார்கள். அங்கே இடிபட்ட வண்ணம் மரக்கறிக் கடைகளில், இறைச்சிக் கடைகளில் கொள்முதல் செய்வார்கள். அது வைரசிற்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை. இதைப் பற்றி எப்படிக் கவனம் எடுக்கப் போகிறார்கள் என்று அகிலனுக்கு விளங்கவில்லை. குரன்லாண்ட் போன்ற வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மக்களும் அசண்டையீனமாக இருப்பதாகவே அகிலனுக்குத் தோன்றியது.

தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் நாட்டில் மாறி இருக்கும் நடைமுறை பற்றி விளங்கப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இந்த நடைமுறை மாற்றத்திற்கு முற்காரணம் பலரும் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்ந்து இருக்க வேண்டும். அதன் பின்பே அரசாங்கம் விழித்துக் கொண்டதாக அகிலனுக்குத் தோன்றியது. இப்போது என்றாலும் நோய் பரவாது கட்டுப்படுத்தும் விதமாக அவர்கள் நடவடிக்கை எடுப்பது அவனுக்கு பெரும் மன மகிழ்வைத் தந்தது.