பலரும் விளையாட்டாகவே நினைத்தார்கள். இதில் எந்த விபரீதமும் இருக்காது என்று நம்பினார்கள். நித்தம் நித்தம் ஆயிரம் மாயிரம் நபர்கள் தும்முகிறார்கள். அவர்களால் வருத்தம் பரவுவது என்றால் நோர்வேயின் கணிசமான மக்களுக்கு அது பரவி இருக்க வேண்டும். அப்படிப் பரவியதாக எந்தத் தகவலும் இல்லை. பரவிவிடுமோ என்கின்ற பயம் நாடு முழுவதும் பரவி இருப்பது மட்டும் பலமான உண்மை. சுரங்க ரதத்தில் நடந்ததைப் பற்றிச் சார்மினி கவலை கொண்டாலும் அகிலன் அதிகம் கவலை கொள்ளவில்லை. கவலை கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகம் கவலைகொண்டால் வாழமுடியாது என்பது அவன் எண்ணம். இருந்தாலும் சார்மினியின் மன அமைதிக்கும் எல்லோரினதும் பாதுகாப்பிற்கும் அவள் கூறுவது போல நடப்பதே சரி என்று அவன் முடிவு செய்து இருந்தான். அதன்படியே அவன் ஒழுகினான். முதலில் பிரசனோடு கதைத்து அவனைச் சமாதானம் செய்ய வேண்டும். ஏன் இதுவரையும் சார்மினி ஸ்கைப் இணைப்பை ஏற்படுத்தவில்லை என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவள் ஏற்படுத்தாவிட்டால் என்ன? தான் அதை ஏற்படுத்துவோம் என்று முடிவு செய்தான். அவன் தனது திறன்பேசியை எடுத்து ஸ்கைப்பை இயக்கினான். அது உயிர் பெற்றுக் கொண்டு அடுத்த முனையை இணைப்பதில் மும்மரமாகியது. நான்கு முறை அனுங்கிய பின்பு சார்மினி அதை எடுத்தாள்.
‘அதுக்குள்ள என்னப்பா அவசரம் உங்களுக்கு?’ என்றாள். இந்த நேரத்திலும் அவள் கண்களில் காதல் மின்னுவதாக அவனுக்குத் தோன்றியது.
‘நீ சாப்பாடு கெதியா அவனுக்குக் குடுப்பன் எண்டா… ஆனாக் காண இல்லை. அதுதான்…’
‘நான் பிளானை மாத்திப் போட்டன். அவனை முதல்ல குளிப்பாட்டிப் போட்டுப் பிறகு சாப்பாடு குடுக்கலாம் எண்டு நினைச்சன்.’
‘ஓ அப்பிடியே?’
‘அம்மா… அங்க பார் அப்பா… அப்பா… நான் அப்பாவேடை கதைக்க வேணும். போனைத் தா அம்மா… போனைத் தா அம்மா…’ என்று கூறிய வண்ணம் பிரசன் சார்மினியின் கையைப் பிடித்துப் பலமாக இழுத்தான். அவன் இழுவையை அவளால் தாங்க முடியவில்லை. இதற்குமேல் தான் அகிலனுடன் கதைக்க முடியாது என்பதை விளங்கிய சார்மினி திறன்பேசியைப் பிரசனிடம் கொடுத்துவிட்டு அவசரமாக அவனுக்குச் சாப்பாடு எடுத்துவரச் சென்றாள். கதைக்கும் ஊட்டிற்குள் அவனுக்கு உணவு ஊட்டும் அலுவலை இலகுவாகச் செய்ய முடியும் என்பது அவளுக்கு நன்கு தெரியும். அவள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எண்ணினாள்.
‘இந்தா கதை.’
‘தக் அம்மா.’
‘அப்பா… மிஸ் யூ அப்பா. எப்ப நீங்க மேல வருவீங்க அப்பா? நீங்கள் இல்லாமல் பயமா இருக்குதப்பா. அம்மா விளையாட வாறா இல்லை. நீங்க இப்ப மேல வாங்க அப்பா.’
‘பிரசன் நல்ல பிள்ளை எல்லோ?’
‘ம்…’
‘அப்பிடி எண்டால் அம்மாவின்ரை சொல்லுக் கேட்டு அம்மாவேடை குளப்படி இல்லாமல் இருக்க வேணும். முக்கியமா இங்க வரவேணும் எண்டு அடம்பிடிக்கக் கூடாது.’
‘ஏன் அப்பா?’
‘எனக்கு வருத்தம் வந்து இருக்குதோ இல்லையோ எண்டு இன்னும் தெரியாது. அது தெரியும் வரைக்கும் நீங்கள் இங்க வரக்கூடாது?’
‘ஏன் அப்பா?’
‘எனக்கு வருத்தம் இருந்தால் உங்களுக்கும் அது தொற்றிடும் இல்லையா… அதுதான்.’
‘ஏன் தோற்றும் அப்பா?’
‘வருத்தம் எண்டா அப்பிடிதான். தொற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே அதால வாழ முடியும். அதுதான்.’
‘தொற்றினா என்ன அப்பா?’
‘தொற்றினா வருத்தம் வரும். அது கடுமையா இருக்கும்.’
‘ஆ வெண்டு பிரசன்.’ என்றாள் அவன் அருகில் வந்த சார்மினி.
‘சாப்பிட்டா அப்பாவேடை கதைக்க முடியாது.’
‘கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கதை.’
‘ம்… ஆ… கொஞ்சம்… சரியா?’
‘கடுமையா இருந்தா என்ன அப்பா?’
‘கடுமையா இருந்தால் கஸ்ரமாய் இருக்கும். சுவாசிக்க இயலாது. அதால நீ இங்க வரக்கூடாது. அம்மாவோடை கவனமாய் இருக்க வேணும்.’
‘அப்ப… உங்களுக்கு அப்பிடி வருமா அப்பா?’
‘அது ஒண்டும் அப்படி வராது. நான் கெதியா வந்து பிள்ளையோடை விளையாடுவன்.’
‘எப்ப அப்பா இங்க வருவீங்கள்?’
‘கெதியா.’
‘கெதியா எண்டா?’
‘சும்மா அப்பாவோடை நொய் நொய் எண்டாதை. ஆ எண்டு.’ என்றாள் சார்மினி கடுமையான தொனியில்.
‘எனக்கு அப்பா வேணும். இல்லாட்டி நான் ஆவெண்ட மாட்டன்.’
‘அப்பா கெதியா வருவாரடா கண்ணா. இப்ப நீ சாப்பிட்டால்தான் அப்பாவோடை அப்ப உசாராக விளையாடலாம்.’
‘அப்பா வேலைக்குப் போகிறது இல்லையா?’
‘அப்பா கொஞ்ச நாளைக்கு வேலைக்குப் போகமாட்டார். நாங்களும் வெளியால போகத் தேவையில்லை. வீட்டில இருந்து விளையாடலாம்.’
‘வீட்டில விளையாட அப்பா இல்லை. பிறகு எப்பிடி அம்மா விளையாடுகிறது?’
‘நீ என்னோடு இப்ப விளையாடு.’
‘அம்மாவோடை விளையாடு பிரசன். அம்மாவை ஆக்கினைக்கட்டக் கூடாது. சரியா?’ என்றான் அகிலன்.
‘சரி. கெதியா நீங்கள் இங்க வரவேணும்.’
‘ஓ நான் கெதியா வருவன். இப்ப போனை அம்மாவிட்டைக் குடுங்க.’ திறன்பேசி கைமாறியது.
‘ம்… சொல்லுங்க?’ என்றாள் சார்மினி.
‘இவனைச் சமாளிக்கிறது பெரிய வேலையாகத்தான் இருக்கப் போகுது…’
‘அதெல்லாம் சமாளிக்கலாம் அப்பா. நீங்கள் ஒண்டும் கவலைப் படாதையுங்க. நீங்கள் றிலக்ஸ் பணணுங்க. நான் இவனுக்குச் சாப்பாடு குடுத்து முடிச்ச பிறகுதான் சாப்பிட வேணும்.’
‘சரி… சரி… நீ உன்ரை அலுவலைப் பார். வாய்.’
‘வாய்.’


*


அகிலன் தொலைக்காட்சியைப் பார்த்தான். தொடர்ந்தும் கொரோனா பற்றி அறிவுரை தொடர் செய்தியாக நீண்டது. இந்த வருத்தம் மக்களுக்கு முதலில் பெரும் பயத்தை உண்டு பண்ணுகிறது. அதனால் பலரும் பலவிதமாகச் சிந்திக்கிறார்கள். சிலர் உணவைச் சேமிப்பதை முதன்மைப்படுத்துகிறார்கள். சிலர் மருந்துப் பொருட்களைச் சேமிப்பதில் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். அதுவும் மலேரியா மருந்தை மருத்துவர்களே பதுக்குகிறார்கள். அப்பாவி மக்கள் அதுபற்றி எதுவும் அறியார். அதைவிடச் சிலர் துப்பரவு செய்வதற்கான பொருட்களைச் சேகரிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். சிலர் பணம் மற்றும் போக்குவரத்து வசதி பற்றிச் சிந்திக்கிறார்கள். சிலர் மிகவும் நிதானமாக எல்லாமே அவசியம் என்று அதற்கேற்ப செயற்படுகிறார்கள். ஆகமொத்தத்தில் எங்கும் அலைமோதல். அதனால் அளவுக்கு அதிகமாகக் கொள்முதல். அதுவே சொந்தப் பதுக்கலாக மாறுகிறது. இருந்தும் அதன் பாதிப்பு நோர்வேயில் ஒரு கட்டுக்குள் தொடர்ந்தும் இருக்கிறது.

மீண்டும் மயிர்க்குச்செறிந்தது. உடல் குளிர்ந்து நடுக்கம் எடுத்தது. அறை இப்போது நன்கு சூடாகிவிட்டது. இருந்தும் ஏன் குளிர்கிறது என்பது அகிலனுக்கு விளங்கவில்லை. அது அவனுக்கு மனதில் ஒருவித பயத்தைத் தந்தது. ஏதாவது பயப்படும்படியாக இருக்குமோ என்கின்ற கவலை உண்டாகியது. எதுவாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. இது சிலவேளை உடல் அலுப்பாக இருக்கலாம் என்றும் தோன்றியது. சிறிது நேரம் நித்திரை கொண்டு எழும்பினால் இந்த அலுப்புக் குளிர் எல்லாம் தீர்ந்து போய்விடும் என்று தோன்றியது. அவன் சென்று படுக்கையைத் தயார் செய்தான். சார்மினி தேவையானவற்றை ஏற்கனவே கொண்டு வந்து வைத்திருந்தாள். அவன் படுக்கையைத் தயார் செய்து விட்டுத் தொலைக்காட்சியை நிறுத்தினான். பின்பு படுத்து நித்திரை கொள்ள முயற்சித்தான். நித்திரை ஆகாயத்துச் சந்திரன் போல அருகே வர மறுத்தது. அவனுக்கு எட்டாத தூரத்தில் நின்றது. உடல் தொடர்ந்தும் குளிர்வதும், முறிவதுமாக இருந்தது. மருந்து ஏதாவது எடுத்தால் நல்லது என்று தோன்றியது. அதற்கும் சார்மினியைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்படித் தொடர்பு கொண்டால் பிரசன் ஆயிரம் கேள்வி கேட்பான். அதற்கு வேறு பதில் சொல்ல வேண்டும். பொறுத்துப் பார்ப்போம். மேலும் அதிகமானால் அவளுடன் நேரம் கழித்துத் தொடர்பு கொள்ளலாம். அப்போது பிரசன் நித்திரை ஆகிவிடுவான் என்று எண்ணினான்.

 

*


அகிலன் மருத்துவ மனைக்குச் சென்று இருந்தான். அவன் முதுகில் வேலைக்குக் கொண்டு செல்லும் பை கங்காருக் குட்டி போல அதன் பிடி விடாது அவனிலிருந்தது. அதை ஏன் இங்கும் எடுத்து வந்தான் என்று அவனுக்கு விளங்கவில்லை. அங்கே மக்கள் பனங்கிழங்கை அடுக்கியது போல நெருக்கமாக இருந்தார்கள். உண்மையில் அங்கே இருப்பதற்கோ நிற்பதற்கோ, பாதுகாப்பாய் சுவாசிப்பதற்கோ இடம் இருக்கவில்லை. அதனால் வேறு வழி இன்றிப் பலர் நிலத்திலிருந்தார்கள். சிலர் நிலத்தில் இருக்க முடியாது வருத்தத்தால் தரையில் வீசப்பட்ட மீன்கள் போல அங்கே பரிதாபமாகப் படுத்துக் கிடந்தனர். பலரால் மூச்சுவிட முடியாது துடித்தனர். பலர் பலமாக இருமினார்கள். சிலர் பலமாகத் தும்மினார்கள். அகிலனுக்கு உள்ளே போக மனம் இல்லாது இருந்தது. இதற்குள்ளே சென்றால் இப்போது வருத்தம் இல்லாவிட்டாலும் அது வந்துவிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் அப்படித் தயங்கித் தயங்கி நிற்க அவன் பின்னாலும் மனிதர்கள் வந்து நிரைக்கு நெருக்கிய வண்ணம் நின்றார்கள். இரண்டு மீற்றர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்பது அறிவுறுத்தலாக இருந்தாலும் அவசரத்தில் அதை ஏற்க முடியாதவர்களாக அவர்கள் அகிலனை உள்ளே போ என்று சைகை காட்டினார்கள். பலர் இப்போது அவன் பின்னே கூடிவிட்டார்கள். அவர்களில் சிலர் பலமாக இருமினார்கள். சிலர் அகிலனை நெருக்கிக் கொண்டு உள்ளே வந்தார்கள். அதற்குப் பின்பு அகிலனால் அங்கே நிற்க முடியாது என்பது விளங்கியது. உள்ளே போவது என்றால் அது மரணத்திற்குள் தலையைக் கொண்டு சென்று கொடுப்பது போல… உள்ளே போகாது திரும்பிப் போவதும் மரணத்தோடு மணவாழ்வு கொள்வது போல. என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. அதை அலசி முடிவெடுக்கும் அவகாசமும் அவனிடம் தற்போது இருக்கவில்லை. உள்ளே போ என்பது போல் அவர்கள் மிகவும் நெருக்கிக் கொண்டு வந்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்துவிட்டது. அவர்கள் பலம் கொண்ட யானைகள் மோதுவது போல அவனை முட்டி மோதி உள்ளே தள்ளினார்கள். அவனால் அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படியான தாக்குதல் வரும் என்றும் அவன் எதிர்பார்த்து இருக்கவும் இல்லை. அவர்கள் பலம் கொண்டு மோதியதில் அவன் தன்நிலை இழந்து காற்றில் அகப்பட்ட சருகு போலத் தன் கால்கள் தரையில் தங்காது அவனை மோசம் செய்ய வருத்தத்துடன் நிலத்தில் படுத்து இருந்த ஒரு வயோதிபர் அருகில் சென்று திடீரென விழுந்தான். அவன் அப்படி வந்து விழுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் ஆடிப் போயினர். இதற்கு என்ன செய்வது என்பது விளங்காது அவர்கள் தவித்தனர்.

அந்தப் பெரியவர் மூச்சு இழுக்க முடியாது தவித்தார். இருந்தும் அகிலனைப் பரிதாபமாகப் பார்த்தார். கருணைக் கொலை பற்றி அகிலன் கேள்விப்பட்டது உண்டு. இப்பொழுது அந்த முதியவர் அவனை அந்த உதவியைச் செய்யச் சொல்லிக் கேட்கிறாரா என்று அவனிடம் ஒரு கற்பனை தோன்றியது. அடுத்த கணமே அந்த உதவி உனக்கு வேண்டுமா என்று கேட்கிறாரோ என்கின்ற குழப்பம் உண்டாகியது. கருணைக்கொலை இங்கே சட்டத்திற்குப் புறம்பானது. இந்த உலகில் முதுமையில் பலருக்கு அது வரப்பிரசாதமாய் இருக்கும். உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் முதுமையில் பலரும் அதை எண்ணிப் பார்க்கும் நாட்கள் வரலாம். முதுமை பலருக்கு நரகமாக மாறுவதே அதற்குக் காரணமாக இருக்கிறது. கண்ணிற்குத் தெரியாத இந்த எதிரியின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ள வேறு எந்த வழி இருக்கிறது என்பது அவனுக்குப் புலப்படவில்லை. கருணைக்கொலை ஒரு வழியாகுமா? அந்த முதியவர் திணறினார். அகிலனைப் பார்த்து வருத்தமாக முகத்தைக் கோணினார். மீண்டும் அவர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அகிலனைப் பார்த்தார். அவருக்கு அவனைக் கருணைக்கொலை செய்ய விருப்பம் இல்லாது இருக்க வேண்டும். அகிலனைப் பார்த்து,
‘நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்றார். அவர் பார்வையில் கருணை இருந்தது. அகிலன் அதைக் கவனிக்கவில்லை.
‘நீங்கள் அறியாது கேட்கிறீர்களா?’ என்றான் அகிலன். அவன் அகங்காரம் அதில்.
‘நான் இங்கு வேறு வழியின்றி வந்தேன். உன்னைப் பார்க்கும் பொழுது அப்படித் தெரியவில்லை. பின்பு எதற்கு நீ இங்கே வந்தாய்? இது சிங்கம் குடியிருக்கும் இருண்ட குகை போன்றது. குகை போலத் தோன்றினாலும் உள்ளே வரும்பொழுது எங்கே வருகிறோம் என்பது தெரியாது. வந்தவர்கள் மீண்டு திரும்பிப் போகமுடியாது.’
‘எங்கள் எதிரிகள் ஒன்றே. அதை உறுதிப்படுத்த நான் இங்கே வந்தேன்.’
‘இது எதிரிகளை உறுதிப்படுத்தும் இடம் அல்ல.’
‘அப்படி என்றால்?’
‘இது எதிரியின் குகை. அவனிடம் தோற்றவர்களுக்குக் கருணை அல்லது மரணம் கிடைக்கும். எதிரியால் கொல்லப்படுவதற்காய் தாக்கப்பட்டவர்களை மரணத்திலிருந்து மீட்டுவரும் வெள்ளை உடை தரித்த மனிதர்களின் போராட்டம். அவர்கள் எதிரிபற்றி முழுமையாக அறியாது அவனோடு போராட வேண்டிய அவல நிலை. நீ உன்நிலையை உணராதவனாய் இருக்கிறாய். இங்கு வரவேண்டிய அவசியம் உனக்கு இல்லை. இருந்தும் இப்போது இங்கு வந்து இருக்கிறாய்.’
‘எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். நான் கட்டளைக்குப் பணிந்தே இங்கு வந்தேன். ஆனால் இங்கே காட்சிப் பிழையாக இருக்கிறது. அதற்காக நீங்கள் என்னைக் கண்டிக்க எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை.’
‘நான் உன்னைக் கண்டிக்கவில்லை. எனக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை. உன்னைப் பார்க்க இந்த நாட்டிற்குப் புதிதாக வந்து குடியேறியவன் போலத் தோன்றுகிறாய். நீ வழிதவறி இங்கு வந்துவிட்டாயோ என்று எனக்குப் பதட்டமாக இருக்கிறது.’
‘நீங்கள் சொல்வது போல நான் இந்த நாட்டிற்கு வந்து குடியேறியவனே. அதற்காக எனது பாதை தவறு என்று நீங்கள் எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்? அப்படி நீங்கள் கருதுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.’
‘தவறு இருந்தால் என்னை மன்னித்துக்கொள். உனது அறியாமையும் பதட்டமும் அதைக் காட்டிக் கொடுத்தது. என்னைப் போன்றவர்கள் இங்கு வருவது தவிர்க்க முடியாதது. இந்த எதிரி அப்படியானவன். நீங்கள் மிகவும் இளம் வயதினராகத் தோன்றுகிறீர்கள். அதனால் நீங்கள் பிழையான இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று பதட்டப் படுகிறேன். தாமதியாது இங்கு இருந்து புறப்பட்டு விடுங்கள். அல்லது எதிரி விரித்த வலையில் நீங்கள் பலமாக மாட்டிக் கொள்வீர்கள். அது உங்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடும். தயவு செய்து நீங்கள் இங்கிருந்து அவசரமாகத் தப்பித்துவிடுங்கள்.’
‘இந்த அறிவுரையைக்கூற நீங்கள் யார்? நீங்கள் கூறுவதை நான் எப்படி நம்புவது? நானே உயிரியல் படித்த பொறியியலாளன். எனக்குப் புத்திமதி சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? தயவு செய்து என்னைக் குழப்பாதீர்கள். உங்கள் சிகிச்சைக்காகக் காத்திருங்கள்.’
‘ம்….’  அவர் கதைக்க முடியாது சுவாசிக்கப் போராடினார். அந்தப் போராட்டம் ஓயும் பொழுது அகிலனைப் பார்த்து ஏளனமாக்கச் சிரித்தார். அது அவனுக்கு மிகவும் கோபத்தை உண்டு பண்ணியது. எவ்வளவு திமிராக இருந்தால் இவரால் இப்படி எள்ளி நகைக்க முடியும் என்கின்ற கோபம் கொதியாக மேல் எழுந்தது.
‘எதற்குச் சிரிக்கிறீர்கள்?’ அகிலன் கோபத்துடன் அவரைப் பார்த்துச் சீறினான்.
‘எனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டாயே… அதை எண்ணிச் சிரிக்கிறேன்.’
‘அதை எண்ணிச் சிரிக்க என்ன இருக்கிறது. உங்களுக்கு உண்மையில் எனக்குப் புத்திமதி சொல்ல என்ன அருகதை இருக்கிறது? அதை முதல் சொல்லுங்கள். அதற்குப் பின்பு நான் உங்கள் அறிவுரையைக் கேட்பதா இல்லையா என்று முடிவு செய்கிறேன்.’
‘உனக்குப் புத்திமதி சொல்லும் அருகதை எனக்கு உண்டு. அதில் எந்தச் சந்தேகமும் உனக்கு வேண்டாம்.’
‘என்ன அருகதை? நீங்கள் இந்த நாட்டின் வெள்ளைக் குடிமகன் என்கின்ற அருகதையா? அல்லது நீங்கள் இந்த நாட்டின் பூர்வக்குடிகளில் ஒருவர் என்கின்ற அருகதையா?’
‘ம்… ம்… ம்….’
‘ஏன் நகைக்கிறீர்கள்? எதற்காக நகைக்கிறீர்கள்?’
‘உனது அறிவீனத்தைப் பார்த்து நான் வேறு என்ன செய்ய முடியும்?’
‘அப்படி என்றால் எனக்குப் புத்திமதி சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகமை இருக்கிறது? அதை முதலில் தெளிவாகச் சொல்லுங்கள்.’
‘சொல்கிறேன்.’
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து சிறிது நேரம் இருமினார். சுவாசிப்பதற்கு அவஸ்தைப் பட்டார். பின்பும் ஏதோ ஒரு ஓர்மத்தோடு தனது அவஸ்தையைச் சமாளித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.
‘எனக்கு இப்பொழுது வயது எண்பத்து ஐந்து ஆகிறது.’
‘அதை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களைப் பார்க்கும் பொழுதே நன்கு விளங்குகிறது.’
‘நான் கதைப்பதைக் குழப்பாது செல்ல வருவதை அவதானமாகக் கேள். அப்பொழுதே நான் ஏன் உனக்குப் புத்திமதி கூறுகிறேன் என்பது விளங்கும்.’
‘சரி சொல்லுங்கள்.’
‘நான் இதே மருத்துவமனையில் எண்பத்து மூன்று வயது வரையும் வேலை செய்தேன்.’
‘அறுபத்து இரண்டு வயதில் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லையா?’
‘இல்லை.’
‘ஏன்?’

‘அது நான் எனது வேலையின் மேல் வைத்திருந்த காதல் என்று சொல்ல வேண்டும். இதே மருத்துவமனையில் நான் ஆராய்ச்சியாளனாகப் பணிபுரிந்தேன். அதுவும் வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். எனக்கு இறுதிவரைக்கும் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் எண்ணம்  இருக்கவில்லை. ஆனால் வயது போகப் போக எனது ஞாபக சக்தி இந்த வேலைக்கு ஒத்துழைக்க மறுத்தது. அதனால் நான் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டி வந்தது. நான் ஒரு துறையில் அல்ல பல துறையில் பேராசிரியனாகப் பட்டம் பெற்றவன். அதுவும் இந்த வைரஸ்சைப் பற்றி ஆராய்வதிலேயே எனது வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் செலவு செய்து வந்தேன். எனது ஆராய்ச்சியின் பயனாக சில வருடங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில் அரசை இப்படி ஒரு உலகப்பிணி வரும் என்றும் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்து இருந்தேன். யாரும் அதைப் பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இன்று அதற்கான பலனைப் பல அப்பாவிகள் அனுபவிக்கப் போகிறார்கள். அந்தப் பட்டியலில் நீயும் ஒருத்தன் ஆகிவிட வேண்டாம் என்கின்ற அக்கறையில் நான் புத்திமதி கூறினேன். அப்படி புத்திமதி கூறியது உனக்குப் பிடிக்காவிட்டால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள். ஆனால் உனக்குப் புத்திமதி சொல்வதற்கு எனக்கு இருக்கும் ஏட்டுப் படிப்பினால் உண்டாகிய தகமைகளைவிட ஒரு சக இளம் மனிதனுக்கு அனுபவம் உள்ள மனிதன் புத்திமதி கூறலாம் என்கின்ற மனிதாபிமானத் தகமை என்னிடம் தாராளமாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இதற்கு மேல் நான் சொல்வதைக் கேட்பதும் கேட்காது விடுவதும் உனது விருப்பம். ‘

‘தயவு செய்து எனது அறியாமையை மன்னித்துவிடுங்கள். நான் சிறுபிள்ளைத்தனமாக நடந்த கொண்டது இப்பொழுது எனக்கு விளங்குகிறது. எனக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. எனக்கு இந்த வைரஸ் தொற்றி இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும் என்று பணித்து இருக்கிறார்கள். நான் அதைச் செய்யவே இங்கு வந்தேன். இங்கு வந்த பின்பு நடப்பதைப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வெளியே போய்விடலாமோ என்றும் எண்ணினேன். அதற்கு வழி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இப்போது இதிலிருந்து தப்பிச் சென்றாலும் மீண்டும் பரிசோதித்து வருத்தத்தைப் பற்றி உறுதிப்படுத்த வரவேண்டும் என்பது எனக்கு விளங்குகிறது. அதனாலேயே நான் இந்த ஆபத்தைப் பொறுத்துக் கொண்டு இருந்தேன்.’
‘பரிசோதிப்பது என்றால் எதற்கு நீ இங்கு வந்தாய்? அதுவும் இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்தாய்? உனக்கு வருத்தம் இல்லாவிட்டாலும் இங்கு வந்திருப்பவர்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து உனக்கு அது தொற்றிவிடலாம். இவை காற்றில் வாழக்கூடிய வைரஸ் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. நீ எவ்வளவு நேரம் இங்கு இருக்கிறாய் எவ்வளவு சுவாசிக்கிறாய் என்பதைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். தயவு செய்து ஓடிவிடு. இங்கு இருந்து அவசரமாக வெளியேறிவிடு. வெளியே சென்று சுத்தமான காற்றைச் சுவாசி. அப்படியே வீட்டிற்குச் சென்றுவிடு. நீ தனித்து வாழ்கிறாயா?’
‘இல்லை. நான் திருமணமானவன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.’
‘உன்னால் எப்படிப் பொறுப்பு இல்லாது இப்படி நடக்க முடிகிறது? காற்றில் உள்ள நீர்த்துளிகளில்கூட இந்த வைரசால் பலமணித்தியாலங்கள் வாழ முடியும் என்பது என்னுடைய முடிவு. இந்தப் பிரதேசத்தில் நீ சுவாசிக்கும் ஒவ்வொரு துளி காற்றிலும் இந்த வைரஸ்சுகள் இருக்கும். இப்போது நீ அவற்றில் எந்த அளவு சுவாசிக்கிறாய் அதற்கு உனது உடம்பு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்து உனது நாளைய பொழுது அமையப் போகிறது. நீ உன்னை மாத்திரம் அல்ல உனது குடும்பத்தையும் ஆபத்திற்குள் அகப்பட வைத்துவிட்டாய். நீ வரக்கூடாத இடத்திற்கு வந்து விட்டாய். எவ்வளவு விரைவாக இங்கு இருந்து வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிச் சென்றுவிடு.’
‘என்ன சொல்லுகிறீர்கள்? நான் பரிசோதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதனால் நான் அதை விரைவாகச் செய்து முடிக்க எண்ணினேன். அதற்காகவே புறப்பட்டு இங்கே வந்தேன். இப்பொழுது அதிகமான நோயாளிகள் இங்கு இருக்கமாட்டார்கள் என்பது எனது எண்ணம். ஆனால் இங்கு அதற்கு மாறாக மனிதர்களின் நெருக்கம். புழுக்களாக அவர்கள் துடிக்கும் அவலம். அதற்கு நான் என்ன செய்வேன்? என்மேல் நீங்கள் இப்படிப் பழிபோடக் கூடாது. எனக்கு இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை. நான் நல்லதை எண்ணியே இங்கு வந்தேன். நான் நல்ல மனிதனாகவே இவ்வுலகில் வாழ நினைக்கிறேன்.’
‘தவறிழைக்காத மனிதர்கள் என்று யாரும் இல்லை. உனது எண்ணம் நல்லதாக இருக்கலாம். ஆனால் இங்கே இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நீ உடனே இங்கு இருந்து சென்றுவிடு. எந்த மனிதருக்கும் அருகே சென்றுவிடாதே. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவர்களிடம் இருந்து நீ இந்த நோயைப் பெற்றுவிடக்கூடாது. தவறுதலாக உன்னிடம் இருந்தால் அது அவர்களுக்குத் தொற்றிவிடக்கூடாது.’
‘அப்படி என்றால் நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள். உங்களை விட்டுச் செல்வது எனது மனிதாபிமானத்தைக் கொல்வது போல இருக்கிறது.’
‘எனது கணிப்பின்படி எனக்கு இந்த வருத்தம் ஏற்கனவே வந்துவிட்டது. எனக்குச் சுவாசிப்பதற்கு உதவி தேவை. அதனாலேயே நான் இங்கே வந்தேன். அதனால் தயவு செய்து நீ என்னைவிட்டு விலகி நில். இங்கிருந்து தப்பித்துச் சென்றுவிடு. உனக்கு நிச்சயம் விளங்கி இருக்க வேண்டும். நான் சுவாசிப்பதற்குப் பிரயத்தனப் படுவதிலிருந்து அது என் சுவாசப் பையைத் தாக்கிவிட்டது என்பது விளங்கி இருக்க வேண்டும். நான் உட்பட இங்கு இருக்கும் பலர் இருமும்பொழுது அவை சிறிய நீர்த்துளிகளுக்குள் பாதுகாப்பாய் பிரயாணிக்கும். பின்பு பிறமனிதர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களது மூச்சுக்குளாயை அது அடைந்துவிடும். அதன் பின்பு அதன் வேலை ஆரம்பமாகும். தயவு செய்து உனக்கு என்னைப் போன்ற அவல நிலை வேண்டாம். தயவு செய்து உடனடியாகப் புறப்படு. இங்கு இருந்து தப்பி ஓடிவிடு.’
‘உங்கள் அறிவுரைக்கும் அன்பிற்கும் மிகவும் நன்றி. நான் எப்படியாவது முழுமூச்சாக முயற்சி செய்து இங்கிருந்து வெளியேறிவிடுவேன். உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் மீண்டும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள். நான் இந்த உதவியை என்றும் மறவேன்.’
‘இது உங்கள் மீது உண்டான அன்போ அல்லது அக்கறையோ அல்ல. வெறும் மனிதாபிமானம் மட்டுமே. அக்கறை அற்று மனிதாபிமானத்தைக் காட்டாது என்னால் வாழ முடியாது. அதைச் செய்யாவிட்டால் நான் வாழ்ந்த வாழ்விற்கே அர்த்தமற்றதாக போய்விடும். மீண்டும் சொல்கிறேன். தேவையில்லாது நேரத்தை இங்கு விரயம் செய்யாதே. ஓடிவிடு. விரைவாக இங்கிருந்து தப்பி ஓடிவிடு.’
‘நான் போகிறேன். உங்கள் உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்.’

கூறிய அகிலனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. அவன் கண்கள் திரையிட்டுக் கொண்டன. இவ்வளவு மனிதாபிமானம் நிறைந்த அந்த மனிதருக்கு உதவி செய்ய முடியாது அவசரமாகப் பிரிய வேண்டியது அவன் மனதை வருத்தியது. கண்கள் சக மனிதனுக்காய் மெழுகாகக் கசிந்தன. இந்த வயதில் இந்த மனிதர் இந்த நோயைப் பெற்று இருக்கிறார் என்பது அவனை வேதனைக்கு உள்ளாக்கியது. இவர் வாழ்வு என்ன ஆகும் என்று யாருக்குத் தெரியும்? இருந்தும் அவருக்கு உதவ முடியாது. அவரோடு இதற்கு மேல் நின்று கதைக்க முடியாது. அப்படி நின்றாலோ அல்லது தொடர்ந்து கதைத்தாலோ தனது உயிரையும் இந்த வருத்தத்திற்குக் காவு கொடுக்க வேண்டி வரலாம் என்பதாக அகிலனுக்குத் தோன்றியது. அதற்கு மேல் அவன் அங்கு நிற்காது வெளியே செல்வதற்கு வாயலை நோக்கிப் புறப்பட்டான். ஆனால் மனிதர்கள் தலையில் கொம்பு முளைத்த ராட்சதர்கள் போல அவனது வழியை மறித்துக் கொண்டு நின்றனர். எப்படிச் செல்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. அவர்கள் சுவாசம் சாவைத் தரும் ஆபத்தைக் கொண்டது. அவர்கள் நிற்கும் நெருக்கத்திற்கு அவர்களைத் தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். அதை எப்படிச் செய்வது? அவர்களைத் தள்ளிக் கொண்டு செல்வது என்றால் அவர்களின் காற்றைச் சுவாசிக்க வேண்டும். உண்மையில் அவர்களின் காற்றைச் சுவாசிக்கக்கூடாது. ஆனால் அவர்களைத் தள்ளிக் கொண்டு வெளியேற வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவனுக்குத் தலை சுற்றியது. அவன் சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாது திகைத்துப்போய் நின்றான். பின்பு எதையோ எண்ணியவனாய் திரும்பினான்.
‘நீ திரும்பி இங்கே வந்து என்ன செய்யப் போகிறாய்?’ என்றார் அந்த மனிதர் அவனைப் பார்த்து.
‘நான் திரும்பினாலும் உங்கள் திசையில் வரப்போவதில்லை.’ என்றான் அகிலன்.
‘ஓ நல்ல யோசினை… பலமாகத் தள்ளிக் கொண்டு சென்றுவிடு.’ என்றார் அவர்.
‘வருகிறேன்.’ என்றான் அகிலன்.
‘போய் வா.’ என்றார் அவர்.

அகிலன் அவரைப் பார்த்த வண்ணம் பின்னோக்கிச் சென்றான். அவன் யுக்தியை உணர்ந்த சிலர் அவனுக்கு வழிவிட்டனர். சிலர் அவனைப் பொருட்படுத்தாது நின்றனர். அவர்களை அவன் தனது பையால் பின்புறம் பாராது இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறினான். இல்லைப் பின்னேறினான். இது வழமைக்கு மாறானது. வாழ்வைக் காத்துக்கொள்ள இப்போது அந்த யுக்தியே இங்கே தேவைப்பட்டது. அவர்களில் சிலர் அவனைப் பார்த்து கோபமாகக் கத்தினார்கள். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு அங்கு இருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. அதை அவன் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. வாழ்க்கை என்பது இவ்வுலகில் ஒருமுறையே. இதற்கு முந்திய வாழ்வு பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் கற்பனையே. இதற்குப் பிந்திய வாழ்வு பற்றிக் கேள்விப்படுவதும் கற்பனையே. இந்த வாழ்வே எமக்குக் கிட்டிய நிஜமான வாழ்வு. அதுவும் நாம் வாழும் இந்தக் கணமே எம்வசமானது. அதை நாம் எதற்காகவும் இளந்துவிட முடியாது. அகிலனுக்கும் அதை யாருக்காகவும் இளக்கும் எண்ணம் இருக்கவில்லை.

அவன் அப்படிப் பலமாகத் தள்ளிக் கொண்டு வந்தபோது அவனை யாரோ ஓடி வந்து பலமாகக் கட்டிப் பிடித்தார்கள். யார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. வருத்தம் உடையவர்களே இங்கே வந்திருப்பார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. அதனால் தனக்கும் அவர்கள் வருத்தத்தைத் தொற்றப்  பண்ணுகிறார்கள் என்கின்ற உண்மை உறைத்தது. அவன் வேறு வழி இன்றித் திமிறினான்.
‘என்னை விட்டுவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்.’ என்று அவன் பலமாக வாயெடுத்துக் கத்த முயன்றான். ஆனால் எதனாலோ அவனது குரல் வெளியே வர மறுத்தது. இது என்ன அவஸ்தை என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்தவரின் பிடி இரும்பாக இறுகியது. அவனால் அந்தப் பிடியிலிருந்து எதுவும் செய்ய முடியவில்லை. அவன் மீண்டும் இயலுமான பலம் கொண்டு தன்னை விடுவிக்கத் தனது வாயை நம்பினான்.

‘என்னை விட்டுவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்.’ என்று மீண்டும் உரக்கக் கத்தினான். இம்முறை சிறிது சிறிதாக அவன் குரல் வெளியே வரத் துவங்கியது. அவன் கையைக் காலை உதறி அந்த மனிதனிடம் இருந்து விடுபட்டு ஓட முயன்றான். அவன் உதறியதில் கை எங்கோ அடிபட்டது. அப்படி அடிபட்டதில் கை நோவெடுத்தது. மனிதர்களில் பட்டு இப்படி நோகுமா என்கின்ற கேள்வி எழுந்தது. அவனுக்குத் தான் எங்கே இருக்கிறேன் என்பது ஒருகணம் விளங்கவில்லை. இது மருத்துவமனையல்ல என்பது மெதுவாக விளங்கியது. அப்படி என்றால்? விழித்துக் கொண்டவன் தன்னைச் சுற்றிப் பார்த்தான். உடம்பு தெப்பமாக வியர்த்து இருந்தது. வியர்த்தால் காய்ச்சல் விட்டுவிடும் என்பார்கள். நித்திரையில் உடம்பு காய்ந்ததா என்பது அவனுக்கு விளங்கவில்லை. எதற்கும் வியர்ப்பது நல்லதாகவே அவனுக்குத் தோன்றியது. தான் எங்கே இருக்கிறேன் என்கின்ற அலசலுக்கு விடை புலப்படத் தொடங்கியது. சொந்த வீட்டின் கீழ்த்தளத்தில் படுத்து இருப்பது நினைவில் மீண்டும் வந்தது. எதற்கு இங்கே வந்து படுத்து இருக்கிறேன் என்பது அவனுக்கு முதலில் ஞாபகம் வரவில்லை. பின்பு சிறிது சிறிதாக அதுவும் ஞாபகம் வரத் தொடங்கியது.

அகிலன் நேரத்தைப் பார்த்தான். நேரம் ஒருமணி ஆகிவிட்டது. உடல் வியர்த்தாலும் தொண்டைக்குள் கடுமையாக நோவது போல இருந்தது. சார்மினியோடு கதைத்தால் நல்லது என்று தோன்றியது.  ஆனால் சார்மினி இப்போது பிரசனோடு நித்திரை கொள்வாள். அவளை எழுப்பினால் அவனும் எழுந்துவிடுவான். பின்பு அவனது கேள்விகள் இராமரின் கணைகள் போல இடைவிடாது வேகமாகத் தொடரும். அதற்கு இலகுவில் விடை கண்டு பிடிக்க முடியாது. அதனால் தற்போது பேசாது சமாளிப்பதே உத்தமமான வழி என்று அவனுக்குத் தோன்றியது.

எப்படி இந்தக் கனவு வந்தது என்பது அவனுக்கு விளங்கவில்லை. இன்று நேரமும் இடமும் பிழைத்துவிட்டது. ஆனால் அதுவே இப்படியான கனவுகளை உற்பத்தி செய்யக்கூடாது. என்னையும் மீறி அது நடைபெறுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதன்கிழமையே அதைச் செய்ய முடியும். அதுவரையும் எப்படியாவது சமாளிக்க வேண்டும். எப்படி என்பதே விளங்கவில்லை. இப்படியாகச் சிந்தித்துக் கொண்டு படுத்து இருந்தவன் சிறிது நேரத்தின் பின்பு அலுப்பில் இயற்கையின் அணைப்பில் உறங்கிப் போய்விட்டான்.

 

*


திறன்பேசி மீண்டும் மீண்டு அழைப்பதான ஒரு உணர். அது எங்கே எப்படி நடக்கிறது என்பது முழுமையாகப் புலப்படவில்லை. அருகில் கேட்கிறது. ஆனால் கைக்கு எட்ட மறுக்கிறது. இது என்ன அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது? எனக்கு ஏன் வருகிறது? நான் எங்கே இருக்கிறேன்? எதற்காகத் தனித்து இருக்கிறேன்? எனக்கு ஏன் தொண்டை நோகிறது? ஏதோ அறியாத அருவருப்பான சுவையற்ற தன்மை ஒன்று ஏன் என் வாயில் தோன்ற வேண்டும்? சார்மினியும் பிரசனும் எங்கே? ஏதோ கனவு போல நினைவுகள் தொடர்ந்தன. இருந்தும் அவனால் எழுந்து இருக்க முடியவில்லை. எழுந்து இருக்காத வரைக்கும் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாது என்பது விளங்கியது. உடலைச் சங்கிலி கொண்டு பிணைத்துப் போட்டது போல பாரமாக இருந்தது. அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு எழுவதற்கு அவன் முயற்சி செய்தான். அவனால் அது இயலும் என்று தோன்றவில்லை. உடலை வருத்தம் தொடர்ந்து உள்ளிருந்து முறித்தது. மயக்கம் வருவது போல இருந்தது. அவன் தன்னை இழந்து மீண்டும் உறக்கத்தில் மூழ்கத் தொடங்கினான்.

எவ்வளவு நேரம் மீண்டும் நித்திரை கொண்டு இருப்பான் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு இப்போது உறக்கம் கலைந்து நிதானம் குடிவரத் தொடங்கியது. அதற்கு மீண்டும் திறன்பேசியின் அழைப்பே காரணமாகிற்று. அது யாரிடம் இருந்து வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். முதலிலிருந்ததிற்கும் இப்போது இருப்பதற்கும் சிறு வித்தியாசம் இருந்தது. ஏனோ இப்பொழுது மயக்கம் தணிந்து விட்டது. இப்பொழுது கை காலை சிறிது அசைக்க முடிந்தது. மெதுவாகப் புரண்டு திறன்பேசியை எடுத்தான். அது அடித்து ஓய்ந்து விட்டது. யார் என்று பார்த்தான். அது சர்மினியிடம் இருந்து வந்திருந்தது. அவன் அவளது எண்ணிற்குத் தொடர்பு கொண்டான். இரண்டு முறை திறன்பேசி சிணுங்கியதும் அவள் அழைப்பிற்கு வந்தாள். சிலவேளை அவள் அவனுக்காகக் காத்து இருந்திருக்கலாம் என்று தோன்றியது. சரி எப்படி என்றாலும் சமாளிக்க வேண்டும். அவளையும் பிரசனையும் தேவையில்லாது கவலை கொள்ள வைக்கக்கூடாது என்று அவன் எண்ணினான்.
‘என்னப்பா…? உங்களுக்கு என்ன நடந்தது? நான் எத்தினை தரம் இப்ப அடிச்சுப் பார்த்திட்டன்? நீங்கள் போனையே எடுக்க இல்லை. எனக்குப் பயம் வந்திட்டுது. ஏதோ என்னவோ எண்டு தலையே சுத்தத் தொடங்கீட்டது. அம்புலன்சிற்குப் போன் பண்ணுவமோ எண்டு கூட நினைச்சுப் பார்த்தன். எத்தினை தரம் போன் பண்ணினன். உங்களுக்குக் கேட்கவே இல்லையா?’
‘இல்லை. எனக்கு ஏதோ சாதுவக் கனவில கேட்டமாதிரி இருந்திச்சுது. ஆனா என்னால முழிப்பிற்கு வரமுடிய இல்லை. இப்பதான் முழிச்சன். நீ எனக்குப் போன் அடிச்சிருக்கிறதைப் பார்த்தன். நிச்சயம் நீ குழம்பிப் போய் இருப்பாய் எண்டிட்டு உடன போன் எடுத்தன்.’
‘உண்மையா நான் பயந்துதான் போயிட்டன். உங்களுக்கு ஏதும் பிரச்சினையே அப்பா? நாங்கள் பயந்து மாதிரியே நடந்திடுமா அப்பா?’
‘தெரிய இல்லைச் சார்மினி. உடம்பை முறிச்சுப் போட்ட மாதிரி இருக்குது. நித்திரை வந்த பிறகு எனக்கு  நிறையக் கனவும் வந்திச்சுது. எழும்ப நினைச்சாலும் என்னால எழும்ப முடியாமல் இருந்திச்சுது. உண்மையைச் சொல்லப் போனால் அவங்கள் சொல்லுகிற சில அறிகுறியும் இருக்கிற மாதிரி; இருக்குது.’
‘என்னப்பா சொல்லுகிறியள்? அப்பிடி என்ன பீல் பண்ணுகிறியள்?’
‘தொண்டை நோ இருக்குது. சாதுவாய் உடம்பு காயிது. ரேஸ்ற் ஒண்டும் தெரியுது இல்லை. மணம் ஒண்டும் பிடிபடுகுது இல்லை. இதுகள் சில அறிகுறிகள். ஆனால் கட்டாயம் இந்த வருத்தத்தால மட்டும்தான் வரும் எண்டு நூறு வீதம் யாராலும் சொல்ல முடியாது. எதுக்கும் நாங்கள் பொறுத்து இருந்து பார்க்க வேணும். சும்மா தேவை இல்லாமல் பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை.’
‘சாதாரண நாள் எண்டா நாங்கள் ஏன் பயப்பிடப் போகிறம்? இப்ப நிலைமை அப்பிடியே? அதுவும் அவன் ஒருத்தன் உங்களுக்குக் கிட்டத் தும்மினான் எண்டுறியள். இதை எல்லாம் கேட்ட பிறகு எப்பிடிப் பயப்பிடாமல் இருக்க முடியும்? எண்டாலும் இது சாதாரண காய்ச்சல் தடிமனா இருக்க வேணும் எண்டதுதான் என்னுடைய ஆசை.’
‘நானும் அப்பிடி இருக்க வேணும் எண்டு ஆசைப்படுகிறன். பயப்பிடாதை எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ எனக்கு வெந்நீர் வைச்சுவிடு. குடிக்கிறதுக்கும் அதையே தா.’
‘காலைமைச் சாப்பாடு உங்களுக்கு என்னப்பா வேணும்?’
‘என்னால சாப்பிட முடியுமோ தெரிய இல்லை. ரேஸ்ற் தெரியுது இல்லை. சாப்பிட்டா வெளியால வருமோ எண்டு பயமா இருக்குது.’
‘அதெல்லாம் அப்பிடி ஒண்டும் நடக்காது. நீங்கள் முதல்ல சாப்பிட முயற்சி செய்யுங்க. அப்பிடி ஏதாவது நடந்தாப் பிறகு யோசிக்கலாம்.’
‘சரி. ஏதாவது கொண்டு வந்து வைச்சுவிடு.’
‘என்ன வேணும் அப்பா உங்களுக்கு?’
‘ஏதாவது உறைப்பா… புளிப்பா…?’
‘ஓ அந்த களத்துக்குக் கொண்டு போகிற கஞ்சிமாதிரி இருந்தால் ஓகேயா.’
‘அதேதான். சுடு சோத்தில செய்.’
‘சரி. அது ஒரு ஐஞ்சு நிமிசத்தில செய்து போடுவன். வேறை என்ன அப்பா வேணும்?’
‘வேறை எனக்கு இப்ப ஒண்டும் வேண்டாம். இப்ப வெந்நீரை மறக்காமல் வைச்சுவிடு. தாகமாய் இருக்குது.’
‘நான் வைக்கிறன். சரி நான் போனையும் வைக்கிறன். ஏதாவது கொஞ்சம் வித்தியாசம் எண்டாலும் எனக்கு முதல்ல அடியுங்க.’
‘சரி நான் அடிக்கிறன். இப்ப வாய்.’
‘வாய்.’

திறன்பேசியை வைத்த சார்மிக்கு யோசனையாக இருந்தது. தனித்து அவர் கீழே இருக்கிறார். ஏதாவது அவருக்கு நடந்தாலும் உடனடியாகத் தெரிய வராது. திறன்பேசி இல்லாவிட்டால் வெற்றுக் கிரகத்தில் இருப்பது போலவே இருந்து இருக்கும். எதுவும் அவருக்கு நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் அம்புலன்சைத் தொடர்பு கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. உள்ளே சென்று பார்த்து வருவதற்கான பாதுகாப்பான முகக்கவசத்தோடு மேலாடைகள் எதுவும் வீட்டில் இல்லை. வைத்திருக்கும் இந்த முகக்கவசத்தை இந்த நோயைப் பொறுத்தமட்டில் நம்ப முடியாது. அது எந்தவித பாதுகாப்பையும் தந்திடாது. அதனாலேயே பல மருத்துவர்கள், தாதியர் தொடர்ச்சியாகப் பல நாடுகளிலும் மடிகிறார்கள். எவ்வளவோ அவதானமாக அவர்கள் இருந்தும் அது நித்தமும் நடைபெறுகிறது. நாங்கள் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள முடியாது. எங்கள் இருவரையும் பொறுத்தமட்டில் பிரசன் வாழ்வே முக்கியமானது. யாருக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது அவனது வாழ்விற்கும் பாதிப்பாக அமையும். அதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி என்றால் என்ன செய்வது? எப்படி இந்தச் சிக்கலிலிருந்து வெளி வருவது? எதற்கும் நாங்கள் பொறுமையாகவே இருக்க வேண்டும். அப்போதே உண்மையான முடிவு தெரியும். அதன் பின்பே எதுவென்றாலும் செய்ய முடியும். சிலவேளை இது தேவையற்ற பயமாக இருக்கலாம். சாதாரண தடிமன் காய்ச்சலாய் முடியலாம். மனிதனைப் பரிட்சியம் இல்லாத நோய் தாக்கும் பொழுது அவன் தன்நம்பிக்கை தவிடு பொடியாகிறது. சிந்தனை தறிகெட்டு ஓடுகிறது. உண்மையில் இந்த நேரத்தில் அமைதியாகச் சிந்திக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும். மன உறுதியைப் பாதுகாக்க வேண்டும். எதையும் சாதகமாக எண்ண வேண்டும். நினைப்பது எல்லாம் நிச்சயமாக நடந்துவிடுவதில்லை. நினைப்பது போல மனிதனாலும் நடந்துவிட முடிவதில்லை. காலை அவர் நிலைமையை நன்கு அறிய வேண்டும். வெளியே வருமாறு கூறித் தூரே நின்று அவரது நிலைமையைக் கவனிக்க வேண்டும். அதன் பின்பு என்ன செய்வது என்று யோசிக்கலாம் என்பதாக எண்ணிக் குழம்பிக் கொண்டு நித்திரை கொண்டவள் இயற்கையின் தழுவலில் உறங்கிவிட்டாள். பிரசனும் அவளுடன் படுத்து இருந்தான். சார்மினியை விட்டிருந்தால் மதியம் வரைக்கும் நித்திரை கொண்டிருப்பாள். ஆனால் பிரசனுக்குக் காலை ஏழுமணிக்கே நித்திரை முறிந்துவிட்டது. அவன் எழுந்து சார்மினி மேல் நடக்கத் தொடங்கிவிட்டான். அவனின் அந்த உளக்கலில் துடித்துப் பதைத்து எழுந்தவளால் அதற்கு மேல் நித்திரை கொள்ள முடியவில்லை.

அதன் பின்பு அவள் பிரசனுக்குக் காலைச் சாப்பாட்டைத் தயார் செய்தாள். வழமையாகக் காலைச் சாப்பாடாக கொன்பிளெக்ஸ் சாப்பிடுவான். அதுவே அவசரத்திற்குச் சார்மினிக்கும் அவனுக்கும் வசதியாக இருக்கும். ஆனால் இன்று நேரம் இருந்தது. அவருக்குக் கஞ்சி செய்வதோடு அவனுக்கும் பாண் வாட்டி எடுத்து அத்தோடு முட்டைப் பொரியலும் பொரித்து, தொத்திறைச்சியும் பொரித்துப் பாலுடன் பரிமாறினாள். சுடச்சுடச் சாப்பாடு பரிமாறப்பட்டதில் பிரசனுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது. இப்படிச் சூடான சாப்பாடு காலைவேளையில் நித்தமும் கிடைப்பதில்லை என்பதால் அவன் அதை இரசித்து ருசித்து உண்ணத் தொடங்கினான். அவன் சாப்பிட்ட பின்பே பல்லுத்துலக்குவதால் அவன் முகம் கழுவாது சாப்பிடுவது பற்றி அவள் கவலைப்படவில்லை. ஆனால் சார்மினியால் பல்லுத் துலக்காது எதையும் வாயில் வைக்க முடியாது. அதன் பின்பு சார்மினி கஞ்சியைத் தயாரிக்கும் வேலையைக் கவனித்தாள். கஞ்சி தயாரித்து முடியும் பொழுது எட்டு மணியாகிவிட்டது. சென்று முகத்தைக் கழுவிவிட்டு வந்து திறன்பேசியைக் கையில் எடுத்தாள். மறுமுனை விரைவாகவே உயிர் பெற்றுக் கொண்டது. அகிலன் பதில் சொல்வதற்கு முன்பே மிகவும் ஆர்வத்தோடு சார்மினி கதைக்கத் தொடங்கினாள்.
‘எப்பிடியப்பா இப்ப இருக்குது? இராத்திரி அதுக்குப் பிறகு நித்திரை கொண்டியளே? எனக்கு மனம் நிம்மதி இல்லாமல் இருந்திச்சுது. எல்லாம் நல்லபடியா நடக்க வேணும் எண்டு கடவுளைக் கும்பிட்டுக் கொண்டு இருந்தன்.’
‘தேவை இல்லாமல் பயப்பிடாதை. பிறகு நான் ஒருமாதிரி நித்திரை கொண்டிட்டன். இப்ப கொஞ்சம் ஒகேயா இருக்குது. நீ சொன்ன மாதிரிச் சூடாக் கஞ்சியும் அதோடை இஞ்சி போட்டுப் பிளேன் ரீயும் கொண்டு வந்து வை. நான் முதல்ல போய் முகம் கழுவ வேணும்.’
‘இப்ப நீங்கள் கதைக்கிறதைக் கேட்க நிம்மதியா இருக்குதப்பா. இரவெல்லாம் பயந்துகொண்டு இருந்தன்.’
‘சரி… தேவை இல்லாமல் பயப்பிடாதை. பிரசன் என்ன செய்கிறான்?’
‘அவருக்கு இண்டைக்குச் சூடான காலைமைச் சாப்பாடு… அவர் ரீவியைப் பார்த்துப் பார்த்து நடத்துகிறார். அதில நீங்கள் கதைக்கிறதுகூட அவருக்குக் கேட்க இல்லை.’
‘சரி விடு… விடு… அவன் அப்பிடி எண்டாலும் அமைதியாய் இருக்கட்டும்.’
‘ம்… நானும் அதுதான் குழப்ப இல்லை.’
‘அப்ப மத்தியானம் நோர்மலா சமைக்கிற மாதிரிச் சமைக்கட்டே?’
‘ஓ எனக்கு இரவு இருந்ததோடை ஒப்பிடேக்க இப்ப எவ்வளவோ மேல். மத்தியானம் இன்னும் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறன். அதால நீ வழமைபோலச் சமை. அப்பதான் நானும் ஒழுங்காச் சாப்பிடலாம்.’
‘என்ன சமைக்கட்டும் அப்பா?’
‘ம்… மீன் சமை. குளம்பும் வைச்சுப் பொரியலும் பொரி.’
‘ஓகே அப்பா.’
‘அவனுக்கு உறைப்பில்லாமல் பொரி.’
‘அது ஞாபகம் இருக்கும். நீங்கள் சாப்பிட்ட பிறகு வெளியால வாறியளா? நாங்கள் யன்னல்ல நிண்டு உங்களைப் பார்க்கிறம். எனக்கும் அவனுக்கும் உங்களைப் பார்க்க வேணும் போல இருக்குது. சரியே? பிரச்சினை ஒண்டும் இல்லையே?’
‘ஓ உனக்கு என்னில அவ்வளவு அன்பா?’
‘ச்… பகிடியை விட்டிட்டு போய்ச் சாப்பிடுங்க. அது முக்கியமா பிரசன் உங்களைப் பார்க்க வேணும் எண்டு அடம்பிடிச்சவன். அதுதான். நீங்கள் வீணாக் கற்பனை எதையும் வளர்க்காதீங்க.’
‘ம்… விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாது எண்டுகிறாய். இத்தினை வருசம் உன்னோடை வாழ்ந்திட்டன் எனக்கு உன்னைத் தெரியாதா?’
‘தெரிஞ்சு? உங்களை நான்தானே நேற்று வீட்டைவிட்டுக் கலைச்சனான். அது உடன மறந்து போச்சுதா?’
‘ம்… எனக்குத் தெரியும். நீ பருந்து மாதிரி எதுவும் செய்வாய் எண்டும் நல்லாய் தெரியும். அதே நேரம் என்மேல உனக்கு என்ன இருக்குது எண்டும் தெரியும்.’
‘சரி… சரி… நான் இப்ப வைக்கிறன். சாப்பாடு வைச்ச பிறகு போன் பண்ணுகிறன்.’
‘சரி.’