புதன்கிழமை இமை மூடித் திறப்பதற்கு முன்பு பிரசன்னமாகியது. இடையில் நாட்கள் அண்ட வஸ்துக்களாய் அதன் வேகத்தில் கழிந்துவிட்டன. இடையில் பெற்ற அனுபவத்தில் அவனது நம்பிக்கை சிறிது தள்ளாடியது. இருந்தும் அவன் தளர்ந்துவிட விரும்பவில்லை. பத்து ஐம்பதிற்கே அகிலன் உல்லவோல் மருத்துவ மனைக்கு வந்துவிட்டான். அங்கே வந்ததும் தனது காரைத் தரிப்பிடத்தில் விட்டு அதற்குக் கட்டணம் செலுத்தினான். அவனுக்கு இடைக்கிடையே சாதுவாக இருமல் வருவதால் அதைக் கையாள்வதற்காகத் துடைக்கும் கிருமிநாசினித் தாளை எடுத்துச் சென்றான். அதில் ஒன்றை  இப்போது கையில் எடுத்துக் கொண்டான். அதன் பின்பு அவன் அந்தக் கூடாரத்தை நோக்கி நடந்தான். நல்ல வெயில் எறித்துக்கொண்டு இருந்ததால் வெளியே வெந்நீரில் குளித்தது போன்று கணகணப்பாய் இருந்தது. வந்த புதிதில் இருபத்தி ஐந்து பாகைக்கு மேலே சென்றால் கணகணப்பாய் உணர முடிந்தது. இப்போது பத்துப் பாகை நின்றாலே சூரியனைக் கண்டால் அது கணகணப்பாக இருக்கிறது. அதற்கு முன்பைவிட இப்போது துடிப்பாய் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம். துடிப்பாய் இருப்பதற்கு உடல் நலம் பற்றிய அக்கறை அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அதற்குத் தன்னுடன் வேலை செய்யும் சுதேசிகள் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் உடல் மீது காட்டும் அக்கறையும் அவர்களிடம் அதைப்பற்றி இருக்கும் அறிவும் மதிய இடைவேளையிலிருந்து கதைக்கும் போது உரையாடலாக வெளியே வரும். அது அவனிலும் மாற்றத்தை உண்டுபண்ணி இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். நோர்வே மக்களிடம் இருக்கும் உடலைப் பற்றிய, அதற்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் பற்றிய அறிவும் அத்தோடு கேடு விளைவிக்கும் இரசாயனங்கள் பற்றிய அறிவு நிச்சயம் இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் என்கின்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது. இப்படியான நினைவுகளின் அலம்பல்களுடனே அவன் கூடாரத்தை நோக்கி நடந்தான்.

அப்படி நடந்து போகும் போதே அவனால் அதை அவதானிக்க முடிந்தது. மனிதர்கள் வரிசையாக இடைவெளிவிட்டு நின்றார்கள். அது பல மீற்றர்களுக்கு நீண்டு கொண்டே சென்றது. என்றாலும் முந்நூறு மீற்ரருக்கு அதிகம் இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அதிக நேரம் காத்திருக்கும் அவஸ்தை இருக்காது என்பது அவனுக்கு விளங்கியது. அகிலன் விரைவாக நடந்தான். அப்படி நடப்பதற்கே இப்போது இளைப்பது போல இருந்தது. ஆனாலும் பரிசோதனையின் முடிவு தெரியாது தானாக எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பதை நினைவு படுத்தியவன் முந்தைய நினைவைப் புறம் தள்ளி தொடர்ந்து நடந்தான்.

அகிலன் விரைவாக வந்து வரிசையில் நின்று கொண்டான். வரிசை மெதுவாகவே நகர்ந்தது. சிலர் அகிலனைவிடப் பலமாக இருமினார்கள். சிலர் கை இடுக்கிற்குள் அமுக்கமாகத் தும்மினார்கள். அகிலனுக்கு அந்தக் கனவு ஞாபகம் வந்தது. அப்படி யாரும் இங்கு இருப்பதாய் அவனுக்குத் தெரியவில்லை. அது கனவாகவே இருந்தது இப்போதும் அவனுக்கு நிம்மதியைத் தந்தது. அகிலன் தனது திறன்பேசியை எடுத்து அதற்குத் தலையணியை மாற்றினான். பின்பு ஓசோவின் பிரசங்கம் ஒன்றைக் கேட்கத் தொடங்கினான். ஓசோவின் பிரசங்கம் கேட்கும் பொழுது நேரம் பிரயோசனமாய் கழிவதாக அவன் உணர்வது உண்டு. இருந்தும் சிலவேளை அதற்கு மாறாக இந்த மனிதர்களிடம் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகும். நாம் ஒருவர் சொல்வதை அவதானமாய் கேட்கிறோம் என்றால் அவரிடம் எங்களால் அடையமுடியாத பிறப்போடு உண்டான ஞானம் இருக்க வேண்டும். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் சொல்வன்மை அல்லது உடற்பாசை வசப்பட வேண்டும். அவ்விரண்டையும் தவிர்த்துப் பார்த்தால் அவரிடம் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வியே உண்டாகும். அவர்களும் மனித பலவீனங்களுக்கு உட்பட்டவர்களே. உண்மையில் பல மனிதர்கள் தங்கள் மாயமான தோற்றத்தோடே மற்றவர்கள் முன்பு பிரசன்னம் ஆகிறார்கள். அதையே நாம் உண்மை என்று தப்பிதமாக நம்புகிறோம். அது ஒருசிலர் இடத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படியானவர்களை நாம் கையெடுத்துக் கூம்பிடக்கூடத் தயங்குவதில்லை. உண்மையை உணர்ந்தால்… அந்த மனிதர்களின் மாயத்தைத் தவிர்த்து அவர்களைப் பார்த்தால்… எமது மயக்கம் தீரும். விவேகானந்தரின் தாயார் கூறியது போல நாம் நடந்து கொண்டால் எந்த மலைப்பும் எமக்கு ஏற்படாது. ஓசோ தொடர்ந்தும் பிரசங்கம் செய்தார். அவர் சொல்வதையும் மறுப்பதற்கு இல்லை. உண்மையை உரைப்பவர்களுக்குப் பகை வராமலும் இல்லை. யார் எதை எப்படிக் கூறினாலும் நாம் மட்டுமே நல்லதைக் கண்டுபிடித்து எங்கள் மண்டைக்குள் சரியானதை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பது அகிலனுக்கு விளங்கியது.

வரிசை மெது மெதுவாகவே நகர்ந்தது. திடீரென ஒரு இளைஞன் அங்கே நோர்வேயின் வசந்த காலத்துச் செடியாகத் திடீரெனத் தோன்றினான். அவன் தனது மருத்துவ உடைக்கு மேல் ஒளியைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு அங்கியும் அணிந்து இருந்தான். ஆனால் அவன் முகக்கவசம் அணியவில்லை. நோர்வேயில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்பது அரசின் நிலைப்பாடு. அதை அனேக மக்கள் பின்பற்றினர். அதைப் பாவிக்கத் தெரியாது பாவித்தால் நோயைக் கட்டுப்படுத்துவதைவிட அது பரவுவதற்கே ஏதுவாகும் என்பதை அவர்கள் நம்பினார்கள். அந்த இளைஞன் கையில் ஒரு பட்டியல் இருந்தது. அவன் ஒவ்வொருவராக அணுகி அவர்களது பெயர் மற்றும் பரிசோதிக்க வேண்டிய நேரம் என்பதைக் கேட்டுத் தனது பட்டியலோடு ஒப்பிட்டுச் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வந்தான். அந்த இளைஞன் சிரித்த வண்ணம் அகிலனை அணுகினான். அப்போது அவனும் அகிலனும் தங்களுக்கு இடையிலான இடைவெளியை அவதானமாகக் கவனித்துக் கொண்டார்கள். அவன் அகிலனின் பெயரையும் நேரத்தைக் கேட்ட பின்பு அகிலனுக்குப் பின்பாக நின்றவர்களை நோக்கிச் சென்றான். அவன் சென்றாலும் ஓசோ ஓயாது பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். அது அகிலனுக்குப் புத்துணர்வு ஊட்ட அவன் அத்தோடு தானும் அசையலானான்.

அகிலனின் முறை வந்தது. அங்கே இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருத்தி மேசை ஒன்றின் முன்பாக ஒரு நாற்காலியிலிருந்தாள். அவள் மீண்டும் புன்னகைத்த வண்ணம் பெயரைக் கேட்டாள். பின்பு அவளின் பின்னே இருந்த அலுவலகத்திலிருந்தவர்களுக்கு அதை அறிவித்தாள். சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளே வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அங்கே இரண்டு அலுவலகங்களில் பரிசோதனை நடந்தது. சிறிது நேரத்தில் மறுமொழி வந்ததும் முதலாவது அறைக்குச் செல்லுமாறு அகிலனுக்கு அவள் கட்டளையிட்டாள். அகிலன் முதலாவது அறைக்குச் சென்றான். அங்கே ஒரு இளைஞன் முகக்கவசம், உடம்பைப் பாதுகாக்கும் மேலாடை,  மற்றும் கையுறை அணிந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பரிசோதனை செய்வதற்குத் தயாராக நின்றான். உள்ளே சென்றதும் வழமை போலக் கையைக் குலுக்கி அவன் வரவேற்கவில்லை. அந்தப் பழக்கம் தற்காலிகமாக அழிந்து போய்விட்டது. அவன் மீண்டும் அகிலனின் பெயரைக் கேட்டு உள்ளே இருந்த பெண்மணியுடன் அதை உறுதி செய்து கொண்டான். அந்தப் பெண் வெளியே வரவில்லை. பின்பு அவன் கையைச் சுத்தம் செய்யக் கிருமிநாசினி வழங்கினான். அடுத்ததாக இடையில் தும்மல் அல்லது இருமல் வந்தால் அதை மூடிக் கட்டுப்படுத்த துடைக்கும் காகிதம் கொடுத்தான். பின்பு தான் எப்படி மூக்குத் துவாரத்திற்குள்ளும் தொண்டைக் குளிக்குள்ளும் பஞ்சு பொருத்திய குச்சியைச் செலுத்திப் பரிசோதனை எடுக்கப் போகிறேன் என்பதைத் தள்ளி நின்றே விளங்கப்படுத்தினான். மீண்டும் அந்த நடைமுறைகள் விளங்கியதா என்பதைக் கேட்டு உறுதி செய்தான். பின்பு அவதானமாகத் தான் கொடுத்த காகிதத்தால் வாயை மூடிக் கொள்ளுமாறு கூறிவிட்டு மூக்கிற்குள் குச்சியைச் செலுத்தினான். அகிலனுக்குப் பலங்கொண்ட மட்டும் அவன் மேல் தும்மி விடுவேனோ என்று பயமாக இருந்தது. அவன் தன்னை இயலுமானவரைக் கட்டுப்படுத்தினான். அந்த இளைஞனும் எவ்வளவு விரைவாகப் பரிசோதனை செய்ய முடியுமோ அவ்வளவு விரைவா மூக்கிற்குள் விட்டுத் துடைத்துப் பரிசோதனைக்கான பொருளை எடுத்து முடித்தான். பின்பு அப்படியே தொண்டைக் குளிக்குள்ளும் துடைத்து எடுத்து தனது வேலையை முடித்தான். அதன் பின்பு மீண்டும் கையைக் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்துவிட்டு அகிலன் விடை பெற எண்ணினான். இருந்தும் அவன் மனதில் சில கேள்விகள் உண்டாகின. அதை அவன் தெளிவுபடுத்த எண்ணி…
‘இதன் முடிவு எப்போது… எப்படி வரும்?’ என்று கேட்டான்.
‘இதன் முடிவு தெரிவதற்கு சில நாட்கள் எடுக்கும். உங்களுக்கு வருத்தம் இருந்தால் உங்கள் திறன்பேசிக்குச் செய்தி வரும். அதுவரையும் நீங்கள் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும்.’
‘அது வரைக்கும் நான் வேலைக்குப் போக முடியாது என்கிறீர்கள்.’
‘நிச்சயமாக… நீங்கள் வேலைக்கோ அல்லது மற்றைய பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது. எப்போதும் மனிதர்களிடம் இருந்து விலகி இருங்கள்.’
‘கட்டாயமாக நான் அவற்றைக் கடைப்பிடிப்பேன். நன்றி.’
‘வாருங்கள்.’

அகிலன் வெளியே வந்தான். அந்தப் பெண் நலம்பெற வாழ்த்துக்கள் என்றாள். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு அகிலன் அவசரமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினான். நோய் இருக்கிறதா என்று நிச்சயம் பரிசோதிக்க வேண்டும். ஆனால் அப்படிப் பரிசோதிக்க வரும்பொழுது நோய் தொற்றிவிடுமோ என்கின்ற பயமும் இருந்தது. அதனால் எவ்வளவு விரைவாக அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற அவன் சித்தமானான்.

வெளியே வந்த பொழுது அவன் முன்பு நின்றிருந்த வரிசை அவன் வந்த பொழுது இருந்ததைவிட மேலும் அனுமர் வால் போல நீண்டு இருந்தது. நல்ல வேளையாக தனக்குச் சற்று முன்பாக நேரம் கிடைத்திருக்கிறது என்பது அவனுக்குப் பெரும் ஆறுதலைத் தந்தது. அதன் பின்பு அவன் மருத்துவ மனையில் நின்று நேரம் கழிக்க விரும்பவில்லை. வில்லிலிருந்து புறப்பட்ட கணையாக வாகனத்தை நோக்கி விரைவாகச் சென்றான்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பொழுது தெருவில் மனிதர்களின், வாகனங்களின் நடமாட்டத்தை அவதானமாகக் கவனித்தான். வழமை போல நடமாட்டம் இருக்கவில்லை. பலர் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதைவிடப் பலர் நோய்க்குப் பயந்து தங்களது அலுவல்களைத் தள்ளி வைத்திருக்க வேண்டும். அவசியமானவர்களும், வேறு வழி இல்லை என்பவர்களுமே இப்பொழுது வெளியே வந்திருக்கிறார்கள் என்பது அகிலனுக்கு நன்கு விளங்கியது. இந்த நோயைக் கட்டுப்படுத்த இதைவிட வேறு வழி ஒன்றும் இல்லை. கையைச் சுத்தமாக வைத்திருப்பதும், மனிதர்களுக்கு இடையேயான தூரத்தைக் கடைப்பிடிப்பதும் முக்கியமானது. நோர்வேயில் வாழும் பெரும்பான்மையினர் அதைக் கடைப்பிடிப்பார்கள் என்கின்ற நம்பிக்கை அகிலனுக்கு இருந்தது. சிலர் அதிலும் விதிவிலக்காக இருப்பார்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அந்த எண்ணங்களுக்கு அத்தோடு விடை கொடுத்து அவன் அமைதியாக வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.

 

*


வீட்டிற்கு வந்ததும் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி அதன் கதவைத் திறந்து அதை இயலுமானவரைக் கிருமிநாசினியால் துடைத்துவிட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றான். சார்மினியும் பிரசனும் இல்லாத அந்த அறைக்குச் செல்வது சிறைக்குச் செல்வதான ஒரு உணர்வை அவனுக்கு உண்டு பண்ணியது. இருந்தும் அதற்கு வேறு வழி இல்லை என்பதால் மிகவும் சோர்வுடன் அங்கே சென்றான். அகிலன் கீழே வந்த சத்தத்தைக் கேட்ட சார்மினிக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்க வேண்டும் என்கின்ற அடக்க முடியாத ஆவல். அவள் தனது ஆவலுக்கு அணை போட நினைக்கவில்லை. திறன்பேசியை எடுத்து அழைப்பை மேற்கொண்டாள். அழைப்பு உயிர்பெற்றுக் கொண்டது.
‘ஒ… நான் வந்ததை எப்படி அறிஞ்சா?’
‘உங்கை கமறா பூட்டி வைச்சிருக்கிறது உங்களுக்குத் தெரியாதே?’
‘நீ பூட்டினாலும் அதிசயப்பட ஒண்டும் இல்லை.’
‘தெரியுது தானே? அப்ப கவனமாய் இருங்க.’
‘நான் கவனமாய் இருக்கிறன். இப்ப எடுத்த விசயத்தைச் சொல்லு?’
‘நீங்கள்தான் சொல்ல வேணும். ஆஸ்பத்திரிக்குப் போனீங்கள்… என்ன சொன்னாங்கள்?’
‘அவங்கள் ரெஸ்ற் எடுத்தாங்கள். ஆனா அது மெசினில ஆராய்ஞ்சு முடிவு சொல்ல ஒரு நாள் அல்லது இரண்டு நாள் செல்லுமாம். நாங்கள் அதுவரைக்கும் பொறுமையாக இருக்க வேணும். நிறையச் சனம் வரிசையா நிக்குதுகள். அங்க போன பிறகுதான் போனதாலேயே வருத்தம் வந்திடுமோ எண்டு பயமா இருந்திச்சுது. ஒரு மாதிரிக் கெதியா முடிச்சுக் கொண்டு ஓடி வந்திட்டன். காரை நல்லாத் துடைச்சு இருக்கிறன். நீ எடுக்கிறது எண்டா திரும்பவும் நல்லாக் கிளீன் பண்ணீட்டு எடுத்துக்கொண்டு போ. சரியே? காருக்குள்ள ஏறமுதல் திரும்பவும் ஜன்னலையும் கொஞ்ச நேரம் திறந்தவிடு.’
‘இதை எத்தினைமுறை சொல்லுவியள்? நான் சீக்கப்பிளையராக்கும். எனக்கு எப்பிடி நடந்து கொள்ள வேணும் எண்டு தெரியாதே?’
‘சரி… சரி… தெரியாமல் சொல்லீட்டன் தாயே. மன்னிச்சுக்கொள்.’
‘சரி அப்பா. என்ன சாப்பிடப் போகிறியள்? சொன்னியள் எண்டா நான் கொண்டு வந்து வைப்பன். பிறகு இவனுக்குச் சாப்பாடு குடுப்பன். அவன் ஒரேதா ரீவியிலும் கொம்பியூற்றரிலும் தொங்கிக் கொண்டு இருக்கிறான்.’
‘எனக்கா நீ இப்ப சமைக்கப் போறியா? சமைச்சதைக் கொண்டு வா.’
‘அதைத்தான் கொண்டு வரவேணும்.’
‘என்ன சமைச்சா?’
‘இறைச்சிக் கறி அப்பா.’
‘அது நல்லா இருக்கும். எனக்குத் தொடர்ந்தும் ஒரு மாதிரி இருந்தாலும் ஒரு பிடி பிடிக்க வேணும் எண்டும் ஆசையா இருக்குது. நீ கொண்டு வந்து வை.’
‘சரி. பிரசன் உங்களோடை கதைக்க வேணுமாம். ஸ்கைப்பில கதையுங்க. அவனுக்கும் சிறை மாதிரி இருக்குது.’
‘அது எண்டா உண்மை. எனக்கே சிறை மாதிரி இருக்குது எண்டா அவனுக்கு எப்பிடி இருக்கும்? நீதான் அவனுக்கு அலுப்படிக்காமல் பார்த்துக் கொள்ள வேணும்.’
‘பார்த்துக்கொள்ளுகிறன். நீங்கள் இப்ப அவனோடை கதையுங்க.’
‘அப்பா… அப்பா… மேல வாங்க அப்பா. இல்லாட்டி நான் கீழ வரட்டே அப்பா? அம்மாவோடை இருக்கச் சேடிலியா (அலுப்பா) இருக்குதப்பா.’
‘பிள்ளைக்கு அலுப்பாய் இருக்கும் எண்டு எனக்குத் தெரியும். ஆனா நான் இப்ப மேல வரமுடியாது. நீங்களும் இப்ப கீழ வரமுடியாது. அப்பாவுக்கு வருத்தம் இல்லை எண்டு தெரிஞ்ச பிறகு அப்பாவே மேல வருவன். ஓகேயா?’
‘எப்ப அப்பா முடிவு தெரியும்?’
‘கெதியாத் தெரியும் பிரசன்.’
‘கெதியா எண்டா எப்ப அப்பா? நாளைக்கு… இல்லாட்டி அடுத்த நாளா அப்பா?’
‘ம்… அப்பிடிதான்.’
‘இன்னுமா நாளைக்கு… நாளைக்கு…?’
‘பொறுமையா இருக்க வேணும் பிரசன். லாப்பில வேலை செய்கிற அவங்களுக்கும் நிறைய வேலை இருக்கும் எல்லோ? நீ நல்ல பிள்ளையா இருக்கோணும் சரியா?’
‘ம்… சரியப்பா.’
‘சரி… அப்பாவுக்கு உம்மா தா.’
‘உம்மா…’
‘உம்மா….’