அகிலனுக்கு அலுப்பாக இருந்தது. மருத்துவ மனைக்குச் சென்று வந்ததால் ஏற்பட்டதாய் இது இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அலுப்பென்றால் என்ன? வேலையா? வெட்டியா? நன்றாக உறங்கியெழ வேண்டியதே. அதற்கு ஏன் தேவை இல்லாது கவலைப்படுவான்? என்று எண்ணிய அகிலன் சென்று படுக்கையில் விழுந்தான். நெஞ்சிற்குள் விட்டு விட்டு நோவது போல இருந்தது. இது ஒன்றும் புதிது இல்லை. இப்படி இடைக்கிடையே நோவது பலகால வழக்கம். சில நேரத்தின் பின்பு அது மறைந்து போய்விடும். வாய்வுக் கோளாறு என்று ஊரில் சொல்வார்கள். அதே நேரம் சுவாசிப்பதற்கும் சாதுவாக அந்தரமாய் இருந்தது. வாய்வுக்கோளாற்றால் ஏற்பட்ட நோவின் பயத்தில் உண்டாகிய திணறல் இது என்பதை அவன் முழுமையாக நம்பினான்.

இருந்தும் தொடர்ச்சியாக அவனுக்கு ஏதோ அந்தரமாய் இருந்தது. இந்த நோவுடன் நித்திரை கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் உண்டாகியது. அவனுக்கு அதற்குமேல் நிமிர்ந்து இருக்கவும் முடியவில்லை. அவன் இயலாது படுத்துக் கொண்டான். உடம்பு குளிர்வது போல இருந்தது. போர்வையால் இழுத்துப் போர்த்திக் கொண்டான். சார்மினியை அழைத்து இதைப்பற்றிச் சொல்வதா என்கின்ற எண்ணம் ஒருமுறை உண்டாகியது. இப்பொழுது அழைத்தால் அவள் பயந்துவிடுவாள் என்கின்ற உண்மை விளங்க அந்த எண்ணத்தைக் கைவிட்டான். மிகவும் கடுமையாக இருந்தால் மட்டுமே அவளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவனாய் கண்ணை மூட முயன்றான். உடல் அலுப்பும் பலவீனமும் அவனை ஒருகணம் அமுக்கியது.

*

அகிலனுக்கு அதிசயமாக இருந்தது. எங்கோ அவன் திடீரென வந்திருந்தான். அங்கே அப்பா, அம்மா, மாமாக்கள், பாட்டிகள், தாத்தாக்கள் எனப் பலகாலம் பார்க்காத, பார்க்க முடியாத உறவினர்கள் சூழ்ந்து இருந்தார்கள். அது எந்த இடம் என்பது அவனுக்குச் சிறிதும் விளங்கவில்லை. அப்படியான இடத்தை அவன் ஒருபோதும் பார்த்ததில்லை. இவ்வளவு அழகான இடத்தில் இருக்கும் அந்த உறவினர்கள் ஏன் அவனைப் பார்த்துக் கவலை கொள்கிறார்கள் என்பதும் அவனுக்குப் புலப்படவில்லை. அவர்கள் கவலை கொள்வதற்கான காரணம் என்ன என்பது தெளிவற்ற, விடையற்ற வினாவாகியது. இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? தான் எதற்காக இப்பொழுது இங்கு வந்து இருக்கிறேன்? தான் வந்ததைப் பார்த்து ஆனந்தம் கொள்ளாது இவர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள்? என்று குழம்பிய அவனால் அதற்கு மேல் தனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் அம்மாவிடம் சென்றான். அம்மா அவனைப் பார்த்து இமயம் இந்நாளில் உருகுவதாய் கட்டற்றுக் கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீர் பெருக்கின் காரணம் பிடிபடாது அவன் இதயத்தை அக்காட்சி வாள் கொண்டு அரிந்தது. எதற்காக இந்தக் கவலை என்பது அவனுக்குத் தொடர்ந்தும் விளங்கவில்லை. அதற்கு மேல் தாயின் கண்ணீர் துளிகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொறுமை அவனிடம் இருக்கவில்லை. அவன் பாய்ந்து அம்மாவின் அருகே சென்றான். அவரின் கையைத் தனது கையால் பிடித்துக் கண்ணில் ஒற்றினான். அவசரமாக முத்தம் கொடுத்தான்.

‘அழாத அம்மா… அழாத… நீ எதுக்கு அம்மா இப்ப அழுகிறாய்? எல்லாரும் இங்க இருக்கினம். நானும் வந்திட்டன். நீ எதுக்கு அம்மா இப்ப தேவை இல்லாமல் அழுகிறாய்?’ என்றான்.
‘எல்லாரும் இருக்கினம் எண்டதுக்காக நான் இப்ப அழ இல்லை. நீ எதுக்கு இங்க வந்தாய் எண்டுதான் நான் அழுகிறன்? அதை நினைச்சு நினைச்சு அழுகிறன். நீயும் இங்க வந்தால் நான் எப்பிடியெடா சந்தோசமாய் இருப்பன்? உன்னை யாரடா இங்க வரச் சொன்னது? நாங்கள் தப்ப முடியாமல் இங்க வரவேண்டியதாய் போயிட்டுது. உனக்கு ஏனடா இந்த அவசரம்? ஏனடா நீ இங்க இப்ப அவசரப்பட்டு வந்தாய்? நீ இங்க வந்தா அங்க யாரடா சார்மினியைப் பார்த்துக் கொள்ளுவினம்?’
‘நான் எங்க வந்து இருக்கிறன் அம்மா?’
‘நீ எங்க வரக்கூடாதோ அங்க வந்து இருக்கிறாய்.’
‘என்ன சொல்லுகிறாய் அம்மா?’
‘உனக்கு எதுக்கெடா இந்த அவசரம்?’ அம்மா அவனைப் பார்த்து மீண்டும் கேட்டார்.
‘தெரியாதம்மா. ஆனா நான் உங்களைப் பார்க்க வேணும் எண்டு ஆசைப்பட்டன். அதுதான் வந்து இருக்கிறன். ஏன் அம்மா நான் உன்னைப் பார்க்க வரக்கூடாதே? நான் அவையோடதான் இண்டைக்கு இருந்தன். பிறகு எப்ப வெளிக்கிட்டன்… எப்பிடி இங்க வந்தன் எண்டு எனக்குத் தெரியாது. ஆனா உன்னைப் பார்க்கிறது பெரிய சந்தோசமாய் இருக்குதம்மா. உன்னைப் பார்த்து எவ்வளவு காலமாச்சுது?’
‘நீ இங்க வாறத்துக்குக் காலம் இருக்குதெடா. தயவு செய்து உடனடியகத் திரும்பிப் போயிடு. கெதியா இப்பவே போயிடு.’
‘நீ சும்மா இரம்மா. நான் போகிறன். ஆனா உடன போக முடியாது. உன்னோடை கொஞ்சக் காலம் இங்க இருக்க வேணும்.’
‘நீ உடன போக வேணும். இல்லாட்டி நீ திரும்பியே போக முடியாமல் போயிடும்.’
‘என்ன சொல்லுகிறாய் அம்மா?’
‘அவன் எங்களோடையே இருக்கட்டும்.’ என்று ஒரு மாமா இடையில் கூறுக்கிட்டார்.
‘உன்ரை பிள்ளை எண்டா நீ இப்பிடிச் சொல்லுவியே?’ அம்மா மிகவும் ஆக்ரோஷமாய் அவரைப் பார்த்து உரத்துக் கர்ச்சித்தார்.
‘எல்லாரும் இஞ்ச வரத்தானே வேணும்? நீ ஏதோ பெரிசாத் துள்ளுகிறாய். உனக்கு மாத்திரமே பிள்ளை இருக்குது? எனக்கும் இருக்கினம். அவையும் ஒருநாளைக்கு இங்க வரத்தானே போகினம். நான் அதுக்காக அழப் போகிறது இல்லை. நடப்பதை யாரும் தடுக்க முடியாது. விளங்குதா தங்கச்சி? கடவுளுக்கே அதுதான் விதி. உனக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்.’
‘உங்களிட்டை நான் இப்ப விளக்கம் கேட்க இல்லை அண்ணை. என்ரை வேதனை எனக்குத்தான் தெரியும்.’
‘நீ ஏன் அம்மா தேவையில்லாமல் பயப்பிடுகிறாய்? மாமா துணிவாகப் பிள்ளைகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிற மாதிரி நீங்களும் துணிவா இருக்க வேணும். எதுக்காக நான் உங்களிட்டை வாறதுக்கே பயப்பிட வேணும்?’
‘நீ இப்ப எங்க வந்திருக்கிறா எண்டு தெரியுமாடா?’
‘நான் எங்க வந்து இருக்கிறன்? எங்க வந்தாலும் திரும்பிப் போகிறதுதானே? அதில என்ன இருக்குது?’
‘விளங்காமல் கதையாத. நீ திரும்பிப் போய் சார்மினியைப் பார்க்க வேணும் எண்டா இப்பவே போ. பிறகு நீ என்ன பாடுபட்டாலும் திரும்பிப் போகவே முடியாது.’
‘ஏன் அம்மா? இது என்ன இலங்கை இராணுவ முகாமா? அல்லது ஏதாவது இயக்கத்தின்ரை முகாமா?’
‘பாவம் செய்கிறவைக்கு அப்பிடிதான் இது இருக்கும். புண்ணியம் செய்தவைக்கும் திரும்பிப் போகிற பாக்கியம் கிடையாது.’
‘புண்ணியம் செய்தவை சந்தோசமாய் இருப்பினமா? நீ சந்தோசமாய் இருக்கிறியா அம்மா?’
‘நான் சந்தோசமாய் இருந்தன். ஆனா இப்ப இல்லை. ஏதோ பாவம் செய்து இருக்கிறன்.’
‘இப்ப ஏன் சந்தோசமாய் இல்லை அம்மா? எதுக்குக் கவலை?’
‘நீ நல்லாய் வாழவேணும் எண்ட கவலை. அதால உண்டான ஆதங்கம்.’

அவன் தாயுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போழுதே ஆதிகாலத்து இராணுவம் போலப் பலர் திடு திடுமென அங்கே ஓடிவந்தார்கள். அவர்கள் அங்கேதான் ஓடி வருகிறார்களா என்பதை நிதானிக்க முன்பே அவர்கள் விரைவாக வந்து அவனைச் சூழ்ந்தார்கள். அகிலன் திகைத்து நிற்கும் போழுதே அவர்கள் சங்கிலி கொண்டு அவனைக் கெட்டியாக பிணைத்தார்கள். அகிலன் பலம் கொண்ட மட்டும் திமிறினான். அவர்களைப் பார்த்து,
‘என்னை எதற்கு அரஸ்ட் பண்ணுறீங்க?’ என்று கேட்டான். அவர்கள் அவன் கேட்பது விளங்காது அவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அகிலன் சிந்தித்தான். அவர்களுக்கு விளங்கும் மொழியில் கதைத்தாலே அவர்களுக்கு அது ஏறும் என்பது தெளிவாகியது. இவ்வாறு எண்ணியவன் பின்பு தனது மொழியைத் திருத்தித் தெளிவாகக் கதைத்தான்.
‘என்னை எதற்காகக் கைது செய்கிறீர்கள்?’
‘உன் காலம் முடிந்துவிட்டது. நீ எங்கும் தப்பிவிடாது உனது தீர்ப்பை இன்று பெறவேண்டும். அதற்காக உன்னைக் கைது செய்து உனக்கான காணக்கைபார்ப்பதற்கான உத்தரவு வந்தாகிவிட்டது.’
‘நீங்கள் யார் என் கணக்கைப் பார்க்க? எதற்காக நீங்கள் என் கணக்கைப் பார்க்க வேண்டும்? அவற்றை நான் வசிக்கும் நாட்டில் அரசே இலவசமாகப் பார்க்கிறதே?’
‘ம்… நாங்களே எல்லோர் கணக்கையும் பார்ப்பவர்கள். பார்த்த பின்பு அதை முடித்தும் வைப்பவர்கள். இது உனது ஆயுள் கணக்கு. மனிதர்களின் அற்பப் பணத்திற்கான கணக்கல்ல.’
‘என்ன பிதற்றுகிறீர்கள்? நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள்?’

‘நீயே உனது உலகு மாறி இங்கே வந்து இருக்கிறாய். உங்கள் உலகு எப்படியும் மாறி இருக்கலாம். எங்கள் உலகு எப்போதும் மாறாது. என்றும் ஈர் எண் வயதைத் தாண்டாதவர்கள் நாங்கள். அதன் விதிமுறைகளும் அப்படியே இருக்கும். அதிலிருந்து நீங்கள் என்றும் தப்பித்துக்கொள்ள முடியாது.’
‘நான் எனது உலகிற்குத் திரும்பிப் போக வேண்டும். எனக்காக மனைவியும் மகனும் காத்திருப்பார்கள். அவர்களை மேலும் காக்க வைக்க முடியாது.’
‘இந்த உலகிற்கு வந்தவர்கள் யாரும் அந்த உலகிற்குத் திரும்பிப் போக முடியாது. அதற்கு நீயும் விதி விலக்கல்ல. உனது மனைவிக்கு எப்பொழுது நேரம் முடிகிறதோ அப்பொழுது அவளும் இங்கே வந்தாக வேண்டும்.’
‘நான் அங்கே போக வேண்டும் என்கிறேன். நீங்கள் அவர்கள் இங்கே வருவார்கள் என்கிறீர்கள். உங்களுக்கு என்ன பயித்தியமா பிடித்து இருக்கிறது?’
‘எங்களுக்கு அல்ல. அது உனக்குப் பிடித்து இருக்கிறது. இதற்குமேல் உன்னோடு உரையாடிக் கொண்டு இருக்கமுடியாது. சேவகர்களே உடனடியாக இவனை இழுத்துக் கொண்டு வாருங்கள். இன்று உனது கணக்கு நன்கு பார்க்கப்படும். அதன் முடிவில் நீ எங்கு இருக்க வேண்டும்… என்ன செய்ய வேண்டும் என்பது அறியத்தரப்படும்.’
‘என்ன கூத்து இது? என்னை விட்டுவிடுங்கள். நான் அவசரமாகத் திரும்பிப் போக வேண்டும். எனக்காக அங்கே பலர் காத்திருக்கிறார்கள்.’
‘இழுத்து வாருங்கள் அவனை. அவன் தேவையற்ற பிரசங்கம் செய்துகொண்டு நிற்கிறான்.’
‘ஐயோ என்னை விடுங்கள்.’
‘பேசாதே… இழுத்து வாருங்கள் இவனை.’
‘ஐயோ… ஐயோ… என்னை விடுங்கள்.’
திடீரென அவன் வலது பாதத்தில் அடிபட்ட வேதனை உண்டாகியது. பக்கத்தில் நின்ற சிப்பாய் அடித்தானா? அவன் அந்த வேதனையில், ‘ஐயோ அம்மா…’ என்று கத்தினான். அதே வேதனையுடன் எழுந்து காலைத் தடவினான். அவனுக்குத் தான் எங்கே இருக்கிறேன் என்பது விளங்கத் தொடங்கியது. பக்கத்தில் நல்ல வேளையாக எந்தச் சிப்பாயும் நிற்கவில்லை. அந்த வேதனை காலிலிருந்து மட்டும் வரவில்லை. உள்ளிருந்து உடலெங்கும் பரவியதாகத் தோன்றியது. நெஞ்சிற்குள் நோவதோடு கடுதாசியைக் கசக்குவது போன்ற சளியின் சத்தம் கேட்டது. அந்தோடு உடல் எங்கும் முறிப்பதாக உளைந்தது. அதுவும் சுவாசத்தை இழுத்துவிடும் பொழுது ஊசிமுனையால் சுவாசப்பை எங்கும் உறுத்துவது போல வேதனையாக இருந்தது. சுவாசிப்பதே கடுமையாக இருக்கும் இந்தே வேளையில் மூச்சுவிட முடியாதவாறு இருமலும் வந்தது. அகிலனுக்கு உடல் காய்வதும் விளங்கியது. அதனால் மேலும் குளிராக இருந்தது. உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. அது தன்னைத் தானே வெப்பமாக்கிக் கொள்ளும் தந்திரம் என்பது அவனுக்கு விளங்கியது? அப்படி என்றால்? அவனுக்குப் பயமாக இருந்தது. தனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என்பதை எண்ண அழுகை வந்துவிடும் போலத் தோன்றியது. என்ன செய்வது என்று முழுமையாக அவனுக்கு முதலில் விளங்கவில்லை. சார்மினிக்குக் கூறினால் அவள் அதிர்ந்து போய்விடுவாள் என்பது விளங்கியது. அவளிற்குக் கூறாமலும் அம்புலன்சை அழைக்கலாம். அவனால் தொடர்ந்து சிந்திக்க முடியவில்லை. இருமல் தூக்கித் தூக்கிப் போட்டது. இந்த இருமலுடன் அவர்களுக்கு விளங்கப்படுத்துவது இலகுவான காரியம் இல்லை என்பது விளங்கியது. வெளியே இன்னும் இருட்டாகவே தோன்றியது. அவன் ஒருவாறு திறன்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான். இரவு ஒருமணியாகிவிட்டது. விடிந்தால் வருத்தம் நீங்கிவிடலாம் என்கின்ற எண்ணம் முதலில் வந்தது. ஆனால் கொரோனாவாக இருந்தால் விடியும் பொழுது மேலும் கடுமையானாலும் கடுமையாகலாம். கொரோனாவைத் தவிர வேறு வருத்தமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எல்லா அறிகுறிகளும் அதை நோக்கியே காட்டியது. அப்படி என்றால் அதிக நேரம் வீட்டில் தாமதிப்பது புத்திசாலித்தனமாகாது. ஒன்று ஒன்று மூன்று என்கின்ற அம்புலன்சின் எண் அவனுக்கு ஞாபகம் இருந்தது. திறன்பேசியை எடுத்தான். அவனால் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை.

மூச்சு எடுக்க முடியாது மீண்டும் கடுமையாக இருமியது. அவன் அந்த இருமலில் திறன்பேசியைக் கைவிட்டான். சில நிமிடங்கள் உலுக்கிய இருமல் ஒருவாறு ஓய்ந்தது. ஆனாலும் நெஞ்சு எங்கும் இரத்தம் சிந்தும் புண்ணாக வலித்தது. ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவனால் எதையாவது பருக முடியுமா என்கின்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகியது.

அவன் சிறிது நேரம் இருமிய களைப்பில் படுத்து இருந்தான். படுத்து இருக்கும் பொழுதே வர வர இருமல் அதிகரிப்பது அவனுக்கு விளங்கியது. இரும இரும நெஞ்சு நோ அதிகரிப்பதையும் அவனால் உணர முடிந்தது. மீண்டும் மூச்சுத் திணறியது. இருந்தும் ஒருவாறு சமாளித்து திறன்பேசியை எடுத்து அம்புலன்சிற்கு இணைப்பை ஏற்படுத்தினான். அதை எடுத்துக் ‘கலோ’ என்றான். அடுத்த முனை உயிர் பெற்றுக்கொண்ட அதே நேரம் சுனாமி போல இருமல் மீண்டும் நெஞ்சை அறுத்துக் கொண்டு புறப்பட்டு அவனைத் தாக்கியது. அவனால் மூச்சு எடுக்கவோ கதைக்கவோ முடியவில்லை. அடுத்தமுனை முகவரி கேட்டது. தொடர்ந்து விபரம் தருமாறு கேட்டது. மீண்டும் மீண்டும் அவனைப் பேசுமாறு மன்றாடிக் கேட்டது. அவனால் அது முடியவில்லை. அவன் அதைத் துண்டித்தான். பின்பு வாயைத்  துணியால் பொத்திக் கொண்டான். இதைக் கேட்டுச் சார்மினியும் பிரசனும் பயந்து விடுவார்களோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது.

சில நிமிடங்களின் பின்பு இருமல் ஒருவாறு சிறிது ஓய்ந்தது. நெஞ்சு புண்ணாக நோவது மேலும் கூடி இருந்தது. உடலின் சக்தியை இருமல் உறிஞ்சியதில் அது வலுவற்றுக் காற்றில் பஞ்சாய் மிதப்பதாய் தோன்றியது. அடுத்த இருமல் இனி எப்போது வரும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. எப்படி அவர்களைத் தொடர்புகொண்டு முழு விபரங்களையும் கூறுவது என்றும் விளங்கவில்லை. இந்த வருத்தம் இவ்வளவு வேதனையைத் தரும் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவ்வளவு விரைவாக அது இப்படித் தாக்கும் என்கின்ற எண்ணம் அவனிடம் இருந்ததில்லை. அவன் மீண்டும் திறன்பேசியைக் கையில் எடுத்தான். இப்போது மீண்டும் அழைப்பை ஏற்படுத்தப் பயமாக இருந்தது. இம்முறையும் கதைக்க முடியாது போய்விட்டால் மறுமுறை அழைக்கும் பொழுது அவர்கள் வராமல் விட்டுவிடலாம் என்கின்ற பயம். என்ன செய்வது என்று மீண்டும் மீண்டும் அவன் யோசித்தான்.

சார்மினியை அழைத்து அவளிடம் விடையத்தைக் கூறிவிட்டால் என்ன என்கின்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் திறன்பேசியை எடுத்தான். மீண்டும் பலமாக இருமல் வந்தது. மூச்சு நிறுத்தி நிறுத்தி வருவது போல நெஞ்சிற்குள் வலி ஊளித் தாண்டவம் ஆடியது. மீண்டும் மீண்டும் தூக்கிப் போடும் இருமலுடன் அவளை எப்படித் தொடர்பு கொள்வது என்கின்ற கேள்வி எழுந்தது. அவன் இருமிய வண்ணம் திறன்பேசியில் செய்தியை எழுதத் தொடங்கினான். அதுவே அவனால் தற்போது செய்யக்கூடிய இலகுவான வழியாகத் தோன்றியது. அதைத் தனது இருமல் தடுத்துவிட முடியாது என்பது அவனுக்கு விளங்கியது.

அவன் ‘தயவு செய்து உடனடியாக அம்புலன்சைத் தொடர்பு கொள்ளவும். எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது என்று அவர்களிடம் கூறவும். அப்படிக் கூறினால் மட்டுமே அவர்கள் விரைவாக வருவார்கள். தயவு செய்து நீ பயந்து விடாதே. அவன் குழப்பம் அடையாது பார்த்துக்கொள். அம்புலன்ஸ் வந்தால் வெளியே வா. நான் உன்னுடன் அப்பொழுது கதைக்க வேண்டும்.’ என்று  ஒருவாறு நெடுஞ்செய்தி எழுதி அனுப்பினான். அப்படி ஒரு முறை அனுப்பிய பின்பு அவள் அதைப்பார்க்காவிட்டால் என்கின்ற பயமும் தோன்றியது. அதற்கும் ஒரு வழி அவனிடம் கைவசம் இருந்தது. அவன் திறன்பேசியால் சார்மினியை அழைத்துவிட்டு அதைத் துண்டித்துக் கொண்டான். அது வேலை செய்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அவள் அழைத்தாள். அவள் குரல் பதட்டமாக இருந்தது. எடுத்த உடனேயே கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினாள்.
‘என்னப்பா செய்யுது? எனக்கு உங்கடை எஸ்.எம்.எஸ்சைப் பார்த்துப் பயமா இருக்குது. ஏதாவது கடுமையா இருக்குதா அப்பா? உங்களைத் திரும்பவும் கேட்டிட்டு அம்புலன்ஸ்சிற்கு போன் பண்ணுவம் எண்டு நினைச்சன். அதுதான் அப்பா உங்களுக்கு இப்ப போன் எடுத்தனான்.’
‘எனக்கு ஒண்டும் கடுமையில்லை. ஆனாக் கடுமையாக்கிறதுக்கு முதல்ல கொஸ்பிற்றலுக்குப் போகிறது நல்லது எண்டு எனக்குப்படுகுது… அதாலதான் உண்னைப் போன் பண்ணச் சொன்னானன்.’  அகிலனுக்கு அவளோடு கதைத்துக் கொண்டு இருக்கும் போழுதே இருமத் தொடங்கியது.
‘என்ன செய்யுதப்பா உங்களுக்கு? என்ன செய்யுதப்பா உங்களுக்கு?’ என்று அவள் மீண்டும் மீண்டும் கதறினாள். அந்த இருமலின் சத்தத்தைக் கேட்டு அவள் பயந்துவிட்டாளோ என்று அவனுக்குக் கவலையாக இருந்தது. இருந்தும் அதற்குச் சொல் வடிவம் கொடுக்க முடியாது அந்த இருமல் அவனைத் தொடர்ந்தும் வாட்டி எடுத்தது.
‘என்ன செய்யுதப்பா உங்களுக்கு?’ என்று மீண்டும் சார்மினி கேட்டாள். அகிலன் தொடர்ந்தும் இருமினான். பின்பு இதற்கு மேல் அவள் இதைக் கேட்க வேண்டாம் என்கின்ற கவலையுடன் திறன்பேசியைத் துண்டித்தான்.

திறன்பேசியைத் துண்டித்ததால் மிகவும் கவலையும் பயமும் கொண்ட சார்மினி சிறிது நேரம் அதிர்ந்து போய் இருந்தாள். பின்பு நிலைமை அவளுக்கு உறைக்க உடனடியாக ஒன்று ஒன்று மூன்றிற்குத் தொடர்பு கொண்டாள். அவளால் நிலைமையை விளங்கப்படுத்த முடிந்தது. தான் யார் தன்னுடைய நிலைமை என்ன என்பதையும் விளங்கப்படுத்த முடிந்தது. அவளின் விளக்கத்தைக் கேட்டவர்கள் உடனடியாக அம்புலன்ஸ் வரும் என்றார்கள்.

சார்மினிக்கு எல்லாம் கனவு போல இருந்தது. சிறிது நேரம் என்ன செய்வது என்று விளங்கவில்லை. நிலைமை விளங்கியதும் உடனடியாகத் தனது உடையை மாற்றிக்கொண்டு பாதாள அறைக் கதவைத் திறப்பதற்கான சாவியையும் எடுத்துக் கொண்டாள். வெளிக்கதவைத் திறந்துவிட்டு அவள் அம்புலன்சிற்காய் காத்திருந்தாள். தற்போது வெளியே குளிராக இருப்பதால் சத்தம் கேட்டதும் வெளியே போகலாம் என்பது அவள் எண்ணமாகியது.

அவளுக்கு நடக்கும் விடயங்கள் அனைத்தையும் நம்ப முடியாமல் இருந்தன. எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் என்கின்ற கவலையும் பயமும் அவளைக் கொன்றது. எதனால் இது நடக்கிறது என்பதை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு அவதானமாய் இருந்தும் எங்களுக்கு ஏன் இந்த நிலை வரவேண்டும் என்பது அவளுக்குத் தெரியவில்லை. எங்கே பிழை விட்டோம் என்பது மங்கலாக விளங்கியது. அது சுரங்க ரதத்திலேயே நடந்து இருக்க வேண்டும். அதை அவரால் தவிர்க்க முடியாது போய்விட்டது. இருந்தாலும் அவர் விரைவாகக் கூறியதும் அதனால் உசாராகியதும் பிரசனுக்காவது பாதுகாப்பாய் அமைந்து இருக்கிறது. கடவுளே அவருக்கு எதுவும் ஏற்படக்கூடாது. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அவள் மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது,
‘அம்மா…’ என்கின்ற அழைப்பு மிகவும் அருகில் கேட்டது. சார்மினி இதை எதிர்பார்க்காததால் அதிர்ந்து போய்விட்டாள். இருந்தாலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவாகச் சிந்தித்தாள்.
‘என்ன கண்ணா…? ஏன் இப்ப எழும்பி வந்தா?’
‘நான் சுச்சா போக எழும்பினன் அம்மா. உன்னை அங்க காண இல்லை. அதுதான் தேடி வந்தன் அம்மா. ஏன் நீ இங்க வந்து இருக்கிறாய்? இப்ப எங்க என்னை விட்டிட்டுப் போகப் போகிறாய்? என்னைத் தனியாவா விட்டிட்டுப் போகப் போகிறாய்? சொல்லு அம்மா… சொல்லு…?’
‘இல்லையடா கண்ணா… நீ இங்க வா…’
‘சொல்லம்மா?’
‘வா உடுப்பு மாற்றிக்கொண்டு வருவம்.’
‘ஏன் அம்மா?’
‘அதுவா? நான் சொல்லுகிறன் வா.’
‘நாங்கள் எங்க போகப் போகிறம் அம்மா?’
‘வெளிய போயிட்டு வருவம். அம்புலன்ஸ் இப்ப வரும். அது வந்து போன பிறகு நாங்கள் திரும்ப வீட்டை வரலாம்.’
‘ஏன் அம்புலன்ஸ் இங்க வரும் அம்மா?’
‘அப்பாவுக்குக் கடுமையா இருக்குதாம். அதுதான் நான் அம்புலன்சிற்கு போன் பண்ணி இருக்கிறன். அது இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்.’
‘நான் இருமினாலும் அம்புலன்ஸ் வருமா அம்மா?’
‘கடுமையான இருமல் எண்டா அது வரும். அது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது கண்ணா.’
‘நான் கண்ணனா என்ன? அப்பா அம்புலன்சில போயிடுவாரா அம்மா?’
‘உனக்குப் பிரசன் எண்டு பெயர் இருந்தாலும் நீ எனக்குக் கண்ணன்தான். சரி நீ இப்ப ஜக்கற்றைப் போடு பார்ப்பம்.’
‘பதில் சொல்லம்மா… அன்புலன்சில அப்பா போயிடுவாரா?’
‘அடம் பிடிக்கக்கூடாது கண்ணா.’
‘அப்பா போயிடுவாரா எண்டு சொல்லம்மா?’
‘ம்… அப்பா அன்புலன்சில போயிடுவார்.’
‘உண்மையாவா அம்மா.’
‘உண்மையாகத்தான் கண்ணா?’
‘அப்ப நான் அப்பாவுக்கு உம்மா குடுக்க வேணும்.’
‘அதெல்லாம் குடுக்க முடியாது கண்ணா. அப்பாவுக்கு என்ன வருத்தம் இருக்குது எண்டு டொக்ரர் கண்டு பிடிக்கும் வரைக்கும் நாங்கள் கிடப் போக்கூடாது.’
‘அது கொரோனா இருக்கிறவைக்கு மட்டும் எண்டு பள்ளிக்கூடத்தில சொல்லிச்சினம்?’
‘கொரோனாவாக இருக்குமா எண்ட சந்தேகம் இருந்தாலும் அப்பிடித்தான்.’
‘அப்ப அப்பாவுக்கும் இருக்குது எண்டு சந்தேகமா?’
‘தெரியாது கண்ணா. அதுக்கான முடிவு இன்னும் வரயில்லை. ஆனா அப்பாவுக்குக் கஸ்ரமாய் இருக்குதாம். எதுக்கும் பாதுகாப்பாய் இருக்க வேணும் எண்டதால அப்பா இப்பவே கொஸ்பிற்றலுக்குப் போகிறார். நீ இதைப் பற்றி எல்லாம் தேவை இல்லாமல் கவலைப்படத் தேவை இல்லை. அப்பாவுக்கு டாட்டா சொன்னால் அது போதும். விளங்கிச்சுதா கண்ணா?’
‘நீ மோசம் அம்மா?’
‘ஏனடா கண்ணா?’
‘அப்பாவையே கட்டிப்பிடிக்கக்கூடாது எண்டுகிறாய்?’
‘நான் வேணும் எண்டா சொல்லுகிறன்? உனக்கு ஸ்கூல்ல ஒண்டும் சொல்ல இல்லையா?’
‘அது வெளியாட்களுக்கு… அப்பாவுக்குமா அம்மா? அப்பிடிச் சொல்ல இல்லை.’
‘வருத்தம் இருக்குது எண்டு சந்தேகம் வந்தால் அப்பாவுக்கும்தான்.’
‘அப்ப அப்பாவுக்கு வருத்தம் இருக்கா அம்மா?’
‘எனக்குத் தெரியாது. முடிவு இன்னும் சொல்ல இல்லை. அது வாற நேரம் வரட்டும். வா நாங்கள் இப்ப வெளிய போவம்.’

சார்மினி கதையை மாற்ற முயன்றாள். பிரசனின் முகம் வாடிப் போயிற்று. அவன் கடுமையாகச் சிந்திப்பது அவளுக்கு விளங்கியது. அப்பா இனித் திரும்பி வரமாட்டாரோ என்று அவன் பயந்துவிடக்கூடும் என்கின்ற கவலை அவள் மனதை அரக்கன் போல ஆக்கிரமித்து இருந்தது. அம்புலன்ஸ் சத்தம் சாதுவாகக் கேட்கத் தொடங்கியது. அவள் பிரசனின் கையைப் பிடித்தாள். சாவிகளை எடுத்துக் கொண்டு மெதுவாக வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவனிடம் மலையிலிருந்த துள்ளல் இப்போது அமாவாசை நிலவு போல மறைந்து போய் இருந்தது. அதைப் பார்க்கும் போது சார்மினிக்கு இதயம் புண்ணாக நொந்தது. அவனை எதற்காகவும் அவள் கவலைப்படுத்தியது இல்லை. அப்பாவோ அம்மாவோ மறந்தும் அவன் மீது கைவைத்தது இல்லை. இன்று அவன் மனதை நெரிந்தோ தெரியாதோ புண்படுத்த வேண்டி வந்துவிட்டது. அவள் வெளியே வந்துவிட்டாள். அம்புலன்ஸ் மிக அருகில் வந்துவிட்டது போல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. அன்புலன்ஸ் வந்தால் சாவியைக் கொடுக்க வேண்டும் என்கின்ற ஆயுத்தத்தில் சார்மினி தயாராக நின்றாள். அப்போது பாதாள அறைக்கதவு உள்ளிருந்து திறந்தது. அகிலன் தள்ளாடித் தள்ளாடி வெளியே வந்தான். அவன் இடைக்கிடையே கடுமையாக இருமுவதையும் சுவாசிப்பதற்குக் கஸ்ரப்படுவதையும் அவள் கண்டாள். அதைக் கண்டு அவள் கம்பனின் கடன்பட்டார் நெஞ்சம் போல் கதிகலங்கி நிற்கையில் பிரசன் அவளது பிடியைத் தளர்த்திவிட்டு ஓட முயன்றான். சார்மினி நிலைமையைச் சமாளித்து அவன் கையை மீண்டும் பலமாகப் பற்றிக் கொண்டாள். அதிலிருந்து விடுபட அவன் முயற்சிக்க முயற்சிக்க அவள் பிடி இறுகியது. இது வன்முறை என்பது அவளுக்கு விளங்கியது. இருந்தும் அதைவிட வேறு வழி இருப்பதாக அவளுக்கு அப்போது தோன்றவில்லை.

அகிலனால் நிற்க முடியவில்லை. சார்மினியைப் பார்த்துக் கையைக் காட்டினான். பின்பு நிலத்தில் இதுவே தஞ்சமென இருந்தான். இடையில் இருமல் சற்று ஓய்ந்து இருந்தது.
‘நீங்கள் இரண்டு பேரும் கவனமா இருங்க.’
‘என்ன அப்பா இது? என்ன சோதனை அப்பா இது?’
‘நாங்கள் என்ன செய்கிறது. யாரும் இப்படி வரும் எண்டு எதிர் பார்த்தவையே? தெரிஞ்சால் நான் தேவாணில போய் இருப்பனே? இப்ப முக்கியமானது நடந்தது பற்றிக் கதைக்கிறது இல்லை. நடக்கப் போகிறது பற்றிய தெளிவான சிந்தனையோடை இருக்கிறது. நீங்கள் எதுக்கும் பயப்பிடாமல் கவனமா, அவதானமாக இருங்க. எல்லாம் கெதியாச் சாரியாகும் எண்டு நினைக்கிறன்.’
‘அப்பா… அப்பா…’ பிரசன் கையை நீட்டி நீட்டி அழத் தொடங்கினான். அதைப் பார்த்த அகிலனுக்கு வருத்தத்தை வென்ற வருத்தமாக இருந்தது. எது எப்படி என்றாலும் ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைக்க முடியாது என்பது அவனுக்கு நன்கு விளங்கியது.

அகிலனின் கண்கள் கொடும் வெயிலில்பட்ட மெழுகாக்கத் தொடர்ந்தும் கரைந்து அவன் பார்வையை மறைத்தது. அதில் சார்மினியும், பிரசனும் கரைந்து மறைந்து போகும் காட்சி அவனிற்குப் புலப்பட்டது. அதை அவனால் தாங்க முடியவில்லை. அவசரமாகக் கண்களைத் துடைத்து மீண்டும் அவர்களைத் தெளிவாகப் பார்க்க முயன்றான். அவன் அந்த முயற்சியில் போராடிக் கொண்டு இருக்கும் பொழுதே அம்புலன்ஸ் வேகமாக வந்து அவர்கள் வீட்டிற்கு முன்பு நின்றது. அதிலிருந்து இருவர் மிகவும் அவசரமாக இறங்கி வெளியே வந்தனர்.

அவர்கள் நோயாளியைப் படுக்க வைக்கும் கட்டில் ஒன்றையும் தள்ளிக் கொண்டு வந்தார்கள். முகக்கவசம், அதை மூடிய பிளாஸ்ரிக் கவசம், உடையைப் பாதுகாக்கும் மேலுறையுடன் கையுறையும் அணிந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அகிலனுக்கே இந்த வருத்தம் இவ்வளவு கொடியதா என்கின்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் அந்த எண்ணங்களுக்குத் தற்காலிக விடுப்புக் கொடுத்து அவர்களைப் பார்த்தான். அப்படி வந்தவர்கள் அகிலனையும் அவன் இருக்கும் கோலத்தையும் அவதானித்து இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் அனுபவங்கள் காரணமாய் இருந்து இருக்கலாம். அவர்கள் நேரடியா அவனிடம் சென்றனர்.
‘உங்கள் பெயர் என்ன?’
‘அகிலன் சோமசுந்தரம்’
‘உங்களுக்காகத் தொடர்பு கொண்டது யார்?’  அவன் சார்மினியை நோக்கிக் கையைக் காட்டினான். அவனால் கதைக்க முடியாது இருந்தது. அதற்கு அவனை ஆக்கிரமித்த இருமலே காரணம். அந்த இருமலோடு அவனின் நிலைமை அவர்களுக்கு நன்கு விளங்கி இருக்க வேண்டும். அவர்கள் கொண்டு வந்த கட்டிலில் அகிலன் ஏறிப்படுப்பதற்கு உதவி செய்தனர். படுக்கையில் ஏறியதும் அகிலன் சார்மினியையும் பிரசனையும் பார்த்தான். மீண்டும் கண்ணீர் அவன் பார்வைக்குத் திரையிட அவர்கள் கலங்கலாகத் தெரிந்தனர். அந்தக் கலங்கலிலும் பிரசன் அப்பா அப்பா என்று கையைக் காட்டி அழுவதை அவன் கண்டான். அவன் இதயம் வேதனை தாங்காது வெடிப்பதாய் அச்சுறுத்தியது. அம்புலன்சில் வந்தவர்களுக்கு எதற்காகவும் தாமதிக்கும் எண்ணம் இருக்கவில்லை. அவர்கள் மெதுவாக வண்டியின் பின்கதவைச் சாத்தினர். அதன் பின்பு முன்கதவும் சாத்தப்பட்டது. வண்டி மீண்டும் ஒலியுடன் புறப்பட்டது. சார்மினியும் அதைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். பிரசன் அவளைப் பார்த்து அழுதான். அகிலன் வண்டிக்குள் வேதனை தாங்காது கண்ணீர் வடித்தான்.

*

மருத்துவ மனைக்குச் சென்ற பின்பு இரண்டு நாட்கள் அகிலன் சார்மினிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். மூன்றாவது நாள் இரவு எட்டு மணிக்கு தனக்கு மயக்க வருவது போல இருப்பதாகக் குறுஞ்செய்தி அனுப்பினான். அதன் பின்பு அவனிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால் சார்மினியால் அதை ஏற்றுக் கொண்டு சும்மாய் இருக்க முடியவில்லை. அவள் மருத்துவமனையுடன் தொடர்புகொண்டு தகவல் அறிந்தாள். அவர்கள் அகிலனுக்குச் சுவாசிப்பதற்குக் கடினமாக இருப்பதாகவும், அவனிற்குச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு இருப்பதாயும், அவர் இப்போது கதைக்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார்கள். அதன் அர்த்தம் என்ன என்பது அவளுக்கு விளங்கியது. ஐயோ என்று கத்தி அழ வேண்டும் போல இருந்தது. அப்படி அழுதால் பிரசன் பயந்துவிடுவான் என்பதால் அவள் அதை மனதில் அடக்கிக் கொண்டாள். ஆனால் மனதிற்கு யார் கட்டப்பாடு போட முடியும்? அவள் பல தெய்வங்களுக்கு நேர்த்தி வைத்தாள். அந்தக் கடவுள்களின் அருளால் அகிலன் மீண்டுவருவான் என்று மிகவும் நம்பி இருந்தாள்.

ஐந்து நாட்களுக்கு அவர்கள் ஒரே பதிலையே அவளுக்குக் கூறினார்கள். சார்மினிக்கு மருத்துவ மனைக்கே செல்ல வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் வெளியார் யாரும் செல்ல முடியாது என்பதும் அவளுக்கு நன்கு தெரியும். அவள் நம்பிக்கையோடு ஆண்டவனைப் பிரார்த்தித்தாள். மனிதனால் மனிதனைக் காக்க முடியாத பொழுது வேறு யாரிடம் போவது என்பது அவளுக்கு விளங்கவில்லை. மனிதனை மனிதனால் இப்படிக் காப்பாற்ற முடியாத காலம் வரும் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.

பிரசன் ‘அப்பா எப்ப அம்மா வருவார்?’ என்று அடிக்கடி  கேட்கும் பொழுது என்ன பதில் சொல்வது என்பது அறியாத திகைப்பே முதலில் அவளுக்கு உண்டாகும். பின்பு ‘அப்பா கெதியா வருவாரடா கண்ணா.’ என்று சொல்லிச் சமாளிப்பாள். அவள் அப்படிச் சொல்லும் பொழுது அவன் அவளை ஊன்றிக் கவனிப்பது போல இருக்கும். ஏன் அப்படிப் பார்க்கிறான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. இந்த விளக்கம் இன்மை அவளுக்குப் பெரும் பீதியை உண்டு பண்ணியது. இப்படி வாழ்க்கையில் வரக்கூடாத ஐந்து நாட்கள் அவள் வாழ்க்கையில் வந்து போனது. ஆறாவது நாள் அந்தத் தொலைப்பேசி வந்தது. அவள் முதலில் பயத்தில் உறைந்தாள். பின்பு அப்படி இருக்காது என்கின்ற நம்பிக்கையோடு அதை எடுத்தாள். அடுத்த கணம் அவள் பிரசனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.

எத்தினை புன்நகைமலர்கள் அவள் முகத்தில்
இத்தினை இடைவெளி இல்லாது பூத்தது?

–முற்றும்–