முகமூடிகள்

பாட்டிக்குப் பற்கள் எதுவும் அற்ற பொக்கை வாய். அந்த வாயில் எப்போதும் தவழும் புன்சிரிப்பு. இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பொக்கை வாய்க்குப் பற்கள் கட்டியது இல்லை. பல் இல்லாது வாழ்ந்த பாட்டி பழைய கலாச்சாரங்களின் உறைவிடம் என்று சொல்லலாம். கச்சைக் கட்டாது சேலை கட்டும் காலத்தைச் சார்ந்தவர் அவர். ரமணனுக்குப் பாட்டியின் வாசம் தெரியும். அவரின் பாசம் தெரியும். சாப்பாட்டைக் குழைத்து வாயில் அன்போடு ஊட்டினால் அதில் இருக்கும் சுவை விளங்கும். பாட்டி உணவோடு நின்றுவிடாது ரமணனுக்குப் பலவிதமான அறிவும் ஊட்டினார். அந்தப் பாட்டி ரமணனுக்காக ஒரு முகமூடி செய்தார். அது ஒரு அழகான, அற்புதமான முகமூடி. அதில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. அந்தச் சிறப்பு அம்சங்களை ரமணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடே பாட்டி அதை வனைந்தார் என்பது ரமணனுக்கு விளங்கத் தொடங்கியது. ரமணனுக்குப் பாட்டி மீது மிகவும் பாசம். பாட்டி சொல்லது அர்த்தம் நிறைந்த நாம் பின்பற்ற வேண்டியவையே என்கின்ற அசையாத நம்பிக்கையும் இருந்தது. பாட்டி வனைந்த முகமூடியை உடனடியாக அவனிடம் பாட்டி கொடுத்துவிடவில்லை. அதற்கு மேலும் மேலும் அவர் அழகூட்டினார். இறுதியில் இறக்கும் தறுவாயில் பாட்டி ரமணனிடம் அந்த முகமூடியை முற்றுமாய் கையளித்தார். ரமணன் அதைப் பெருமையோடும் பொறுப்போடும் பெற்றுக் கொண்டான். பெற்றுக் கொண்டதோடு மட்டும் நிற்காது அதை அணிந்தும் கொண்டான். அது அவனுக்கு அழகாக இருந்தது.
பாட்டி இறந்த பின்பு அவன் கையில் அவர் தந்த முகமூடி அவர் நினைவாக எப்போதும் இருந்தது. அதை அணிந்து கொள்வதில் அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அதில் பொதிந்து கிடந்த அனைத்து அம்சங்களையும் அவன் ஆழ்ந்து கவனிப்பான். அது அவனுக்கு அடங்காத பூரிப்பை உண்டு பண்ணும். இவ்வளவு கைவண்ணமும் அறிவும் பாட்டியிடம் இருந்ததை அவன் அவர் உயிரோடு இருந்த போது முழுமையாக அறிந்து இருக்கவில்லை.
காலம் ஏவுகணையாக வயதுகளைப் பின்தள்ளி வாழ்க்கையை முன்நகர்த்தியது. பாட்டி போன பின்பு அம்மா ரமணனை அதிகம் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பாட்டி கொடுத்த முகமூடி பற்றித் தெரியும். அதை ரமணன் அணிவதையும் பார்த்து இருக்கிறார். அவருக்குத் தானும் ஒரு முகமூடி செய்து ரமணனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்போதோ உருவாகி இருந்தது. ஆனாலும் நிறைய வீட்டு வேலைகள் அவருக்கு இருந்தன. இருந்தும் கஸ்ரப்பட்டு நேரம் ஒதுக்கி அதற்கு அவர் செயல் வடிவம் கொடுத்தார்.
அவர் அதைச் சிறிது சிறிதாகச் செருக்கித் தனக்குத் தெரிந்த சித்திரங்கள், வர்ணங்கள் என்று அதில் பொதிந்து, அதை ஒரு கலைப் பொக்கிசமாக உருவாக்கத் தொடங்கினார். ரமணன் அதைப் பார்த்து இரசித்தான். அதை அம்மா மொத்தமாக ஒரு நாள் தன்னிடம் தருவார் என்பது அவனுக்குத் தெரியும். அது தனது கைக்கு வரும் காலத்திற்காக அவன் காத்திருந்தான். அம்மா அதை ஒரு நாள் அவனிடம் எதிர்பார்த்தது போலக் கொடுத்து அவனைக் கவனமாக வைத்திருக்குமாறு கூறினார். அதை அவன் பெருமையோடு வாங்கி அணிந்து அழுகு பார்த்தான். அவனுக்கு அம்மா மீது அளவுகடந்த அன்பாக இருந்தது. அம்மா முகமூடி செய்வதை ரமணனின் அப்பா அவதானித்துக் கொண்டு வந்தார். அவருக்கு அதைவிட அழகான முகமூடி ஒன்று செய்து ரமணனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் அதைச் செயற்படுத்தினார். அவர் அப்படி ஒரு முகமூடி செய்வது யாருக்கும் தெரியாது. ரமணனுக்கும் அது தெரியாது. அப்பா தனக்காக இவ்வளவு நேரம் செலவழித்துச் செய்வார் என்று அவன் எண்ணி இருக்கவில்லை. ரமணனின் அப்பா செய்த முகமூடியை அவர் உடனடியாக ரமணனிடம் கொடுத்துவிடவில்லை. அவர் அது ரமணனின் அம்மா செய்ததைவிட அழகாக, யொலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்தார். அதற்காக அதிக காலம் செலவழித்தார்.
அப்படிச் சில காலம் கழிந்த பின்பு ரமணனிடம் அப்பா தனது அந்த முகமூடியைக் கொடுத்தார். ரமணன் அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டான். அதைப் பார்க்க அது பாட்டி, அம்மா ஆகியோர் தந்ததைவிட மிகவும் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் அதை மிகவும் பெருமையோடும், ஆர்வத்தோடும் அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டான். பாட்டி, அம்மா, அப்பா ஆகிய மூவரும் ரமணனுக்கு முகமூடி செய்து பரிசாகக் கொடுத்ததை பார்த்த அக்காள் இரகசியமாக ரமணனுக்காக ஒரு முகமூடி செய்தார். அவர் முகமூடி செய்தது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் திடீரென ரமணனின் முன்பு வந்து அதைப் பரிசாகக் கொடுத்தார். ரமணனுக்கு மிகவும் சந்தோசமாகவும், திகைப்பாகவும் இருந்தது. அவன் அக்காவிற்கு நன்றி கூறிய வண்ணம் அதையும் வாங்கி ஆசையோடு அணிந்து கொண்டான்.
அது அத்தோடு நின்றுவிடவில்லை. அக்காளைப் பார்த்த அண்ணனும் ஒரு முகமூடி செய்து கொடுத்தான். அதைப் பார்த்த தம்பி தங்கச்சி ஆகியவர்களும் தங்களால் இயலுமான வரையில் செதுக்கி, அழகுபடுத்திய முகமூடிகளை ரமணனுக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அவன் அவற்றையும் வாங்கி ஆனந்தமாய் அணிந்து கொண்டான். இவற்றைக் கேள்விப்பட்ட ஆசிரியர்கள், சக மாணவர்கள், நண்பர்கள் என்று அவனிடம் பல முக மூடிகள் பரிசாக வந்து சேர்ந்தன.
இப்படிக் கிடைத்த எண்ணற்ற முகமூடிகளை அணிந்து அணிந்து அவன் அழகு பார்த்தான். இப்படியாக அழகு பார்த்துப் பார்த்து தனது முகத்தையே அவன் மறந்த ஒரு நாளில் அவனுக்குத் தனது முகம் எப்படி இருக்கும்? என்கின்ற எண்ணம் திடீரென எழுந்தது. அதைத் தான் இப்போது பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது.
அவன் தனது அறைக்குச் சென்றான். கண்ணாடி முன்னே நின்று ஒவ்வொரு முகமூடியாக அவற்றை அகற்றத் தொடங்கினான். அவனுக்குத் திடீரென பயம் ஒன்று உருவாகியது. தனது முகம் இந்த முகமூடிகளைப் போல் அழகானதாய் இருக்காவிட்டால் என்கின்ற பயம் உண்டாகியது. அதனால் கவலையாக இருந்தது. அவன் முகமூடிகளை அகற்றுவதை நிறுத்தினான். வெகுவாக அதைப் பற்றி எண்ணி எண்ணிக் குழம்பினான். இறுதியில் எப்படியாக இருந்தாலும் அந்த முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு மீதம் இருந்த முகமூடிகளையும் வெறியோடு களைந்து எறிந்தான். கடைசியாக அவனால் அவனது சொந்த முகத்தைப் பார்க்க முடிந்தது. அதில் நிறைய ஒளி இருந்தது. தெளிவு இருந்தது. உண்மை இருந்தது. எதற்காக அதை மறைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ரமணன் அதன் பின்பு அந்த முகமூடிகளை அணிவதே இல்லை. ஆனால் அவனுக்கு முகமூடி கொடுத்தவர்களுக்குத் தாங்கள் கொடுத்த முகமூடியைத் தொடர்ந்தும் ரமணன் அணியாதது மிகவும் மன வருத்தம் கொடுத்தது. அவர்கள் வருத்தம் பற்றி அவன் இப்போது கவலைப்படவில்லை. அவனுக்குத் தனது சொந்த முகத்தைப் பார்ப்பதிலேயே நிம்மதியும், திருப்தியும் உண்மையும் இருந்தது.
அவன் அந்த முகமூடிகளை ஒரு பையில் அள்ளிச் சென்று பக்கத்தில் ஓடும் ஆற்றில் வீசி எறிந்துவிட்டான்.

காமமே காதலாகி

 

 

காமமே காதலாகி  நாவல்

காதல், ஏமாற்று, துரோகம், கோபம், துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம். மீதி உங்கள் சுவைப்பிற்கு.

தாரணி

சங்கர் ‘நொஸ்க்’ வகுப்பிற்குப் பிந்திவிடுவேன் என்கின்ற தவிப்பில் மின்னல் வேகத்தில் வழுக்கும் பனியில் சறுக்கும் நடனம் பயின்ற வண்ணம் சென்றான். சில காலம் பின்லான்ட்டின் வடக்குப் பகுதியிற் குடியிருந்த பழக்கத் தோஷத்தில் வந்த நல்ல பயிற்சி அது. பின்லான்டை நினைத்த பொழுது சுருக்கென்று இதயத்தில் ஊசி ஏறிய ஒரு வேதனை அவனைத் தாக்கியது. நெஞ்சை அழுத்திப் பிடிக்க தன்னிச்சையாகக் கை சென்றது. அந்த நாட்டில் வாழ்ந்த ஒரு வருசக் கனவு வாழ்க்கை நினைவில் வந்து போயிற்று. அது தனது விதியை நிரந்தரமாக மாற்றியதை இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வாழும்வரை அவனோடு வாழப் போகும் நிரந்தர மாற்றம் அது. அதை இனி ஆண்டவனுக்கும் மாற்றும் வல்லமை கிடையாது என்பது இன்றைய உலக யதார்த்தம். அந்த உண்மை இயமதேவனின் எருமை வாகனமாக முன்னே எப்போதும் சவாரி செய்கிறது. ஆயுள் நீட்டிக்கப்பட்ட மரண தண்டனைக் கைதியான ஒரு அவஸ்தை அவனை எங்கும் விட்டுக் கலைக்கிறது. விருப்பமில்லாத எண்ணங்கள் சிலவேளைகளில் மனிதன் விரும்பாவிட்டாலும் மூளையில் விரிந்து விடுகின்றன. எதற்கு இப்பொழுது எண்ணப் பிடிக்காதவற்றை எண்ணுகிறேன் என்கின்ற வெறுப்போடு சங்கர் தெருவை வெறித்துப் பார்த்தான். அங்கே ஒரு அழகு நடந்தது. நீண்ட கருங்கூந்தல். நான்குமுழ நாகப்பாம்பு படமெடுத்தபடி சந்திரனைக் கௌவ்விய பின் தோற்றம். உடுக்கின் இடுப்பும்… சீ வேண்டாம் அபாரப் புளுகு, துள்ளும் பின்னழகு. முன்னும் பாரென ஆசை அவனை மூர்க்கம் கொள்ள வைத்து. சந்திர வதனமா? குட்டிச் சாத்தான் கோரமா? துள்ளும் கொங்கையும், துடிக்கும் விழியும், செல்லில் தேனும் கொண்டவளா? எட்டிப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற திடீர் ஆசை அவனுக்கு.

சங்கரை அதிஸ்ரம் தேடி வந்தது. தாரணியின் அறிமுகம் அவனைத் தானாகவே நாடி வந்தது. முன்னே நடந்து சென்ற தாரணி குதியுயரக் குளிர் காலச் சப்பாத்து அணிந்திருந்தாள். அங்குல ஆழத்தில் பூவுள்ள சப்பாத்து அணிந்த சங்கரே தனது சமநிலையைப் பேணப் போராட வேண்டியதாகிற்று. ஒரு கணம் பிழைத்தால் மறு கணம் புவியீர்ப்பு தனது வேலையைக் கச்சிதமாய்ச் செய்வதில் தவறாது. சங்கர் சறுக்கலில் நடனமாடினாலும் கண்கள் அவளை மேய்ந்தன. அதிசயம் நடந்தது. அவன் அவளைப் பார்த்த பொழுது அப்படித்தான் எண்ணிக்கொண்டான். அன்னப்பேட்டின் அழகோடு சின்னப் பேடாக அசைந்த தாரணியைக் குதியுர்ந்த சப்பாத்து மோசம் பண்ண, புவியீர்ப்பு அவள் மீது மோகம் கொள்ள, திடீரென சத்தத்தோடு அன்னப்பேடு சேற்றுத் தாராவாகியது. அது தரையில் சுழியோடியது. சங்கர் தனது கலாரசனையைத் தூக்கி எறிந்து விட்டு, அவசரமாக அவளிடம் ஓடிச் சென்றான். சீ வழுக்கிச் சென்றான். வேதனையில் சுருங்கிய அவள் வதனமே அவனிடம் காம வேதனையைக் கிளறும் கவர்ச்சி காட்டிற்று. சங்கர் தன்னை அந்தச் சிற்றின்ப நினைவில் இருந்து விடுவித்துக் கொண்டு,
அடிபட்டிட்டுதோ?’ என்றான். சங்கரின் குரலில் நளினம் இருப்பதான உணர்வு அவளுக்கு.
விழுந்தா அடிபடாமல் இருக்கிறதுக்கு இது என்ன சந்திர மண்டலமே?’ என்றாள்.
‘இல்ல சிலருக்கு விழுந்தாலும் அடிபடாது. வேற கலக்சியில இருந்து அப்பிடியான மனிசர் வருவினமாம்.’
‘ஒ ஸ்பிறிங் கட்டியிருந்தா அடிபடாது. பகிடி விடுகிறியளாக்கும். பெரிய அறிவாளி எண்ட நினைப்பே உங்களுக்கு? உங்கட கடிய விட்டிட்டுக் கையைத் தாரீங்களா?’
அதுக்குத்தானே காத்திருக்கிறன்.’
‘என்ன?’
‘ஒண்டும் இல்லை.’

சங்கர் அவசரமாகக் கையைத் துடைத்துவிட்டுக் கொடுத்தான். அவள் முறைத்து விட்டு அதைப் பற்றிக்கொண்டு எழுந்தாள்.
‘சீ… சினோ இப்பிடி மோசம் செய்து போட்டுது.’ என்றாள் தாரணி தோல்வியோடு.
‘இல்லை. உங்கட சப்பாத்துத்தான் அந்த வேலையைச் செய்திருக்குது.’ சங்கர் காலைப் பார்த்த வண்ணம் கூறினான்.
‘பகிடியா உங்களுக்கு?’ மீண்டும் கேட்டாள் தாரணி.
‘பகிடியில்ல உண்மையத்தான் சொல்லுறன்.’
‘சரி.. சரி… காணும். நீங்களும் எங்க நொஸ்க் படிக்கவே போறியள்?’
‘சரியாய்க் கண்டு பிடிச்சிருக்கிறியள்.’
‘ம்… குரங்க மனிசனாக்கிற டீஎன்ஏ விஞ்ஞானமா? புத்தகப் பையோட இதுக்க அலையிறவை யுனிவர்சிற்றிக்கோ போவினம்? இது பெரிய கண்டுபிடிப்புத்தானே?’
‘நேரம் போகுது எட்டி நடவுங்க.’
‘கால் நோகுது. வழுக்கல் பயமா இருக்குது.’
‘அப்ப நான் தூக்கிக்கொண்டு போகட்டுமே?’
இவற்ற கதையப் பாருங்க. உங்களுக்கு வாய் நீட்டு. அறிமுகமே இல்லை. என்ன கதை கதைக்கிறியள்? இதுக்குத்தான் அறிமுகம் இல்லாத மனிசரோட கதைக்கக் கூடாது எண்டு சொல்லுறது.’

‘சொறி சொறி. நான் அதை மீன் பண்ணேல்ல. சும்மா பகிடிக்குத்தான். ஆனா நீங்கள் சொல்லுற ஒரு விசயம் பிழையா இருக்கே.’
‘என்ன அது?’
‘அறிமுகம் இல்லையெண்டு சொன்னதைச் சொல்லுறன். நீங்கள் விழுந்து, நான் தூக்கி விட்டது, உங்களோட கதைச்சது, இது அறிமுகத்தைவிட அதிகம் இல்லையா?’
‘ஐயோ… இது பெரிய அறிமுகம்தான்.’

சங்கரின் அதிஸ்ரம் தாரணி மீண்டும் பனியில் நிலை தடுமாறிச் சாங்கரைச் சட்டெனப் பற்றிக் கொண்டாள். அதன் பின்பு அவன் கையைப் பிடித்த வண்ணமே பாடசாலை வரையும் நடந்து சென்றாள்.

சங்கருக்கு அது பிடித்துக் கொண்டது. பெண்ணின் தொடுகை மன்மதக் கிரக்கம் தந்தது. பாடசாலைக்குள் இருவரும் ஒருவாறு வந்து சேர்ந்தார்கள். சங்கர் சிறிது பயந்தவாறே,
உங்கட ரெலிபோன் நம்பர் என்ன?’ என்று கேட்டான்.
‘அது என்னத்துக்கு உங்களுக்கு? துணிவுதான் உங்களுக்கு. உங்கட நம்பரை முதல் தாங்க பாப்பம்?’ என்றாள் தாரணி. விரும்பாதவள் போலக் காட்டிக்கொள்ளும் விரும்பும் நடப்பு என்பது சங்கருக்குப்
விளங்கியது.

சங்கர் துணிவோடு தனது எண்ணைச் சொன்னான். தாரணி அதைத் தனது அலைபேசியில் குறித்துக் கொண்டாள். அத்தோடு நிற்காது மிஸ்கோல் கொடுத்து உறுதி செய்துகொண்டாள்.

‘வாடி வா.’ எனச் சங்கர் மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

*

சங்கருக்குத் தனிமை வெறுத்தது. தரணியோடு தனக வேண்டும் என்பது மனதில் இனித்தது. அதனால் அவளைத் தேநீர் அருந்த அழைத்தால் என்ன என்கின்ற குறுகுறுப்பு மனதிற்குள்ளே எழுந்தது? சிலவேளை கோபித்துக் கொண்டு தன்னுடன் கதைக்காது விட்டால் என்கின்ற பயமும் அடிக்கடி எட்டிப் பார்த்தது. அன்று நோர்வே மொழி படிக்கும் பொழுது ஒரு பழமொழியை அறிய முடிந்தது. ‘இன்தெத் வோகர் இன்தெத் வின்னர்.’ என்பதுதான் அது. அதன் அர்த்தம் துணிவு அற்றவனுக்கு வெற்றிகள் கைகூடுவதில்லை என எடுத்துக் கொள்ளலாம். சங்கருக்கு அது இப்பொழுது ஞாபகம் வந்தது. அவன் மனதிற்குள் ‘இன்தெத் வோகர் இன்தெத் வின்னர்.’ என்று சொல்லிக் கொண்டான். அலைபேசியைக் கையில் எடுத்தான். மறுமுறை உயிர் பெற்றுக் கொண்டது. இதயம் இடியாக முழங்கியது. உள்ளங்கை வியர்த்தது. என்றாலும் ‘இன்தெத் வோகர் இன்தெத் வின்னர்.’ என்பதை மனதில் இருத்திய வண்ணம் கதைக்கத் தொடங்கினான்.

‘நான் சங்கர்.’
‘தெரியும் பெயர் எழுதித்தானே நம்பர் குறிச்சு வைச்சிருக்கிறன். என்ன திடீரெண்டு ஞாபகம் வந்து இருக்குது?’
‘வரக்கூடாதா?’
‘வரலாம். வரலாம். ஏன் வரக் கூடாது?’
‘நான் ரீ குடிக்க வேணும்.’ தான் உளறுவது சங்கருக்குப் விளங்கியது. புதிராக இருந்தது.
‘அதுக்கு ஏன் போன் பண்ணுறீங்க? கேத்திலத் தட்டிவிட்டா தண்ணி கொதிக்குது. தேயிலைப் போட்டு கொஞ்சம் சீனியும் போட்டுக் கலக்கி ஆறுதலா இருந்து குடிக்கிறதுதானே?’
‘அது இல்லை.’
‘ரீ இல்லையா? கோப்பி போடப்போறியளே?’
‘நான் சொல்லுறதைக் கேளும்.’
‘சரி சொல்லுங்க சேர்.’
‘நாங்கள் ரெண்டுபேரும் ஒரு ரெஸ்ரண்டில சந்திச்சு ரீ குடிக்க வேணும். அதைத்தான் சொல்ல வந்தன். ஓகேயா?’
‘ஆ… நல்ல கதையிது… துணிவுதான் உங்களுக்கு.’

அதன் பின்பு மறுமுனை அமைதியாகியது. சங்கருக்கு அது அவஸ்தையாகியது.

‘ரீ தானே பிளீஸ்.’ என்றான் சங்கர்.
‘நிறையக் கொழுப்பு.’
ரீயில கொழுப்பு இல்லையே?’
‘உங்களுக்கு நிறையக் கொழுப்பு.’
பிளீஸ் தனிமை வெறுக்குது. கொஞ்ச நேரம் மட்டும்.’
‘நான் யோசிக்க வேணும். யோசிச்சிட்டு பிறகு உங்களுக்குப் போன் பண்ணுறன்.’

என்று கூறிவிட்டு அவள் போனைத் துண்டித்துக் கொண்டாள். சங்கருக்கு வெற்றியும் தோல்வியும் ஒரே நேரத்தில் கிட்டியதான அனுபவம். அவளுடன் கதைக்க முடிந்ததில் அவனுக்கு வெற்றி. சாதகமான பதில் கிடைக்காததில் தோற்றதான கவலை. சங்கர் அவஸ்தையாக சில நாட்களைக் கழிக்க வேண்டியதாகிற்று.

சில நாட்கள் கழித்து போன் பண்ணிய தராணி தனது வீட்டிற்குச் சங்கரை வரச் சொன்னாள். சங்கரால் அதை சில கணங்கள் நம்ப முடியவில்லை. விடுதியைவிட வீட்டில் சந்திப்பது நெருக்கமானதாய் சங்கருக்குத் தோன்றியது. அது அவனுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. சங்கர் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டான். பின்பு பூக்கடைக்குச் சென்று ரோஜா ஒரு கட்டு வாங்கிக் கொண்டான். அவனுக்குப் பதட்டம் தணியவில்லை. இதயம் அவஸ்தையாக ஓசை எழுப்பியது. சங்கர் அவள் சொன்ன முகவரிக்குச் சென்று கதவில் இருந்த ஆழியை அழுத்தினான்.

கதவு திறந்து கொண்டது. சங்கரைப் பார்த்த தாரணி ‘வாவ்.’ எனத் தன்னை மறந்து கூறியவள் பின்பு ‘உள்ள வாங்க.’ என்றாள்.
தாரணியும் மெல்லிய அலங்காரத்தோடு தாரகையான தோற்றம். அவளைப் பார்த்த பொழுது தான் கொஞ்சம் அதிகமாக அலங்கரித்துக் கொண்டேனோ என்கின்ற எண்ணம் சங்கருக்கு உண்டானது.

அவன் ஒரு நெளிவோடு அவளைப் பார்த்து,
என்னத்துக்கு வாவ் எண்டனியள்?’ என்றான்.
‘இல்ல பெம்பிள பார்க்க வந்த மாதிரி வெளிக்கிட்டு வந்து இருக்கிறியள்.’ என்றாள் தாரணி.
‘நீங்கள் பெம்பிள தானே?’
‘உங்களுக்கு வாய் எப்பவும் நீளுது.’
உண்மையத் தானே சொன்னான். நீங்கள் பெம்பிளதானே?’
‘ஓம் இருக்கட்டும் உள்ளவாங்க.’
உங்களப் பாக்கத்தானே நான் இங்க வந்திருக்கிறன்.’
‘ஓம்… ஓம்…’
‘அப்ப பெம்பிள பாக்கத்தானே வந்திருக்கிறன்?’
‘சரி… சரி… உங்கட பைத்தகிராஸ் நிரூபணம் காணும். இதுக்கும் அதுக்கும் வித்தியாசம் இருக்குது. ஜக்கெற்றத் தாங்க கொளுவி விடுகிறன்.’
‘தரணி?’
‘ம்.’
‘ஒண்டு சொல்லட்டுமா?’
‘ஐயோ! நீங்கள் என்ன சொல்லப் போறியளோ எண்டு எனக்குக் கொலைப் பயமா இருக்குது. உங்கட வாய முதல்ல தைக்க வேணும்.’
‘அப்ப வேண்டாம்.’
‘சரி பருவாய் இல்லச் சொல்லுங்க.’
‘இவ்வளவு கொஞ்ச நாளில நான் யாரோடையும் இந்த அளவுக்கு அன்னியோன்னியமாய்ப் பளகினது இல்லை. உம்மப் பார்த்ததில இருந்தே ஏதோ ஏற்கனவே பழகின மாதிரி ஒரு உணர்வு. கானகாலம் சேர்ந்து இருந்த மாதிரி ஒரு பீலிங்.’
வாவ். இப்பிடி வசனத்தால எத்தின பேரை விழுத்தினியள்? என்னிட்ட உந்தப் பருப்பெல்லாம் அவியாது. அதோட இரண்டும் ஒண்டுதான்.’
‘எது?’
‘உணர்வும் பீலிங்கும். நல்லாப் பூ சுத்துவியள் போல இருக்குது. என்ர இந்தக் கொண்டை அதுக்குக் காணாது போல இருக்குது.’ தாரணி தனது கொண்டையை ஆட்டிக் காட்டினாள்.

சங்கருக்கு ஏமாற்றம். அவன் சோகமாக, ‘நம்பேல்லையா?’ என்றான்.
‘சரி… சரி… நம்புறன். மூஞ்சை சுருங்கிப் போச்சுது. எனக்கும் அப்பிடி ஒரு மெல்லிய உணர்வுதான். ஆனா கொஞ்சம் தள்ளியே நிண்டு கொள்ளுங்க.’
‘ஏன்?’
சிலவேளை போன பிறப்பில அண்ணன் தங்கச்சியா இருந்து இருப்பமோ என்னவோ? பாசமலர் சாவித்திரி சிவாஜிகணேசன் போல…’
சோதப்பாதையும் தாரணி.’
‘அப்ப?’
‘இது பாசமலர் உறவா இருந்திருக்க முடியாது.’
ஆங்… உங்களுக்கு அதுதான் பிடிக்குமாக்கும். அப்பிடி ஒரு கற்பனை உங்கட மனதில இருக்கா?’
பிளீஸ் தாரணி என்னோடை விளையாடாதீர்.’
‘அப்ப யாரோடா விளையாடலாம்?’
‘அப்ப விளையாடுவம்.’
‘சரி இவ்வளவும் போதும். வந்து சோபாவில இருங்க. நான் ரீவைச்சாரன். குடிச்சிட்டு வந்த வழியப் பாத்து நடையக் கட்டுங்க.’
‘தாரணி… உமக்கு விளையாட்டுத்தான்.’
‘சத்தியமா? வேற என்ன ஐடியா உங்களுக்கு?’
‘மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத புனிதமான உறவு.’
‘தூ சொந்தமா ஒரு வசனம் தெரியாதா? ம்… யோசிப்பம்.’

அவள் சிரித்த வண்ணம் சமையலறைக்குச் சென்றாள்.

*

பழக்கம் காதலாகிப் பாலும் தேனுமாய் கலக்கத் தொடங்கிய நாட்களில், அவர்கள் காதல் காமம் என்னும் வலையில் வீழ்ந்து, உடலுறவு என்னும் அக்கினிப் பிரவேசம் செய்யாது புனிதம் காத்தது.

தாரணி வழுக்குவதற்குத் தயாராகிவிட்டாலும் சங்கார் அதைப் பின்போட்டுக்கொண்டே வந்தான். தாரணிக்குச் சிலவேளை அவன் செயலைப் பார்க்க வியப்பாக இருக்கும். ஆண்கள் என்றால் சந்ததி பெருக்கும் சிந்தையில் அலைபவர்கள் என்பதுதான் தாரணியின் முன்னைய கருத்து. அதைச் சங்கர் தலைகீழாகப் புரட்டியதான அவஸ்தையான அனுபவம். சங்கர் முத்தம் தரும்போதுகூடப் பட்டும் படாமல் முத்தமிடுவது அவளுக்கு அவன்மீது கோபத்தோடு காமத்தையும் தூண்டிவிடும். அவள் நெருங்கும் போதும் அவன் ஒதுங்கிக்கொள்வது அவள் உடலை காமத்தீயில் எரியப்பண்ணும். தரணி முடிவு செய்துகொண்டாள். பிற்பகல் சென்றால் இரவு காரியம் முடித்துக்கொண்டு வரும் நாடு இது. தன்னை எவ்வளவு காலம் சோதிப்பதாய் சங்கருக்கு உத்தேசம் என்பது அவளுக்கு விளங்கவில்லை.

சிலவேளை திருமணத்திற்குப் பின்புதான் இது எல்லாம் என்று சங்கர் நினைத்து இருக்கிறாரோ என்கின்ற எண்ணமும் அவளுக்கு அடிக்கடி வருவது உண்டு. இன்று அதைக் கேட்டு விடவேண்டும் என்று முடிவு செய்து சங்கர் வீட்டிற்கு வந்தாள். சங்கர் பீச்சா செய்தான். பின்பு அதைக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டுத் தொலைக்காட்சியை இயக்கினான். தாரணி அவனிடம் இருந்து றீமொல்ற் கொன்றோலைப் பறித்தாள்.

‘என்ன தாரணி ரீவி பார்க்க வேண்டாமே?’
‘பார்க்கலாம். பார்க்கலாம். அதுக்கு முதல் நான் ஒண்டு கதைக்க வேணும்.’
‘சரி மகாராணி செப்புங்கள். நீங்கள் கூறுவதைக் கிரகிக்க நான் மிக்க சிரத்தையோடு காத்திருக்கிறேன்.’
பகிடிய விடுங்க. நான் சீரியஸ்சா கதைக்க வேணும்.’
‘சரி சொல்லும்.’
‘நாங்கள் எவ்வளவுகாலம் இப்பிடியே இருக்கிறது?’
எவ்வளவுகாலம் எண்டாலும் இருப்பமே. இதையேன் குளப்பிறாய் தாரணி? பேராசை பெரும் நஸ்ட்டம். மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத தெய்வீகக் காதல் இது. அது காமத்தால் மாசுபடக்கூடாது.’

‘நல்லா இருக்குது உங்கட வியாக்கியானம். நான் ஒண்டும் குளப்பேல்ல. இது பேராசையும் இல்லை. இன்னும் ஒருபடி மனிதர்களாக மேல போகலாம் எண்டு நினைக்கிறன். அது மட்டும்தான் எனக்கு வேணும்.’

என்றாள் தாரணி.
தங்கட மேல போறது எண்டதுக்கு என்ன அர்த்தம்?’
றியிஸ்றர் பண்ணுவம் முதல்ல.’
ஓவ்ஒவ்… நிப்பாட்டு.’
‘ச்… ஏன்?’
‘வேண்டாம் தாரணி. என்னோட இப்பிடியே இருந்திட்டுப் போ. எனக்கு அது போதும் தாரணி. உன்னோட இருக்கிறது சந்தோசம் தாரணி. அந்தச் சந்தோசம் போதும் தாரணி எனக்கு.’
‘இல்ல… இப்பிடி எவ்வளவு காலம் இருப்பம்? எங்களுக்கும் ஆசையும், உணர்ச்சி இருக்குதுத்தானே? நாங்களும் இரத்தம், சதை, நரம்பு எண்டு நடமாடுற மனிசர்தானே? குஞ்சுகளைப் பார்க்க ஆசையிருக்கும்தானே?’

‘அப்பிடியான ஆசை உனக்கு இருந்தா என்ன விட்டிடு தாரணி.’ சங்கர் கோபமாகிவிட்டது போலத் தாரணி உணர்ந்தாலும் இன்று முடிவு தெரிய வேண்டும் என்பதில் அவள் உறுதிகாட்டினாள்.
‘நீங்க என்ன சொல்லுறியள்?’ அவள் முகம் சிவந்து விம்மத் தொடங்கினாள். தலையைக் கால்களுக்குள் புதைத்து விசும்பினாள். பெண்ணின் பாசை மெதுவாகப் பேசினாள். சங்கரால் தாரணியை இப்பொழுது எதுவும் செய்ய முடியும். அவள் அடிமை போல விழுந்து கிடக்கிறாள். சங்கர் அவளை மனதால் மட்டும் காதலித்துவிட்டான். அந்தக் காதலின் உயிர் அவளையே அவனது உயிராக்கிவிட்டது. அந்த உயிருக்குத் தானே கெடுதல் விளைவிக்க அவன் விரும்பவில்லை.சங்கர் தாரணியைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் அழுவதைப் பார்த்த அவனுக்கும் கண்கள் கரைந்தன. இதயம் வலித்தது. மனது புழுவாய்த் துடித்தது. தன்னைச் சமாதியாக்கி அவளை வாழவைக்க வேண்டும் என்கின்ற ஓர்மம் பிறந்தது. அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாதவனாய் தனது படுக்கை அறைக்குள் சென்றான்.திரும்பி வந்தவனின் கையில் மருந்துக் கடைப் பையிருந்தது. அவன் அந்த மருந்துகளைத் தாரணியின் முன்பு மேசையில் கவுட்டுக் கொட்டினான். தாரணி அவனை என்ன என்பது போலப் பார்த்தாள்.

‘நல்லா வாசிச்சுப்பார்.’ என்றான்.

தாரணியின் அழுகை சடுதியாக நின்றது. அவள் அவசரமாகப் புறப்பட்டு புயலாக வெளியே சென்றாள்.

சங்கரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரின்சுவை அவனுக்கு உப்பாகக் கரித்தது.

புகையின் பின்

பக்கத்தில் இருந்த அமுதனின் கையை வினோதன் சுரண்டினான். வேலை முடித்துப் போகும் களைப்பில் அந்தரித்த அமுதனுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. இன்று மத்தியானம் அவன் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாளும் மறக்காத, மீறாத செயலை இன்று அமுதன் மீறிவிட்டான். அது அவனுக்குத் தன் மீதே அளவு கடந்த கோபத்தைத் தந்தது. கோபத்திற் குமைந்தவனை வினோதன் சுரண்டினான். அந்தச் சுரண்டல் ரௌத்திரமாய்ப் பற்றிக் கொண்டது.

எரிச்சலோடு ‘என்னடா?’ என்ற வண்ணம் வெறுப்பும் கோபமும் இறுகிப் பிணைந்த பார்வை ஒன்றை அவன் மீது அனல் தெறிக்க வீசினான். அமுதனுக்கு நுனி மூக்கில் கோபம் என்பதுவினோதனுக்குத் தெரியும். அவன் அமுதனின் கோபத்தை அலட்சியப் படுத்திய வண்ணம் கண்ணால் வெளியே பார்க்குமாறு சைகை காட்டினான்.

அந்த நீலநிற றாம் தரிப்பில் நின்றது. றாம் வந்து நின்றவுடன் சாரதி இறங்கும் முன்பே வினோதனும் அமுதனும் அதற்குள் ஏறிவிட்டார்கள். அதன் பின்பு சாரதி இயந்திரத்தைநிறுத்திவிட்டார். இயந்திரத்தை நிறுத்திவிட்டால் கதவுகள் மூடிக்கொண்டுவிடும். மீண்டும் இயந்திரம் இயங்கும் போதுதான் அவை திறக்கும். அது ஓர் பெரிய மருத்துவமனைக்கு முன்பு இருக்கும்தரிப்பிடம். இங்கு இரண்டு பாதையால் செல்லும் வேறு வேறு எண்களைக் கொண்ட றாம் தரித்து நிற்கும். இப்பொழுது பதினேழு வந்து நின்றவுடனேயே அமுதனும் வினோதனும் பாய்ந்துஏறிவிட்டார்கள். கதவு சாத்தப்பட்ட பின்பு இருக்கையில் இருந்த வண்ணம் இருவரும் விடுப்புப் பார்த்தார்கள். அப்பொழுது வினோதன் எதையோ கண்டுவிட்டான். அத்தால் அமுதனின் கையை அவன் சுரண்டினான்.

மருத்துவமனைக்கு முன்பு நிற்கும் இந்த றாம்களில் பயணிக்கும் பலவித மனிதர்கள். அதில் யாரைக் கண்டதால் வினோதன் சுரண்டினான் என்பது அமுதனுக்கு விளங்கவில்லை. பசியில் கோபம் மட்டும்பாம்பு சீறுவதாய்ச் சீறியது.இந்த றாமில் ஏறுவதற்கு சூட்கேஸ் பெட்டிகளுடன் காத்திருக்கும் சில நோயாளிகள். அவர்கள் சில நாட்கள் தங்கியிருந்து வைத்தியம் செய்ததற்கான அடையாளம் அது. அன்று வந்து அன்றேசெல்லும் நோயாளிகள் பலர். வருத்தமான பிள்ளைகளைக் கூட்டிவரும் பெற்றோர்கள் பலர். முதியோரைக் கூட்டிவரும் தாதிகள் சிலர். மருத்துவமனையில் வேலைசெய்யும் மனிதர்கள் பலர். அவர்கள் மட்டுமே ஐந்தாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். இந்த மனிதர்களின் கலவை றாம் கதவு திறப்பதற்காய் காத்திருந்தது.

இயந்திரம் நிறுத்தப்பட்டு றாம் கதவு பூட்டிய பின்பு அது புறப்படுவதற்கு எழு நிமிடங்கள் இருப்பதாக மின் எண்களை நேர அட்டவணைப் பலகை காட்டியது. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாய் புகையை இழுத்து விடும் மனிதர்கள். மருத்துவமனைக்குள் புகைபிடிக்க முடியாது. இதுதான் அவர்களுக்கு இன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் போன்ற அவதி அவர்களிடம்.

வினோதன் மீண்டும் அமுதனின் கையைச் சுரண்டினான்.

‘ச்…’ என்கின்ற எரிச்சலோடு அமுதன் அந்தத் திசையை திரும்பிப் பார்த்தான்.

அங்கே நின்றவர்களில் அனேகர் சுதேசிகள். அவர்கள் புகைப்பது ஒன்றும் விசித்திரம் இல்லை. ஒரு ஆபிரிக்காப் பெண்ணும் புகைத்தாள். அதுவும் அடிக்கடி பார்க்கும் காட்சிதான். அதற்கு மத்தியில் ஒரு தமிழ்ப் பெண். அவளை இரண்டாவது முறையாக அவன் இந்தக் கோலத்தில் பார்க்கிறான். இந்த மருத்துவமனையில் பல தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள். குங்குமப் பொட்டு மறந்த முகங்களை அவன் அதிகம் கண்டதில்லை. குங்குமப் பொட்டுடன் ஒரு முகத்தைப் பார்த்தாலே அவனுக்குச் சகோதர உணர்வு வந்துவிடும்? அவர்கள் முகங்களில் நாம் நாடு கடந்தாலும் எங்கள் விழுமியங்கள் குங்குமப் பொட்டுக்களாய் நிலைத்திருந்தன. பொட்டு வைத்தால் இங்கு கேள்வி பிறக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று சுதேசிகள் கேட்பார்கள். அந்த அசௌகரியத்திற்காய் பொட்டு வைக்காத தமிழிச்சிகளும் உண்டு. பொட்டுக்குப் பின்னும் பூதங்கள் பதுங்கலாம் என்கின்ற எண்ணமும் சிலவேளை அவனுக்கு வருவதுண்டு. அப்படி என்றால் யாரைத்தான் நம்புவதென தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்வான் அமுதன்.

இரண்டு ஆசனம் தள்ளி அமர்ந்து இருந்த தேவி அமுதனை பார்த்துச் சிரித்தாள். அவள் புகை பிடிப்பதில்லை. குங்குமப் பொட்டு இல்லாமல் வேலைக்கு வந்தது கிடையாது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அமுதனுக்குச் செல் விழுந்து செத்த அக்காவைப் பார்ப்பது போலவே இருக்கும். அமுதனும் சிரித்தான்.

வெளியே நிற்பவளுக்கு என்ன பெயர் என்பது அமுதனுக்குத் தெரியாது. முதல் நாள் அவளை அந்தக் கோலத்தில் பார்த்தது தொடக்கம் அவளைப் பார்க்கவே அமுதனுக்குப் பிடிப்பதில்லை. அவளும் யாருடனும் வலிய வந்து கதைப்பதில்லை. சிகரெட் புகைக்கும் தமிழ் பெண்ணோடு மற்றைய தமிழ்ப் பெண்கள் நட்பை விரும்புவதில்லை. தங்களையும் அவளைப் போல் பார்த்து விடுவார்களோ என்கின்ற நடுக்கம். அந்தப் பெண் தனது சுதேசத் தோழியோடு மட்டும் ஏதோ கதைப்பாள். இப்பொழுதும் ஏதோ சுவாரசியமாய் கதைத்துக் கொண்டு நிற்கிறாள்.

அவள் நல்ல நிறம். அழகிய வட்ட முகம். துரு… துருவெனப் பாயத் துடிக்கும் மீன்கள் போன்ற அவள் கருவிழிகள். சிகரெட் புகையால் கறுக்கப் போகும் அவள் சிவந்த மெல்லிய இதழ்கள்.

கயிறாகத் திரித்து வைத்திருக்கும் தலைமுடி. ஜீன்ஸ். முழங்கால் வரையும் நீண்ட ஜெக்கெற். அதற்குள் என்ன அணிந்திருக்கிறாள் என்பது அமுதனுக்குத் தெரியாது. அப்படியான பூதக்கண்ணாடி அவன் கையில் இப்போது இல்லை. குதி உயர்ந்த சப்பாத்து. நெற்றியில் பொட்டுக் கிடையாது. கலியாணம் செய்தவளா? செய்யாதவளா? அதுவும் வெளிச்சமில்லை. என்னவாக இருந்தால் எனக்கு என்ன? என அமுதன் எண்ணினாலும் அவளைப் பார்ப்பதை வெறுத்தாலும், பார்வை அவளை அடிக்கடி நோட்டமிட்டது. அதை அவனால் தடுக்க முடியவில்லை.

வினோதன் காட்டிய திசையில் அவள் நின்றாள். கையிலும் வாயிலும் புகை. இறங்கிச் சென்று மென்னியில் குத்தவேண்டும் போன்ற கோபம் முதலில் வந்தது. நோர்வேக்கு வந்தவுடன் இவர்களுக்கு தாங்களும் ஐரோப்பியர் என்கின்ற நினைவு. காகம் பாலிற் குளித்துக் கொக்காகும் முயற்சியென அமுதன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் காசு, அவள் சுதந்திரம். அவள் புகைத்தால் என்ன? குடித்தால் என்ன? எண்ணிய அமுதன் தனது வெப்பியாரத்தை மறைக்க வினோதன் மீது பாயத் தாயாரானான்.

‘என்னதான் நோர்வேக்கு வந்தாலும் நாங்கள் தமிழர் எண்டதை மறந்து ஆடக்கூடாது.’ என்றான் வினோதன்.
ஆடினா உனக்கு என்ன? உன்னால என்ன செய்ய முடியும்?’
‘நான் என்ன செய்ய முடியும். எங்கட கலாச்சாரம்…?’

வினோதனுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது போன்ற அதிர்ச்சி. அழுது விடுவானோ என அமுதனுக்குப் பயமாக இருந்தது. வினோதன் நாட்டிற்காக வீரமரணத்திற்குச் சென்றவன். வீரமரணம் சந்திப்பதற்கு முன்பே விலகி வந்து விட்டான். காணாமல் போகும் கல்லறைகளில் ஒன்றாக அவன் சரித்திரம் முடியவில்லை. இந்த மருத்துவமனையின் களஞ்சியம் அவனது வேலைத்தளம் ஆகியது. இனி நோர்வேயில் கல்லறை அவனுக்காக எழும். இன்று எங்களுக்கு நாடில்லை. உரிமை இல்லை. எங்களுடன் கொண்டு வந்த கலாச்சாரமும் சாயம் கலையும் பழைய உடுப்பாகிப் போய்விட்டது என்கின்ற அந்தரம் அவனுக்கு.தமிழீழக் கற்பனையில் வாழ்ந்த அவனால் தமிழர் என்கின்ற அடையாளத்தையே காற்றில் பறக்கவிடும் நாள் வந்த ஆற்றாமை. அதுவும் எங்கள் கண்முன்னே எங்கள் குலப் பெண்களால் அழிக்கப்படுவதான சினம். ஆண்கள்? அவன் அவர்கள் பற்றி கதைப்பதில்லை. அவனும் ஆணாய் இருப்பது அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

மண்டையில போடோணும்.’ என்று முணுமுணுத்தான் வினோதன். கண்ணகிப் பார்வை ஒன்றை அமுதன் வினோதன் பக்கம் செலுத்தினான்.’மண்டையில போட்டு யாற்ற மயிரப்பிடுங்கினியள்? எங்களை நாங்களே மொட்டையடிச்ச மாதிரி ஒரு போராட்டம். அதுல படிச்சிருக்கிற ஒண்டே ஒண்டு இந்த மண்டேல போடுகிறதுதான்.’
‘அது பெரிய விசயம். அதைவிடு அமுதன். இவள் இப்பிடிச் செய்யலாமே?”கோழி களவெடுத்தவனுக்கெல்லாம் மண்டையில போட்டதைவிட இது ஒண்டும் பெரிய விசயம் இல்ல.’ என்றான் அமுதன். அமுதன் விடாது வினோதனின் ரோச நரம்புகளைச் சுண்டினான். அவன் கோபம்யாரில் என்பது வினோதனுக்கு விளங்கவில்லை.

‘நீங்கள் எல்லாம் அவங்களைப் பற்றிக் கதைக்கக் கூடாது. வேலையால போற நேரம் உன்னோட நான் கதைச்சிருக்கக் கூடாது.’ வினோதனிடம் கோப நாதம் கொஞ்சம் எழுந்தது.’எல்லாத்துக்கும் தொடர்புண்டு.’ என்றான் அமுதன்.
‘அவள் பத்துறத்துக்கும் எனக்கும்?’ வினோதன் விளங்காது கேட்டான்.
‘ம்…’

வினோதன் திரும்பி அவளைப் பார்த்தான். மீண்டும் அமுதனை விசித்திரமாய்ப் பார்த்தான். அவள் சுதேசப் பெண்ணொருத்தியுடன் நின்ற வண்ணம் புகைப்பதும் கதைப்பதுமாய் சந்தோசித்தாள். அவள் ஒரு முறை ஓரக் கண்ணால் இவர்களைப் பார்த்தாள். இவர்கள் தன்னைப் பார்ப்பதையும் குசுகுசுப்பதையும் அவள் அவதானித்துக் கொண்டாள். நீங்கள் யார் என் சுதந்திரத்தில் தலை நுளைக்க என்பதான திமிருடன் அவள் ஆழமாய் புகைத்தாள். இரசனையோடு அதை வெளியே விட்டாள்.வினோதன் மீண்டும் புகைந்தான். அமுதனிடம் வாய் திறந்தால் மீண்டும் வள்ளென்று விழுவான் என்பது தெரியும். றாம் சாரதி தனது ஆசனத்திற்கு வந்தான். உயிர் பெற்றுக்கொண்ட றாம் கதவுகள் திறந்தன. அவள் அவசரமாகச் சிகரெட்டின் தலையை நசித்துக் கொலை செய்தாள். பாய்ந்து வந்து றாமில் ஏறிக்கொண்டாள். இங்கு அண்ணை றைற் சொல்லுவதற்கு ஆள் கிடையாது. கதவுகள் சாத்தப்பட்டதும் றாம் புறப்பட்டது. இந்த றாமில் இரண்டு நிறுத்தங்கள் மட்டும் பிரயாணம். அதன் பின்பு சுரங்க இரதத்திற்கு மாறவேண்டும்.

வேலை அவசரத்தில் மத்தியானம் அமுதன் சாப்பிடவில்லை. கட்டாயம் சாப்பிட்டிருக்க வேண்டும். அமுதனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. மயக்கம் வருவதான அவஸ்தை. வினோதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

‘தலை சுத்துதடா?’ என்றான்.
‘மத்தியானம் சாப்பிட்டியா?’
‘இல்லை. தலை சுத்துதடா.’

வினோதன் தேவி அக்கா என்றான். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. பல்லை நறுமிக் கொண்டான். அமுதன் அவஸ்தைப்பட்டான். அவள் இவர்களை நோக்கி வந்தாள். வினோதன் அவளைப் பார்த்தான். மனதிற்குள் முதேவி என்றான். அவள்,

‘நான் சீக்கபிளையர். இவருக்கு என்ன வருத்தம் இருக்கெண்டு தெரியுமா?’ என்றாள்.
‘ம்… சுக்கர் சீக். மத்தியானம் சாப்பிடேல்ல.’ என்றான் வினோதன்.
அவள் அவசரமாக ஒரு மிட்டாய் எடுத்து அமுதனின் வாயில் திணித்தாள்.

றாம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது.

தேவி அக்கா அவசரமாக இறங்கி ஓடினா. புருசா சேவகம் செய்வதற்கான ஓட்டமா? கொக்கென்று நினைத்தாயா என்கின்ற கேள்வியா? வினோதன் வெறுப்போடு தேவியக்கா ஓடுவதைப் பார்த்தான். அவள் அமுதன் றாமைவிட்டு இறங்குவதற்கு உதவி செய்தாள். அமுதனின் நிலைமை சகஜம் ஆகியது. அமுதனை அவள் பார்த்தாள். பின்பு சிரித்த வண்ணம்,

‘அண்ண ஒரு இனிப்புப் பக்கேற் வாங்கிப் பொக்கெற்றுக்க வைச்சிருங்கோ.’ என்று சிரித்த வண்ணம் கூறினாள். அமுதனின் கைக்குள் இன்னும் ஒரு இனிப்பைத் திணித்தாள்.

வளையா முதுகுகள்

வினோதன் மாவெட்டையில் உள்ள தங்கள் வயலை நோக்கி அவசரமாகச் சென்றான். தப்பு ஆர்வக் கோளாற்றில் அதை நோக்கி ஓடினான். வாய்க்காலில் நீர் கரை புரண்டு கடல் நோக்கித் தீரக்காதலில் மூர்க்கமாக ஓடியது. வெள்ளை கடற்கரை, மேற்கு கடற்கரையென மழைநீரில் கொள்ளை ஆசையோடு வாயைத் திறந்த இரு கடல்கள். எவ்வளவு சென்றாலும் குடித்து ஏப்பம்விட்டு அலைகளாகக் கூத்தாடும் கோலம். உப்பு நீரோடு நன்னீரும் கலந்து உப்பாகும் உவர்க்கும் உண்மை. கரைகளில் நிற்கும் தென்னைகளும் பனைகளும் அலைகளின் அதிகாரத்திற்குப் பயந்து தலையாட்டும் வாலாயம். இந்த வெள்ளம் கடலுக்குப் போக வேண்டியதே என்பதாக வினோதன் எண்ணினான். வயல் தடவி வந்த காற்று வினோதனுக்குக் கூதல் தந்தது ரோமம் குச்செறியச் செய்தது. வரம்பில் கிடந்த சாரைப் பாம்பு வயலில் இறங்கி நீந்தியது. நாகப் பாம்பும் உலவும். தவளை, எலி பிடித்துத் தின்னும். தவளைகள் சிலவேளை காலில் மிதிபடும். வினோதன் மேலில் சட்டையில்லாது சென்றான். அவதியில் அதை மறந்துவிட்டான். கூதல் கண்ட அவன் உடம்பு நடுங்கியது. மாவெட்டையில் பயிர் மழையில் படுத்தது விட்டது. கூதலில் மனிதனின் மயிர் குற்றிட்டது.

பருவம் தப்பிய மழை இது. பொன்னாய் விளைந்து குலுங்கிய நெற் கதிர்கள் இப்போது பூமியோடு சாய்ந்த வேதனை. ஐப்பசியில் விதைத்த நாள் தொடக்கம் ஒவ்வொரு நாளும் வந்து வயலைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போவது அவன் வழக்கம். நெல்லில் இருந்து முளை வந்து, அது சிறு பயிராகி, மழை பெய்து, அதில் அது நீந்திப் பிழைத்து, பசளை இட்டுப், பச்சையாகி, உயர்ந்து வளர்ந்து, குடலைப் பிடித்து, கதிர்கள் தள்ளி, அதில் பால் பிடித்து, பால் முற்றி, நெல்லாகி, அந்த நெல்லின் வாசம் குதுகலம் தரும் வரையும், ஒவ்வொரு நாளும் அவன் தனது பிள்ளைகளைக் காண்பது போல, வாஞ்சையோடு, ஓடி ஓடி வந்து அவற்றைப் பார்த்து இன்பம் கொள்வான். தை பூசத்திற்குப் பிள்ளையாரும் வந்து பார்த்துவிட்டுப் போனார். அவருக்குச் சக்தியில்லை? அல்லது புக்கையில் விருப்பமில்லை? இனிப் பீச்சா கேட்டாலும் கேட்பாரோ?

இன்னும் சிலநாட்களில் அருவி வெட்டுவதாய்த் திட்டம். அதற்கிடையில் வங்கத்தில் சூல் கொண்ட சூறாவளி, கடலை உறிஞ்சிக் கார்மேகங்களாகி, காற்றோடு ஈழம் வந்து, காலம் தவறிய மழையை வானம் திறந்து ஊற்றி விட்டது. எங்கும் வெள்ளக்காடு. சீனாவின் மஞ்சள் நதி திடீரென எங்கள் தீவில் மூர்க்கமாக ஓடியது.

தலைக் கனத்தில் பெண் போல தகதகக்கும் பொன் நிறத்தில், குனிந்த பயிர் இயற்கையின் கோரம் தாங்காது மண்ணோடு மண்ணாகப் படுத்துவிட்டன. அதன் மேல் வெள்ளம் பாய்கிறது. வினோதனுக்குத் தங்கள் வயலில் சிலவேளை வெள்ளம் நிற்காதோ என்கின்ற நப்பாசை. அவன் அவசர அவசரமாக வயலை நோக்கி நடந்தான். இல்லை. முடியவில்லை. ஓடினான். முடியும்வரை, மூச்சு இரைக்க, கால்கள் சறுக்கச் சறுக்க, பாம்புகளை, தவளைகளைப் பார்க்க அவகாசம் இல்லாதவனாய், மாவெட்டையை நோக்கி ஓடினான். எங்கும் மஞ்சள். வெள்ளமும் பயிரும் மஞ்சள். மஞ்சள் நதியல்ல மஞ்சள் கடலான மாவெட்டை. அதில் தங்கமான நெல்மணிகள் அடித்துச் செல்லப்டுமோ என்கின்ற அலமலக்கம்.

வினோதன் பள்ள வயலை வந்து பார்த்தான். வெள்ளம் கண்ணுக்குத் தெரிந்தவரை மஞ்சள் கடலாக நின்றது. மனது சோர்ந்து போயிற்று. விளைந்த குலுங்கிய வயல் இன்று ஆழியான காட்சி. ஏக்கத்தோடு மேட்டு வயலை நோக்கி ஓடினான். முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வெள்ளத்தின் தோல்வி.

வினோதன் வீட்டிற்குத் திரும்பி ஓடி வந்தான். வேலைக்காரர்களைப் பிடிக்க அவர்கள் குடியிருப்பு நோக்கி ஓடினான். அவர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தனர். கோமாளியே அவர்கள் குடியிருப்புத் தேடி வந்ததாகக் குமுறிக் குமுறிச் சிரித்தனர். பின்பு வேலைக்காரர்கள் கூதல் என்றுவிட்டு கொட்டிலுக்குள் புகுந்தனர். கருப்பட்டியும் தேயிலையும் மட்டும் போதும் என்றனர். அருவி வெட்ட யாரும் வரவில்லை. அநியாயம் உப்பட்டி. அவன் மனது துவண்டது. இம்முறை சூடு மிதிப்பு இல்லை. செத்தல் மிளகாய் பொரித்துத் தேங்காய்ப் பாலில் கரைத்துவரும் கஞ்சி குடிக்கும் பாக்கியம் இல்லை. கள் வாங்கலும் இல்லை. சரி போகட்டும். வினோதன் சோரவில்லை. அண்ணனோடு மீண்டும் வயலுக்கு வந்தான். வெள்ளத்தில் அருவி வெட்டும் வேடிக்கை தொடங்கினான். வெட்டியதை வரப்பில் தண்ணி படிய வைத்தார்கள். மஞ்சள் ஆற்றில் வண்டில்விட முடியாது. உப்பட்டியைச் சிறு சிறு கட்டுகளாய் கட்டித் தலையில் சுமந்து சென்றார்கள்.

நாச்சியார் வீடா? நாற்சுவர் வீடா? நான்கு விறாந்தை. நடுவில் சீமேந்து முற்றம். நெல்லுப் போடத் தாராளமான இடம். எலிகள் வளையில் சேர்ப்பதான இவர்கள் போராட்டம். வீட்டில் போரடித்து நெல்லுக் காயப் பண்ணியது அவர்கள் கெட்டித்தனம். வினோதனுக்கு அம்மா கஞ்சி கரைத்துக் கொடுத்தா. ஆனால் மாட்டிற்கு மாத்திரம் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதியில்லை. கோமயம் பருவாய் இல்லை. கோசலத்தைத் தாங்க முடியாது. அம்முறை சூடு மிதிக்க முடியாது போனமை அவனுக்கு வருத்தம்தான்.

இப்போது வினோதனுக்கு நாற்பத்து மூன்று முடிகிறது. விகரனுக்கு பதின்நான்கு தொடங்குகிறது. விகரன் இங்கே (ஐரோப்பாவில்) பிறந்து, இங்கே வளர்ந்து, தரம் பார்த்து, பெயர் பார்த்து, விலை பார்க்காது, ஆடைகளும், காலணிகளும், கணினிகளும், அலைபேசிகளும், அவர்களின் வளையா முதுகுகளும்…

குளிர்காலம் முடிந்து கோடை காலம் பிறந்தது. கார்களும் தங்கள் காலணிகளை மாற்றிவிடச் சொன்னது. வினோதன் மகனைப்பார்த்து,

‘அந்த ரயர்களை எடுத்து வந்து தா விகரா. நான் அதை மாத்தோணும்.’ என்றான்.

‘இங்க பிள்ளையள் அப்பா அம்மாவுக்கு ரயர் மாத்தவெல்லாம் உதவி செய்யிறேல்ல. உது பெரியாட்களின்ர வேலை. உங்களுக்கு இதுவும் தெரியாதே? நீங்களே அதை மாத்துங்கோ. நான் இப்ப அலுவலா இருக்கிறன்.’ என்றான் விகரன்.

வினோதனை அம்மா வயலைப் போய் பார்த்துவா என்று சொன்னதாக அவனுக்கு ஞாபகம் இல்லை.

மீள்வு

சுவாசிக்கும் காற்றே நுரையீரலை அறுப்பதான குளிர். அது ஒஸ்த்மார்க்காவின் நடுப்பகுதி. பச்சைமரங்கள் வெள்ளையாகிப் பனி துருத்திக்கொண்டு நிற்கும் கோலம். வெள்ளைக்குள்
ஒளிக்கவேண்டிய வில்லங்கமான நேரம். அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஐம்பது மீற்ரர் தொலைவில் உலாச் செல்லும் பாதை. அந்தப் பதை தெரியாதவாறு சிறிய குன்றும் மரங்களும்
மறைப்பாக. இவர்கள் தங்கும் இடத்திற்குப் பக்கத்தால் ஒற்றையடிப் பாதை ஒன்று. அந்த ஒற்றையடிப் பாதையோடு ஒட்டிய மறைவான இடத்தில் இவர்கள் இரகசிய இருப்பு. இப்படி இருப்பதுதான் இன்று பாதுகாப்பு தரும் என்று சுதன் எண்ணிக்கொண்டான். சுதனுக்குச் சலிப்புத் தட்டியது. நாட்டில் இருந்து ஓடத்தொடங்கிய கால்கள் இன்னும் ஓயவில்லை. சில ஈழத்தமிழருக்கு ஓடுவதே வாழ்க்கை ஆகிவிட்டது. தானும் அதில் ஒருவன் என்கின்ற ஆற்றாமை அவனுக்கு.

சொரு சொரு என்று தோல் உறைந்து போகும் வேதனை. உறைந்த தோல் வெடிப்பதான உணர்வு. வீட்டில் குசன் மெத்தையில் டீனரைப் போர்த்துக்கொண்டு படுக்க வேண்டிய நேரம். தலையைக்கூட மூடிக்கொண்டு படுப்பது அபினேசின் பழக்கம். இங்கு பிறந்து வளர்ந்தாலும் அவனுக்குக் குளிர் என்றால் ஒருவித பதட்டம். நிறைய உடுப்பு அணியாது அவன் வெளியே புறப்படுவதில்லை. இன்று காரில் உலாப் போவதுதானே என்கின்ற எண்ணத்தில் வழமையாக அணியும் ஆடைகளில் அரைவாசி அவன் அணிந்திருந்தது மாலதிக்குக் கவலை தந்தது. சுதன் யோசித்துக் கொண்டே இருந்தான். தனது மகனையும் மனைவியையும் மற்றவர்கள் போல் வாழ வைக்க முடியாத அதிஸ்ரத்தை எண்ணி அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். வாழ்க்கை என்பது சிலருக்கு விபத்துகளாய் இருக்கும். சிலருக்கு அதிஸ்ரலாபச் சீட்டைப் போல இருக்கும். சுதனது வாழ்க்கை விபத்தாகியது. அதில் அவனது மொத்தக் குடும்பமும் சிக்கிக் கொண்டது. அதிஸ்ரம் வரும் என்கின்ற அவன் நம்பிக்கை உறைந்து போய்விட்டது. சூது விளையாடிய ஈழத்தமிழினமும் அதில் பிறந்த நாங்களும் என்பதாகச் சுதன் அலுத்துக் கொண்டான்.

அந்த நடுக்காட்டில்கூட அங்கும் இங்குமாக மனித நடமாட்டம். இயற்கையை விரும்பும் இந்த மனிதர்கள் எங்கும் கால்பதித்த தடங்கள். இருட்டிய பின்பும் பயமற்று உலாப் போகும் உல்லாச மனிதர்கள். அவர்கள் போகும் சத்தத்தைக் கேட்க சுதனுக்கு மருட்சி. யாராவது கண்டு காவலோடு தொடர்பு கொண்டால் தங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்கின்ற கிலி. அவன் சிறிது பின்னால் நகர்ந்து கொண்டான்.

அபினேசைப் பார்த்த சுதன் தனது மேலங்கியைக்  கழற்றி அவனுக்கு அணிவித்தான். அபினேஸ் அதற்கு மறுப்புத் தெரிவித்தான். அதை அவன் பொருட்படுத்தவில்லை. குளிர் சய பதின்மூன்றில்
நின்றிருக்கும். அது உடலின் வெப்பத்தை உறிஞ்ச இரத்தம் குளிர்ந்து போவதைச் சுதனால் உணர முடிந்தது. கால்கள் விறைக்கத் தொடங்கிவிட்டன. மலைப்பாம்பு போல குளிர் அப்படித்தான் விழுங்கத் தொடங்கும். ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் நினைத்தாலும் அதில் இருந்து தப்பிவிட முடியாது. ஒரு அங்குலம்கூட நகர்ந்து கொள்ள முடியாது. மலைப்பாம்பு காலை சுற்றத் தொடங்கியது.

நடந்து திரிந்தால் உடல் சூடாக இருக்கும். மரங்களின் பின்னால் ஒளிந்து இருக்கும் இடத்தை விட்டுவிட்டு வெளியே செல்லச் சுதனுக்குப் பயமாக இருந்தது. இந்தப் பாதுகாப்பான இடமும் பறிபோனால் என்கின்ற பதட்டம் அவனிடம்.

இருட்டிய பின்பு வெளிநாட்டவர்கள் காட்டிற்குள் நிற்பது சந்தேகத்தைத் தரலாம். இன்று யார் கண்ணிலும் படாமல் இருப்பதுதான் மிக முக்கியமெனச் சுதன் எண்ணிக் கொண்டான்.

ஒரு நல்ல வாழ்வைத் தனது குடும்பத்திற்குக் கொடுக்க முடியாத வருத்தம் அவனுக்கு. தனது மகனையாவது பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவனது ஆதங்கம். இன்றைய இரவு இந்தக் குளிரில் உயிர்வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் மீண்டும் அவனைப் பயமுறுத்தியது. பனியைத் தோண்டிக் குகை அமைத்துத் தங்கி இருக்கலாம். அதற்கும் சவள் கொண்டு வரவில்லை.

இப்படியும் நடக்கலாம் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். எதிர்பார்க்கவில்லை. அசண்டையீனமாய் இருந்துவிட்டாய் என்கின்ற குற்ற உணர்வு அவனை நோண்டியது. குகையமைத்துத் தங்கினால் குளிர் அதிகம் பாதிக்காது. திறந்த வெளியில் தங்குவது ஆபத்து. அதற்கு மாற்று வழி காணமுடியாதவனாய் அவன் தவித்தான்.

சுதன் தங்கி இருந்த வீட்டிற்கு அவர்கள் திடீரென்று வந்து நிற்பார்களென எவரும் எதிர் பார்க்கவில்லை. நல்ல வேளையாகச் சுதன் மகனோடும் மனைவியோடும் கடைக்குச் சென்றிருந்ததால்
பிடிபடவில்லை. அவர்கள் வந்து போன பின்பு அமுதன் போன் பண்ணி அந்தச் சுரங்கரத நிலையத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினான். அவன் வீட்டிற்கு இவர்கள் திரும்பிப் போக முடியாது. அது ஒருவருக்கும் சாதகமாய் அமையாது.

அந்தச் சுரங்கரத நிலையத்தில் அவனைச் சந்தித்த போதுதான் அவர்கள் தேடி வந்ததையும், இனி தனது குடும்பம் அங்கே தங்குவது பாதுகாப்பில்லை என்பதையும் சுதனால் அறிய முடிந்தது. இன்று அமுதனுக்குப் பின்னேர வேலை. வேலைக்குப் போகவேண்டி அவதியில் அவன் நெளிந்தான். வீட்டில் தங்குவது ஆபத்து. அதனால் இரவுப் பொழுதை வேறு எங்காவது இரகசியமாய் கழிக்க வேண்டும் என்பதாக அவன் அறிவுரை கூறினான். நாளைக் காலை வந்து மூவரையும் அழைத்துச் சென்று துறண்கெய்ம்மில் உள்ள தனது நண்பன் வீட்டில் விடுவதாக உறுதியளித்தான். பின்பு எல்லோருமாய் சேர்ந்து எப்படி இதைச் சமாளிக்கலாம் என்று யோசிப்போமென அவிப்பிராயப்பட்டான்.

சுதனுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. பின்பு அவன் கூறுவதில் உள்ள உண்மை விளங்கியது. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு அமுதனை அதே சுரங்கரத நிலையத்திற்கு வருமாறு கூறினான். பின்பு அங்கிருந்த கடையொன்றில் சாப்பிடுவதற்கு வணிசும் குடிப்பதற்குக் கோலாவும் வாங்கிக்கொண்டான்.

பிரதான சாலையைத் தாண்டி காட்டுப்பக்கம் நடக்கத் தொடங்கினார்கள். வெளி நாட்டவர் இங்கே காட்டிற்குள் உலாப் போவது இலங்கையில் வெள்ளைக்காரரை வயலில் பார்ப்பது போல. மூவரும் நடந்தார்கள்.

நடக்கும் போது குளிரவில்லை. உலாத்து நன்றாகவே இருந்தது. நடையை நித்திய பின்பு அந்த உல்லாசம் தலைகீழாக மாறிவிட்டது.

வாங்கிவந்த கோலா இப்போதே அரைவாசி உறைந்து போயிற்று. வணிஸ் மென்மை இழந்து கல்லாகிப் போனது. மாலதி சாப்பிடவில்லை. சுதனாலும் சாப்பிட முடியவில்லை. அபினேஸ் சிறிது
சாப்பிட்டான். கோலா குளிர்ந்ததால் குடிக்கவில்லை. நெருப்பு மூட்ட முடியாது. அதுவே தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்கின்ற பயம். குளிர் மலைப் பாம்பாக காலை விழுங்கி மேலே நகரத் தொடங்கியது. சுதன் காலை உதறிக்கொண்டு எழுந்து, நின்ற இடத்தில் நின்றபடி லெப் றைற் போட்டான்.

இப்படி இன்று இங்கே ஒளிந்திருக்கத் தேவையில்லை. எல்லாம் அரசியல். நோர்வேயின் உச்ச நீதிமன்றம் பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவர்களைத் திருப்பி அனுப்பலாம்
என்று தீர்ப்புக் கூறியிருந்தது. அதற்குப் பிறகுதான் கோழி பிடிப்பது போல அகதிகளைப் பிடிக்கிறார்கள். பிள்ளைகள் இங்கே பிறந்ததோ, அல்லது நோர்வேயை தாய் நாடக எண்ணிப்
பல ஆண்டுகளாக வாழ்வதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. இந்தப் பிள்ளைகளுக்கு தெரிந்த ஒரேயொரு மொழி நேர்வே மொழிதான். இந்த பிள்ளைகளுக்குத் தெரிந்த ஒரேயொரு
கலாச்சாரம் நோர்வேக் கலாச்சாரம்தான். அதைக்கூட ஊத்தொய்யாவிற்காக அழுத மனிதர்கள் மறந்து போய்விட்டார்கள். அரசியலுக்காய் கண்ணீர் விடுபவர்கள் மனிதாபிமானத்தின் மேல்
வெந்நீர் ஊற்றுகிறார்கள்.

இந்தப் பிள்ளைகளை எந்தத் தொடர்பும் இல்லாத ஏதோ ஒரு நாட்டிற்கு நாடுகடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றிப் பெற்றோர்கள்
மட்டும்தான் கவலைப்பட வேண்டும் என்கிறது அது. வாக்கு வேட்டையில் விழுந்த அரசியல்வாதிகள் மனிதத்தையே தொலைத்து விட்டார்கள். வெறுப்பு என்னும் விசம் மெல்லப் பரவுகிறது. நீதித்தராசில் மனிதாபிமானம் நிறையற்றுப் போய்விட்டது. நீதிபதிகளுக்கும் சட்டத்தை வளைத்து மனிதம் காண்பதில் இன்று சலிப்பு உண்டாகிவிட்டது.

இன்றைய இரவுப் பொழுது விரைவாகக் கழிந்துவிட வேண்டும். எங்கு ஒளிந்து இருப்பது என்றாலும் பருவாய் இல்லை. இப்படித் திறந்த வெளியில் குளிருக்குள் அகப்பட்டிருக்கக் கூடாது. காலம் சரியில்லை. அலமலக்கத்தில் மூளை நன்றாக வேலை செய்யவில்லை. அகப்பட்டாயிற்று. சமாளித்துக்கொள்ள வேண்டுமெனச் சுதன் எண்ணிக்கொண்டான். மாலதியும் நல்ல உடுப்பு போடவில்லை. கடைக்குப் போகும் போது அமுதனின் மனைவி அவர்களை காரில் அழைத்துச் சென்றாள். வரும்போது மட்டும்தானே என்கின்ற அலட்சியத்தில் அவள் மெல்லிய சுவேட்றர் அணிந்துகொண்டாள். அவளது மேலங்கியும் மலிவு விற்பனையில் வாங்கிய மட்டமான பொருள். இந்தக் குளிரைத் தாங்காது என்பது புரிந்தும் தாங்க வேண்டும் என்பது அவன் பிரார்த்தனை ஆகிற்று.

‘என்ர ஜக்கெற்றப் போடுங்கப்பா. ஜக்கெற் இல்லாமல் எவ்வளவு நேரம் நிப்பியள்? விறைச்செல்லே சாகப்போறியள்.’
‘ம்… உன்ர கன்சரே உனக்கு ஒழுங்கா இல்லா. நீ மாத்திரம் ஜக்கெற்றில்லாமல் படுப்பியே? என்ர கன்சர் எண்டாலும் பருவாய் இல்ல. பேசாமல் படு. காலக் கையை ஆட்டிக்கொண்டு படு… குளிர் ஏறாமல் இருக்கும்.’
‘உங்க ஏதும் கித்தை இருக்காதே அப்பா?’
‘அவன் படுத்திட்டான். எங்க இருக்குமோ தெரியாது. யாரும் கண்டாலும் சந்தேகப் படுவினம்.’
‘எனக்கு ஏதோ பயமா இருக்கப்பா. இந்தக்குளிரிக்க… இந்த காட்டிற்க…. எவ்வளவு நேரம்…?’
‘பயப்பிடாத இன்னும் ஒரு ஆறு எழு மணித்தியாலம். விடிஞ்சா எழும்பி நடந்து திரிவம். அப்ப கொஞ்சம் உடம்பும் சூடா இருக்கும்.’
‘நல்ல காலம் பனிகொட்டேல்ல.’
‘அதுக்குப் பதிலா திறந்த வானமா இருக்குது. அதுதான் இப்பிடிக் குளிருது.
ஒண்டில்லாட்டி இன்னொண்டு பிரச்சனையா இருக்குது. சீ எங்களுக்கு எல்லாமே பிரச்சனையாத்தான் இருக்குது.’
‘ஓமப்பா… நீங்கள் சொல்லுறது உண்மை. முதல் இந்த இரவு விடியோணும்.’
‘ம்… போசாதையும். வாயத் திறந்தாலே உடம்பின்ர வெக்கை போயிடும்.’
‘ம்… ஒன்பது ஓட்டை.’
‘ம்…’

அதன் பின்பு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.

இரவு நெடியதாக… கொடியதாக…

அடுத்த நாள் காலை…

காடே அதிரும்படி அபினேசின் ஓலம் கேட்டது.

புதிய ஆத்மாக்கள்

எள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது உயிரை நிறுத்தச் சுற்றியிருந்து சுற்றம் பாலூற்றவில்லை. பஞ்சில் நனைத்த ஏதோவொரு கொழுப்பு என் உதட்டில் பூசப்பட்டது. காதிற்கும், மனதிற்கும் இனிய தேவாரம் பாடப்படவில்லை. பிதிர்க்கடன் கொடுக்கும் பிள்ளைகள் என் கால்மாட்டில் நிற்கவில்லை. பிதிர் என்கின்ற சொல்லின் அர்த்தம் தெரியாத பிள்ளைகள், பாசம் என்கின்ற பிணைப்பு அறுத்து, தூரதேசத்தில் வாழ்கிறார்கள்.

கூடுவிட்டுப் பிரியும் நாள் நெருங்குவதை அறிந்தபோது நான் கோதானம் வேண்டாம், எள்ளும் நீரும் வேண்டாம், என் மக்களைப் பார்த்துவிட வேண்டும் என்று தசரதனின் புத்திர சோகத்திற்கு ஒப்பாய் ஏக்கமெடுத்து இழைத்தேன். இணையத்தால் மனிதர்களுக்கான இடைவெளி தொலைந்து, பூமியின் மறுகரையில் இருப்பவனுக்கு நொடியில் செய்தி பறக்கிறது. நவீன யுகத்தில்… ஐரோப்பிய வாழ்வில்… நாங்கள் அகதிகள் என்றிருந்த முகவரியைக்கூடத் தொலைத்து விட்டோம். சிரிக்காதீர்கள். என்பிள்ளைகளின் முகவரி என்னிடம் இல்லை. என் முகவரி என் பிள்ளைகளிடம் இல்லை. நாங்கள் சந்திக்க முடியாத திக்குகளில் சமுத்திரத்தில் வேவ்வேறு திசைகளில் பயணிக்கும் கட்டுமரங்கள் போல. கரை சேருமா. கரை சேர்ந்தாலும் ஆளையாள் கண்டுகொள்வோமா? கூடுவிட்டுப் பிரியும் எனது முடிவிற்கூட அவர்கள் பயணித்த கோடுகள் என்னைச் சந்திக்கவில்லை. சந்திக்காத சமாந்தரக் கோடுகள் ஆகிவிட்ட இயந்திர வாழ்வில் இதயமற்ற மனிதர்களாய் நாங்கள் உலாவி வருகிறோம்.

நான் கூடுவிட்டுப் பிரிந்தாலும், அமைதி கொள்ளமுடியாத மனிதத்தின் எச்சமா? குளிர்ப் பெட்டியில் உறையப்போட்ட கூட்டைச்சுற்றி உறக்கமில்லாது அலைகிறேன். எனக்கு யாரும் கொள்ளிவைப்பார்களா? இங்கு கொள்ளி வைக்க மாட்டார்கள், எரியும் போறணைக்குள் தள்ளி விடுவார்கள். என்னைத் தள்ளிவிடப் போவது யார்? கிடங்கு வெட்டித் தாட்டுவிடப் போவது யார்? நான் எதையும் எழுதிவைக்க வில்லையே. இப்பொழுது கூடில்லாத பறவையான என்னால் எதையும் எழுத முடியாதே? எரிப்பார்களா? புதைப்பார்களா? மீண்டும் ஒருமுறை எனது கூட்டிற்குள் சென்று எனது கடைசி ஆசையை எழுதி வைத்துவிட்டு வந்தால். அப்படி இனி எழுதமுடியாது. இயற்கையை வெல்ல முடியாது. இறைவன் எனக்கு வரம்தரமாட்டார். விஞ்ஞாம் நிறுவியதைப் பொய்யாக்க முடியாது. கூடுவிட்டுப் பிரிந்த எனக்குக் கூடு கிடைக்கும் பாக்கியம் கிடையாது. இறந்தவரை உயிர்ப்பிற்கும் வித்தை இவ்வுலகில் செல்லுபடியாகாது. எனக்கு உமையவள் வந்து ஞானப்பால் தரப்போவதில்லை. எடுத்த உயிரை இயமன் கூட்டிற்குள் திருப்பி விடப்போவதில்லை. எனக்காக எந்தச் சாவித்திரியும் இயமனோடு போராட வரவில்லை. அகதியாய் வந்த என்னாத்மா அகதியாய்ப் போய்விட்ட அவலம்.

பதினைந்து நாட்கள் விறைக்கப்போட்ட என்கூட்டை விட்டுவிட்டுப் போக மனம் இல்லாது இங்கேயே பதுங்கி இருக்கிறேன். என் மகன் கையால் எள்ளும் நீரும் இறைக்காது நான் போக மாட்டேனா? வறட்டுப் பிடிவாதத்தால் நிரந்தரமாக ஆவியாக அலையும் அவிப்பிராயம் என்னிடம் இல்லை. எங்கள் ஆசைகள் நிராசைகள் ஆகின. எங்கள் வாழ்க்கையே அலைச்சலாகியது. சொந்தம் துறந்து… பந்தம் அறுத்து… விழுமியம் மறந்து… இலட்சியம் இல்லாத பயணத்தில் ஏதோ உயிர்வாழ்ந்து… அந்த உயிரையும் இயமன் பறித்த பின்பு… பிதிர்கூடக் கிடைக்காத பிண்டங்களாய்… ஐயோ… ஐயோ என்னைப் போல்… என் இனத்தைப் போல்…எத்தனைக் கூடுகள் நித்தமும் இங்கு வருகின்றன? குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர். மனிதன் சொந்தம் கொண்டாடும் கூடு, நீயே உனக்கு இல்லை என்கின்ற ஞானத்தைப் புகட்டுகின்ற பிணவறை. நீயே நீ இல்லை. எங்கிருந்து வந்தாய் என்பது புரிந்தாலும் எங்கே போகிறாய் என்பது புரியப்போவது இல்லை. சொல்லாமல் கொள்ளாமல் பறிக்கப்படும் என்பது புரியாத மாயையில், சாகா வரம் பெற்றதாகப் பறக்கும் மனிதர்கள். அழகு பார்த்து வந்த கூடு ஆத்மா கூடு நீங்கிய கணத்தில் இருந்து அழுகிப் போகும் மாறாத யதார்த்தம். ஒரு கணத்தில் உங்கள் கூடுகள் உங்களுக்கச் சொந்தமில்லாது போக… நீங்கள் ஆவியாக அலையவிடப் படுவீர்கள் என்கின்ற உண்மை.

அன்று ஒரு நாள் நிர்வாணமாக்கப்பட்ட அழகிய இளம் பெண்ணொருத்தியின் கூடு இங்கே வந்தது. அவளைக் கொண்டுவந்தவன் கண்ணால் கற்பழித்த பின்பே ஒரு குளிர்ப் பெட்டிக்குள் உறைவதற்குத் தள்ளிவிட்டான். அவள் ஆன்மா துரே நின்று அழுவது கேட்டது. ஏன் அது அழுதது என்பது எனக்குப் புரியவில்லை. தன் நிர்வாணத்தைப் பார்த்தா? நிரந்தரம் அற்றுப் போன வாழ்வை எண்ணியா? ஆவியில்லாத கூட்டின் மேற்கூட அற்ப மனிதனுக்குக் காமம் என்கின்ற கொடுமையைக் கண்டா. எல்லாமே பொய்யாகிப் புழுத்துப் போவதைப் பொய்யாக்க உறைய வைப்பவனுக்குக்கூட ஏது ஞானம் என்கின்ற தவிப்பிலா?

என் மண்ணிலே வாழ்ந்திருந்தால் எனக்கு எள்ளும் நீரும் கிடைத்திருக்கும். இரக்கத்திலாவது நான்குபேர் என்னைக் காவியிருப்பார்கள். சுடலையில் எரித்து… கேணியில் குளித்து… பிதிர்க்கடன் தீர்ந்து… பரலோகம் போவென்று வழியனுப்பி வைத்திருப்பார்கள். என்னைப் போலவே கூட்டை விட்டு ஆவி பிரிந்த பின்பு நாறிப்போகும் கூட்டை விட்டு நகரமுடியாத அவஸ்தையுடன் பல ஆத்மாக்கள்…

வாழ்க்கை அடியோடு மாறியது. நிலையில்லாப் பணம் என்னையும் ஏமாற்றிச் சென்றது. பழம் தின்னும் கிழியாக என் நண்பர்கள் இலையற்ற மரமான என்னைத் திரும்பிப்பார்க்க மறந்தார்கள். பிள்ளைகள் பரதேசம் பறந்து போனார்கள். தனிமை. என் தனிமை என்னை வாட்டியதில்லை. ஞானம் வளர்க்கும் யாக காலமாய் அதை நான் மாற்றி அமைத்துக்கொண்டேன். முனிவனுக்கும் மோட்சம் பற்றிய ஆசையுண்டு. எனக்குப் பிதிர்க்கடன் பற்றிய ஆசை கூடு பிரிந்த பின்பும் குன்றாது இருக்கிறது. வீடு பெறுவதற்கு வாயலாக் கூட்டின் தகனத்தை அது பார்க்கிறது. ஆவி பிரிந்தபின் கூட்டிற்காக அழுவதேன் என்பதை மறுத்து நிற்கிறது.

சூ சத்தம் போடாதீர்கள். என்கூட்டை எடுத்துக்கொண்டு செல்ல யாரோ வருகிறார்கள். பாருங்கள்… பாருங்கள்… என்னுடலை எடுத்துச் சென்று அலங்கரிக்கிறான். பின்பு அதைப் பெட்டியில் வைக்கிறான். என்னை அலங்கரிப்பவன் நித்தமும் இதைச் செய்பவனாக இருக்கவேண்டும். எந்தவித சலனமும் இல்லாது மரப் பொம்மையைச் சோடிப்பது போல என்னை அலங்கரித்துப் பெட்டியில் வைத்து, பின்பு ஒரு வண்டியில் வைத்து, என்கூட்டைத் தள்ளிக்கொண்டு செல்கிறான். எங்கே கொண்டு செல்கிறான்? என்ன செய்யப் போகிறான்? இதுதான் என் கடைசி யாத்திரையாக இருக்குமா? என்னோடு வாருங்கள். என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குச் சொல்கிறேன்.என்னை சீ என்கூட்டை அவன் வண்டியில் தள்ளிச் சென்று லிப்றில் ஏற்றுகிறான். நீங்களும் வாருங்கள். இது ஒரு சிறிய தேவாலயம். இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவன் சென்று விட்டான். மீண்டும் தனிமை. யாருக்காகவோ எனது கூடு காத்திருக்கிறது. சற்றுப் பொறுங்கள் ஏதோ சத்தம் கேட்கிறது. வெள்ளைத்தேவனாகக் குருவானர் ஒருவர் வருகிறார். இந்துவாய்ப் பிறந்து, இந்துவாய் வாழ்ந்தேன். பிதிர்க்கடன் கிடைக்குமா என்று இப்பொழுதும் ஏங்குகிறேன். என் ஆசைகள் எவர் காதிலும் விழவில்லை. என்னை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனக்கு ஞானஸ்தனாம் நடக்கவில்லை. தீட்சை கேட்டுத் திரும்பவும் பிரால் சட்டி தேடிய ஞாபகம் இருக்கிறது. அதற்கான தண்டனைகள் இனி அளந்து தரப்படுமா? சரி அந்தத் தலையிடி உங்களுக்கு வேண்டாம். அங்கே அவர்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். குருவானவர் இறுதிக்கடன் செய்யத் தொடங்குகிறார்.

கும்பம் வைத்து… மந்திரம் சொல்லிப்… பூசை செய்து… பாட்டுப்பாடிச் சுண்ணம் இடித்து… பேரப்பிள்ளைகள் பந்தம் பிடித்து… பறையடித்து, மாதரெல்லாம் மார்பு நோக அடித்து வசையாகவும்,இசையாகவும் ஒப்பாரி வைத்து… ஐயோ எதுவும் இல்லை. எனது அடையாளங்கள் எல்லாம் என்னைவிட்டு எப்பொழுதோ தொலைந்து போனது? தேசம் தொலைத்த நாங்கள் அடையாளமும் தொலைத்து, முகவரியற்ற அகதிகளாகி… கொஞ்சம் பொறுங்கள். குருவானவர் ஏதோ சொல்லுகிறார். மண்ணால் உருவாகி மண்ணாய் போய்… இல்லையே குருவானவரே! நாங்கள் நீராலே பிறந்து நீரிலே சங்கமிக்கும் முறையைப் பின்பற்றுபவர் அல்லவா?நீராலே பிறப்பது இன்னும் மாறவில்லை. நீரிலே சங்கமிப்பது மாறுகிறதா? என் சங்கமிப்பு மாறிவிட்டது. கங்கையில் கரைக்கப்படாவிட்டாலும் வடகடலில் கரையக்கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

குருவானவர் அவசரமாக ஏதோ சொல்லுகிறார். அவரைவிட ஒருவன் அந்த மூலையில் நிற்கிறான். அவன்தான் எனது இறுதிக்கடனுக்கு வந்தவனா? எனக்காகவும் ஒருவன் வந்து இருக்கிறானா?குருவானவர் தனது கடமையைச் செய்து முடிப்பதில் அவசரம் காட்டுகிறார். அவர் தனது அலுவலை முடித்துவிட்டு அந்த மனிதனைப் பார்த்து கையைக் காட்டிவிட்டுச் செல்கிறார். அந்த மனிதன் என்கூட்டை நோக்கிச் சென்றான். வண்டிலோடு என்கூட்டை வெளியே தள்ளிச் செல்கிறான். என்ன செய்யப் போகிறான்?

ஓ என்கூட்டைக் கொண்டு போகும் வாகனம் அதுவா?

எள்ளும் நீருமற்று… நீரிலே சங்கமிக்காது… ஏக்கத்தில் மிதக்கும் புதிய ஆத்மா நான். இல்லை நாங்கள். நாங்கள் விட்டுவந்த தேசத்து ஞாபகம் இன்னும் மாறாது…

%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this: