ஐக்கியநாடுகள் சபையில் அகதிகள் பிரச்சனை தொடர்பில் வறிய நாடுகள் கொடுத்த தொந்தரவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் ஐநாசபையைத் தாங்கள் பகிஷ்கரிப்பது எனவும், அதன் முடிவுகளுக்குத் தாங்கள் இனிக் கட்டுப்படப்போவதில்லை எனவும் அறிவித்தன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்கெனவேமுறுகலில் இருந்த இரசியாவும், ஜப்பானும் தற்காலிகமாகத் தமது பங்களிப்பை நிறுத்தின. அந்தச்செயல் அமெரிக்காவிற்குக் கோபத்தை உண்டு பண்ண, தான் மட்டுமே ஐ.நா வை நடத்துவதற்கான அவசியம் என்ன என்பதாக அதுவும் தனது பங்களிப்பை நிறுத்தியது. அதைத் தொடர்ந்து செயற்படுவதற்குப் போதிய பணம் இல்லாமையால் ஐக்கியநாடுகள்சபை ஸ்தம்பித்தது. செயலிழந்த அமைப்பில் தாங்கள் இருப்பதிற் பயன் இல்லை என்கிற காரணத்தோடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதில் இருந்து மெல்ல விலகின. அதைப் பார்த்த பல நாடுகள் ஒவ்வொன்றாகத் தாங்களும் விலகினர்.
ஐக்கியநாடுகள்சபை செயலிழந்து போனமை, மனிதவுரிமை மீறலில் ஈடுபட்டுவந்த நாடுகளுக்குச் சுதந்திரமாய் செயற்படுவதற்கு வழிசமைப்பதாயிற்று. கேட்பதற்கான சட்டம்பி காணாமற்போன வகுப்பறையாய் உலகம் மாறியது. அகதிகள் பிரச்சனையே தமது நாட்டின் இனச் சமநிலையைப் பாதிக்கிறதென எண்ணியவர்களுக்கு, அந்த அகதிகள் மேற் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அது கைகொடுத்தது.
அமெரிக்காவோ, ஜப்பானோ கண்டித்தால் அது பெருமளவில் எடுபடாத நிலை புதிதாகத் தோன்றிற்று. சி.ஐ.ஏ மேற்கொண்ட அமெரிக்காவின் மனிதவுரிமை மீறல்களைப்பற்றிய விமர்சனங்கள் அதற்கு எதிராக எடுத்துக்காட்டப்பட்டன. அமெரிக்காவும் அண்டைய நாடுகளில் இருந்துவரும் அகதிகளாற் பெரும் பிரச்சனையை எதிர் நோக்கியதால், பலவேளை பேசாது இருப்பதிற் சுகம்கண்டது. அத்தோடு அமெரிக்காவும் ஜப்பானும் தமது வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்கின்ற எண்ணத்தோடு, தமது விமர்சனங்கள் பலவற்றை இயன்ற அளவு அடக்கி வாசிக்கப் பழகிக்கொண்டார்கள்.
ஐநா செயலிழந்ததை அடுத்து, உலகிற் பெரிய அழிவுகள் ஏற்படும்போது, முறையான உதவிகளை அந்த அழிவைச் சந்திக்கும் நாட்டிற்குச் செய்ய முடியாத நிலை தோன்றியது. அப்பொழுது பெரிய பெரிய நாடுகள் தங்களது சொந்த உதவி அமைப்புகள் மூலம் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை அந்த நாடுகளுக்குச் செய்துவந்தன.
ஐநாவின் வீழ்ச்சிக்குப்பின் குற்றம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் முறை முற்றுமாக இல்லாமற் போயிற்று. ‘ஹேக்’கில் இருந்த சர்வதேச நீதிமன்றம் கலைக்கப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, இந்திய பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பின்பாக ஐரோப்பாவை வந்தடைந்த அகதிகளினதும், அதற்கு முன்பு வந்த அகதிகளினதும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வழியைத் திறந்துவிட்டது. அந்த நாடுகள் ஐநாவின் வீழ்ச்சியோடு ஜெனிவா ஒப்பந்தத்திற்கும் தாங்கள் இனிக் கட்டுப்படத் தேவையில்லையென அறிவித்தன.
முதலில் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்த இந்தியர்கள் மீதுதான் தாக்குதல்கள் நடந்தன. அப்படித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் பின்னாளில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற அதிதீவிர வலதுசாரிகளுக்கும் நிறையத் தொடர்புகள் இருந்தன. அவர்கள் நிறமான வந்தேறுகுடிகள் மீது எவ்வித தயவுதாட்சண்யமும் காட்ட விரும்பவில்லை. அதுவும் ஆசியாவில் இருந்து கப்பல்களிற் தொகை தொகையாக வறிய மக்கள் வருவதை அறவே வெறுத்தார்கள். அப்படி வருபவர்கள் தங்கள் நாட்டை அசிங்கப் படுத்துவதாய் அவர்களிற் சிலர் இனவெறித்தனமாகச் சிந்தித்தார்கள்.
அதேவேளை அவுஸ்ரேலியா தனது பல தீவுகளில் அகதிகளை அடைத்துவைத்து, அவர்களுக்குப் பலவருடங்களாகச் சுதந்திரத்தைக் கொடுக்க மறுத்தது. அது மனிதாபிமானத்தை முற்றுமாய்ப் புறக்கணித்தது. அதிதீவிர வலதுசாரிகளே பெரும்பான்மையாக அனேக நாடுகளில் ஆட்சியில் இருந்ததால், சட்டங்கள் மூலம் தாங்கள் நினைத்ததை இலகுவாகச் சாதித்தனர். இந்த மாற்றத்திற்குப் பின்பு அவுஸ்ரேலியாவுக்கு போவதற்குப் பலர் அஞ்சினார்கள். யாரது நாட்டையோ களவு செய்தவர்கள், பின்பு யார் யாரோ வருவதைத் தடுத்து, அவர்களைச் சிறைவைத்த புதினம் அவுஸ்ரேலியாவிற் பலகாலமாகத் தொடர்ந்தது. உலகம் ஆதிகாலத்தில் இருந்தது போல இன்று இல்லை. அதைப் புரிந்து கொண்டு மற்றைய மனிதனோடு பங்கிடுவதற்கும் சகமனிதன் தயாராக இல்லை. கனவிற்கூடப் பங்கு கொடுக்கும் கருணை மனிதனிடம் இல்லாமல் போயிற்று. வறிய நாடுகளில் வாழ்பவர்களுக்குப் போதிய வழங்கள் இல்லை. அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி வாழ்வை நாசமாக்க, சுரண்டும் பல்தேசிய நிறுவனங்கள் காத்திருந்தன. அரசு அதிகாரிகள் ஊழலைத் தமது பிரதான தொழிலாக்கிய அவலம் தொடர்ந்தது. செல்வந்த நாடுகளின் பல்தேசிய நிறுவனங்கள் இலாப நோக்கிற்காய் அவர்கள் வறுமையைத் தொடர்ந்தும் கொடூரமாகப் பயன்படுத்தினர். பதவியில் இருப்பவர்களுக்கு லஞ்சம் கூச்சமில்லாது கொடுத்து ஆதாயத்தை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். தேசிய நிறுவனங்களும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதாக இறுமாப்புக் காட்டினர்.
தொடரும்…