http://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom
AranF – Kopi
நாவலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் புதியது.
அதன் தலைப்பையும் ‘நிர்வாணம்’ என்பதுடன் நிறுத்தியிருந்தால் இன்னும் ’நச்’சென்று இருந்திருக்கும்.
ஒஸ்லோவில் வாழநேரும் புலம்பெயர்ந்த பெற்றோரின், தன்னையும் ஒரு நோவேஜிய பிரஜையாகவே உணரும், தமிழர்கள் இன்னும் சுமந்துவரும் பண்பாடுகள் பழக்கவழக்கங்களை அர்த்தமற்றவையென எண்ணும் தேனுகா எனும் அலரகவையள் ஒருத்தி நோர்வேயின் பிக்-பிறதர் எனப்படும் பிரபல தொலைக்காட்சி நேரலை (Live) நிகழ்வொன்றில் பிறிதொரு ஆடவனுடன் பாலியல் உறவுகொள்கிறாள்.

*
அந்நிகழ்வானது அவளுக்கும்/பெற்றோருக்கும்/ குடும்பநண்பர்களுக்கும்/ சமூகத்துக்குமிடையே உண்டுபண்ணும் அதிர்ச்சி, மற்றும் கொந்தளிப்புக்களையும், அதனை அந்நவீனசமூகப்பெண் தேனுகா எதிர்கொள்வதையும், என்போக்கில்/ என்பார்வையில்/என் விருப்பில் நான் வாழ்வது எனது உரிமை என்று அவள் வைக்கும் விவாதங்களையும் வைத்து நகர்கிறது நாவல்.
*
‘என்னதான் நாகரீகம்/புதுமை என்று வாழ்ந்தாலும் ஒரு தமிழ்ப்பெண் இப்படியெல்லாம் பண்ணத் துணியவேமாட்டாள்’ என்று வாசகன் எதிர்வாதம் வைக்கமுடியுமாயினும், ஆசிரியர் என் கற்பனையில் ‘இது அப்படி நடந்துகொண்ட ஒருத்தியின் கதை’ என்று விவாதித்தால் அதையும் மறுப்பதற்குமில்லை. ஆனாலும்……………….
*
ஆசிரியர் அதைச்சொன்ன சொன்னவிதத்திலும் புதினத்தைப் பண்ணப் பயன்படுத்திய மொழியிலும் பரவலான சிறுபிள்ளைத்தனங்கள் இருக்கின்றன. நாம் அன்றாடம் பயன்செய்யும் விழுதல், வழமையில் என்பதுபோன்ற சாதாரண வார்த்தைகளைக்கூட அவரால் ழகர ளகர மயக்கமின்றித் திருத்தமாக எழுதமுடியவில்லை. தனக்கு அம்மயக்கம் இருக்குதென்று சந்தேகம் இருந்திருந்தால் அதை தெளிந்த ஒருவரைக்கொண்டு செம்மைப்படுத்தியிருக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றாததும் துர்லபம். வழுக்கள் பின்வரும் வார்த்தைகளிலும் முடிவின்றித் தொடர்வது எரிச்சலூட்டுகின்றது. பளக/> மூச்சிறைக்க/> ஊளித்தாண்டவம்/> கோளைகள்/> சுளிப்பு/> காழி/> கழியாட்டம்/> விக்-பிறதர்/> ஆதரவு அழித்தான்!!!!
*
தேனுகா தன் தோழி பிரவீணாவுடன் செய்யும் விவாதங்கள்/ விதர்க்கங்கள் ஒரு புலம்பெயர்ந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கானதைப்போல் இல்லாமல் ஒரு மேடைப்பேச்சாளருக்குரியதைப்போல அமைந்துள்ளன. ‘கீரியும் பாம்பும்’ உதாரணத்தைக்கூட அவள் எடுத்துவிடுகிறாள்.
*
புதினத்தில் இறுதிப்பகுதியில் தேனுகா தொலைக்காட்சி அரங்கில் அந்தவகையிலான ஒரு “ ஷோ” வில் பங்குபற்றுவதுகூட பிரபல்யம் அல்லது புகழோடுகூடிய ஒரு வாழ்க்கையை விரும்பித்தான் என்று ஆசிரியர் நிறுவுவது வாழ்க்கைமீதான அவளின் பார்வையை மறுதலிப்பதாக உள்ளது. இது அவளின் குணவியல்புகளுக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. புலம்பெயர்வாழ்க்கையில் பல தேனுகாக்களை நாமும் பார்த்திருப்போம். இங்கே ஆசிரியர் படைத்திருக்கும் தேனுகா அவர் இன்னும் அழகாக வளர்த்தெடுத்திருக்கக்கூடியதொரு பாத்திரம். வாழ்வு / ஒழுக்கம்/ பண்பாடு மீதான அவளின் பார்வைகளை இன்னும் சிறப்பாக வார்த்திருக்கலாம். அவள் ஒரு தெருச்சண்டைக்காரியைப்போலத் தன் விவாதங்களை அடுக்குவதாக அமைக்காமல் தன் விவாதங்களுக்கான கருத்தியல் பின்னணிகளையும், தருக்கங்களையும், ஏன் எமது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் காலதேச வர்த்தமானங்களுக்குப் பொருத்தமற்றவையென அவள் கருதுகிறாள் என்பதையும் நாவலில் காட்டியிருந்தால் தேனுகா வாசகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு பாத்திரவார்ப்பாகப் சமைந்து பொலிந்திருப்பாள்.
*
இன்னும் பாத்திரங்களின் உணர்வுகள் மட்டுமல்லாமல், கவனிக்கப்படாதிருக்கும் சண்முகம்–கமலம் இவர்களின் வீடு இருக்கும் கோலம் போன்ற விவரணங்களில் அல்லது வேறெந்த விஷயத்தைச் சித்தரிக்கவந்தாலும் ஆசிரியர் மிகைப்படுத்தும் ஒரு மொழியையே பூராவும் கையாள்கிறார்.
*
புதினத்தின் முற்பகுதி தேனுகா விட்டுப்பிரிந்து போனதால் தனியாக வாழநேரும் சண்முகம்-கமலா தம்பதியின் புத்திரசோகம் நிரம்பிய வாழ்வு ஒரு தமிழ் நாடகம்போலக் காட்சிப்படுத்தப்படுகிறது.
*
அப்பால் மெல்ல அத்தம்பதியின் புலம்பெயரமுன்னான இலங்கை வாழ்க்கை காட்சிமைப்படுத்தப்படுகிறது.
அங்கேயும் கமலாவின் தந்தையார் வித்துவான் சங்கரப்பிள்ளை போன்ற ஒருவர் யாழ்ப்பாணதேசவழமைகளுக்கு மிகவும் அந்நியமாகவும், ராஜபார்ட் ரங்கத்துரைபோன்று மிகைப்படுத்தப்பட்ட சினிமாக்கதாபாத்திரம்போலவும் எனக்குத்தோன்றுகிறார். அவர் அரசபணியில் இருப்பவராகவும் அதேசமயம் ஒரு சங்கீதவித்துவானாகவும் சித்தரித்திருப்பது மேலும் அவரைக் கேலிபண்ணுவதைப்போலுள்ளது.

ஆசிரியர் சித்தரித்திருப்பதைப்போல மரபிசையோ மரபார்ந்தநாட்டியங்களோ யாழ்மண்ணில் கோவில்களிலோ/ திருவிழாக்களிலோ. யாழில் இருந்ததான பெரும் இசைஅரங்குககளிலோ? வளர்த்தெடுக்கப்பட்டதான வரலாறு எதுவும் இல்லை. மரபிசையைப்போற்றும் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் தெரியவில்லை. ஒருமுறை யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தியதிரைப்படவிழாவில் ‘காடு’ என்றொரு கன்னடப்படத்தைத்தொடர்ந்து திரையில் அரைமணிநேரம் இந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதக்கச்சேரி ஒன்றும் நடைபெற்றது. கச்சேரி தொடங்கிய அடுத்தவிநாடியே அரங்கம் காலியானது.
*
இராமநாதன்கல்லூரிபோன்ற இசைக்கல்லூரிகளுக்குக்கூட காலத்துக்குக்காலம் தமிழகத்திலிருந்தே இசையாசிரியர்கள் வருவிக்கப்பட்டார்கள். வீரமணிஐயர், சண்முகராகவன் போன்ற விற்பன்னர்கள் இங்கொன்றும் அங்கொன்றும் இருந்தார்களேயன்றி யாழ்மண் மரபிசை தழைத்தோங்கியமண் என்பது இயல்பாயில்லை. இன்னும் பிசையப்பா, குமுக்கா கணபதிபோன்று அங்கு வாழ்ந்த இசைக்கலைஞர்களும் வாழ்நாள் பூராவும் வறுமையுடன் போராடினார்கள் என்பதே யதார்த்தமாயிருக்க மாட்டுவண்டிகட்டி கச்சேரிகள் பண்ணப்போகும் சங்கரப்பிள்ளை என்கிற அப்பாத்திரம் நாவலுக்குள் புகுத்தப்பட்டு அநாவசியமாக ஏன் மிகைப்படுத்தப்படுகிறார் என்பது தெரியவில்லை. அச்சித்தரிப்புடன் ஒன்றவும் முடியவில்லை.
*
இன்னும் மாடுமேய்த்தல் , பீங்கான்கோப்பைகள் கழுவுதல் என்பன இழிவான தொழில்கள் என்னும் ஆசிரியரின் பார்வை நாவலுக்குள் கவனமாகப் பதிவுசெய்யப்படுகின்றது.
*
ஆசிரியருக்கு நல்ல மதநம்பிக்கை தெய்வநம்பிக்கை இதெல்லாம் இருக்கலாம், இருக்கட்டும். ஆனால் அவற்றைப் தன் படைப்புகளுக்குள் புகுத்துவதை பின்நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆசிரியர் ஒருவேளை நாத்திகராக இருந்தாலங்கூட அவர் நாத்திகவாதத்தை படைப்புள் பிரச்சாரம் செய்யலாகாது. திருஞானசம்பந்தரும் இன்ன பிறரும் இங்கெதுக்கு வருகிறார்கள் என்பதற்கு ஆசிரியர் என்ன காரணம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
*
சிறுமியாக தாயார் மேடையில் கையைப்பிடித்து அழைத்துப்போகும் தேனுகா திடீரென்று குமரியாவது நாவலில் ஒருகாலத்தின் பாய்ச்சல். (பக்கம்-59.) அவ்விடைப்பட்ட இடைப்பட்ட காலம் சொல்லப்படாமல் இருண்மைப்படுத்தப்படுகிறது.
*
பலபகுதிகளை எப்படிக்கடக்கலாம் எனும் குழப்பத்திலோ (பக்கம் – 53) என்னவோ ஆசிரியர் அங்கங்கே கட்டுரைக்கான மொழியில் படைப்பை நகர்த்திச்செல்கையில் சலிப்பு வருகிறது.
*
பக்கம் – 73 இல் ஒரு வசனம்: //நெஞ்செல்லாம் வெறுமையாகி நீராவிமட்டும் கொட்டாவியாகிய பரிதவிப்பு.// இதில் நெஞ்சுக்குள் இருந்த நீராவி வெளியாகி நெஞ்சு வெறுமையாகிவிட்டது என்கிறாரா? இல்லை கொட்டுக்குள்(வயிறு) இருந்த ஆவி வெளியேறியதால் பரிதவிப்பு என்கிறாரா? கொட்டாவியில் செம்பகுதி நீராவிதானே இருக்கும்?
*
சில வசனங்களை திரும்ப வாசித்துப்பாராமலும் அர்த்தமின்றியும், அல்லது வாசகனுக்கு மயக்கம் ஏற்படுத்தும் வகையிலும் எழுதுவதை ஆசிரியர் முதலில் கைவிடவேண்டும்.
*
சில இடங்களில் அநாவசியத்துக்கு நீட்டிமுழக்கவும் செய்கிறார். எடுத்துக்காட்டாக: தேனுகா நகரத்துக்கு பொதுபயண வாகனங்களைத் தவிர்த்துவிட்டு காரில் போகவிரும்புகிறாள். நம்மவர்கள் கண்ணில் படாமல் பயணிப்பது அவள் நோக்கம். இன்னும் தலைக்குத்தொப்பியுள்ள மேலங்கி ஒன்றையும் அணிந்துகொள்கிறாள். அது பிறர் பார்வையில் படாமலிருக்க இன்னும் சௌகரியமானது என்பது விரல்சூப்பும் வாசகனுக்கும் புரியும். ஆசியரோ உங்களை விட்டுவிடுவதாயில்லை. தொடர்ந்து //’அதனால் தலையை மூடினால் தன்னை மற்றவர்கள் காண்பது சற்றுக்கடினமாகும் என்பது அவள் கணிப்பு’// என்று கடிக்கிறார். இப்படி வேண்டாத வசனங்களும், விஸ்தரிப்புகளும் படைப்புபூராவும் விரவியுள்ளன.
*
வாசகன் எஞ்ஞான்றும் மறந்துவிடலாகாது என்பதாற்போலும் சண்முகம் குடும்பம் வாழும் சதுக்கம் வசதிபடைத்தவர்கள் வாழும் இடம் என்பது படைப்புள் பலதடவைகளும் சொல்லப்படுகின்றன.
*
நாவலை சம்பவங்களாலும், பாத்திரங்களின் சம்பாஷணைகளாலும், நகர்த்துவதே வழமையிலுள்ள முறைகள். முன்னதில் புதுமைப்பித்தனும், பின்னதில் தி.ஜானகிராமனும் பெயர்போனவர்கள். அவர்கள் படைப்புகளிலெல்லாம் ஆசிரியனின் குரல் வெகு அமைதியாகவிருக்கும். இங்கே ஆசிரியன் எல்லாவிடங்களிலும் தன்குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறார். போதாததுக்கு காலாவதியான பழமொழிகள் / முதுமொழிகளின் விழாவல்கள் வேறு.
இதுபோன்ற அழகியல் போதாமைகளை ஆசிரியர் தன் அடுத்தடுத்த படைப்புகளிலாவது நிவர்த்தி செய்வாரென்பது என் எதிர்பார்ப்பு.
*
தமிழ் மக்களின் பண்பாட்டைக் கேள்விகுட்படுத்த முனையும் ஒரு அலரகவையளின் துணிச்சலைச் சொல்ல விழைந்த ஆசிரியருக்குப் பாராட்டு.
*
காரைநகரான் (நோர்வே) ISBN9781326663575.
*
http://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom
For further references